12/7/14

கறுப்பு பணத்தின் உண்மையான கலர்


ஆழம் ஜூலை இதழலில் எழுதியது 



பதவி ஏற்றதும் பஜக அரசு செய்த முதல் காரியம். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்பு பணத்தை  கண்டுபிடித்து வெளிகொண்டுவர ஒரு  தனி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது  தான்.  கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இந்த விஷயத்திற்காக முந்திய அரசில் எதிர்கட்சியாக இருந்தபோது பஜக வலுவாக போராடிக்கொண்டிருந்தது.  இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்க பட்டாலும் இந்த சவாலான விஷயத்தை சாதிக்க  புதிய அமைப்புகளும் அறிவிப்புகளும் மட்டும் போதாது. மோடியின் அரசுக்கு ஒரு அரசியல்  துணிவு (POLITICAL WILL) இருந்தால் மட்டுமே இதைச்சாதிக்க முடியும். மக்கள் செல்வாக்கும், பாராளுமன்றத்தில்  மிகப்பெரிய மெஜாரிட்டியும் இருக்கும் இந்த அரசுக்கு அத்தகைய அரசியல் துணிவு இருக்குமா? இருந்தாலும் அதை கட்சி அரசியல் எல்லைகளை தாண்டி நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துமா? இந்திய அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயக்கும் கார்பேர்ட்களும், மிகசக்திவாய்ந்த செல்வந்தர்களும்  சமப்ந்த பட்ட இந்த விஷயத்தை ”கார்ப்ரேட் பிரண்டிங்” என கருதப்படும் மோடியின் ஆட்சி எவ்வளவு கடுமையாக கையாளும்? என்ற கேள்விகளுக்கான விடையை பொறுத்து தான் இந்த விஷயத்தில் வெற்றி அமையும்.
சிறப்பு புலானய்வு குழு அமைக்க பட்டதை பிஜெபியின் சாதனையாக சொல்ல முடியாது. காரணம் இந்த குழு உச்சநீதிமன்ற ஆணைக்கேற்ப அமைக்கபட்ட ஒரு குழு.  2009ல் வழக்கறிஞர் ஜெத்மலானி, கோபால் சர்மா,பேராசிரியர் தத்தா,கேபிஎஸ் கில் திருமதி வைத்த்யா ஆகியோர் இணைந்து கறுப்பு பண விவகாரத்தில் யூபிஏ அரசு மிக மெத்தனமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதைச்செய்ய கட்டளை இடவேண்டுமென்று ஒரு வழக்கை உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்திருந்தனர்.
உச்ச நீதி மன்றகண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு என்பது  சிலகாலம் முன்பு உச்சநீதி மன்றம் கண்டுபிடித்திருக்கும் ஒரு புதிய விஷயம். இப்படி அமைக்க சட்டபிரிவுகள் இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கிழ் ஏற்படுத்த படும் ஒரு நிர்வாக அமைப்பு. அந்தமாதிரியான ஒரு  புலானாய்வை கோரியது ஜெத்மலானி குழு.  யூபிஏ அரசு சட்டபுத்தகத்தின் ஒட்டைகளை யெல்லாம் ஆராய்ந்து அப்படி ஒரு குழு அமைப்பதை தவிர்த்து அல்லது தாமத படுத்திகொண்டிருந்தது. இறுதி தீர்ப்பில் அப்படி ஒரு குழு அமைக்கபடவேண்டும் என ஆணையிட்டதை எதிர்த்து அப்பீல் செய்திருந்தது. அப்பீல்லிலும் உச்சநீதி மன்றம் குழு  அமைப்பதை உறுதி செய்து, அதை அறிவிக்கும்படி அரசுக்கு ஆணையிட்டிருந்தது.  பொறுப்பேற்ற புதிய அரசு அந்த ஆணையின் அடைப்படையில் தான் இந்த சிறப்பு புலானய்வு குழுவை அமைத்திருக்கிறது. அதாவது பிஜேபி தனிப்பெருபான்மையுடன் ஆட்சிக்கு வராவிட்டாலும் அல்லது யார் ஆட்சிக்கு வந்திருந்தாலும்  இந்த குழு அமைக்க பட்டிருக்கும்.
எவ்வளவு கறுப்பு பணம் இருக்கிறது?
ஒரு விடை தெரியாத கேள்வி இது. முதலில் இதை சரியாக கணக்கிட்டு உறுதி செய்ய வேண்டும்.  2012 மே மாதம் நாடாளுமன்ற கூட்ட தொடரின் கடைசி நாளன்று அன்றைய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி கறுப்பு பண நிலை குறித்து ஒரு 100 பக்க வெள்ளை அறிக்கையை  அதிரடியாக தாக்கல் செய்தார், அரசு எடுத்த பலமுனை நடவடிக்கை 5 அம்ச திட்டம் என பல விஷயங்களை பேசிய அந்த அறிக்கையின் முன்னுரையில் சொல்லப்பட்ட விஷயம். இது. ”நாட்டின் மூன்று முக்கிய உளவு நிறுவனங்கள் எவ்வளவு முயன்றும் உதேசமாக எவ்வளவு கறுப்ப பணம் இருக்கிறது என்பதை கணுபிடிக்க முடியவில்லை.”
இதற்கிடையே, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ரூ.25 லட்சம் கோடிக்கு மேல் கருப்பு பணம் பதுக்கி இருப்பதாக, சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங் 2011 பிப்ரவரி மாதம் தகவல் வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ரூ.25 லட்சம் கோடியை இந்தியர்கள் பதுக்கி உள்ளனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று இந்தியாவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் மறுப்பு தெரிவித்தது. அதன்பிறகு இந்த விவகாரம் கிடப்பில் போடபட்டது
தொடர்ந்து ஒரு ஜெர்மானிய .வங்கி தங்களிடம் பெரிய அளவில் கணக்கு இருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியலை அரசுக்கு தந்திருக்கும் செய்தி கசிந்திருந்ததால் அதை பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று அன்றைய எதிர்கட்சியான பிஜெபி குரல் எழுப்பி கொண்டிருந்தது. ஆனால் வெள்ளை அறிக்கையில் இதுபற்றி அரசு எதுவும் சொல்லவில்லை.
எவ்வளவு  இந்திய பணம் கறுப்பு பணமாக  வெளிநாட்டில் பதுக்க பட்டிருக்கும் என்பதை  ஆய்வாளர்கள் பலவகைகளில் கணிக்க முயற்சிதிருக்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக  தங்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைப்பது என்பது இந்தியாவிற்கு மட்டும் உரிய விஷயமில்லை. உலகமயமான இந்த விஷயத்தை 1999லிருந்து 2007 வரை  162 நாடுகள் இப்படி செய்திருக்கின்றன என்கிறது உலகவங்கியின்  ஒரு அறிக்கை. நாட்டின் மொத்த GDP யில் 20 முதல் 34 % வரை இது இருக்கிறது. இந்தியாவில் 20 முதல்-23 % வரை இருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை.(நமக்கு அண்ணன் கள் இருக்கிறார்கள்). முந்திய அரசின் வெள்ளை அறிக்கை இந்த புள்ளிவிபரங்களை மறுக்க வில்லை. இந்த மதிப்பீட்டின் படி பார்த்தால்  குறைந்த பட்சம்  40 ஆயிரம் கோடிக்கும் மேல் கருப்பு பணம் இருக்கிறது.  இதன் சொந்தகார்கள் அடையாளம் காணப்பட்டு, பணத்திற்கான வரியை வசூல் செய்தபின் அவர்கள் தண்டிக்கபட வேண்டும்.
வெளி நாட்டில் மற்ற இடங்களை விட சுவிஸ் நாட்டில் தான் அதிக வெளிநாட்டினர் பணம் வைத்திருக்கின்றனர். அந்த நாட்டின் வங்கி விதிகளும், ரகசியம் காக்கபட வேண்டியகடுமையான சட்டங்களும் ஒரு காரணம். சமீபத்திய சர்வ தேச நெருக்கடிகளுக்கு பின்னர் சுவிஸ் தேசிய வங்கி நிர்வாகம் ஆண்டு தோறும் நாடுகள் வாரியாக தங்கள் நாட்டு வங்கிகளில்  இருக்கும் கணக்குகளின் மொத்த தொகையை அறிவிக்கிறது. இந்த மாதம் 2013ம் ஆண்டுக்கான  கணக்கு விபரங்களை அறிவித்திருக்கிறது. இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் 14000 கோடி.. ஆச்சரியம் என்னவென்றால் இது கடந்த ஆண்டைவிட 40% அதிகம். 2010-11 ஆண்டுகளில் கறுப்பு பணம் பற்றி அரசாங்க அறிவிப்புகள், பாராளுமன்றவிவாதங்கள் இருந்த காலத்தில் கணிசமாக குறைந்திருந்த தொகை இது. கடந்த ஆண்டு மெல்ல இது அதிகரித்திருக்கிறது,
கறுப்பு பணத்தை ஒழிக்க இதுவரை எடுக்கபட்ட முயற்சிகள்
1947லிருந்து இன்றுவரை 40க்கும்மேற்பட்ட கமிஷன்கள் அமைக்கபட்டு,  இந்த 65 ஆண்டுகளில் பல் கோணங்களில் அலசி ஆராயபட்ட விஷயம் இது. கறுப்பு பணத்தின் பிறப்பு, பரிமாற்றம், பதுக்கல் என பல்வேறு பரிமாணங்களில் ஆராயபட்டிருக்கும் இந்த விஷயத்தில் பல ஆயிரகணக்கான ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமானது வாஞ்ச்சு கமிட்டியின் அறிக்கை. அருமையான யோசனைகள் சொல்லபட்ட இந்த அறிக்கை முழுமையாக ஏற்க படவில்லை. சில நல்ல யோசனைகள் ஏற்க பட்டன. ஆனால் காலபோக்கில் அவைகள் நீர்த்துபோயின. இப்படி யோசனைகள் பல இருந்தும் அரசாங்கங்கள் செயல் படுத்த முடியாமல் போனதின் காரணம் அந்தந்த அரசுகளுக்கு தேவையான அரசியல் துணிவு இல்லாதது தான். சம்பந்த பட்டவர்களினால் ஆட்சிக்கும் கட்சிக்கும் வரும் ஆபத்துக்களை விட இந்த கறுப்பு பணம் பிரச்சனை இருந்து தொலையட்டும் போன்ற உணர்கள் தான்

