30/7/14

BRICS அடிதளத்திற்கான முதல் செங்கல்

புதிய தலைமுறை 31/07/14 இதழலில் எழுதியது.
 
 உலக பொருளாதாரத்தில் பிரிக்ச் நாடுகளின் பங்களிப்பு 20 %. இந்த நாடுகளின்  மொத்த அன்னிய் செலாவணியின் கையிருப்பு 16000 டிரில்லியன் அமெரிக்க டாலார்கள். (ஒரு டிரில்லியன் =10,000கோடி)


 “சீனா தூங்கிக்கொண்டே இருக்கட்டும். அது கண்விழித்து விட்டால் உலகையே உலுக்கிவிடும்” என்று மாவீரன் நெப்போலியன் ஒரு முறை சொன்னார்.
ஆனால் சீனா கண்விழித்து விட்டது. நெப்போலியன் சொன்னது போலவே அதன் பொருளாதார வளர்ச்சியை பார்த்து உலகமே அதிர்ச்சியடைந்து வருகிறது. இந்த  அசுரத்தனமான  வளர்ச்சிக்கான பல்வேறு காரணங்களை உலகெங்கும் நிபுணர்கள் அலசி ஆராயந்துகொண்டிருக்கின்றனர். அந்த முடிவுகளை பற்றி எல்லாம் கவலைப்படாமல் சீனா ஆச்சரியங்களை தொடர்ந்து அளித்துகொண்டே இருக்கிறது.  கடந்த வாரம் பிரேசிலில் நடந்து முடிந்த பிரிக் நாடுகளின் மாநாட்டில் அறிவிக்க பட்ட முக்கிய முடிவான ”பிரிக் நாடுகளின் கூட்டமைப்பு  உலக வங்கிக்கு நிகராக ஒரு வங்கியை நிறுவப்போகிறது” என்பது அதில் ஒன்று.
2001ல் நியூயார்க் நகரை சேர்ந்த ’கோல்டுமேன் சாக்ஸ்’ என்ற சர்வ தேச பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஒரு அறிக்கை உலகின் பொருளாதார கண்ணோட்த்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த அறிக்கையில்தான் முதன் முதலில் பிரிக் (BRIC) என்ற சொல் பயன்படுத்தபடுகிறது. பயன்படுத்தியவர் அறிக்கையை தயாரித்த ஜிம் ஓ நில்.பிரேசில்.ரஷ்யா,இந்தியா சீனா போன்ற நாடுகளை பொருளாரீதியாக  வகைப்படுத்தி அதன் ஆங்கில பெயர்களின் முதல் எழுத்துகளை ஒன்று சேர்த்து பிர்க் நாடுகள் என்று குறிப்பிட்டிருந்தார். அந்த அறிக்கையில்.  இந்த நாடுகள் அடுத்த 50 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் மிக வளர்ச்சி அடையும் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் அடுத்தபடி ஜப்பான் ஜெர்மனியை முந்திக்கொண்டு இந்தியா 3வது இடத்தை அடையும் எனகுறிப்பிட்டிருந்தார். இந்த நாடுகள் ஒருங்கிணைந்த வளர்ச்சி அமெரிக்காவின்  வளர்ச்சியைவிடவும் அதிகமாகிவிடும் என்றும் அந்த அறிக்கை சொல்லியது.
ஒரு முக்கியமான அறிக்கையாக மட்டும் பேசபட்டுகொண்டிருந்த இதற்கு செயல் வடிவம் கொடுக்க (BRIC) என்ற அமைப்பை உருவாக்க்கும் முயற்சியை முதலில் எடுத்தவர் அன்றைய இந்திய பிரதமர் மன்மோகன்சிங். 2006ல் நியூயார்க்கில் வெளியுறவு அமைச்சர்கள் மட்டத்தில்  நாலு நாடுகளுடையே துவங்கிய பேச்சுக்கள்  இரண்டாண்டுகளில் 4 முறைகள்  தொடர்ந்து 2008ல் ரஷ்யாவில் நடந்த  முதல் மாநாட்டில் அமைப்பு  ரீதியாக BRIC உருவானது..2010ல் தென் ஆப்பிரிக்கா இணைந்த்து,. அதனால் BRIC  என்பது BRICS  னதைத் தொடர்ந்து உறுப்பினர் நாடுகளில் ஆண்டுதோறும் மாநாடுகள் நடந்த பின்னர்  இம்முறை 6 வது மாநாடு பிரேசிலில்  சமீபத்தில் நடந்தது. அதில் எடுக்க பட்ட ஒரு  முக்கிய முடிவு உலக பொருளாதாரத்தில் ஒரு திருப்பத்தை  ஏற்படுத்தும் என்பது வல்லுனார்களின் கணிப்பு.
 அதுதான் ”பிரிக்கின் வளர்ச்சி வங்கி”.  மொத்த மூதலீடு 100 பில்லியன் டாலர்கள். அவசர நிலை நேர்ந்தால் பயன்படுத்திகொள்ள ஒரு 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ரிசர்வ் நிதியாக  ஒதுக்க பட்டிருக்கிறது.   முதலீட்டை உறுப்பு நாடுகள் சம அளவில் ஆண்டு தவணைகளாக கொண்டுவரும். கடன் வசதிகள் 2016ல் துவங்கும். தலமை அலுவலகம் சீனாவின் ஷ்யாங்க் நகரில் இயங்கும் வங்கியின்  முதல் தலைவர் இந்தியராக இருப்பார் என்று மாநாட்டில் முடிவு செய்யபட்டது.
 கூட்டாக சில நாடுகள் ஒரு வளர்ச்சி வங்கியை ஏற்படுத்திகொள்வது  அவ்வளவு பெரிய விஷயமா என கேட்கிறீர்களா? ஆம். இது  நாடுகளுக்கிடையே  பரஸ்பரம் கடனுதவிக்காக  உருவாக்கபட்டிருக்கும் ஒரு சதாரண நிதி ஆணையம் மட்டுமில்லை. அதைவிட வலிமையாக இயங்கபோகும் இன்னொரு உலக வங்கி.
 உலகளவில் வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்த உறுப்பினர் நாடுகளுக்கு கடன் வழங்கும் நிதி ஆணையம் ஐஎம்எஃ(IMF) ஆனால்  உறுப்பு நாடுகளுக்கு கடன் உரிமை பெறும் இருந்தாலும் அது பல விதிமுறைகளுக்கு உட்பட்டது. மேலும் கடன் வசதி அந்த நாடு செலுத்தியிருக்கும்  முதலில் செலுத்தியிருக்கும் மூலதனத்தின் அடிப்படையில் தான் இருக்கும்.  கூடுதல் நிதி பெற வங்கியின் நிபந்தனைகளை ஏற்கவேண்டும் இந்த நிபந்தனைகள் உறுப்பு நாட்டின் பொருளாதார சீரமைப்பு என்ற பெயரில் கட்டளையாகவே இடப்படும். அதிக மூலதனமிட்டிருப்பதால் இந்த உலக வங்கியில் அமெரிக்க நாட்டின் விருப்பு/வெறுப்புகளே அதன் கட்டளைகளில் பிரதிபலித்து கொண்டிருந்தது. இது கடன் பெறும்  நாடுகளின் சுதந்திரத்தையும் பொருளாதாரத்தையும், அன்னிய செலாவணி இருப்பையும் பாதிக்கும் விஷயமாக இருந்தது. மேலும் அமெரிக்கர்கள் தங்கள்  டாலரை வலுவாக்க இந்த வங்கியை மறைமுகமாக பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்  சுருக்கமாக சொல்லவதானால் அமெரிக்க அண்ணனின் நாட்டமை  அதிகமாக இருந்தது. உலகின் பல நாடுகள் இந்த நிலைக்கு ஒரு மாற்று ஏற்படுத்துவது பற்றி கடந்த சில ஆண்டுகளாக ஆலோசித்து கொண்டிருந்தன. வசதியாக வந்து சேர்ந்த்து பிரிக் நாடுகளுக்கு எழுந்த அதே எண்ணம்.
.  உலக பொருளாதாரத்தில் மெல்ல  பிரிக்நாடுகள் ஒரு வலிமையான இடத்தை  அடைந்து கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு (பெட்டியில் செய்தி படங்கள்)  பிரிக் அமைப்பு மூலம் இந்த  வங்கியை ஏற்படுத்துவதில்  இந்தியா தீவீரமாக இருந்து இன்று வெற்றிபெற்றிருக்கிறது.

