" மென்னடை யன்னம் பரந்து விளையாடும்
வில்லிப்புத் தூருறை...
என்று தன் பிறந்த ஊரான ஶ்ரீவில்லிபுத்துரை
பெருமையுடன் நாச்சியார் திருமொழியிலும்
விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
என்று பெரியாழ்வாரும் அ/றிமுகப்படுத்தும்
ஶ்ரீவில்லிபுத்தூருக்கு நாச்சியார் திரு மாளிகை என அழைக்கப்படும் ஆண்டாள் கோவிலைக்காண பயணித்துக் கொண்டிருக்கிறோம் இந்தக் கோவில் தமிழகப் பழமையான கோவில்களில் ஒன்று.
பரவலாக அது ஆண்டாள் கோவில் என்று அறியப்பட்டாலும் உண்மையில் அந்தக்கோவில் வடபத்ரசயனர்
கோயில். இந்தப் பெருமாளுக்குத் தான் ஆண்டாள் தன் மாலையைச் சூடிக்கொடுத்தாள் என்று
குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன. இந்த வடபத்ரசயனர் கோவிலின் ராஜகோபுரம்
மிகப்பெரியது. நுழைவுவாயில் இருக்கும் இராஜகோபுரம். . தமிழகக் கோவில்களின்
கோபுரங்களிலியே மிக உயரமானது .
இந்த ராஜகோபுரம் பெரியாழ்வாரால் ஸ்ரீவல்லபதேவ
பாண்டிய மன்னன் (கிபி 765-815) உதவியோடு
கட்டப்பட்டதாகவும்,. இந்தக் கோபுரத்தின்
விமானம் முற்காலப் பாண்டியர் முதல் பிற்காலத்தில் வந்த மதுரை நாயக்கர் வரை
தொடர்ந்து திருப்பணி செய்துள்ளதற்கான சான்றுகளைக் கல்வெட்டுகள் பேசுகின்றன..
.கவிச்சக்கரவர்த்திக் கம்பன் இந்தக் கோபுரத்தை மேரு
மலைக்கு இணையானது என்று பாடியிருக்கிறார். அந்தப் பாடலின் கல்வெட்டும் இங்கு
இருக்கிறது.
கோபுரம் அண்மையில் நடந்த கும்பாபிஷகத்தினால்
பலவண்ண எனாமல் பெயிண்ட்டில் மின்னுவதால் அதன் தொன்மையைச் சற்று இழந்து நிற்கிறதோ
என்ற எண்ணம் எழுகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் முன்னொரு காலத்தில் வராக
ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டது. ஷேத்திரத்தின் ஒரு பகுதியாக ஒரு காடும் இருந்தது.
அதில் வில்லி, கண்டன் என்ற இரண்டு
வேடுவ சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒரு நாள் வேட்டையாடி வரும் போது கண்டன்
புலி ஒன்றைத் துரத்தி செல்கிறான். அவனைப் புலி கொன்று விடுகிறது. இதை அறியாத
வில்லி தன் தம்பியைத் தேடி அலைகிறான். சோர்வடைந்து மரத்தடியில் தூங்குகிறான். அவன்
கனவில் பெருமாள் தோன்றி கண்டனுக்கு நேர்ந்த நிலையைக் கூறுகிறார். பின்னர்த் தாம்
இங்குக் 'காலநேமி' என்ற அசுரனை வதம் செய்வதற்காக எழுந்தருளியதாகவும்
பின்னர் இந்த ஆலமரத்தினடியில் உள்ள புதருக்குள் "வடபத்ரசாயி" என்கிற
திருநாமத்துடன் காட்சி அளிக்கப்போவதாகவும் கூறி, இந்தக் காட்டை அழித்து நாடாக்கி தமக்குக் கோயில்
எழுப்பி ஆராதனை செய்து வரும்படி கூறி மறைகிறார். சிறிய கோவிலாக ஒரு குளத்தின்
நடுவில் எழுந்த அதற்கு, பின்னாளில் ஆண்டாளை
எடுத்து வளர்த்த தந்தையான பெரியாழ்வார் தனது மருமகனாகிய பெருமாளுக்கு
இக்கோபுரத்தைக் கட்டினார் என்றுசொல்லுகிறது ஸ்தல புராணம்.