இந்த புலானாய்வு குழு எவ்வலவு வலிமையானது,?
2ஜி வழக்கில் ஒரு குழு சிறப்பாக செயலாற்றியதால் இப்போது உச்ச நீதிமன்றம் இது போன்ற  குழுக்களை நியமிக்கிறது. ஆனால் கோல்கேட் விஷயத்தை அவர்கள் கையாண்டைதை பார்த்த போது எல்லா குழுக்களும் ஒரே தரத்தில் இருக்க போவதில்லை என்பது புரிந்தது. கறுப்பு பண விவகாரத்திற்கு  அமைக்க பட்ட குழுவில்  தலவர்  உட்பட 13 பேர்கள் உறுப்பினர்கள். நீதிபதி எம். பி ஷா தலமையைலான இந்த குழுவில் உபதலைவர் தவிர, மற்றவர்கள் அனைவரும். துறைஅதிகாரிகள். ரிசர்வ் வங்கி,  அமுலாக்க பிரிவு, உளவுத்துறை வருமானவரித்துறை, போதைமருந்து கடத்தல் தடுப்பு, பொருளாதரா குற்ற தடுப்பு துறை போன்றவற்றின் செயலர்கள். இவர்கள் எப்போது வேண்டுமானலும் பதவி உயர்வு, மாற்றம் என்ற நிலையிலிருப்பவர்கள்..  இப்படி இந்த குழுவின் அமைப்பை பார்க்கும் போதே உடனடி செயல்படக்கூடியது என்ற எண்ணம் எழவில்லை. பிரதமர் அறிவித்தவுடன்   சம்பிரதாயமாக முதல் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இந்த அதிகாரிகள் அனைவரும் ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையில் தீவீரமாக இருந்து அரசு துணிவுடன் செயல்படதாதை கண்டு அல்லது நிர்பந்தம் காரணமாக ஒதுங்கியிருப்பவர்கள்.  விஷயத்தின் முழு கனத்தையும் அதன் பின்னால் உள்ள அரசியலையும் நன்கு அறிந்தவர்கள். ஆனால் பல்துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது இந்திய அதிகார வர்கத்தினரிடையே தோற்று போன ஒரு விஷயம்.  மேலும் இந்த குழுவின்  செயல் திட்டம் அறிவிக்க படவில்லை. அவை வெளிப்படையாக அறிவிக்க படுமா என்றும் தெரியவில்லை. இவர்களுக்கு அளிக்கபட்டிருக்கும்  பொறுப்புகள்(terms of Reference) பற்றியும் தெளிவாக பேசப்படவில்லை. உதாரணமாக ஜெர்மன் அரசு அளித்த பட்டியலில் உள்ள 26 பேர்களில் விசாராணை நடத்தி அதில் 8 பேர்களுக்கு போதிய ஆவணங்களும் ஆதாரங்களும் இல்லாதாதால்  கைவிடபட்டு மற்றவர்களிம் மீது விசாராணை தொடர்ந்து கொண்டிருப்பதாக முந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த பெயர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கிழ் விண்ணபித்தவருக்கு மறுக்கபட்டது.  உச்ச நீதி மன்றத்தில் இரண்டு சீலிட்ட கவர்களில்  தனித்தனியாக அந்த பெயர்களை கொடுத்த அரசு மனுதாரருக்கு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு வழங்க ஆணையிட்டபோதும் இது தகவல் உரிமைக்கு அப்பாற்பட்டது என சொல்லி அப்பீல் செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த புதிய குழுவிற்கு  தனியாக ஆணை இடப்படாவிட்டால் தவிர அந்த 8 பெயர்களை ஆராய முடியாது.  வழக்குகள் அவசியமில்லை என கைவிடபட்ட பெயர்களில் ரிலயன்ஸ் குழும இயக்குனர்கள் பெயர்கள் இருப்பதாக, இந்த செய்தி பரபரப்பாக இருந்த காலத்தில் மீடியாவில் பேசபட்டிருக்கிறது.
இவைகளையெல்லாம் பார்க்கும் போது மோடி அரசு உச்சநீதிமன்ற ஆணையை பயன்படுத்திகொண்டு  முந்திய அரசைப்போல தாமதபடுத்தி அவபெயரை  பெற விரும்பாமல் மக்களின் செல்வாக்கை பெற அவசர கதியில் இப்படி ஒரு  வலுவில்லாத குழுவை தெளிவில்லாத கட்டளைகளுடன் அமைத்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.




கருப்பு பணத்தில்தான் எத்தனை வண்ணம்?
 வருமான, அல்லது மற்ற வரிகளை செலுத்த விரும்பாமல் நடக்கும் எந்த ஒரு  செயல் பாட்டிலும் கருப்பு பணம்  பிறக்கிறது. இது சிறிதும் பெரிதுமாக எல்லா மட்டங்களிலும் நுழைந்திருக்கிறது. காலப்போக்கில் இது பலராலும் ஏற்றுகொள்ளபட்ட ஒரு விஷயமாகி வளர்ந்து கொண்டே யிருக்கிறது.. கடந்த 50 ஆண்டுகளில் வரிகள் மிக்குறைக்க பட்டிருக்கின்றன. வரிச்சலுகைகள் மிக அதிகமாகியிருக்கின்றன. ஆனாலும் இந்த பழக்கமும் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. சுமூகம் அங்கீகரித்தவிட்ட செயலை அழிக்க சட்டங்களால் மட்டும் முடியாது.
வரிஏய்ப்புக்கு கடுமையான சட்டங்கள் இங்கே இல்லை.  நீண்டகால சட்ட போராட்டங்களுக்கு பின்னர் வழங்கும் தண்டனைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதால் பிரச்சனை தொடர்கதையாகிறது. இன்றுள்ள சட்டங்களின் படி கணக்கு சொல்ல முடியாத பணம் கைபற்ற பட்டால் வரி மற்றும் அபராதம் செலுத்தினால் (இது மூன்றில் ஒரு பங்கு அளவிற்குதான் வரும்) மீதிப் பணம் வெள்ளை பணமாகிவிடும்.
 வரி ஏய்ப்பை தவிர ஏற்றுமதியில் வர வேண்டிய வருமானத்தை குறைவாக மதிப்பீட்டு  இந்தியாவில் பெற்று கொண்டு மீதியை அந்த வெளிநாட்டிலேயே நிறுத்திகொள்வதும் அதே போல் இறக்குமதிக்கு செலுத்தவேண்டிய அன்னிய செலாவாணியை அதிகம் செலுத்தி பணத்தை வெளிநாட்டில் சேமிப்பது போன்ற பல வழிகளில்  கருப்பு பணம் உருவெடுக்கிறது.  இந்த வழிமுறைகள் அனைத்தும் நமது அரசு அதிகாரிகளுக்கு நனறாக தெரியும் என்பதும் அவர்களில் பலர் இவைகளை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதும் தான் உண்மை.
90களுக்கு பின் இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கைகளின் மூலம் கதவுகள் திறக்க பட்டவுடன் வெளிநாட்டில் பதுக்கபடும் கருப்பு பணத்தின் அளவு பலமடங்கு அதிகரித்துவிட்டது. இன்று நம்ப முடியாத அளவில்  வளர்ந்து பெருகி நிற்கிறது.
FDI என்ற நேரிடையான  அன்னிய முதலீடு திட்டம் பிறக்கும் போதே இந்த கருப்பு பணம் உருவாதற்கான் வழியுடன் பிறந்த ஒரு திட்டம். இது தற்செயலா, திட்டமிடபட்ட தந்திரமா என்பது ஒரு புரியாத புதிர்,  நமக்கு வந்த அன்னிய முதலீடுகளில் 50%க்கு மேல்  எந்த வரிகளும் இல்லாத சில குட்டி நாடுகளிலிருந்துதான். இந்த நாடுகளின் பொருளாதார சட்டங்களும் நிதி வங்கி அமைப்புகளும் விசித்திரமானவை. இங்கு அதிக கஷ்டங்கள் இல்லாமல் கணக்குகள் திறக்கலாம். அதிலிருந்து எங்கு வேண்டுமானலும் எவ்வளவு வேண்டுமானலும் பணத்தை மாற்றலாம். இந்த வசதிகளினால் இந்தியாவிற்கு  இந்த நாடுகளிலிருந்து  மூதலீடுகள் கொட்டியது.  இன்னும் கொட்டிகொண்டிருக்கிறது. இவற்றி பெரும்பாலானவை இந்தியர்களின் பணம்- கணக்கில் வராத கருப்பு பணம்- உலகின் பல மூலைகளிலிருந்து இந்த குட்டி தேசங்களுக்கு அனுப்ப பட்டு அங்கிருந்து மூதலீடாக வடிவம் எடுத்து ஒரு லெட்டர் பேட் கம்பெனி மூலம் இங்கே அனுப்ப பட்டவை. இதில் முக்கியமான விஷயம் முதலீடு செய்பவர்கள் நேரிடையாக செய்யாமல் அங்கைகரிக்க பட்ட ஏஜெண்ட்கள் மூலம் செய்யாலாம். அதனால்  உண்மையில்பணம் அனுப்பியது யார் என்ற தெரிய வாய்ப்பில்லை.  பணம் அனுப்ப பட்டு முடிந்தவுடன்  அனுப்பிய  அந்த நிறுவனம் மூடபட்டதாக பதிவாகிவிடும்.
நம் நாட்டின் அரசியல் வாதிகள்  தொடரும் முதலீடுகளின் புள்ளி விபரங்களை காட்டி மக்களை மகிழ்விக்கிறார்கள். கருப்பு பணத்தின் சொந்த கார்கள் தங்கள் பணம் பத்திரமாக தாய் நாட்டில் பாதுகாப்பாக புது வடிவம் பெற்றதை கண்டு மகிழ்கிறார்கள். எல்லாம் சரி? எப்படி வெளிநாட்டுக்கு இந்த கருப்பு பணத்தை அனுப்பு முடிகிறது என்கிறீர்களா? உலகிலேயே இதற்காக மிக பாதுகாப்பான ”ஹவாலா” முறையை கண்டுபிடித்து சிறப்பாக செயல் படுத்தும் சமார்த்தியசாலிகள் இந்தியர்கள் தான். கொடுக்கபடும் உள் நாட்டு பணத்திற்கு ஈடாக வெளிநாட்டு பணம் உங்கள் வெளிநாட்டு கணக்கில் வரவு வைக்க மிக பெரிய அளவில் சில நிறுவனங்கள், அன்னிய நாட்டு வங்கிகிளைகளுடன் இயங்கிகொண்டிருக்கின்றன.  இவர்கள் கையாண்ட பணத்தின் அளவு பிரமிக்கவைப்பவை.  சில நடவடிக்கைகள கண்டு பிடிக்கபட்டபின்னரும் ( காண்க HSBC வங்கி- ஆழம் ஜனவரி  இதழ்)  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க படாத விஷயம் இது.