IMF வழங்கும் கடன் வசதியை பிரிக் அமைப்பில் சேரும்  எல்லா நாடுகளும் இந்த வங்கியிலிருந்து பெறமுடியும். உறுப்பினாரக வரிசையில் காத்திருப்பது இந்தோனிஷியா,துருக்கி, அர்ஜெண்டைனா ஈரான், நைஜிரியா போன்ற நாடுகள். பிரிக் வங்கி கடனுதவியையும் தாண்டி உறுப்பு நாடுகளிடையே நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி பரிவர்த்தனைகளை கணக்கிட்டு இறுதியில் நிகரமாக வரும் தொகையை அந்தந்த நாட்டுக்கு  பட்டுவாடா அல்லது வசூல்  செய்யும் ஒருமுறையையும் கொண்டுவரப்போகிறார்கள். இது முறையாக செயல்பட்டு நிலைத்து நிற்குமானால்  உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கம் குறையும். வளரும் நாடுகளின் பொருளாதாரம் அமெரிக்க பொருளாதார விழ்ச்சிகளினால் பாதிக்காது.
  சீனாவின் வளர்ச்சி வேகத்தை பார்க்கும் போது 2050க்குள் அமெரிக்காவை பின் தள்ளி பொருளாதார உலகின் முதல் நாடாகவிடும் என ஒரு கணிப்பு கூறுகிறது. பிரிக் வளர்ச்சி வங்கி அதன் முதல் படியோ?

28/7/14

கடைசிக்கோடு பேசபட்டிருக்கிறது.

இன்று மதியம் ஒரு போன்என் பெயர் நடராஜன் பள்ளித்தலமையாசிரியர். ஊட்டியிலிருந்து பேசுகிறேன்உங்கள் கடைசிகோடு புத்தகம் படித்து கடந்த இரண்டு நாட்களாக அதன் தாக்கத்தில் இருக்கிறேன். அருமையான  புத்தகம், நேற்று வகுப்பில்  மாணவர்களுக்கு இந்திய மேப்பை காட்டி  அது பற்றி பேசினேன்”  என்றார்எழுதுபவனுக்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம்    இருக்க முடியும்?

சந்தோஷமான அதிர்ச்சி. கடந்த வாரம் சன் டிவியில்வாங்க பேசலாம்நிகழ்ச்சியில் ராஜாவும் பாரதிபாஸ்கரும் கடைசிக்கோடு புத்தகத்தை விமர்சித்திருக்கிறார்கள்.  அதைப்பார்த்த உடனே திரு நாடராஜன், ராஜாவை தொடர்பு கொண்டு கவிதாவெளீயிடு என்பதை அறிந்து  பிரசுரத்தினை தொடர்பு கொண்டு புத்தகம் வாங்கி படித்து பின் எனக்கு போன் செய்திருக்கிறார்.  அந்த நிகழ்ச்சிபற்றி எனக்கு தெரியாதால் நான்  அன்று பார்க்கவில்லை. இன்றுதான்  யூ டுபில் பார்த்தேன்
.
  அந்த விமர்சனத்தை    இங்கே கிளிக் செய்து யூ டூயூபில்  பார்க்கலாம்

19/7/14

உலக அமைதிக்காக உருவாகும் ஒரு காலசக்கரம்
”ஷெய்” என்பது ஜம்மூ-காஷ்மீர மாநிலத்தின் வடகோடியில் லடாக் மாவட்டத்திலிருக்கும் ஒர் சின்னஞ்சிறிய ஊர். மக்கள்தொகை 1000க்கும் குறைவு. மாவட்ட தலைநகர் ”லே” விலிருந்து 8 கீமீ தொலைவில்  இண்ட்ஸ் நதிக்கரையில் மலைச்சரிவில் இருக்கும் இந்த இடம் வருடத்தில் பாதி நாள் பனியால் மூடபட்டும், மீதி நாட்களில்  வெப்பம் மிகுந்த  வரண்ட பாலைவனமாகவும் இருக்கும் ஒரு மலைச்சரிவுபகுதி . கடந்த வாரம் இந்த இடத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் 150,000 பேர் கூடினார்கள். காரணம் “ காலச்சக்கரம்”
காலச்சக்கரம் என்பது வ்ஜராயன பிரிவு புத்தமதத்தின் தலைவர் தலாய்லாமா, உலக அமைதி,மற்றும் உலக உயிர்கள் அனைத்தும் உன்னதமான உயர்  நிலை அடைய வேண்டும்  என்பதற்காக செய்யும்  ஒரு மிக முக்கியமான பூஜை. ஒரு வார விழாவாக கொண்டாடப்படும்  1954லிருந்து இதுவரை 32  முறை வெவ்வேறு ஆண்டுகளில் அமெரிக்கா, கனடா, மங்கோலியா ஸ்பெயின், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலும் சில இந்திய நகரங்களிலும்  கொண்டாடப் பட்டிருக்கிறது. எப்போது, எந்த இடத்தில் நடைபெறவேண்டும் என்பதை புத்தரிடம் இருந்து கிடைக்கும் செய்தியின் அடிப்படையில் தலாய்லாமா  ஒராண்டுக்கு முன்னர் அறிவிப்பார். அங்குள்ள புத்தர் சொசைட்டி  விழா ஏற்பாடுகளைச்செய்யும். இம்முறை திருவிழா நடைபெறும் இடத்தின்  தனிசிறப்பு இதுதான்  1959ல்  தலைலாமா தப்பி ஒடிவந்தபின் முதலில் தங்கிய இந்தியப்பகுதி. காலச்சக்கரம் என்பது வெறும் திருவிழா இல்லை. மிகுந்த கவனத்துடன் பல சாஸ்திரங்களையும் நியமங்ளையும்  பின்பற்றி செய்யப்படும்  10 நாள் பூஜை.  காலம் என்பதை புத்தமதம்  அகம் புறம், பிரபஞ்சம் என  மூன்று நிலைகளாக சொல்லுகிறது.    நாம்  அறிந்திருக்கும் கால அளவுகளும், பிரபஞ்சத்தில் இயங்கும் கோள்களின்   நாம் அறியாத காலஅளவுகளும்   தொடர்புடையது.. அவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு முயற்சிதான் இந்த காலசக்கர பூஜை.  இதில் பங்கு கொண்டவர்களுக்கு தலாய்லாமா தீட்சை வழங்குவார்.  இதனால் உலகெங்குமிருக்கும் புத்த பிட்சுக்களும். பக்கதர்களும் கூடுகிறார்கள். இவர்களைத்தவிர இது என்னவென்று பார்க்க வந்த டூரிஸ்ட்கள், மீடியாகாரர்களின் கூட்டமும் சேருகிறது.
காலசக்கரம் உலகில் எந்த நகரில் என்று தீர்மானிக்க பட்டபின் தலாய்லாமா அங்கு சென்று இடத்தை தேர்வு செய்கிறார். அங்கு புதிய கோவில், கட்டிடங்கள் எதுவும் எழுப்ப படுவதில்லை.  மூங்கில், மரப்பலகைகள் திபேத்திய கலைநயமும் வண்ணங்களும் மின்னும் திரைச்சிலைகள் போன்றவற்றால்  தற்காலிகமாக ஒரு பெரிய பந்தல் அமைக்கபடுகிறது.  அந்த. பிரார்த்தனை கூடத்தின் ஒரு புறத்தில்  வெண்னையில் வண்ணங்களை சேர்த்து ஒரு புத்தரின் உருவம் நிறுவப்படுகிறது.  அதுதான் சன்னதி. 