. அவர் பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில்
நடைபெற்ற விவாதங்களில் வெற்றிக் கொண்டு, தாம்
பெற்ற பொன் முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் 11 நிலைகள், 11 கலசங்களுடன் இருக்கும் இக்கோபுரத்தின் உயரம் 196 அடி. பெரியாழ்வார் காலத்தில் ஒரு ரூபாய்க்கு 196 காசுகள் மதிப்பிருந்ததாம். இதன் அடிப்படையில் அவர்,
இந்த உயரத்தில் கோபுரம் கட்டியதாகச்
சொல்கிறார்கள். .
இந்த வடபத்ரசயனர் கோவிலுக்கும் அதன் ஒரு பகுதியாக
இப்போது ஆண்டாள் சன்னதி இருக்கும் கோவிலுக்கும் இடையிலிருந்த நந்தவனத்தில் தான்
குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்டு. பெரியாழ்வாரின் மகளாக வளர்ந்தாள் கோதை. பெருமாளுக்குச்
சாற்றப்படும் மலர் மாலையை, அவள் ஒவ்வொரு
முறையும் அணிந்து அழகு பார்த்ததற்குப் பின் கொடுத்திருக்கிறாள். இதனை அறியாத
பெரியாழ்வார் பெருமாளுக்கு அந்த மாலையைச் சாற்றுகிறார். ஒருமுறை பூவில் தலைமுடி
இருப்பது கண்டு பெரியாழ்வார் அஞ்சி, அதைத்
தவிர்த்து வேறு மாலையைச் சூட்டினார்.
உடனே இறைவன், “ஆழ்வார்! கோதையின் கூந்தலில் சூட்டிய பூவையே நான்
விரும்புகிறேன். அதையே எனக்குச் சூட்டு” என்றார்.
இன்றளவும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்குச்
சாத்தப்படுகிறது.
ராஜ கோபுரத்தின் வழியே நுழைந்தவுடன் வலது புறம்
இருப்பது வடபத்ரசயனர் போவில் நேர் எதிரே இருப்பது ஆண்டாளின் சன்னதி. அது நேர் எதிரில் கண்ணில் பட்டதால் எல்லோரும் செய்வது போல நாமும்
அங்கு தான் முதலில் செல்கிறோம்.
நுழையும் பந்தல் மண்டபத்தின் மேற்கூரை
மூங்கில்களினால் எழுப்பி அதன் மீது ஓலைக்கூரை வேய்ந்ததைப் போலவே கல்லில்
வடிக்கப்பட்டிருப்பது நம்மைப் பிரமிக்கச்செய்கிறது. மிக நுட்பமான சிற்ப
வேலைப்பாடு. எத்தனைபேர் எவ்வளவு காலம் உழைத்தார்களோ?
அந்த மண்டபத்தின் முழுவதும் உள்ள தூண்களில் அழகான
சிற்பங்கள். எல்லாவற்றையும் ரசித்துப் பார்க்க முடியாமல் கடைகளின் ஆக்கிரமிப்பு...