இம்மாதிரி பணபதுக்கலில் நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக  கட்சி பேதமின்றி எல்லா அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதால் எந்த அரசு வந்தாலும் இது முழுவதுமாக ஒழிக்கபட வழியில்லை என்று ஒரு கருத்தும் இருக்கிறது. 





9/7/14

டிஜிட்டல் தமிழர்கள்


மலேசியாவில் பிறந்த. சுபாஷிணி ஜெர்மனியில்வசித்து வரும் ஒரு தமிழ் எழுத்தாளர்-ஆய்வாளர். கணையாழி இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கிறார். தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பை டாக்டர் கண்ணன் அவர்களோடு இணைந்து நிறுவியவர். அதன் துணைத்தலைவராக இருப்பதோடு அதன் வலைகுரு (webmaster) ஆகவும் செயல்பட்டு வருகிறார்.
அரிய, பழைய ஓலைச்சுவடிகள் தற்போது புழக்கத்தில் இல்லாத நூல்கள் இவற்றை மின்பதிப்பாக்கி வைப்பதை முக்கியக் கடமையாக ஏற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருகிறார். இதையன்றி கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சி, மானுடவியல் போன்ற துறைகளில் ஈடுபாடு உண்டு.
இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தன் சொந்தச் செலவில் தமிழகம் வந்து களப்பணிகளை மேற்கொள்கிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க, ஆனால் அசட்டை செய்யப்பட்ட கலாசாரச் செழுமை நிறைந்த இடங்களுக்குச் சென்று தகவல் சேகரித்தல், அவற்றை வலையகத்தில் வெளியிடுவது, அறிஞர்களைச் சந்திப்பது, தமிழ்க் கணினி பற்றிய பட்டறைகள் நடத்துவது என்று அந்தப் பயணத்தை செயல்நிரம்பியதாகஆக்கிக் கொள்கிறார்.
மலேசியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் படித்த இவர் ஹ்யூலெட் பெக்கார்ட் நிறுவனத்தில் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளுக்கான வர்த்தக சேவையை அளிக்கும் Chief IT Architect, ஆகப் பணி செய்கிறார். ஜெர்மானியரான திரு. ட்ரெம்மலை மணந்து ஜெர்மனியில் வசிக்கிறார்.
படித்தது மலாய் மொழியிலும், ஆங்கிலத்திலும். பேசுவது வீட்டில் ஜெர்மன், அலுவலகத்தில் ஆங்கிலம்... ஆனால் நேசிப்பது  தமிழ் மொழியை. தமிழ் மரபுகளை.  தமிழ் மரபுகளை  பாதுகாக்க  இவர் தேர்ந்தெடுத்திருக்கும் வழி டிஜிட்டலில் சேமிப்பு
.   இலக்கிய படைப்புகள் மட்டுமின்றி மருத்துவம்,கணிதம் வானசாஸ்திரம், கோவில்கட்டும் முறைகள், நாவாய் சாஸ்திரம், வான சாஸ்திரம் என சகலத்தையும்  டிஜிட்டலாக்கி சேமித்து பட்டியிலிட்டிருக்கிறார்.. இம்முறை வந்த பயணத்தில் தினமணியின் இலக்கிய திருவிழாவிலும்  சாகித்திய அகதமியின்  நிகழ்ச்சியிலும் பங்கேற்று  தன் பணிகளைப்பற்றியும் அதில் சந்திக்கும் சவால்களை பற்றி  பேசினார்..
தமிழிலும் அதன் மரபுகளிலும் எப்படி இத்தனை ஆர்வம்? 
தமிழ்வம்சாவளி மலேசிய குடும்பம் எங்களுடையது. என் தாய் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமிழ்  பேச எழுத ஆர்வத்துடன் சொல்லிகொடுப்பவர். என் பள்ளிக்கூட காலங்களில் அவர்களுடன் நானும் தமிழ் கற்றேன். அம்மா சொல்வதற்காக தமிழில் கட்டுரை பேச்சு எல்லாம்  எழுதியிருக்கிறேன்.  ஆனால் அப்போதெல்லாம் இந்த ஆர்வம் இல்லை. 
ஜெர்மனிக்கு வந்த பின் 90 களின்   துவக்கத்தில் இணைத்தில் தமிழை பயன்படுத்த  யூனிகோர்ட் முறையில் எழுத்துருக்களை  தமிழகம், மலேசியா சிங்கப்பூர்  போன்ற இடங்களிலிருந்து ஒத்த சிந்தனை கொண்டவர்கள் இணைந்து செய்த பணிகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழோடு நெருக்கமானேன்.  இந்த வளமான மொழி நம்முடையதல்லவா? நாமும் ஏதாவதுசெய்ய வேண்டும் என எண்ணினேன்.  தமிழ் வாசிப்பும் தொடர்புகளும் அதிகமாகியிற்று. அப்போது அறிமுகமானவர் முனைவர் நாராயணன் கண்ணன்

நா.கண்ணன் தொழில்முறையில் ஒரு அறிவியல் விஞ்ஞானி. மதுரைப் பல்கலைக் கழகத்திலும், ஜப்பானிலுள்ள எகிமே பல்கலைக் கழகத்திலும் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். உயிர் வேதிமவியல், சூழலியல் போன்ற துறைகளில் தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் வசிக்கும் முக்கிய இந்திய விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். இவர் 10 வருடங்கள் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம்) இணைப்பேராசிரியராக இருந்துவிட்டு  கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர். இப்போது புத்ர மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக உள்ளார். இருபதாண்டுகளுக்கு மேலாக அயலகத்திலிருந்து தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்து வருபவர். தமிழ் இலக்கிய, சரித்திர, கலை வடிவங்களை எண்ம (digital) வடிவில் மின்னுலகில் நிரந்தரப் படுத்தும் முயற்சியின் முன்னோடிகளில் ஒருவரான இவருடன்  இணைந்து  உருவாக்க பட்டது தான் தமிழ் மரபு அறகட்டளை இந்த டிஜிட்டல் சேமிப்புகளை    துவக்கியபின்னர் இந்த பணி தந்த ஆச்சரியங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றன.  நம் முன்னோர்கள் செப்பேடுகளிலும், சுவடிகளிலும், பாதுகாத்து கொடுத்ததை  தவிர எண்ணற்ற பல விஷயங்கள் இன்னும் சுவடிகளிலேயே கிராமங்களில் இருக்கிறது. திருவாடுதுறை போன்ற ஆதினங்களில் பல் அரிய சுவடிகள் இருக்கிறது. அதை இப்போது  இருப்பதுபோல் நீண்ட நாள் பாதுகாப்பது கடினம். அவற்றை அடுத்த தலமுறைக்கு கொண்டு செல்வதுதான் தமிழ் மரபு அறக்கட்டளையின் அடிப்படை நோக்கம்.  தமிழ் நாட்டில் மாலன்,  நராசாய்யா  தஞ்சை தமிழ்பல்கலைகழக முனைவர் ராஜேந்திரன்  போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்து உதவுகிறார்கள். என்று சொல்லும் சுபாஷினி ஆங்கில கலப்பில்லாத, மலேசிய தமிழ் வாசனைகள் இல்லாமல் நல்ல தமிழில் சரளமாக் பேசுகிறார்.  இவருடைய தளத்தில்  பேட்டிகள், பாடல்களையும் பதிவுகளையும் சேமிக்கிறார், அடுத்து  ஒரு பதிப்பு வர வாய்ப்பு இல்லாத புத்தகங்களை மின் நூலாக மாற்றி சேமித்திருக்கிறார். ஆவணங்களை பாதுகாக்க இணைய ஊடகம் மிக சிறந்த வாய்ப்பு. -வளரும் தொழில்நுட்பத்தை  முழுவீச்சில் பயன்படுத்தினால் பலபணிகளை செய்யலாம் என்கிறார்.  மலேசியாவில் வந்த முதல் தமிழ் பத்திரிகையின் பிரதி  இப்போது அங்கில்லை. ஆனால் மலேசியா  அன்றைய பிரிடிட்டிஷ் காலனியாக இருந்த காரணத்தினால் பதிவு செய்யபட்ட பத்திரிகைகளின் பிரதி ஒன்று பிரிட்டிஷ் அர்சாங்காத்திற்கு லண்டனுக்கு அனுப்ப பட வேண்டும் என்று ஒரு  சட்டம் இருந்திருக்கிறது. அதன்மூலம் ஆராய்ந்ததில் அந்த முதல் பத்திரிகையின் முதல் இதழ் பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கபட்டிருப்பது  தெரிந்தது. இப்படி பல  சுவாரஸ்யமான விஷயங்களை அறிந்து அதை தமிழ் மரபு தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த பெண்.

ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோவிலை விட பழையது திருவிடை மருதூர் மஹாலிங்கேஸ்ரவர் கோவில். இந்த கோவிலுக்கு அருகில் ஒரு போர் நடந்து இருப்பது, அதன் பின்னர் கோவில் மூன்று கட்டமாக விரிவாக்க பட்டிருப்பதை எல்லாம் அங்குள்ள கல்வெட்டுகளில் கண்டு  அதை  படமெடுத்து டிஜிட்டலாக ஆவணபடுத்திதை சொல்லும் இவர்   அந்த கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற புனரமைப்பு பணிகளில் அந்த கல்வெட்டுகள் சிதைக்கபட்டிருப்தையும் சன்னதிகள் இடமாற்றம் செய்யபட்டிருப்பதும் கண்டு வருந்துகிறார். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் 200 ஆண்டு பழமையான  விஷயங்களை கூட பிரமாதமான  விஷயமாக ஆவணப்படுத்தி பாதுகாத்து காட்சியாக்கி விளம்பரபடுத்துகிறார்கள். பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட  நாமும் இது போல் செய்து உலகை கவர வேண்டும் என்கிறார்.

இந்த  பயணத்தில் மதுரை மேலூர் ஆனைமலை அருகிலிருக்கும் குகைகோவில்களை ஆராய்ந்திருக்கிறார். உள்ளுர் பேஸ்புக்  நண்பர்கள் உதவியிருக்கின்றனர். உங்கள் ஊரில் ஏதாவது  தமிழ் மரபு தொடர்பான செய்திகள் இருந்தால் இவரை தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த  இந்திய பயணத்தில் உங்கள் ஊருக்கே வருவார்.
ரமணன்
kalki 13/07/14 இதழ்


5/7/14

சர்வாதிகாரியின் சாபம்


நீண்ட நெடிய வரலாறு கொண்ட நாடு ஈராக். இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள செழிப்பான நிலப்பரப்பை கொண்டது. ஆங்கிலேயர் பிடியில் கொஞ்ச காலம் இருந்த ஈராக் மீண்டும் மன்னராட்சிக்கு திரும்பியது. ஆனால், 1958ல் நடந்த ராணுவ புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். 1978ல் சதாம் உசேன் ஈராக் அதிபராக பொறுப்பேற்றார். 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினரிடம் சிக்கும்வரை யாரும் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக சதாம் இருந்தார்.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ரசாயன ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக கூறி 2003ல் ஈராக்கை தனது ஆளுகையின் கீழ் அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகள் படை கொண்டு வந்தது.  இந்த போரின் இறுதியில்தான் தப்பியோடிய சதாம் உசேன் கண்டுபிடிக்க பட்டார். அப்போது, ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது. அவர்கள் சதாமை 2006ஆம் ஆண்டு தேசத்துரோகத்திற்காக தூக்கிலிட்டனர். சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர்.  ராணுவம், அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்தனர்.. இப்படி ஒதுக்கப்பட்ட சன்னி பிரிவினர் ஆயுதமேந்தி போராடத் தொடங்கினர். அப்போது தொடங்கிய கலவரம், 2011ல் அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறியதும் தீவிரமடைந்தது.
ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தி வந்த பயங்கர தாக்குதல்கள் இப்போது உள்நாட்டு போராகி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த போரை நடத்துவது சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பு இப்போது, ஷியாக்களுக்கு எதிராக நடத்தும் இந்த யுத்தத்துக்கு சிரியாவின் ஆசி உள்ளது. சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் இணைந்துவிட்டனர். பல நகரங்களை அடுத்தடுத்து பிடித்த தீவிரவாதிகள் இப்போது, தலைநகர் பாக்தாத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளனர். எங்கிருந்து இந்த தீவிர வாதிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வருகிறது ? விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது அமெரிக்க உளவுத்துறை

 ISIS என்ற இந்த அமைப்பின் தலைவர்  அப் பக்கர் அல் பாக்தாதி. அமெரிக்க படையெடுப்புகளினால் சதாம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, ஈராக்கில் அல்கைதா என்றொரு ஆயுதக் குழு ஒன்று இயங்கி வந்தது. அமெரிக்கப் படைகளுடனான மோதலில் அதன் தலைவர்கள் கொல்லப் பட்டனர். அப்போது அமெரிக்கப் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்ட போராளிகளில் ஒருவர் தான் அல் பாக்தாதி.
2005 முதல், Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். அப்போது, "உங்களை நியூ யார்க்கில் சந்திக்கிறேன்!" என்று சிறைக் காவலர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். விடுதலையான பின்னர் எஞ்சியிருந்த போராளிகளை ஒன்று திரட்டி ISISஐ     உருவாக்கியிருக்கிறார். .

2011ம் ஆண்டு, அல் பாக்தாதி, அமெரிக்கர்களால் "தேடப்படும் பயங்கரவாதி" என்று அறிவிக்கப் பட்டார். அவரது தலைக்கு விலையாக பத்து மில்லியன் டாலர் அறிவிக்கபட்டது..  அந்தக் காலகட்டத்தில் சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அல் பாக்தாதி குழுவினர், சிரியாவில், அரச படைகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக நம்பபட்டது.


. தீவிர வாதிகள் ஒடுக்கப்படாவிட்டால் ஈராக் இரண்டாக உடையும் அபாயமிருக்கிறது. ஈராக்கின் இந்த நிலைக்கு ஒரு வகையில் காரணமான அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இப்போது இந்த பிரச்னையில் தலையிட தயங்குகின்றன.. அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை காக்க 275 வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பபெறுவோம் என்ற அறிவிப்புடன் தேர்தலை சந்தித்த ஒபமா இனி போர் எதுவும் நிகழந்தால் அமெரிக்கா தலையிடாது என்று அறிவித்துவிருக்கிறார்.
ஆனால் தன்னை ”உலக போலீசாக” வர்ணித்துகொள்லும் அமெரிக்கா ஈராக்கின்  நிரந்தர பகையாளியான ஈரான் நாட்டின்மூலம் உதவி இன்னொரு போரை உருவக்கும் என்றும் சில ஐரோப்பிய பத்திரிகைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?
ஈராக்கில் தீவிர வாத தாக்குதல்களால் அரசு நிர்வாகம் அடியோடு சீர்குலைத்துவிட்டது.,  நிவாரண பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை. அகதிகள் நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது. ஈராக்கின் உள்நாட்டு போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது, கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பி உள்ள நமது பொருளாதாரத்தை  பாதிக்கும். பெட்ரோல் விலையேற்றம் நம் பர்சை பாதிக்கும், உள்நாட்டு போரால் பல லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தவிக்கின்றனர்.  அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் நிலைமை இன்னும் மோசம்.. ஏராளமான இந்தியர்கள்  ஈராக்கில் உள்ளனர். அவர்களில் பலர் தனியார் நிருவனங்களில் காண்ட்டிராக்டில் வேலைசெய்பவர்கள். எந்த நிமிடமும் சேமிப்புகள் பரிக்கபட்டு  அகதிகளாக வெளியேற்ற படலாம்.


8 ஆண்டுகளுக்கு முன் சதாம் உசேன் தூக்கிலிடப்படும் முன் நடந்த வழக்கில் சதாம் சொன்னது என்னை அமெரிக்க ஆதரவுடன் நீங்கள் தூக்கில் கூட போடலாம். ஆனால் நான் இறந்தாலும்  என் ஆவி என் மக்களை வழி நடத்தும்.  நடக்கபோகும் போரில் நீங்கள் தோற்பீர்கள் என்றார்.

.... இப்போது போர் நடக்கிறது.


ஆதித்யா (ரமணன்)
கல்கி07/0714 இதழில் எழுதியது

1/7/14

ஆச்சரியமான தாத்தா தான் !



அடுத்த மாதம் உங்களுடைய 90வது பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும்?. சொல்லுங்கள் என  கிழவரின் மகன், மகள், பேரக்குழந்தைகள் கொண்ட அந்த சந்தோஷமான பெரிய குடும்பத்தினர் கேட்டனர். ”பரிசெல்லாம் வேண்டாம். அன்று எல்லோரும் வந்துவிடுங்கள் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது” என்றார் தாத்தா.