  நடுவில் பூஜைக்காக ஒருமேடை. அதை நோக்கி தலாய்லாமாவிற்கு ஒரு மேடை.. பூஜை செய்வதற்கான மேடையில் ”மண்டாலா”  எழுதப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலிருந்து சேகரிக்கபட்ட பல நிற மெல்லிய மணல்களால் காலச்சக்கரம் நிறுவப்படுகிறது. ஒரு பெரிய வட்டத்தின் உள்ளே நான்கு புறமும்  நுழைவாயில்கள் கொண்ட 7 அடுக்கு மாடி கோட்டையின் வடிவத்தை தட்டையாக,  நுணுக்கமான கோலமாக இடப்படுகிறது.மெல்லிய மூங்கில் குழல்கள் மூலம் வண்ண மணல் கட்டங்களில் நிறப்படுகிறது  இதன் அமைப்பு கட்டங்களின் அளவுகள், வண்ணங்கள் எல்லாம் புத்தரால் சொல்லபட்டு ரகசிய மந்திரங்களாக பாதுகாக்கபட்டுவருகிறது. ஒவ்வொரு கோடும், புள்ளிகளுக்கும் மந்திரங்கள் இருக்கிறது அவைகள் பல தெய்வங்களையும் சக்திநிலைகளையும் குறிக்கிறது. முதல் கோட்டை தலாய்லாமா போட்டு துவக்கியபின்னர் 7 புத்த துறவிகள் 4 நாட்களில் இதை உருவாக்குகிறார்கள்.. அப்போது மற்ற புத்தபிக்குகள் மந்திரங்களை ஜபித்துகொண்டே இருப்பார்கள்.  அந்த காலச்சக்கரம் பிரபஞ்சமாகவும் அதன் நடுவில் எட்டு இதழ் தாமரையில் புத்தர் இருக்கும்  சக்தி நிலையுடன் நம் உடல் மனம், ஆகியவற்றை இணைக்கும் நிலைக்கு  உயர பிரார்த்தனை செய்து பின்  குரு தீட்சை வழங்குவதற்காக இந்த  காலசக்கரம் உருவாக்கபடுகிறது.  மனுச்செய்தவர்களில் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு மட்டுமே தீட்சை வழங்கபடும். ஆனால் வழிபாட்டில் விரும்புவர்கள் பங்கேற்கலாம். ஒராண்டு முன்னரே பதிவு செய்து கொள்ளவேண்டும்.,
புத்தமதவழிபாடுகளில் நடனமும், இசையும் ஒர் அங்கம் என்பதால் அவைகளும் முன் கூட்டியே தீர்மானிக்க பட்டு பூஜைகளின் ஒரு பகுதியாகவே நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்பதற்காவே புத்தமத கலைஞர்கள் பல நாடுகளிலிருந்து வருகிறார்கள்.
ஆறாம் நாளிலிருந்து தலாய் லாமா தனது ஆசனத்திலிருந்து பூஜை செய்கிறார். ஆன்மீக உரையாற்றுகிறார், லாமக்களில் இப்போது நிறைய ஹைடெக் காரர்கள் இருப்பதால் நிகழ்ச்சிகள் இணையத்தில் ஒளிபரப்பு, பெரிய எல்இடி டிவிதிரைகள்,  ஹிந்தி உள்பட 15 மொழிகளில்   உடனடி மொழிபெயர்ப்புடன் எப்,எம் ஒலிபரப்பு   மீடியாகார்களின் வசதிக்காக சாட்டிலைட் வசதிகளுடன் மீடியா சென்ட்டர். என அமர்களபடுத்துகிறார்கள். 
இந்த திருவிழாவில் தொலைந்து போனவர்கள் உள்ளுர்கார்கள் தான். இதுவரை அவர்கள் எளிமையான புத்த பிக்குகளைத்தான் பார்த்திருக்கிறார்கள். . நல்ல சாலையில்லாதால் பெரிய பஸ்களைகூட பார்க்காதவர்கள் ஊருக்குள் பெரிய கார்களையும், டிரக்குகளையும்  ஐந்து நட்சத்திர டெண்ட்ஹோட்டல்களையும்,,  அரைக்கால் டிராயர்களில் அமெரிக்கபெண்களையும் கண்டு மிரண்டுபோய்விட்டர்கள். 

அடுத்த காலசக்கரம் எங்கே எப்போது? புத்தபெருமான் தலாய்லமாவிற்கு சொல்லும் வரை காத்திருக்கவேண்டும் 
ரமணன்
9444902215 