பந்தல் மண்டபத்தைக் கடந்து கல்யாணமண்டபத்திற்குள்
நுழைகிறோம். கம்பீரமாகப் பிரம்மாண்ட உயரமாக நாயக்கர்கால இராமாயண ஓவியங்களுடன்
பெரிய யாழித்துண்களுடனும் இருக்கிறது. இங்குதான் பங்குனி மாதத்தில் ஆண்டாளுக்குக்
கல்யாணவைபவம் கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து நுழையும் துவஜஸ்தம்ப மண்டபம் என்ற
கொடிமர மண்டபத்தில் கொடிமரம் தங்க முலாமுடன் மின்னுகிறது. அதில்
பதிக்கப்பட்டிருக்கும் ராஜ கோபுரத்தின் சிறிய வடிவம் நம்மை நிறுத்துகிறது. .கொடிமர மண்டபத்தின் இருபுறமும் இருக்கும்
தூண்களிலிருக்கும் கலை நயம்மிக்க பெரிய ராம லஷ்மண, சரஸ்வதி. வேணு கோபாலன், மோகினி சிற்பங்கள் ஒவ்வொன்றும் நம்மை மாளிகைக்குள் அழைக்கின்றன.
இந்த மண்டங்களைகடந்து சன்னதிக்குள் நுழையும் நம்மை
வரவேற்பது தங்க வண்ணத்தில் பளிச்சென்று மின்னும் வெள்ளிக்குறடு என்ற ஊஞ்சல்
மண்டபம். வெள்ளி தோறும் ஆண்டாள், தரிசனம்
கொடுக்குமிடம். அதன் பின்னே அர்த்த மண்டபத்தில் குறுகிய வாயிலுடன் கர்பகிரஹம்.
உற்சவ மூர்த்திகள் பெரிய அளவில் பிரமாதமான அலங்காரத்தில் முன்னால் இருப்பதால்
மூலவரைச் சட்டென்று முழுவதுமாகக் காண்பது சற்றுச் சிரமாகயிருக்கிறது ஆனால்
அதற்குத் தீபாரதனை காட்டும் போது செங்கோல் ஏந்திய ரங்கமன்னாரின் வலது புறம்,
தன்இடது தோளில் கிளியுடனும் சாய்ந்த
கொண்டையுடனும் ஆண்டாளும் அருகில் கருடாழ்வாரும் மின்னும் தங்ககவசங்களில்
ஜொலிக்கிறார்கள். கண்டது சில நிமிடங்கள் என்றாலும் அந்தக் கம்பீரமான காட்சி கண்ணை
விட்டு அகல வெகுநேரமாகிறது. இந்தக் கோயிலில் மட்டும் தான் பெருமாளுடன் கருடாழ்வார்
ஆண்டாளுக்குப் பக்கத்தின் நின்றுகொண்டு காட்சியளிக்கிறார்..
சன்னதியை விட்டு வெளியே வரும் போது ஆண்டாள் நீரில்
தன்னை அழகு பார்த்துக்கொண்ட கிணறு. இப்போது தங்களை
அதில் பார்க்க விரும்புகிறவர்கள் எட்டிப்பார்த்து காசுகளை வீசி எறிந்து பாழ்
பண்ணுவதால். கிணற்றைகண்ணால் மூடி அதைச்சுற்றி அருகில் போட்ட காசு தெரிய ஒரு கண்ணாடி உண்டியலை
அமைதிருக்கிருக்கும் நிர்வாகத்தின் சாதுரியத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.
இந்த ஆண்டாள் கோவிலை நாச்சியார் திருமாளிகை என்று
அழைக்கிறார்கள். அண்மையில் நடந்த ஆண்டாள் கோவில் திருப்பணிகள் ஒன்று தங்கவிமானம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவிமானத்தைவிடப் பெரிய அளவில்
அமைக்கப்பட்டு உள்ளது. நின்று இதை நன்றாகப்
பார்த்து தரிசிக்கப் பிரஹாரத்தில் தரையில் ஒர் இடம்
குறித்திருக்கிறார்கள்.. பளிச்சென்ற சூரிய ஒளியில் தகதகக்கும் தங்க கோபுர தரிசனம்.