அவர் 1989லிருந்து 93 வரை  அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ். பின்னாளில்இவரது மகன் புஷ்ஷும் ஜனாதிபதியாக இருந்த்தால்  இவரை சீனியர் புஷ் என பத்திரிகைகள் அழைக்கின்றன.  குடும்பத்தினர் சென்ற பின் புஷ் தன் மனைவியிடம் சொன்னது “ அன்று  நான் பாரசூட்டின் மூலம் குதிக்க விரும்புகிறேன். நண்பர்களிடம் சொல்லி ஏற்பாடுகள் செய்  விஷயம் ரகசியமாக இருக்கட்டும் என்றார். .
அவருக்கு  உயர் ரத்த அழுத்தம், நெஞ்சில் சளிகட்டுதல்,சர்க்கரை போன்ற  தொல்லைகள் இருப்பதால் இது ஆபத்தான முயற்சி வேண்டாம் என்றார்கள் டாக்டர்கள். முன்னாள் ஜனாதிபதி இத்தகைய செயல்களில் ஈடுபடுவது  அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரச்சனைகளை எழுப்பும் என ராணுவ அதிகாரிகள் சொன்னார்கள். இம்மாதிரி சாகஸ செயல்களுக்கு அவருக்கு இன்ஷ்யூரன்ஸ் இல்லை என்றார்கள் அவரது இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகாரர்கள்.
புஷ் தாத்தா எதைப்பற்றியும் கவலைப்படாமல் நண்பர்களின் உதவியுடன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்., அவரின் உடல் நிலை, வானிலை  போன்றவற்றால் எந்த நிமிடத்திலும் திட்டம் கைவிடப்படலாம் என்பதால். நிகழ்ச்சி பொதுமக்களுக்கு அறிவிக்க படவில்லை.  ஆனாலும் ஒரு சிலருக்கே தெரிந்த விஷயம் மெல்ல கசிந்துவிட்டது. புஷ் வேறு தனது டிவிட்டரில் இங்கு  பருவ நிலை இதமாக இருக்கிறது. பாராசூட்டில் குதிக்கலாம் போலிருக்கிறது என  கோடிகாட்டியிருந்தார்.
 பிறந்த நாள் அன்று காலை  அவரது விடுமுறைகால வீட்டு தோட்டத்தில் 6 மகன், மகள், 14 பேர குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் ,உறவினர்கள், நண்பர்கள், என 200பேர்  கேக் வெட்டி ஹாப்பி பெர்த்டே பாடிய பின்னர். காத்திருந்த ஹெலிகாப்டரில்  அவரது சக்கர நாற்காலியிலிருந்து ஏற்றபட்டார்.  ஆம்!. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் நடமாடுவது சக்கர நாற்காலியில் தான்.  தக்க உடைய அணிந்து கொண்டு ஹெலிகாப்டர் 6000 அடி உயரத்தை தாண்டியதும் பாராசூட்டுடன் குதிக்க தயாராக இருந்தார் புஷ்

  செய்தி பேஸ்புக், டிவிட்டர் மூலம்  பரவியிருந்ததால், திட்டமிட்டபடி இறங்க வேண்டிய இடமான உள்ளூர் சர்ச்சின் பின்னாலுள்ள புல் வெளியில்   ஆவலுடன் மக்கள் கூட்டம்.  வெள்ளை ஆரஞ்சு நிற பாரசூட் வானில் விரிய  ஆரம்பித்ததிலுருந்து இறங்கும் வரை  நகர மக்களின் ஆராவாரமும் கைதட்டலும் தொடர்ந்தது. 
பத்திரமாக தரையிறங்கினார் புஷ். அவரது முழங்காலுக்கு கீழே கால்கள் செயல்படுவதில்லை இல்லையாதாலால், அவரால் தறையிறாங்கியவுடன் பாரசூட்டுடன் ஓடவோ அல்லது நடக்கவோ முடியாமல் முன் புறமாக விழுந்து பாராசூட்டால் சில நிமிடங்கள் இழுத்து செல்லபட்டார்.  இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க விமான படையினர் பாதுகாப்புகாக உடன் பாராசூட்டில் பறந்து வந்தவர்கள் உடனே பாய்ந்து உதவிசெய்து அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்துவிட்டனர்.  ”ஆச்சரியமான தாத்தாதான். ஆனால் எனக்கு  பயமாக இருந்ததால் கண்களை மூடி.க்கொண்டுவிட்டேன்” என்றார் சிறுவயது கொள்ளு பேத்திகளில் ஒருவர்.
”அப்பா உங்கள் சாதனைகளில் இது முக்கியமானது. நான் கூட இதுபோல செய்யப்போகிறேன்” என்றார். மகன் புஷ். (இதை கிண்டலடித்து அமெரிக்காவில் நிறைய ஜோக்குகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன)   எல்லாவற்றையும் ஒரு யூகேஜி குழந்தையின் சிரிப்போடு ஏற்றுகொண்ட புஷ் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டார்.
பிறந்த நாளுக்கு ஏன் இந்த பாரச்சூட் குதிப்பு?.  ஜார்ஜ் புஷ் இரண்டாவது உலகப்போரில் பணியாற்றிய அதிகாரி. ஒரு கட்டத்தில்  சுட்டுவிழ்த்தபட்ட விமானத்திலிருந்து பாராசூட்டின் மூலம் குதித்து  வினாடி நேரத்தில் உயிர்தப்பியவர்.  டென்னிஸ் கோல்ப், பேஸ்கட்பால் என எல்லாவிளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். வெள்ளை மாளிகையில் வசித்தபோது ஜனாதிபதி ஜாகிங்க்காக தனி பாதை அமைத்தவர்,தனது 80 பிறந்தாநாளின் போதும் விமானத்திலிருந்து குதித்தவர். மனத்தளவில் நான் ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை சோதித்துகொள்ளவும், காட்ட விரும்பினேன் என்கிறார்.

 ”இதை உங்கள் வாழ்நாள் சாதனையாக பதிவு செய்திருக்கிறீர்கள்” என சொன்ன ஒரு நண்பரிடம், “ வாழ்க்கையை அதற்குள் முடித்துவிடாதீர்கள்.   95 வது பிறந்தநாளுக்கு 7000 அடியிலிருந்து குதிக்க போகிறார்” என்று சொன்னவர்  புஷ்ஷின் மனைவி பார்பாரா புஷ்
ரமணன்
(கல்கி 6/7/14)





27/6/14

உயர்ந்த மனிதன்



நாஸாவால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப பட்ட விண்கலம் “க்யூராஸிட்டி” 2012 தரையிறங்கியிருந்தாலும் செவ்வாயில் 687பூமி நாட்கள் தான் செவ்வாயில் ஒரு வருடம் என்பதால்  இப்போதுதான்   அது இறங்கிய  முதலாண்டு கொண்டாடபட்டது.  செல்போன்களில் தன்னைத்தானே படமெடுத்துக்கொண்டு பேஸ்புக்கில் போட்டுகொள்ளும்  செல்பிக்கள் போல க்யூராஸிட்டியும்   அந்த ஆண்டுவிழா  நாளில் தன்னை படமெடுத்து  நாசாவிற்கு அனுப்பியிருக்கும் செய்தியைப் படித்த போது 2012ல் அது செவ்வாயில் தரையிறங்கிய நாளில்  நிகழந்தது நினைவில் நிழலாடியது. அன்று எனது சுவடுகளில் பதிந்தது இது







உயர்ந்த மனிதன்
இன்று(11/08/12) மதியம் 1.மணிக்கு ஒரு போன் வந்தது. இஸ் மிஸ்டர் ரமணன் தேர்?
என்பதை தொடர்ந்து  ஐ ஆம் சிங் காலிங் ஃபிரம் யூ எஸ் என சொன்னதை கேட்ட என் மனைவி மீரா  போனை கொடுக்க    சிங்? ஃபரம் வேர் என ? கேட்டு குழம்பிய நான்  அவர் தன்பெயரைச்சொன்னவுடன் நேற்றிரவு (10/11/12) அனுப்பிய ஈ மெயில்  பளிச்சென்று நினைவுக்கு வர மகிழ்ச்சியில் பதறிப் போனேன் பல ஆண்டுகள் ஆராய்ச்சிகளுக்கு பின்னர் பல ஆயிரம் கோடி  செலவில் செவ்வாய் கிரகத்திற்கு   அனுப்பட்ட க்யூராரிஸிட்டி  விண்வெளிகலம் 8 மாத பயணத்திற்கு (57 கோடி கீமீ) பின்னர் பத்திரமா  செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க ஒரு டிசைனை வடிவமைத்து செய்லாக்கிய ஸ்பேஸ் ஸைண்டிஸ்ட் டாகடர் குருகிருபால் சிங் தான் அவர். 

செவ்வாய் கிரக விண்கல செய்திகளை கவனித்து வந்த போது ஒரேஒரு வரியில் இவரது பெயரை பார்த்தேன். இந்தியப் பெயராக இருக்கிறதே இவரைப்பற்றி எழுதலாமே (பத்திரிகையாளன் புத்தி) என விபரங்கள் தேட ஆரம்பித்தேன், கூகுள், யாகூ, ஃபேஸ்புக் எதிலும் சிக்கவில்லை.நாஸா வெப் ஸைட்டிலும் மேய்ந்து பார்த்தேன். ஒன்றும் தேறாததால் நாஸா பிரஸ் யூனிட்டுக்கு ஒரு மெயில் அனுப்பினேன்.. அவர்களும் ஒன்றும் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் அலசி நாஸாவின் தலமை விஞ்ஞானிகளிண் டைரக்டரியில் இருந்த் சிங் பெயர்களை வடிகட்டி ஒருவருக்கு  நேற்றிரவு  ஒரு மெயில் அனுப்பினேன். அதற்கு தான் இன்று அவருடைய போன். நான் அனுப்பிய ஈ மெயில் உண்மையானதுதான?- ஸ்பாம் இல்லையே?  ன்பதை உறுதி செய்துகொள்வதற்காக போன்செய்ததாக சொன்னவர் மிக அன்புடன் பேசி கொண்டிருந்தார். எப்படி என்னால் அந்த ஈ மெயில் ஐடி  தொடர்பு கொள் முடிந்தது (அது கிடைத்தது தனிக்கதை) என ஆச்சரியபட்டார். அவர் பெயர் வந்திருக்கும் செய்தியை இந்துவிலிருந்து  படித்து காட்டியபோது சந்தோஷப்பட்டார். 23 வருடங்கள் நாஸாவில் வேலை செய்வதையும், பெற்றோர்கள் டெல்லியில் இருப்பதையும் சொன்னார்.  நான் கேட்ட விபரங்களையும் அவர் படத்தையும்  உடனே மெயிலில் அனுப்பியும் வைத்தார். இதன் கிழே அந்த மெயிலையும் பதிவு செய்திருக்கிறேன்.
இவரது படத்தையும், விபரங்களையும் நேரடியாக  முதலில் பெறறிருக்கும்  ஒரே இந்திய் பத்திரிகையாளர் நான்தான். எனபதைவிட  மிக சந்தோஷமான விஷயம்  மிகப்பெரிய பொறுப்பிலிருக்கும்  இந்த மனிதரை ஒரு சக இந்தியனின், பத்திரிகையாளானை மதித்து மிக எளிமையாக அன்புடன் பேசி உதவிய ஒரு உயர்ந்த மனிதனை இன்று தெரிந்து  கொண்டது தான்.  
ரமணன்
 ------------------------------------------------------------------------------------------------------------
Inbox
gurkirpal singh  brensim@prodigy.net
14:14 (8 hours ago) to me
Dear Ramanan:
I had the pleasure of speaking with you a few minutes ago. Thank you for the very kind words. I am sending the material that you had requested - brief bio, a picture (attached JPEG), and a brief description of my contributions to the Curiosity mission. I am hoping that this will serve your purpose. Let me know if I missed anything. Please note that additional information regarding the mission may be obtained from the Landing Press Kit at http://mars.jpl.nasa.gov/msl/news/newsroom.  I would be grateful if you could acknowledge this e-mail.
Best regards,
Gurkirpal
 Bio
========================================================================