12/7/14

கறுப்பு பணத்தின் உண்மையான கலர்


ஆழம் ஜூலை இதழலில் எழுதியது பதவி ஏற்றதும் பஜக அரசு செய்த முதல் காரியம். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்பு பணத்தை  கண்டுபிடித்து வெளிகொண்டுவர ஒரு  தனி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது  தான்.  கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இந்த விஷயத்திற்காக முந்திய அரசில் எதிர்கட்சியாக இருந்தபோது பஜக வலுவாக போராடிக்கொண்டிருந்தது.  இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்க பட்டாலும் இந்த சவாலான விஷயத்தை சாதிக்க  புதிய அமைப்புகளும் அறிவிப்புகளும் மட்டும் போதாது. மோடியின் அரசுக்கு ஒரு அரசியல்  துணிவு (POLITICAL WILL) இருந்தால் மட்டுமே இதைச்சாதிக்க முடியும். மக்கள் செல்வாக்கும், பாராளுமன்றத்தில்  மிகப்பெரிய மெஜாரிட்டியும் இருக்கும் இந்த அரசுக்கு அத்தகைய அரசியல் துணிவு இருக்குமா? இருந்தாலும் அதை கட்சி அரசியல் எல்லைகளை தாண்டி நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துமா? இந்திய அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயக்கும் கார்பேர்ட்களும், மிகசக்திவாய்ந்த செல்வந்தர்களும்  சமப்ந்த பட்ட இந்த விஷயத்தை ”கார்ப்ரேட் பிரண்டிங்” என கருதப்படும் மோடியின் ஆட்சி எவ்வளவு கடுமையாக கையாளும்? என்ற கேள்விகளுக்கான விடையை பொறுத்து தான் இந்த விஷயத்தில் வெற்றி அமையும்.
சிறப்பு புலானய்வு குழு அமைக்க பட்டதை பிஜெபியின் சாதனையாக சொல்ல முடியாது. காரணம் இந்த குழு உச்சநீதிமன்ற ஆணைக்கேற்ப அமைக்கபட்ட ஒரு குழு.  2009ல் வழக்கறிஞர் ஜெத்மலானி, கோபால் சர்மா,பேராசிரியர் தத்தா,கேபிஎஸ் கில் திருமதி வைத்த்யா ஆகியோர் இணைந்து கறுப்பு பண விவகாரத்தில் யூபிஏ அரசு மிக மெத்தனமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதைச்செய்ய கட்டளை இடவேண்டுமென்று ஒரு வழக்கை உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்திருந்தனர்.
உச்ச நீதி மன்றகண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு என்பது  சிலகாலம் முன்பு உச்சநீதி மன்றம் கண்டுபிடித்திருக்கும் ஒரு புதிய விஷயம். இப்படி அமைக்க சட்டபிரிவுகள் இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கிழ் ஏற்படுத்த படும் ஒரு நிர்வாக அமைப்பு. அந்தமாதிரியான ஒரு  புலானாய்வை கோரியது ஜெத்மலானி குழு.  யூபிஏ அரசு சட்டபுத்தகத்தின் ஒட்டைகளை யெல்லாம் ஆராய்ந்து அப்படி ஒரு குழு அமைப்பதை தவிர்த்து அல்லது தாமத படுத்திகொண்டிருந்தது. இறுதி தீர்ப்பில் அப்படி ஒரு குழு அமைக்கபடவேண்டும் என ஆணையிட்டதை எதிர்த்து அப்பீல் செய்திருந்தது. அப்பீல்லிலும் உச்சநீதி மன்றம் குழு  அமைப்பதை உறுதி செய்து, அதை அறிவிக்கும்படி அரசுக்கு ஆணையிட்டிருந்தது.  பொறுப்பேற்ற புதிய அரசு அந்த ஆணையின் அடைப்படையில் தான் இந்த சிறப்பு புலானய்வு குழுவை அமைத்திருக்கிறது. அதாவது பிஜேபி தனிப்பெருபான்மையுடன் ஆட்சிக்கு வராவிட்டாலும் அல்லது யார் ஆட்சிக்கு வந்திருந்தாலும்  இந்த குழு அமைக்க பட்டிருக்கும்.
எவ்வளவு கறுப்பு பணம் இருக்கிறது?
ஒரு விடை தெரியாத கேள்வி இது. முதலில் இதை சரியாக கணக்கிட்டு உறுதி செய்ய வேண்டும்.  2012 மே மாதம் நாடாளுமன்ற கூட்ட தொடரின் கடைசி நாளன்று அன்றைய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி கறுப்பு பண நிலை குறித்து ஒரு 100 பக்க வெள்ளை அறிக்கையை  அதிரடியாக தாக்கல் செய்தார், அரசு எடுத்த பலமுனை நடவடிக்கை 5 அம்ச திட்டம் என பல விஷயங்களை பேசிய அந்த அறிக்கையின் முன்னுரையில் சொல்லப்பட்ட விஷயம். இது. ”நாட்டின் மூன்று முக்கிய உளவு நிறுவனங்கள் எவ்வளவு முயன்றும் உதேசமாக எவ்வளவு கறுப்ப பணம் இருக்கிறது என்பதை கணுபிடிக்க முடியவில்லை.”
இதற்கிடையே, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ரூ.25 லட்சம் கோடிக்கு மேல் கருப்பு பணம் பதுக்கி இருப்பதாக, சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங் 2011 பிப்ரவரி மாதம் தகவல் வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ரூ.25 லட்சம் கோடியை இந்தியர்கள் பதுக்கி உள்ளனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று இந்தியாவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் மறுப்பு தெரிவித்தது. அதன்பிறகு இந்த விவகாரம் கிடப்பில் போடபட்டது
தொடர்ந்து ஒரு ஜெர்மானிய .வங்கி தங்களிடம் பெரிய அளவில் கணக்கு இருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியலை அரசுக்கு தந்திருக்கும் செய்தி கசிந்திருந்ததால் அதை பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று அன்றைய எதிர்கட்சியான பிஜெபி குரல் எழுப்பி கொண்டிருந்தது. ஆனால் வெள்ளை அறிக்கையில் இதுபற்றி அரசு எதுவும் சொல்லவில்லை.
எவ்வளவு  இந்திய பணம் கறுப்பு பணமாக  வெளிநாட்டில் பதுக்க பட்டிருக்கும் என்பதை  ஆய்வாளர்கள் பலவகைகளில் கணிக்க முயற்சிதிருக்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக  தங்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைப்பது என்பது இந்தியாவிற்கு மட்டும் உரிய விஷயமில்லை. உலகமயமான இந்த விஷயத்தை 1999லிருந்து 2007 வரை  162 நாடுகள் இப்படி செய்திருக்கின்றன என்கிறது உலகவங்கியின்  ஒரு அறிக்கை. நாட்டின் மொத்த GDP யில் 20 முதல் 34 % வரை இது இருக்கிறது. இந்தியாவில் 20 முதல்-23 % வரை இருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை.(நமக்கு அண்ணன் கள் இருக்கிறார்கள்). முந்திய அரசின் வெள்ளை அறிக்கை இந்த புள்ளிவிபரங்களை மறுக்க வில்லை. இந்த மதிப்பீட்டின் படி பார்த்தால்  குறைந்த பட்சம்  40 ஆயிரம் கோடிக்கும் மேல் கருப்பு பணம் இருக்கிறது.  இதன் சொந்தகார்கள் அடையாளம் காணப்பட்டு, பணத்திற்கான வரியை வசூல் செய்தபின் அவர்கள் தண்டிக்கபட வேண்டும்.
வெளி நாட்டில் மற்ற இடங்களை விட சுவிஸ் நாட்டில் தான் அதிக வெளிநாட்டினர் பணம் வைத்திருக்கின்றனர். அந்த நாட்டின் வங்கி விதிகளும், ரகசியம் காக்கபட வேண்டியகடுமையான சட்டங்களும் ஒரு காரணம். சமீபத்திய சர்வ தேச நெருக்கடிகளுக்கு பின்னர் சுவிஸ் தேசிய வங்கி நிர்வாகம் ஆண்டு தோறும் நாடுகள் வாரியாக தங்கள் நாட்டு வங்கிகளில்  இருக்கும் கணக்குகளின் மொத்த தொகையை அறிவிக்கிறது. இந்த மாதம் 2013ம் ஆண்டுக்கான  கணக்கு விபரங்களை அறிவித்திருக்கிறது. இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் 14000 கோடி.. ஆச்சரியம் என்னவென்றால் இது கடந்த ஆண்டைவிட 40% அதிகம். 2010-11 ஆண்டுகளில் கறுப்பு பணம் பற்றி அரசாங்க அறிவிப்புகள், பாராளுமன்றவிவாதங்கள் இருந்த காலத்தில் கணிசமாக குறைந்திருந்த தொகை இது. கடந்த ஆண்டு மெல்ல இது அதிகரித்திருக்கிறது,
கறுப்பு பணத்தை ஒழிக்க இதுவரை எடுக்கபட்ட முயற்சிகள்
1947லிருந்து இன்றுவரை 40க்கும்மேற்பட்ட கமிஷன்கள் அமைக்கபட்டு,  இந்த 65 ஆண்டுகளில் பல் கோணங்களில் அலசி ஆராயபட்ட விஷயம் இது. கறுப்பு பணத்தின் பிறப்பு, பரிமாற்றம், பதுக்கல் என பல்வேறு பரிமாணங்களில் ஆராயபட்டிருக்கும் இந்த விஷயத்தில் பல ஆயிரகணக்கான ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமானது வாஞ்ச்சு கமிட்டியின் அறிக்கை. அருமையான யோசனைகள் சொல்லபட்ட இந்த அறிக்கை முழுமையாக ஏற்க படவில்லை. சில நல்ல யோசனைகள் ஏற்க பட்டன. ஆனால் காலபோக்கில் அவைகள் நீர்த்துபோயின. இப்படி யோசனைகள் பல இருந்தும் அரசாங்கங்கள் செயல் படுத்த முடியாமல் போனதின் காரணம் அந்தந்த அரசுகளுக்கு தேவையான அரசியல் துணிவு இல்லாதது தான். சம்பந்த பட்டவர்களினால் ஆட்சிக்கும் கட்சிக்கும் வரும் ஆபத்துக்களை விட இந்த கறுப்பு பணம் பிரச்சனை இருந்து தொலையட்டும் போன்ற உணர்கள் தான்