இந்தக்கோவில் தனியாகபிரசித்திப் பெற்றிருப்பதுடன்
மற்ற பல முக்கிய வைணவத்தலத்தின் வழிபாடுகளிலும் இணைந்திருக்கிறது. திருப்பதி
பெருமாளுக்குப் புரட்டாசி 3 வது சனிக்கிழமை
பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாளுக்குச் சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு
ஆண்டாள் திருக்கல்யாணத்துக்குத் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப்
பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார். அவர் வைகையாற்றில் இறங்கும் போது
அணியும் வண்ண வஸ்திரம் இங்கிருந்து தான் போகிறது.
ஆண்டாள் கோவிலில் இருந்து வெளியே வந்து ராஜ
கோபுரத்துகருகிலிருக்கும் வடபத்திரசயனர் சன்னதிக்குச் செல்லுகிறோம். மற்ற வைஷ்ண
கோவில்களிலிருந்து இது சற்று மாறுபட்டிருக்கிறது. கோவிலின் தரைதளத்தில்
நம்மாழ்வாரும் இராமானுஜரும் இடது புறமும், பெரியாழ்வார்
வலதுபுறமும் இருக்கச் சன்னதியில் நரசிம்மர். அருகில் அதன் வழவழப்பில் பதிந்த
பலகோடி பாதங்களின் அடையாளத்தையும், காலத்தையும்
சொல்லும் படிகளேறி முதல் தளத்தை அடைந்துதான் மூலவரைத் தரிசிக்க வேண்டும். பெருமாள்
சயனக்கோலத்தில் ஶ்ரீ தேவி பூதேவியுடன் தரிசனம் தருகிறார். சுற்றிலும் நிறையச்
சுதையிலான உருவங்கள்
சன்னதியின் வெளியே வந்து நாம் நிற்குமிடம் வசந்த
மண்டபம். இந்த இடத்தில் தான் ஆண்டுத் தோறும் அரையர் சேவை என்ற வழிபாடு நடைபெறுகிறது.
ஒரு பழைய தேரிலிருந்து எடுக்கப்பட்ட அற்புதமான மரச்சிற்பங்களை அழகாகப்
பொருத்திச்செய்யப்பட்ட மேற்கூரையுடைய பெரிய கூடம் அது.
அங்கு . அரையர் பரம்பரையின் இன்றைய அரையரான பாலமுஹூந்தாச்சாரியார் ஸ்வாமிகளைச் சந்திக்கிறோம்.
பிரபந்தங்களையே எப்போதும் சுவாசிக்கும் அவரிடம் அரையர் சேவை பற்றிக்
கேட்கிறோம்.சிவந்த மேனி நல்ல உயரம். மெல்லிய குரல்
“நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை ராகத் தாளத்தோடு
ஆடிப் பாடி வழிபடுவது தான் அரையர் சேவை. பலநூற்றாண்டுகளாக 108 திவ்ய தேசங்களிலும் நடைபெற்று வந்த இந்த விசேஷ
வழிபாடு இப்போது ஶ்ரீவிலிபுத்தூர்,ஆழ்வார் திருநகரி,
ஶ்ரீரங்கம் ஆகிய மூன்று கோவில்களில்
மட்டுமே நடைபெறுகிறது. இது ஆடல் பாடல் வழி பாடுதான் என்றாலும் எல்லோரும் இதைச்
செய்ய முடியாது. இதனைப் பரம்பரையாகச் செய்துவரும் குடும்பத்தில் ஆண்கள் மட்டுமே
செய்யமுடியும். இதன் தாளங்களும், நடன முத்திரைகளும்
பாவங்களும் சாஸ்திரிய நடனங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. விரும்பினாலும்
நாங்கள் மற்றவர்களுக்குக் கற்று கொடுக்கும் வழக்கமில்லை.