Singh, Gurkirpal (3443) 




Dear Ramanan:

Thank you for your acknowledgement, and diligence in putting the substance on paper. You can't imagine the satisfaction I received by noting the appeal the magazine has among the youth. I hope that the news of this achievement would inspire someone somewhere just as it inspired me several years go when I was a youth of impressionable age. This has been my aim all along when I first decided to respond to your request. I very sincerely appreciate your efforts in doing the necessary legwork to probe the connection further . As you might surmise, I know not a word of Tamil, but I would be sure to have my Tamil friends here help me digest the attachments you were kind enough to send. Thanks again.

Regards,
Gurkirpal 


 புதிய தலைமுறையில் வெளியான “அந்த 7 நிமிடங்கள்” கட்டுரையை இங்கே கிளிக் செய்தால் பார்க்கலாம்
http://ramananvsv.blogspot.in/2012/08/7.html


22/6/14

சுந்தருக்கு கிடைத்த சுதந்திரம்






காட்டு யானைகளை நாட்டிற்குள் கொண்டுவந்து  அந்த சுழலில் வாழ பழக்ககபடுத்துவது நமக்கு தெரியும். நாட்டிலேயே பலநாள் வாழந்த யானையை திரும்ப காட்டில் வாழவைக்க முடியுமா? முயற்சித்திருக்கிறார்கள்.
மஹராஷ்ட்டிர மாநிலத்தின் கோலாப்பூர் மாவட்ட எம் எல் ஏ விஜய் கோர். இவர் குடும்பத்தினர்  அவர்களது கிராம கோவிலுக்கு ஒரு யானையை நன்கொடையாக தந்திருந்தனர். அதன் பெயர் சுந்தர். கோவிலுக்கு போதுமான வருமானம் இல்லாதாதால் அவர்கள் யானையை எம்/ எல் ஏ விடம் தந்து பராமரிக்க வேண்டினர். விஜய் அதை தன் வீட்ட்ருகே இருக்கும் ஒரு ஷெட்டில் கட்டிப்போட்டு வைத்திருந்தார். முறையாக பராமரிக்க படாதால்  சுந்தர் நலிவடைந்து கொண்டிருந்தது. அந்த கிராமத்திற்கு வந்த ஒரு டூரிஸ்ட்  இரண்டு கால்களும் சங்கிலியால் கட்டபட்டிருக்கும் சுந்தரை படமெடுத்து தன் பேஸ்புக்கில்   7 ஆண்டுகளாக அது கட்டபட்டிருப்பதையும், அதனால் அதன் கால்களில் புண்ணாகியிருப்பதையும். அதன் காதுகளில் அங்குசம் குத்தி புண்ணாகியிருக்கும் அவல நிலையையும் எழுதியிருந்தார்.  சில நாளில் மற்றொருவர்  அது படும் அவஸ்த்தையை வீடியா  எடுத்து வெளியிட்டார். பலர் அந்த யானையை விடுவிக்க வேண்டும் என எழுதிக்கொண்டிருந்தனர்.
பம்பாயில் வசிக்கும்  முன்னாள் மிஸ் இந்தியாவும், நடிகையுமான  செலினா ஜெய்ட்லி மிருகங்களை  கெளரவமாக நடத்தும் மக்கள் இயக்கத்தின்(PEOPLE FOR ETHICAL TREATMENT OF ANIMALS-PETA) தீவிர உறுப்பினர். அவர் மும்பாய் உயர் நீதிமன்றத்தில் சுந்தரை காப்பாற்ற வனத்துறையினருக்கு ஆணையிட ஒரு வழக்கை தொடர்ந்தார். ஒர்ரண்டு பின்னர் கோர்ட் ஆணையிட்டும் அதிகாரவர்க்கம் அசையவில்லை.  14 மாதம் ஆகிவிட்டது. இதற்கிடையில் இந்த சுந்தர் விவகாரம் பேஸ்புக்கிலும், டிட்டரிலும் பெரிய விஷயமாகிவிட்டது. சுந்தரை காப்பற்ற ஒரு பக்கமே  துவக்கபட்டு பலர் ஆதரவாக எழுதிகொண்டிருந்தனர். யானையின்  சொந்தக்காரர் எதிர் வழக்காடினார். இறுதியில் நீங்கள் உரிமையாளராக இருந்தாலும் துனப்புறுத்த உரிமையில்லை என்றும் வனத்துறையினர் சுந்தரை விடுவித்து பங்களூர் யானை பார்க்கில்  வைத்து  பராமரிக்க வேண்டும் என்றும் மும்பாய் உச்ச நீதி மன்றம் மீண்டும் கண்டிப்புடன் ஆணையிட்டது.
உரிமையாளார் விஜய் கோரே உச்சநீதிமன்றத்திற்கு அப்பீல் செய்திருக்கிறார்., சமூக வலைத்தளத்தில் இந்த விவாதத்தில் கொண்டிருந்தவர்கள் சீறினர். புதிய நண்பர்கள் இனைந்தனர். சர் பால் மெகார்த்தி, ”பேவாச்” புகழ் பமீலா ஆண்டர்சன், போன்ற
சர்தேசபிரபலங்களும், அமிதாபச்சன், மாதுரிதிக்‌ஷீத்  மாதவன் போன்ற நம்மூர் பிரபலங்களும் சுந்தரின் உடனடி விடுதலைக்கு ஆதரவு தெரிவித்து எழுதினர். ஒராண்டுக்கும் மேலாக தொடர்ந்து  இந்த யானை பற்றி எழுதிக்கொண்டிருப்பவர்களில் ஒருவர்  அமிதாப். மொத்தம் இதுவரை சுந்தரின் விடுதலைக்கு  ஆதரவு தெரிவித்தவர்கள் 2, 20,000பேர்.
வழக்கு அப்பீல்லில் இருந்தாலும்  உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு தடை எதுவுமில்லாதால். சுந்தரை  விடுதலை செய்து பத்திரமாக பங்களுரு பன்னர் கட்டா யானை பார்க்கில் சேர்க்க வேண்டும் என கோர்ட் விளக்கமளித்திருந்தது.  யானையை விடுதலை செய்யவேண்டும் என்பது கட்டளையாக இருந்தால் சங்கலியை அவிழ்த்துவிட்டு போய்விடலாம்.” ”பத்திரமாக பெங்களுரு கொண்டு செல்லபடவேண்டும் என்பது கோர்ட் ஆணையாகையால் மஹராஷ்டிர வனத்துறைக்கு தலைவலி. ஆரம்பித்தது.  கோலாப்பூரிலிருந்து பங்களுர் 700 கீமி. 25 மணி நேர பயணம். அதற்கு சுந்தரை தயார் செய்ய வேண்டும். பல வருடங்கள் கட்டி போடபட்ட நிலையிலேயே இருந்ததால் அதன் மனநிலை எப்படி என்பதை சோதிக்க வேண்டும் இப்படி பல பிரச்சனைகள் எழுந்தன. கேரளத்திலிருந்து யானைகளை நன்கு அறிந்த ஸ்பெஷலிஸ்ட் மாவுத்தர்கள் வரவழைக்கபட்டனர். மாநில கால்நடைத்துறை யானை ஸ்பெஷ்லிஸ்ட்கள் வந்தனர். அவர்களின் ரிப்போர்ட் படி  அதன் கால் புண்கள் குணமாகும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. அதன் எடையை தாங்கக்கூடிய வசதியான விசேஷ லாரி ஒன்று தயார் செய்யப்பட்டது.போகும் வழியில் அதன் உடல் நலம் பாதித்தால், சிகிச்சை அளிக்க கால்நடைடாக்டர்களுடன் ஒரு ஆம்புலன்ஸும் ரெடியானது.  பெரிய லாரி, கிரேன் இவைகளை முதன் முதலில் பார்த்த சுந்தர் மிரண்டு போய் நகர மறுத்துவிட்டது. 4 நாட்கள்  வாழை பலா பழங்களை கொடுத்து ஆசை காட்டியபோது அவற்றை மட்டும் சாப்பிட்டுவிட்டு லாரியில் ஏற மறுத்தது. கடைசியில் ஒரு வழியாக ஏற்றிய போது லாரியை  எடுக்க முடியவில்லை. அதன் சக்கரங்கள் பஞ்சர். உள்ளூர்கார்களின் உபயம்.. யானையை கீழே இறக்கி டயர்களை மாற்றியபின் மீண்டும் ஏற்றமுயற்சித்தபோது பயங்கரமாக முரண்டு செய்ய ஆரம்பித்துவிட்டது. 14 ஆண்டுகள் அதனுடன் இருந்த பாகன் அதன் காதுகளில் ஏதோ சொல்லிவிட்டு காணமல் போனதுதான் காரணம். கேரளா பாகன்கள் அதனிடம் பல முறை பேசி ஒருவழியாக லாரியில் ஏற்றினர்.  உள்ளூர் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்ட லாரியை மறித்தனர். பேஸ்புக்க் மூலம் செய்தி பரவிக்கொண்டிருந்ததால். PETA தொண்டர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு உதவி செய்ய மோட்டர்  சைக்கிள், கார்களில்  வந்து குவிந்தனர். அந்த சின்ன கிராமம் பரபரப்பாகிவிட்டது. போலீஸ் வண்டிகள் புடை சூழ ஒருவழியாக சுந்தரின் லாரியும் ஆம்புலன்ஸும் தங்கள் பங்களுர் பயணத்தை துவக்கின..