இந்த புலானாய்வு குழு எவ்வலவு வலிமையானது,?
2ஜி வழக்கில் ஒரு குழு சிறப்பாக செயலாற்றியதால் இப்போது உச்ச நீதிமன்றம் இது போன்ற  குழுக்களை நியமிக்கிறது. ஆனால் கோல்கேட் விஷயத்தை அவர்கள் கையாண்டைதை பார்த்த போது எல்லா குழுக்களும் ஒரே தரத்தில் இருக்க போவதில்லை என்பது புரிந்தது. கறுப்பு பண விவகாரத்திற்கு  அமைக்க பட்ட குழுவில்  தலவர்  உட்பட 13 பேர்கள் உறுப்பினர்கள். நீதிபதி எம். பி ஷா தலமையைலான இந்த குழுவில் உபதலைவர் தவிர, மற்றவர்கள் அனைவரும். துறைஅதிகாரிகள். ரிசர்வ் வங்கி,  அமுலாக்க பிரிவு, உளவுத்துறை வருமானவரித்துறை, போதைமருந்து கடத்தல் தடுப்பு, பொருளாதரா குற்ற தடுப்பு துறை போன்றவற்றின் செயலர்கள். இவர்கள் எப்போது வேண்டுமானலும் பதவி உயர்வு, மாற்றம் என்ற நிலையிலிருப்பவர்கள்..  இப்படி இந்த குழுவின் அமைப்பை பார்க்கும் போதே உடனடி செயல்படக்கூடியது என்ற எண்ணம் எழவில்லை. பிரதமர் அறிவித்தவுடன்   சம்பிரதாயமாக முதல் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இந்த அதிகாரிகள் அனைவரும் ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையில் தீவீரமாக இருந்து அரசு துணிவுடன் செயல்படதாதை கண்டு அல்லது நிர்பந்தம் காரணமாக ஒதுங்கியிருப்பவர்கள்.  விஷயத்தின் முழு கனத்தையும் அதன் பின்னால் உள்ள அரசியலையும் நன்கு அறிந்தவர்கள். ஆனால் பல்துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது இந்திய அதிகார வர்கத்தினரிடையே தோற்று போன ஒரு விஷயம்.  மேலும் இந்த குழுவின்  செயல் திட்டம் அறிவிக்க படவில்லை. அவை வெளிப்படையாக அறிவிக்க படுமா என்றும் தெரியவில்லை. இவர்களுக்கு அளிக்கபட்டிருக்கும்  பொறுப்புகள்(terms of Reference) பற்றியும் தெளிவாக பேசப்படவில்லை. உதாரணமாக ஜெர்மன் அரசு அளித்த பட்டியலில் உள்ள 26 பேர்களில் விசாராணை நடத்தி அதில் 8 பேர்களுக்கு போதிய ஆவணங்களும் ஆதாரங்களும் இல்லாதாதால்  கைவிடபட்டு மற்றவர்களிம் மீது விசாராணை தொடர்ந்து கொண்டிருப்பதாக முந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த பெயர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கிழ் விண்ணபித்தவருக்கு மறுக்கபட்டது.  உச்ச நீதி மன்றத்தில் இரண்டு சீலிட்ட கவர்களில்  தனித்தனியாக அந்த பெயர்களை கொடுத்த அரசு மனுதாரருக்கு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு வழங்க ஆணையிட்டபோதும் இது தகவல் உரிமைக்கு அப்பாற்பட்டது என சொல்லி அப்பீல் செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த புதிய குழுவிற்கு  தனியாக ஆணை இடப்படாவிட்டால் தவிர அந்த 8 பெயர்களை ஆராய முடியாது.  வழக்குகள் அவசியமில்லை என கைவிடபட்ட பெயர்களில் ரிலயன்ஸ் குழும இயக்குனர்கள் பெயர்கள் இருப்பதாக, இந்த செய்தி பரபரப்பாக இருந்த காலத்தில் மீடியாவில் பேசபட்டிருக்கிறது.
இவைகளையெல்லாம் பார்க்கும் போது மோடி அரசு உச்சநீதிமன்ற ஆணையை பயன்படுத்திகொண்டு  முந்திய அரசைப்போல தாமதபடுத்தி அவபெயரை  பெற விரும்பாமல் மக்களின் செல்வாக்கை பெற அவசர கதியில் இப்படி ஒரு  வலுவில்லாத குழுவை தெளிவில்லாத கட்டளைகளுடன் அமைத்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.
கருப்பு பணத்தில்தான் எத்தனை வண்ணம்?
 வருமான, அல்லது மற்ற வரிகளை செலுத்த விரும்பாமல் நடக்கும் எந்த ஒரு  செயல் பாட்டிலும் கருப்பு பணம்  பிறக்கிறது. இது சிறிதும் பெரிதுமாக எல்லா மட்டங்களிலும் நுழைந்திருக்கிறது. காலப்போக்கில் இது பலராலும் ஏற்றுகொள்ளபட்ட ஒரு விஷயமாகி வளர்ந்து கொண்டே யிருக்கிறது.. கடந்த 50 ஆண்டுகளில் வரிகள் மிக்குறைக்க பட்டிருக்கின்றன. வரிச்சலுகைகள் மிக அதிகமாகியிருக்கின்றன. ஆனாலும் இந்த பழக்கமும் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. சுமூகம் அங்கீகரித்தவிட்ட செயலை அழிக்க சட்டங்களால் மட்டும் முடியாது.
வரிஏய்ப்புக்கு கடுமையான சட்டங்கள் இங்கே இல்லை.  நீண்டகால சட்ட போராட்டங்களுக்கு பின்னர் வழங்கும் தண்டனைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதால் பிரச்சனை தொடர்கதையாகிறது. இன்றுள்ள சட்டங்களின் படி கணக்கு சொல்ல முடியாத பணம் கைபற்ற பட்டால் வரி மற்றும் அபராதம் செலுத்தினால் (இது மூன்றில் ஒரு பங்கு அளவிற்குதான் வரும்) மீதிப் பணம் வெள்ளை பணமாகிவிடும்.
 வரி ஏய்ப்பை தவிர ஏற்றுமதியில் வர வேண்டிய வருமானத்தை குறைவாக மதிப்பீட்டு  இந்தியாவில் பெற்று கொண்டு மீதியை அந்த வெளிநாட்டிலேயே நிறுத்திகொள்வதும் அதே போல் இறக்குமதிக்கு செலுத்தவேண்டிய அன்னிய செலாவாணியை அதிகம் செலுத்தி பணத்தை வெளிநாட்டில் சேமிப்பது போன்ற பல வழிகளில்  கருப்பு பணம் உருவெடுக்கிறது.  இந்த வழிமுறைகள் அனைத்தும் நமது அரசு அதிகாரிகளுக்கு நனறாக தெரியும் என்பதும் அவர்களில் பலர் இவைகளை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதும் தான் உண்மை.
90களுக்கு பின் இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கைகளின் மூலம் கதவுகள் திறக்க பட்டவுடன் வெளிநாட்டில் பதுக்கபடும் கருப்பு பணத்தின் அளவு பலமடங்கு அதிகரித்துவிட்டது. இன்று நம்ப முடியாத அளவில்  வளர்ந்து பெருகி நிற்கிறது.
FDI என்ற நேரிடையான  அன்னிய முதலீடு திட்டம் பிறக்கும் போதே இந்த கருப்பு பணம் உருவாதற்கான் வழியுடன் பிறந்த ஒரு திட்டம். இது தற்செயலா, திட்டமிடபட்ட தந்திரமா என்பது ஒரு புரியாத புதிர்,  நமக்கு வந்த அன்னிய முதலீடுகளில் 50%க்கு மேல்  எந்த வரிகளும் இல்லாத சில குட்டி நாடுகளிலிருந்துதான். இந்த நாடுகளின் பொருளாதார சட்டங்களும் நிதி வங்கி அமைப்புகளும் விசித்திரமானவை. இங்கு அதிக கஷ்டங்கள் இல்லாமல் கணக்குகள் திறக்கலாம். அதிலிருந்து எங்கு வேண்டுமானலும் எவ்வளவு வேண்டுமானலும் பணத்தை மாற்றலாம். இந்த வசதிகளினால் இந்தியாவிற்கு  இந்த நாடுகளிலிருந்து  மூதலீடுகள் கொட்டியது.  இன்னும் கொட்டிகொண்டிருக்கிறது. இவற்றி பெரும்பாலானவை இந்தியர்களின் பணம்- கணக்கில் வராத கருப்பு பணம்- உலகின் பல மூலைகளிலிருந்து இந்த குட்டி தேசங்களுக்கு அனுப்ப பட்டு அங்கிருந்து மூதலீடாக வடிவம் எடுத்து ஒரு லெட்டர் பேட் கம்பெனி மூலம் இங்கே அனுப்ப பட்டவை. இதில் முக்கியமான விஷயம் முதலீடு செய்பவர்கள் நேரிடையாக செய்யாமல் அங்கைகரிக்க பட்ட ஏஜெண்ட்கள் மூலம் செய்யாலாம். அதனால்  உண்மையில்பணம் அனுப்பியது யார் என்ற தெரிய வாய்ப்பில்லை.  பணம் அனுப்ப பட்டு முடிந்தவுடன்  அனுப்பிய  அந்த நிறுவனம் மூடபட்டதாக பதிவாகிவிடும்.
நம் நாட்டின் அரசியல் வாதிகள்  தொடரும் முதலீடுகளின் புள்ளி விபரங்களை காட்டி மக்களை மகிழ்விக்கிறார்கள். கருப்பு பணத்தின் சொந்த கார்கள் தங்கள் பணம் பத்திரமாக தாய் நாட்டில் பாதுகாப்பாக புது வடிவம் பெற்றதை கண்டு மகிழ்கிறார்கள். எல்லாம் சரி? எப்படி வெளிநாட்டுக்கு இந்த கருப்பு பணத்தை அனுப்பு முடிகிறது என்கிறீர்களா? உலகிலேயே இதற்காக மிக பாதுகாப்பான ”ஹவாலா” முறையை கண்டுபிடித்து சிறப்பாக செயல் படுத்தும் சமார்த்தியசாலிகள் இந்தியர்கள் தான். கொடுக்கபடும் உள் நாட்டு பணத்திற்கு ஈடாக வெளிநாட்டு பணம் உங்கள் வெளிநாட்டு கணக்கில் வரவு வைக்க மிக பெரிய அளவில் சில நிறுவனங்கள், அன்னிய நாட்டு வங்கிகிளைகளுடன் இயங்கிகொண்டிருக்கின்றன.  இவர்கள் கையாண்ட பணத்தின் அளவு பிரமிக்கவைப்பவை.  சில நடவடிக்கைகள கண்டு பிடிக்கபட்டபின்னரும் ( காண்க HSBC வங்கி- ஆழம் ஜனவரி  இதழ்)  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க படாத விஷயம் இது.