திருமதி
அனிதா ரத்தினம் கூட இங்கு வந்து இதை ஆராய்ந்தார். . ஆனால் அவர் விரும்பியபடி அதை
முறையாகக் கற்றுக்கொடுக்க இயலவில்லை. கமலஹாசன் தன்னுடைய தசாவதாரம் படத்தில் அரையர்
காட்சிகளைப் புகுத்த விரும்பி என்னை நேரடியாகவும் நண்பர்கள் மூலமாகவும் நல்ல
சன்மானம் தரமுடியும் என்றும் அணுகினார். நான் ஏற்கவில்லை. இது பணத்துக்காகச்
செய்யும் கலையில்லை. பகவானுக்குச் செய்யும் வழிபாடு.. கோவிலில் கூட நாங்கள்
ஊழியர்களோ அர்ச்சகர்களோ இல்லை. எங்களுக்குக் கோவிலிலிருந்து சம்பளமோ சன்மானமோ
கிடையாது. பரம்பரையாக நாங்கள் செய்யும் இறைப்பணி இது. நான் எங்கள் பரம்பரையில் 49வது தலைமுறை இதை எனக்குப் பின் என் பிள்ளை
தொடர்வார்
இதே மண்டபத்தில் பல நூற்றாண்டுகளாகப் பகல் பத்து என்ற உற்சவத்தின் போது
பக்தர்கள் இருபுறமும் உட்கார்ந்திருக்க நடுவில் எங்கள் முன்னோர்கள் பாசுரத்தை
அபிநயங்களுடன் பாடியிருப்பதைப் போலவே இன்றும் நாங்கள் செய்கிறோம். மைக், விசேஷலைட் எதுவும் கிடையாது. ஊசிவிழுந்தால் ஓசை
கேட்கும் அளவுக்கு அமைதிகாத்துக் கேட்பார்கள். என்கிறார்
அரையர் ஸ்வாமிகள்
வருமானத்துக்காகக் கோவில்கள் வணிகமயமாகிவரும் இந்த
நாளில் வருமானம் எதுவும் பெறாமல் தெய்வப்பணியாகத்தான் இதைச்செய்கிறோம் என்று
சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகிறார் இவர்..
இந்தச் சேவையின் போது இவர்கள் துணியாலான ஒரு விசேஷ கீரிடம் அணிகிறார்கள். மற்ற
நேரங்களில் அது அவர் வீட்டில் பூஜையில் வைத்து வழி படப்படுகிறது என்பதிலிருந்தே
அதன் புனிதம் புரிகிறது.
.
இந்தக் கோவிலின் தேரோட்டம் மிகப்பழமையானது.
அதைப்பற்றி இந்த நகரில் பலஆண்டுகளாக வாழும் பக்தர் திரு ரத்தின வேல் அவர்களிடம்
பேசிய போது
“ஆண்டாள் நாச்சியார் பெரியதேர் பல நூற்றாண்டு
பழமைவாய்ந்தது. முன்னால் ஓடிக்கொண்டிருந்த பழைய தேரில் சாலிவாஹன் சகாப்தம் 1025 என்று பொறிக்கப்பட்டிருந்தது. அவ்வளவு பழமையானது.
கலைநயமிக்கப் பல மரசிற்பங்களும் ஒன்பது மர சக்கரங்களும் ஒன்பது மேலடுக்குச் சாரம் அலங்கார
பதாகைகளும் அதன் உச்சியில் கும்பக் கலசம் (ஐந்து பகுதி இணைக்கப்பட்டது) பட்டு
கொடியும், ஒன்பது பெரிய
வடங்களும் இருக்கும். தேரோட்டத்தின் போது சுற்றுவட்டாரத்தில் 5 மைல் வரை தேர் எந்த ரதவீதியில் நிற்கிறது என்று
தெரியும்.