பங்களூர் மிருக காட்சி சாலையில் இயற்கை சூழலில் மிருகங்கள் வாழும் சபாரி பார்க் இருக்கிரது அதில் யானைகளுக்கு என பெரிய வனப்பகுதியும் இருக்கிறது.
இரண்டு நாள் பயணத்திற்கு பின் பங்களூரு வந்த சுந்தர் லாரியிலிருந்து இறங்க  இரண்டு மணி நேரம் முரண்டு செய்து பின்னர் இறங்கியது. நகரத்திலிலேயே வளர்ந்த அந்த யானையை   நேரடியாக காட்டுக்குள் விட முடியாது என்பதால் அங்கு வாழும் சில யானைகளுடன் முதலில் சில நாட்கள் சுந்தர் பழக ஏற்பாடு செய்யபட்டிருந்தது. ஆனால் நம்மாளுக்கு அவர்களையெல்லாம்  பிடிக்க வில்லை. முதல்நாள் முழுவதும் தனியேதான் நின்றுகொண்டிருந்தது. . இரண்டாம் நாள் அந்த சபாரிபார்க்கில் இருக்கும் ஒரு சின்ன யானை குட்டி 4 வயது சிவா. வரவழைக்கபட்டது.  சுந்தர் அந்த சைஸ்ஸில் யானையையே பார்த்த்தில்லையாகையால் முதலில் மிரண்டு,  வியந்து  பின்னால ரொம்ப பிரண்டாகி அந்த குழந்தையுடன் விளையாட ஆரம்பித்து விட்டது இரண்டு நாட்களுக்கு பின்னர்  அந்த யானைகளின் சீனியர் வன்ராஜ் வந்து தும்பிக்கை குலுக்கி சுந்தரை அழைத்து சென்றிருக்கிறது. விரைவில்  அங்குள்ள 13  யானைகளுடன் பழகிவிடும் என்கிறார்கள் வனத்துறை அதிகாரிகள். கண்காணித்து கொண்டும் இருக்கிறார்கள்.
சுந்தர் பன்னர்கட்டாவிற்குள் போனதும் “ சுந்தருக்கு சுதந்திரம் கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம்.   PETAவின் இந்தவெற்றி   முக்கிய சாதனை என அமிதாப் டிவிட் செய்திருக்கிறார்.

நம்மூர் கோவில்களில் கஷ்டபடும் யானைகளை யார் காப்பற்ற போகிறார்கள்?

ரமணன்.

4/6/14

எம்ஜிஆரை நிராகரித்த ஹாலிவுட் டைரக்டர்

இந்திய சினிமாவுக்கு 100 வயதானதை  நம்மவர்கள் ஆராவாரங்களுடன் பிரமாண்ட மேடைகளில் மெகா சைஸ் கலக்குழுக்களுடன் ஆடிப்படி, கொண்டாடி மறந்து போய்விட்ட நிலையில், அமைதியாக தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒரு அமெரிக்க டைரக்டர் பற்றி  ஒரு அருமையான ஆவணபடத்தை  எடுத்திருக்கிறார். திரு.கரண்பாலி இவர் புனா பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தவர் விளம்பர, ஆவணபடங்கள் எடுப்பவர். என்பதை தாண்டி இந்திய சினிமாவை  காதலிப்பவர். . ராஜீவ் மேன்னின் திரைப்பட கல்லூரியிலும்,எல்.வி பிராசாத்  இன்ஸ்டியூட்டிலும் அழைப்பின் பேரில் வகுப்புகள் நடத்துபவர்.
தமிழ் சினிமாவுடன் நேரடி தொடர்பு இல்லாத இவருக்கு எப்படி தமிழ் படங்கள் இயக்கிய இந்த டைரக்டரை பற்றி ஒரு ஆவணபடம் எடுக்கும் எண்ணம் வந்தது ?.
நான் சென்னையில் படித்தவன் என்பதால் தமிழ் சினிமா பற்றி ஒரளவு தெரியும். தமிழ் சினிமாவின் வளர்ச்சி பற்றி ஒரு கட்டுரையை என் தளத்தில் வெளியிட செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது பால்வில்லியம் என்பவரின் “என்சைகோளாபிடியா ஆப் இந்திய சினிமாவில் முதலில் டங்கன் பற்றி அறிந்தேன். தொடர்ந்து செய்திகள் சேகரிக்க  துவங்கியபோது பிரமித்துப் போய் தமிழ் சினிமாவிற்கு இத்தனை செய்திருக்கும் இந்த அமெரிக்கரைப்பற்றி ஒரு டாக்குமெண்ட்டிரி எடுத்தால் என்ன என  தோன்றியது.   எம். கே ராதா, பாலையா,என். எஸ் கிருஷ்ணன் எம் ஜி ஆர் ஆகியோர்களை தமிழ்திரைக்கு அறிமுகம் செய்திருக்கும் இந்த டைரக்டர் டெக்னிக்லாகவும் பல விஷயங்களை, இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.  டிராமா வடிவில் இருந்த தமிழ் சினிமாவை “சினிமாவாக” ஆக்கியிருக்கிறார்.  கேமிராக்கள் ஸ்டூடியோவை விட்டு வெளியே மட்டுமில்லை. ஸ்டூடியாக்களிலேயே அசையாமல் இரே இடத்தில் இருந்த  தமிழ் சினிமாவில். புதிய ஓளி, ஒலி முறைகள் உடைகள் நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவற்றை அறிமுகப்படுதியவர். இன்று படமெடுக்க பயன்படுத்தும் டிராலி ஷாட்களுக்கான டிராலியை இவர்தான் வடிவமைத்திருகிறார். அதனால் தான் அது டங்கன் டிராலி என இன்றும் அழைக்கபடுகிறது. குளோசப்காக தனி லென்ஸ், அந்த காட்சிகளுக்கு விசேஷ மேக்கப் பயன்படுத்தியவரும் இவர்தான். என்பதையெல்லாம் அறிந்த போது ஆர்வம் அதிகமாயிற்று.   
  ஐரிஷ் வம்சாவளி அமெரிக்கரான டங்கன், சினிமாகலையை  பிரான்ஸில் படித்தவர். அப்போது இந்தியாவிலிருந்து வந்து அங்கு அவருடன்  படித்து கொண்டிருந்த ஒரு மாணவர் எம். ஆர் டாண்டன்.  தன் தந்தை பம்பாயில் ஒரு புதிய ஸ்டூயோ   துவங்கப்போவதால் உடன் வந்து 6 மாதம் உதவி செய்யும்படி அவர் கேட்டதின் பேரில் 1935ல் இந்தியா வந்தார்..  ஆனால் அந்த ஸ்டுடியோ துவங்க படாதால், கல்கத்தாவில் ஷூட்டிங் நடந்து  கொண்டிருந்த ஒரு தமிழ் படத்தில் டாண்டனின் உதவியுடன் உதவி இயக்குனரானார்.. அந்த படம் நந்தனார். அதன் மூலம் தமிழ் சினிமாவால்  ஈர்க்கபட்டு அடுத்த 15 ஆண்டுகள் 1950 வரை தமிழ் நாட்டில் தங்கி  சினிமாவில் பெரும் புரட்சிகளை செய்திருக்கிறார்.  15 ஆண்டுகளில் இவர் இயக்கியது 17 தமிழ் படங்கள் அனைத்தும் ஹிட் படங்கள்.  எம். கே ராதா, பாலையா,என். எஸ் கிருஷ்ணன் எம் ஜி ஆர் ஆகியோர்களை தமிழ்திரைக்கு அறிமுகம் செய்தவரும் இவர்தான்.
இந்த ஆவணபடத்தின் மூலம் அறிந்து கொள்ளும் சில விஷயங்கள் ஆச்சரியமாகயிருக்கிறது. எம்ஜி ஆர் ரின்  முகத்தில்,கீழ் தாடைப்பகுதியில் ஒரு சின்ன குழி இருந்ததால் அவர் முகம் சினிமாவிற்கு ஏற்ற முகவெட்டுடன் இல்லை என டங்கனால் நிராகரிக்கபட்டிருக்கிறார்.  ஆனால் படத்தயாரிப்பாளார் மருதாசலம் செட்டியார். ”படத்தின் வசனகர்த்தாவின் வசனங்களை நம்பிதான்  இந்த படமெடுக்கிறேன்.  இந்த நடிகர் அவரால் சிபார்சு செயபட்டவர்.. அவர் சிபார்சை தட்ட முடியாது.” என்றவுடன். ஒரு சின்ன ஒட்டு தாடியின் மூலம் அந்த குழியை மறைத்து எம்ஜியாரை அறிமுகபடுத்தியிருக்கிறார் டங்கன். அந்த வன கர்த்தா - கலைஞர் !. படம் சதி லீலாவதி. அந்த படம் ஹிட்டானதில் எம்ஜிஆருக்கு பல வாய்ப்புகள்  கிடைத்தன.
ஆங்கில மட்டுமே அறிந்த இவர் எப்படி தமிழ்படங்களை டைரக்ட் செய்தார்?  தமிழில் தெரிந்த மிக சில வார்த்தைகள்  கொண்டு பணியாளர்களை சமாளித்தாலும்,படங்களின் கதையை ஆங்கிலத்தில் தயாரித்து கொண்டு, பேசும் வசனங்கள் புரியாவிட்டாலும் கதையை நன்கு புரிந்துகொண்டு வசனங்களை சரிபார்க்க அந்த கதாசிரியர்களை எப்போதும் உடன் இருக்கும்படிசெய்திருக்கிறார். கல்கி, சதாசிவம், இளங்கோ போன்றவர்கள் பெரிதும் உதவியிருக்கின்றனர்.  டெக்கினிக்லாக பல விஷங்களை செய்து டிராமா வடிவில் இருந்த தமிழ் சினிமாவை “சினிமாவாக” ஆக்கியிருக்கிறார்.  கேமிராக்கள் ஸ்டூடியோவை விட்டு வெளியே மட்டுமில்லை. ஸ்டூடியாக்களிலேயே அசையாமல் இரே இடத்தில் இருந்த  தமிழ் சினிமாவில். புதிய கோணங்கள். ஓளி, ஒலி முறைகள் உடைகள் நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவற்றை அறிமுகப்படுதியவர். இன்று படமெடுக்க பயன்படுத்தும் டிராலி ஷாட்களுக்கான டிராலியை இவர்தான் வடிவமைத்திருகிறார். அதனால் தான் அது டங்கன் டிராலி என இன்றும் அழைக்கபடுகிறது. குளோசப்காக தனி லென்ஸ், அந்த காட்சிகளுக்கு விசேஷ மேக்கப் பயன்படுத்தியவரும் இவர்தான்.  , இவர் படங்களில் காதல் காட்சிகள் நெருக்கமாக இருந்தற்காக கடுமையாக விமர்சிக்கபட்டிருக்கிறார்.