இம்மாதிரி பணபதுக்கலில் நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக  கட்சி பேதமின்றி எல்லா அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதால் எந்த அரசு வந்தாலும் இது முழுவதுமாக ஒழிக்கபட வழியில்லை என்று ஒரு கருத்தும் இருக்கிறது. 

9/7/14

டிஜிட்டல் தமிழர்கள்


மலேசியாவில் பிறந்த. சுபாஷிணி ஜெர்மனியில்வசித்து வரும் ஒரு தமிழ் எழுத்தாளர்-ஆய்வாளர். கணையாழி இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கிறார். தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பை டாக்டர் கண்ணன் அவர்களோடு இணைந்து நிறுவியவர். அதன் துணைத்தலைவராக இருப்பதோடு அதன் வலைகுரு (webmaster) ஆகவும் செயல்பட்டு வருகிறார்.
அரிய, பழைய ஓலைச்சுவடிகள் தற்போது புழக்கத்தில் இல்லாத நூல்கள் இவற்றை மின்பதிப்பாக்கி வைப்பதை முக்கியக் கடமையாக ஏற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருகிறார். இதையன்றி கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சி, மானுடவியல் போன்ற துறைகளில் ஈடுபாடு உண்டு.
இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தன் சொந்தச் செலவில் தமிழகம் வந்து களப்பணிகளை மேற்கொள்கிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க, ஆனால் அசட்டை செய்யப்பட்ட கலாசாரச் செழுமை நிறைந்த இடங்களுக்குச் சென்று தகவல் சேகரித்தல், அவற்றை வலையகத்தில் வெளியிடுவது, அறிஞர்களைச் சந்திப்பது, தமிழ்க் கணினி பற்றிய பட்டறைகள் நடத்துவது என்று அந்தப் பயணத்தை செயல்நிரம்பியதாகஆக்கிக் கொள்கிறார்.
மலேசியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் படித்த இவர் ஹ்யூலெட் பெக்கார்ட் நிறுவனத்தில் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளுக்கான வர்த்தக சேவையை அளிக்கும் Chief IT Architect, ஆகப் பணி செய்கிறார். ஜெர்மானியரான திரு. ட்ரெம்மலை மணந்து ஜெர்மனியில் வசிக்கிறார்.
படித்தது மலாய் மொழியிலும், ஆங்கிலத்திலும். பேசுவது வீட்டில் ஜெர்மன், அலுவலகத்தில் ஆங்கிலம்... ஆனால் நேசிப்பது  தமிழ் மொழியை. தமிழ் மரபுகளை.  தமிழ் மரபுகளை  பாதுகாக்க  இவர் தேர்ந்தெடுத்திருக்கும் வழி டிஜிட்டலில் சேமிப்பு
.   இலக்கிய படைப்புகள் மட்டுமின்றி மருத்துவம்,கணிதம் வானசாஸ்திரம், கோவில்கட்டும் முறைகள், நாவாய் சாஸ்திரம், வான சாஸ்திரம் என சகலத்தையும்  டிஜிட்டலாக்கி சேமித்து பட்டியிலிட்டிருக்கிறார்.. இம்முறை வந்த பயணத்தில் தினமணியின் இலக்கிய திருவிழாவிலும்  சாகித்திய அகதமியின்  நிகழ்ச்சியிலும் பங்கேற்று  தன் பணிகளைப்பற்றியும் அதில் சந்திக்கும் சவால்களை பற்றி  பேசினார்..
தமிழிலும் அதன் மரபுகளிலும் எப்படி இத்தனை ஆர்வம்? 
தமிழ்வம்சாவளி மலேசிய குடும்பம் எங்களுடையது. என் தாய் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமிழ்  பேச எழுத ஆர்வத்துடன் சொல்லிகொடுப்பவர். என் பள்ளிக்கூட காலங்களில் அவர்களுடன் நானும் தமிழ் கற்றேன். அம்மா சொல்வதற்காக தமிழில் கட்டுரை பேச்சு எல்லாம்  எழுதியிருக்கிறேன்.  ஆனால் அப்போதெல்லாம் இந்த ஆர்வம் இல்லை. 
ஜெர்மனிக்கு வந்த பின் 90 களின்   துவக்கத்தில் இணைத்தில் தமிழை பயன்படுத்த  யூனிகோர்ட் முறையில் எழுத்துருக்களை  தமிழகம், மலேசியா சிங்கப்பூர்  போன்ற இடங்களிலிருந்து ஒத்த சிந்தனை கொண்டவர்கள் இணைந்து செய்த பணிகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழோடு நெருக்கமானேன்.  இந்த வளமான மொழி நம்முடையதல்லவா? நாமும் ஏதாவதுசெய்ய வேண்டும் என எண்ணினேன்.  தமிழ் வாசிப்பும் தொடர்புகளும் அதிகமாகியிற்று. அப்போது அறிமுகமானவர் முனைவர் நாராயணன் கண்ணன்

நா.கண்ணன் தொழில்முறையில் ஒரு அறிவியல் விஞ்ஞானி. மதுரைப் பல்கலைக் கழகத்திலும், ஜப்பானிலுள்ள எகிமே பல்கலைக் கழகத்திலும் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். உயிர் வேதிமவியல், சூழலியல் போன்ற துறைகளில் தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் வசிக்கும் முக்கிய இந்திய விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். இவர் 10 வருடங்கள் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம்) இணைப்பேராசிரியராக இருந்துவிட்டு  கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர். இப்போது புத்ர மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக உள்ளார். இருபதாண்டுகளுக்கு மேலாக அயலகத்திலிருந்து தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்து வருபவர். தமிழ் இலக்கிய, சரித்திர, கலை வடிவங்களை எண்ம (digital) வடிவில் மின்னுலகில் நிரந்தரப் படுத்தும் முயற்சியின் முன்னோடிகளில் ஒருவரான இவருடன்  இணைந்து  உருவாக்க பட்டது தான் தமிழ் மரபு அறகட்டளை இந்த டிஜிட்டல் சேமிப்புகளை    துவக்கியபின்னர் இந்த பணி தந்த ஆச்சரியங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றன.  நம் முன்னோர்கள் செப்பேடுகளிலும், சுவடிகளிலும், பாதுகாத்து கொடுத்ததை  தவிர எண்ணற்ற பல விஷயங்கள் இன்னும் சுவடிகளிலேயே கிராமங்களில் இருக்கிறது. திருவாடுதுறை போன்ற ஆதினங்களில் பல் அரிய சுவடிகள் இருக்கிறது. அதை இப்போது  இருப்பதுபோல் நீண்ட நாள் பாதுகாப்பது கடினம். அவற்றை அடுத்த தலமுறைக்கு கொண்டு செல்வதுதான் தமிழ் மரபு அறக்கட்டளையின் அடிப்படை நோக்கம்.  தமிழ் நாட்டில் மாலன்,  நராசாய்யா  தஞ்சை தமிழ்பல்கலைகழக முனைவர் ராஜேந்திரன்  போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்து உதவுகிறார்கள். என்று சொல்லும் சுபாஷினி ஆங்கில கலப்பில்லாத, மலேசிய தமிழ் வாசனைகள் இல்லாமல் நல்ல தமிழில் சரளமாக் பேசுகிறார்.  இவருடைய தளத்தில்  பேட்டிகள், பாடல்களையும் பதிவுகளையும் சேமிக்கிறார், அடுத்து  ஒரு பதிப்பு வர வாய்ப்பு இல்லாத புத்தகங்களை மின் நூலாக மாற்றி சேமித்திருக்கிறார். ஆவணங்களை பாதுகாக்க இணைய ஊடகம் மிக சிறந்த வாய்ப்பு. -வளரும் தொழில்நுட்பத்தை  முழுவீச்சில் பயன்படுத்தினால் பலபணிகளை செய்யலாம் என்கிறார்.  மலேசியாவில் வந்த முதல் தமிழ் பத்திரிகையின் பிரதி  இப்போது அங்கில்லை. ஆனால் மலேசியா  அன்றைய பிரிடிட்டிஷ் காலனியாக இருந்த காரணத்தினால் பதிவு செய்யபட்ட பத்திரிகைகளின் பிரதி ஒன்று பிரிட்டிஷ் அர்சாங்காத்திற்கு லண்டனுக்கு அனுப்ப பட வேண்டும் என்று ஒரு  சட்டம் இருந்திருக்கிறது. அதன்மூலம் ஆராய்ந்ததில் அந்த முதல் பத்திரிகையின் முதல் இதழ் பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கபட்டிருப்பது  தெரிந்தது. இப்படி பல  சுவாரஸ்யமான விஷயங்களை அறிந்து அதை தமிழ் மரபு தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த பெண்.

ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோவிலை விட பழையது திருவிடை மருதூர் மஹாலிங்கேஸ்ரவர் கோவில். இந்த கோவிலுக்கு அருகில் ஒரு போர் நடந்து இருப்பது, அதன் பின்னர் கோவில் மூன்று கட்டமாக விரிவாக்க பட்டிருப்பதை எல்லாம் அங்குள்ள கல்வெட்டுகளில் கண்டு  அதை  படமெடுத்து டிஜிட்டலாக ஆவணபடுத்திதை சொல்லும் இவர்   அந்த கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற புனரமைப்பு பணிகளில் அந்த கல்வெட்டுகள் சிதைக்கபட்டிருப்தையும் சன்னதிகள் இடமாற்றம் செய்யபட்டிருப்பதும் கண்டு வருந்துகிறார். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் 200 ஆண்டு பழமையான  விஷயங்களை கூட பிரமாதமான  விஷயமாக ஆவணப்படுத்தி பாதுகாத்து காட்சியாக்கி விளம்பரபடுத்துகிறார்கள். பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட  நாமும் இது போல் செய்து உலகை கவர வேண்டும் என்கிறார்.

இந்த  பயணத்தில் மதுரை மேலூர் ஆனைமலை அருகிலிருக்கும் குகைகோவில்களை ஆராய்ந்திருக்கிறார். உள்ளுர் பேஸ்புக்  நண்பர்கள் உதவியிருக்கின்றனர். உங்கள் ஊரில் ஏதாவது  தமிழ் மரபு தொடர்பான செய்திகள் இருந்தால் இவரை தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த  இந்திய பயணத்தில் உங்கள் ஊருக்கே வருவார்.
ரமணன்
kalki 13/07/14 இதழ்


5/7/14

சர்வாதிகாரியின் சாபம்


நீண்ட நெடிய வரலாறு கொண்ட நாடு ஈராக். இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள செழிப்பான நிலப்பரப்பை கொண்டது. ஆங்கிலேயர் பிடியில் கொஞ்ச காலம் இருந்த ஈராக் மீண்டும் மன்னராட்சிக்கு திரும்பியது. ஆனால், 1958ல் நடந்த ராணுவ புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். 1978ல் சதாம் உசேன் ஈராக் அதிபராக பொறுப்பேற்றார். 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினரிடம் சிக்கும்வரை யாரும் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக சதாம் இருந்தார்.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ரசாயன ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக கூறி 2003ல் ஈராக்கை தனது ஆளுகையின் கீழ் அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகள் படை கொண்டு வந்தது.  இந்த போரின் இறுதியில்தான் தப்பியோடிய சதாம் உசேன் கண்டுபிடிக்க பட்டார். அப்போது, ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது. அவர்கள் சதாமை 2006ஆம் ஆண்டு தேசத்துரோகத்திற்காக தூக்கிலிட்டனர். சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர்.  ராணுவம், அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்தனர்.. இப்படி ஒதுக்கப்பட்ட சன்னி பிரிவினர் ஆயுதமேந்தி போராடத் தொடங்கினர். அப்போது தொடங்கிய கலவரம், 2011ல் அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறியதும் தீவிரமடைந்தது.
ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தி வந்த பயங்கர தாக்குதல்கள் இப்போது உள்நாட்டு போராகி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த போரை நடத்துவது சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பு இப்போது, ஷியாக்களுக்கு எதிராக நடத்தும் இந்த யுத்தத்துக்கு சிரியாவின் ஆசி உள்ளது. சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் இணைந்துவிட்டனர். பல நகரங்களை அடுத்தடுத்து பிடித்த தீவிரவாதிகள் இப்போது, தலைநகர் பாக்தாத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளனர். எங்கிருந்து இந்த தீவிர வாதிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வருகிறது ? விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது அமெரிக்க உளவுத்துறை

 ISIS என்ற இந்த அமைப்பின் தலைவர்  அப் பக்கர் அல் பாக்தாதி. அமெரிக்க படையெடுப்புகளினால் சதாம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, ஈராக்கில் அல்கைதா என்றொரு ஆயுதக் குழு ஒன்று இயங்கி வந்தது. அமெரிக்கப் படைகளுடனான மோதலில் அதன் தலைவர்கள் கொல்லப் பட்டனர். அப்போது அமெரிக்கப் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்ட போராளிகளில் ஒருவர் தான் அல் பாக்தாதி.
2005 முதல், Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். அப்போது, "உங்களை நியூ யார்க்கில் சந்திக்கிறேன்!" என்று சிறைக் காவலர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். விடுதலையான பின்னர் எஞ்சியிருந்த போராளிகளை ஒன்று திரட்டி ISISஐ     உருவாக்கியிருக்கிறார். .

2011ம் ஆண்டு, அல் பாக்தாதி, அமெரிக்கர்களால் "தேடப்படும் பயங்கரவாதி" என்று அறிவிக்கப் பட்டார். அவரது தலைக்கு விலையாக பத்து மில்லியன் டாலர் அறிவிக்கபட்டது..  அந்தக் காலகட்டத்தில் சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அல் பாக்தாதி குழுவினர், சிரியாவில், அரச படைகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக நம்பபட்டது.


. தீவிர வாதிகள் ஒடுக்கப்படாவிட்டால் ஈராக் இரண்டாக உடையும் அபாயமிருக்கிறது. ஈராக்கின் இந்த நிலைக்கு ஒரு வகையில் காரணமான அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இப்போது இந்த பிரச்னையில் தலையிட தயங்குகின்றன.. அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை காக்க 275 வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பபெறுவோம் என்ற அறிவிப்புடன் தேர்தலை சந்தித்த ஒபமா இனி போர் எதுவும் நிகழந்தால் அமெரிக்கா தலையிடாது என்று அறிவித்துவிருக்கிறார்.
ஆனால் தன்னை ”உலக போலீசாக” வர்ணித்துகொள்லும் அமெரிக்கா ஈராக்கின்  நிரந்தர பகையாளியான ஈரான் நாட்டின்மூலம் உதவி இன்னொரு போரை உருவக்கும் என்றும் சில ஐரோப்பிய பத்திரிகைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?
ஈராக்கில் தீவிர வாத தாக்குதல்களால் அரசு நிர்வாகம் அடியோடு சீர்குலைத்துவிட்டது.,  நிவாரண பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை. அகதிகள் நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது. ஈராக்கின் உள்நாட்டு போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது, கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பி உள்ள நமது பொருளாதாரத்தை  பாதிக்கும். பெட்ரோல் விலையேற்றம் நம் பர்சை பாதிக்கும், உள்நாட்டு போரால் பல லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தவிக்கின்றனர்.  அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் நிலைமை இன்னும் மோசம்.. ஏராளமான இந்தியர்கள்  ஈராக்கில் உள்ளனர். அவர்களில் பலர் தனியார் நிருவனங்களில் காண்ட்டிராக்டில் வேலைசெய்பவர்கள். எந்த நிமிடமும் சேமிப்புகள் பரிக்கபட்டு  அகதிகளாக வெளியேற்ற படலாம்.