தேரோட்ட உற்சவத்தில் வடம் பிடித்து மக்கள் இழுக்க,
நின்ற தேர் நகர முடியாதபோது தேரின் பின்
சக்கரங்களில் பெரிய கனமான மரத்தடியால் உந்தித் தள்ளுவர்.(நெம்பு தடி) எண்ணைத்
தடவிய கனமான மர சற்றுக்குக்கட்டைகளால் தேரை நிறுத்தவும் பக்கவாட்டில் திருப்பவும்
செய்வார்கள்.. முன்பு வலிமைவாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி
இழுத்து நிலைக்குவர மூன்று மாதங்கள் ஆகும்.
காலப்போக்கில் மரசக்கரங்கள் சேதமுற்றதால் அதிகச்
செலவு கருதி 18 ஆண்டுகள்
ஓடாதிருந்தது. மாற்றாகச் சிறிய தேர் பயன்பட்டது. மீண்டும் பெரிய தேரைச் சீரமைத்து
இழுத்தபோது அலங்கார மேலடுக்குச் சாரம், கலசம்
சரிந்து கீழே விழுந்து பல உயிர்ப்பலி நேர்ந்தது. அதனால் பாதுகாப்பு கருதி அலங்கார
மேலடுக்கு எண்ணிக்கையைக் குறைத்து, இரும்பு
அடிச்சட்டம்,விசைத்தடையுடன்
கூடிய நான்கு இரும்பு சக்கரம் அமைத்துத் தேர் நவீனப்படுத்தப்பட்டது.
இப்போது தேரை உந்தித் தள்ள ஜேசிபிக்கள்
பயன்படுத்துகிறது. தற்போது தேரோட்ட உற்சவம் ஒரேநாளில் நடந்து முடிந்து
விடுகிறது.(தேர் நிலைக்குவர மூன்று மணி நேரமே) என்று சொல்லும் திரு. ரத்தின வேல்
இப்போது தேர் நாளில் பெருமளவில் இளைஞர்கள் வருவது மகிழ்ச்சியாகியிருக்கிறது
என்கிறார்.
செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு
வலத்தோளில் கிளி இருக்கும். இங்கு ஸ்ரீஆண்டாளுக்கு இடத்தோளில் கிளி இருக்கிறது.
ஏன் கிளி? ஸ்ரீஆண்டாள்
சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க
அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம்
பெற்றிருப்பதாகவும் புராணம் சொல்லுகிறது.
“இந்தக் கிளி ஆண்டாளுக்கு அணிகலகனில்லை. மாலைகளைப்
போலத் தினமும் புதிதாகச் செய்யது அணிவிக்கப்படுகிறது . . கிளியின் மூக்கு –
மாதுளம் பூ, மரவள்ளிக்கிழங்குச்செடியின் இலையில் கிளியின்உடல்;,
– நந்தியாவட்டை இலை,பனைஓலையில் இறக்கைகள் கிளியின் வால் பகுதிக்கு
வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள் பயன் படுத்தியும், கிளியின்
கண்களுக்குப் பளபளக்கும் மைக்கா துண்டுகளைப் பயன்படுத்தியும். கிளியைத் தினசரி மாலை நேர பூஜைக்காக ஒரு
குடும்பத்தினர் உருவாக்குகின்றனர்.. இந்தக் கிளியை மறுநாள் காலை பூஜைகள்
முடிந்தவுடன் அகற்றிப் பிரசாதமாக வழங்குவார்கள்” என்கிறார் இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வரும் பக்தரும் ,
கோவிலிலும், நகரிலும் பலரை அறிந்திருப்பவருமான திரு. அழகர் ராஜா
திரும்பும் பயணத்தில் நீண்ட நேரம் கண்ணில்
தெரிந்துகொண்டிருந்த அந்தக் கம்பீரமான கோவில் மெல்ல மறைகிறது. ஆனால் நாடு முழுவதும் மார்கழி காலைகளில் ஒலிக்கும் இனிய திருப்பாவையை அருளிய
ஆண்டாளை அவரது மாளிகையிலேயெ கண்குளிர தரிசித்தது மனதில் மறையாமல் நிற்கிறது.