எம் எஸ் சுப்புலட்சுமி நடித்து டங்கள் இயக்கிய மீரா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவுடன் அதை இந்தியிலும் டைரக்ட் செய்தவர் இவர். மீரா படத்தில் எந்த கோணத்தில் நாயகியின் முகத்தை அழகாக காட்டமுடியும் என்பதை  முகத்தை மட்டும் பிளாஸ்டாபாரிஸில் சிலையாக செய்து பல கோணங்களில் காமிராவழியாக பார்த்து தீர்மானித்திருக்கிறார். இன்று செய்யபட்டு கொண்டிருக்கும் பல டெக்னிக்கல் விஷயங்களை இந்த மனிதர்  அன்றே முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார். இன்றும் அவ்வப்போது டிவி சானல்களில் வரும் மந்திரிகுமாரி படத்தில் பவுர்ணமி நிலவொளியில் ”வாராய் நீ வாராய் பாடலுடன்” வரும்  படகு காட்சி பகல் இரண்டு மணிக்கு படமாக்கபட்டிருக்கிறது. எடிட்டிங்கில் அது இரவாக்கபட்டிருக்கிறது. இவர் படங்களின் போஸ்டர்களில் கதாநாயகர்களின் பெயரைக்கூட போடமல் டைரக்க்ஷன் எல்லிஸ். ஆர் டங்கன் ஹாலிவுட்  என விளம்பர படுத்தியிருக்கிறார்கள்.  அந்த அளவுக்கு பிரபலமான இயக்குனாராக இருந்திருக்கிறார்.
 இன்று ஒரு படம் ”உருவான கதை”  ஒரு தனிப்படமாக்க பட்டு விளம்பரங்களில் பயன் படுத்தபடுகிறது. 1940களிலேயே டங்கன் தான் படமெடுப்பதையே படமாக்கியிருக்கிறார். குடும்ப சுழ்நிலை காரணமாக,1950ல் அமெரிக்கா திரும்பிய டங்கள் அங்கு ஹாலிவுட் படங்களுக்கு இந்தியா பற்றிய ஆலோசனைகள் வழங்கும் வல்லுனாராக  தன் இறுதிக்காலம் வரை பணியாற்றியிருக்கிறார்
இந்த டாகுமெண்ட்ரிக்காக , தகவல்களை சேகரிப்பது எளிதாக இல்லை. என்கிறார் கிரண்பாலி. தமிழ் சினிமாக்களை பொருத்துவரையில் ஒரு நல்ல ஆவணகாப்பகம், இல்லை. தகவல்கள் தருபவர்களை பற்றிய பட்டியலும் இல்லை. தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதியிருக்கும் திரு தியோடர் பாஸ்கரன் அவர்களை எனக்கு தெரியும். அவர் 2001ல்  டங்கன் இறந்த ஆண்டு அவர் சுய சரிதை வெளியாகியிருப்பதாக சொன்னார். ஆனால் அவரிடம் அந்த புத்தகம் இல்லை. ஒரு பிரதி சிவேந்திரா சிங் என்பவரிடம் இருப்பது தெரிந்தது. இவர்  புனே இன்ஸ்டியூட்  ஆவணகாப்பக பாதுகாவலர் நாயர் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்தவர். அவரைத்தொடர்பு கொண்டு அந்த புத்தகத்தை வாங்கி படித்தேன். அந்த நூலின் இணை ஆசிரியர் பார்பாரா ஸ்மிக் என்ற பெண்மணி. கூகுளில் அலசி அவரது இ மெயிலை கண்டுபிடித்து தொடர்பு கொண்டேன்.  டங்கன் அவரது குறிப்புகளையும், படங்களையும் வெஸ்ட் வெர்ஜியா பல்கலைகழகத்திற்கு கொடுத்துவிட்ட விபரங்களை அவர் சொன்னார்.  என்நோக்கம் தமிழ் சினிமாவிற்கு டங்கனின் பங்களிப்பு பற்றி  அதிகம் சொல்லவேண்டும் என்பதால் அவரது சுயசரிதையை விட அவருடைய படைப்புகளை பற்றி அதிகம் ஆராய்ந்து  கொண்டிருந்தேன். பல்கலைகழகத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் நிறைய உதவினார்கள். படத்தின் அவுட் லைன் ரெடியாகி தயாரிப்பை துவங்கும் நேரத்தில் தியோடர்பாஸ்கர் பங்களுரில் வசிக்கும் எம். எஸ் சுப்புலக்‌ஷ்மியின் மகள் ராதாவிஸ்வநாதனை அறிமுகபடுத்தினார். இவர் சகுந்தலை, மீரா படங்களில் சிறு குழந்தையாக நடித்தவர். டங்கனின் இயக்கத்தை பார்த்தவர். அவர் சொன்ன தகவல்கள் படத்தை சிறப்பாக்கியது. மந்திரி குமாரி படம் தயாரிக்கபட்டபோது டங்கனுடன் பணிசெய்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.இன்றும் அவ்வப்போது டிவி சானல்களில் வரும் மந்திரிகுமாரி படத்தில் பவுர்ணமி நிலவொளியில் ”வாராய் நீ வாராய் பாடலுடன்” வரும்  படகு காட்சி பகல் இரண்டு மணிக்கு படமாக்கபட்டது. என்ற தகவலையும், எடிட்டிங்கில் அது இரவு காட்சியாக மாற்றபட்டது என்பதையும் சொன்னார்.
படம்  தயாராவது தெரிந்ததும் பலர் தகவல் அனுப்பினார்கள். ஆனால்  நான் சரியான, ஆதாரபூர்வமான விஷயங்களை மட்டுமே பதிவு செய்வதில் கவனமாக இருந்தேன். சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகை அலுவலகங்களை/ நிருபர்களை/சினிமாபற்றி எழுதுபவர்களையெல்லாம்  நானே நேரடியாக தொடர்பு கொண்டேன். சிலர் உதவினார்கள். ஒரு  மூத்த சினிமா பத்திரிகையாளார் தன்னிடம் தகவல்கள் இருப்பதாகாவும் ஆனால் உதவ முடியாது என்றும் சொன்னது ஒரு ஆச்சரியம்.
டங்கன் படங்கள் இயக்கிய காலத்தில் ஸ்டூடியோக்கள் இருந்த இடங்களை காட்டி,, அவர் அறிமுகபடுத்திய டிராலிகள் போன்ற பல தகவல்கள் கொடுத்தவர் நண்பர் நடிகர் மோகன் ராம். இவர் தமிழ்சினிமாவின் தகவல் சுரங்கம்.  தமிழ் சினிமாவை ஆராய்ந்து டாகடர் பட்டம் வாங்கியிருக்கும் திருமதி உமா வாங்கலும் நிறைய தகவல்கள் தந்து உதவினார். இந்த நண்பர்களின் உதவியினால்தான்  பேட்டிகள், காட்சிகள் இணைப்பு உரைகள்  என அழகான தொகுப்பாக  படம் உருவாகியிருக்கிறது.” என்கிறார் கிரண்பாலி. தமிழ் சினிமாவை  நேசிப்பவர்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.இது.
அமெரிக்காவில் டங்கனின் ஊரில் முதலில் திரையிடபட்டு இப்போது பல  இந்திய, அமெரிக்க நகரங்களின் பிலிம்சொஸைட்டிகளில் திரையிடபட்டிருக்கிறது.  .
தமிழ் சினிமாவின்  வளர்ச்சிக்கு  முக்கிய பங்களித்த அமெரிக்கர் டங்கன் பற்றிய ஆவணப்படம் தயாரிக்க பட்டிருப்பது  சந்தோஷமாக இருந்தாலும் அந்த படத்தையும் அதைத் தயாரித்தவரை தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.
கல்கி 1/06/14)