8 ஆண்டுகளுக்கு முன் சதாம் உசேன் தூக்கிலிடப்படும் முன் நடந்த வழக்கில் சதாம் சொன்னது என்னை அமெரிக்க ஆதரவுடன் நீங்கள் தூக்கில் கூட போடலாம். ஆனால் நான் இறந்தாலும்  என் ஆவி என் மக்களை வழி நடத்தும்.  நடக்கபோகும் போரில் நீங்கள் தோற்பீர்கள் என்றார்.

.... இப்போது போர் நடக்கிறது.


ஆதித்யா (ரமணன்)
கல்கி07/0714 இதழில் எழுதியது

1/7/14

ஆச்சரியமான தாத்தா தான் !அடுத்த மாதம் உங்களுடைய 90வது பிறந்தநாளுக்கு என்ன பரிசு வேண்டும்?. சொல்லுங்கள் என  கிழவரின் மகன், மகள், பேரக்குழந்தைகள் கொண்ட அந்த சந்தோஷமான பெரிய குடும்பத்தினர் கேட்டனர். ”பரிசெல்லாம் வேண்டாம். அன்று எல்லோரும் வந்துவிடுங்கள் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது” என்றார் தாத்தா.

அவர் 1989லிருந்து 93 வரை  அமெரிக்காவின் 41வது ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ். பின்னாளில்இவரது மகன் புஷ்ஷும் ஜனாதிபதியாக இருந்த்தால்  இவரை சீனியர் புஷ் என பத்திரிகைகள் அழைக்கின்றன.  குடும்பத்தினர் சென்ற பின் புஷ் தன் மனைவியிடம் சொன்னது “ அன்று  நான் பாரசூட்டின் மூலம் குதிக்க விரும்புகிறேன். நண்பர்களிடம் சொல்லி ஏற்பாடுகள் செய்  விஷயம் ரகசியமாக இருக்கட்டும் என்றார். .
அவருக்கு  உயர் ரத்த அழுத்தம், நெஞ்சில் சளிகட்டுதல்,சர்க்கரை போன்ற  தொல்லைகள் இருப்பதால் இது ஆபத்தான முயற்சி வேண்டாம் என்றார்கள் டாக்டர்கள். முன்னாள் ஜனாதிபதி இத்தகைய செயல்களில் ஈடுபடுவது  அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பிரச்சனைகளை எழுப்பும் என ராணுவ அதிகாரிகள் சொன்னார்கள். இம்மாதிரி சாகஸ செயல்களுக்கு அவருக்கு இன்ஷ்யூரன்ஸ் இல்லை என்றார்கள் அவரது இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகாரர்கள்.
புஷ் தாத்தா எதைப்பற்றியும் கவலைப்படாமல் நண்பர்களின் உதவியுடன் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்., அவரின் உடல் நிலை, வானிலை  போன்றவற்றால் எந்த நிமிடத்திலும் திட்டம் கைவிடப்படலாம் என்பதால். நிகழ்ச்சி பொதுமக்களுக்கு அறிவிக்க படவில்லை.  ஆனாலும் ஒரு சிலருக்கே தெரிந்த விஷயம் மெல்ல கசிந்துவிட்டது. புஷ் வேறு தனது டிவிட்டரில் இங்கு  பருவ நிலை இதமாக இருக்கிறது. பாராசூட்டில் குதிக்கலாம் போலிருக்கிறது என  கோடிகாட்டியிருந்தார்.
 பிறந்த நாள் அன்று காலை  அவரது விடுமுறைகால வீட்டு தோட்டத்தில் 6 மகன், மகள், 14 பேர குழந்தைகள் அவர்களின் குழந்தைகள் ,உறவினர்கள், நண்பர்கள், என 200பேர்  கேக் வெட்டி ஹாப்பி பெர்த்டே பாடிய பின்னர். காத்திருந்த ஹெலிகாப்டரில்  அவரது சக்கர நாற்காலியிலிருந்து ஏற்றபட்டார்.  ஆம்!. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் நடமாடுவது சக்கர நாற்காலியில் தான்.  தக்க உடைய அணிந்து கொண்டு ஹெலிகாப்டர் 6000 அடி உயரத்தை தாண்டியதும் பாராசூட்டுடன் குதிக்க தயாராக இருந்தார் புஷ்

  செய்தி பேஸ்புக், டிவிட்டர் மூலம்  பரவியிருந்ததால், திட்டமிட்டபடி இறங்க வேண்டிய இடமான உள்ளூர் சர்ச்சின் பின்னாலுள்ள புல் வெளியில்   ஆவலுடன் மக்கள் கூட்டம்.  வெள்ளை ஆரஞ்சு நிற பாரசூட் வானில் விரிய  ஆரம்பித்ததிலுருந்து இறங்கும் வரை  நகர மக்களின் ஆராவாரமும் கைதட்டலும் தொடர்ந்தது. 
பத்திரமாக தரையிறங்கினார் புஷ். அவரது முழங்காலுக்கு கீழே கால்கள் செயல்படுவதில்லை இல்லையாதாலால், அவரால் தறையிறாங்கியவுடன் பாரசூட்டுடன் ஓடவோ அல்லது நடக்கவோ முடியாமல் முன் புறமாக விழுந்து பாராசூட்டால் சில நிமிடங்கள் இழுத்து செல்லபட்டார்.  இந்த பயணத்தை ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க விமான படையினர் பாதுகாப்புகாக உடன் பாராசூட்டில் பறந்து வந்தவர்கள் உடனே பாய்ந்து உதவிசெய்து அவரை சக்கர நாற்காலியில் உட்கார வைத்துவிட்டனர்.  ”ஆச்சரியமான தாத்தாதான். ஆனால் எனக்கு  பயமாக இருந்ததால் கண்களை மூடி.க்கொண்டுவிட்டேன்” என்றார் சிறுவயது கொள்ளு பேத்திகளில் ஒருவர்.
”அப்பா உங்கள் சாதனைகளில் இது முக்கியமானது. நான் கூட இதுபோல செய்யப்போகிறேன்” என்றார். மகன் புஷ். (இதை கிண்டலடித்து அமெரிக்காவில் நிறைய ஜோக்குகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன)   எல்லாவற்றையும் ஒரு யூகேஜி குழந்தையின் சிரிப்போடு ஏற்றுகொண்ட புஷ் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டார்.
பிறந்த நாளுக்கு ஏன் இந்த பாரச்சூட் குதிப்பு?.  ஜார்ஜ் புஷ் இரண்டாவது உலகப்போரில் பணியாற்றிய அதிகாரி. ஒரு கட்டத்தில்  சுட்டுவிழ்த்தபட்ட விமானத்திலிருந்து பாராசூட்டின் மூலம் குதித்து  வினாடி நேரத்தில் உயிர்தப்பியவர்.  டென்னிஸ் கோல்ப், பேஸ்கட்பால் என எல்லாவிளையாட்டிலும் ஆர்வம் கொண்டவர். வெள்ளை மாளிகையில் வசித்தபோது ஜனாதிபதி ஜாகிங்க்காக தனி பாதை அமைத்தவர்,தனது 80 பிறந்தாநாளின் போதும் விமானத்திலிருந்து குதித்தவர். மனத்தளவில் நான் ஃபிட்டாக இருக்கிறேன் என்பதை சோதித்துகொள்ளவும், காட்ட விரும்பினேன் என்கிறார்.

 ”இதை உங்கள் வாழ்நாள் சாதனையாக பதிவு செய்திருக்கிறீர்கள்” என சொன்ன ஒரு நண்பரிடம், “ வாழ்க்கையை அதற்குள் முடித்துவிடாதீர்கள்.   95 வது பிறந்தநாளுக்கு 7000 அடியிலிருந்து குதிக்க போகிறார்” என்று சொன்னவர்  புஷ்ஷின் மனைவி பார்பாரா புஷ்
ரமணன்
(கல்கி 6/7/14)