21/9/16

குளச்சல் துறைமுக திட்டத்தில் என்ன குழப்பம்?

குளச்சல்துறைமுக திட்டத்தில்என்ன குழப்பம்?
இந்திய கடற்கரை 7,516 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 12 பெரிய துறைமுகம் உட்பட மொத்தம் 200 துறைமுகங்களுக்கு மேல் இந்தியாவில் உள்ளன. கடந்த வருடத்தில் இந்த 12 பெரிய துறைமுகங்களில் தான் மொத்த இந்திய வர்த்தகத்தில் 70 சதவீத வர்த்தகம் கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது. இதனால்தான் மத்திய அரசும் கப்பல் துறைக்கு மிகுந்த முக்கியத்துவத்தை அளித்து மிகப் பெரிய திட்டங்களையும் கொண்டுவந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நீண்ட நாளாகப் பேசப்பட்டு வந்த திட்டமும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கனவுத் திட்டமுமான குளச்சல் துறைமுகத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்திற்கு ஒருபுறம் பலத்த வரவேற்பும் மறுபுறம் கடுமையான எதிர்ப்பும் கிளம்பியுள்ளது..
போர்த்துக்கீசிய காலத்திலிருந்து மிகப் பெரிய இயற்கை துறைமுகமாக இயங்கி வந்த  இது  சிறிய அளவில் மீன் பிடித் துறைமுகம் இயங்கி வந்தது. புராதன துறைமுகமான இதனை, கப்பலில் உலகைச் சுற்றி வந்த வாஸ்கோடகாமா கொளச்சி என்று தனது குறிப்புகளில் எழுதியிருக்கிறார்.
குளச்சல் துறைமுகம். மீன்வளமும், சங்கு, சிப்பி போன்றவையும் அதிகமாகக் கிடைக்கும் பகுதி. இந்த இயற்கை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மாற்றுவதற்கு நீண்ட காலமாகவே பல்வேறு தரப்பினர் முயற்சித்து வந்தனர். 1998, 2000 மற்றும் 2010-ம் ஆண்டுகளிலேயே வர்த்தக துறைமுகமாக மாற்றுவதற்கு ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்தத் திட்டத்தைக் கைவிட்டனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது கன்னியாகுமரி தொகுதியில் போட்டி யிட்ட பாஜக வேட்பாளர் பொன்.ராதா கிருஷ்ணன் வாக்குறுதி கொடுத்தார். தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சரான பிறகு துறைமுகம் அமைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வந்தார். குளச்சல் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வும் நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் குளச்சலில் இருந்து இனையம் என்ற பகுதியில் அமைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் ஜனவரிமாதம் தேதி பார்வையிட்டு விரைவில் துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.. கடந்த மாதம் மத்திய அரசு சிறப்பு நிதித் திட்டத்தின் கீழ் குளச்சலுக்கு அருகே உள்ள இனையம் பகுதியில் மிகப் பெரிய பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்றும் மையம் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இத்துறைமுகம் அமைப்பதற்கு 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக பணிகள் நடைபெற்று 2030ல் முழுமை அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குளச்சல் இனயம் துறைமுகத்தால், அதன் அருகே 40 கிமீ தொலைவில், கேரளாவில் அமைந்துள்ள விழிஞ்சம்  துறைமுகம் பாதிப்படும் என அம்மாநிலம் எதிர்ப்புக் குரல் எழுப்புகிறது. அந்த மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் டெல்லிக்குப் படையெடுத்து பிரதமர் மோடியிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் பிரதமர்  அதை ஏற்கவில்லை
முதல் கட்டப் பணியில்  2,500 கோடி ரூபாய் அளவுக்குத் தனியாரின் முதலீடு இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடல் பகுதியில் 500 ஏக்கர் அளவுக்குத் துறைமுகம் உருவாக்கப்படவுள்ளது.
.இந்தியாவில் 16 மீட்டர் மிதவை ஆழமுள்ள சரக்கு கப்பல்களைக் கையாளும் நவீன துறைமுகங்கள் இல்லை. இதனால் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் சரக்கு பெட்டகங்கள் கொழும்பு சென்று, அங்கிருந்து சிறிய கப்பல்களில் இந்திய துறைமுகங்களுக்கு வருகின்றன

முதன்முறையாக குளச்சலில் 16 மீட்டர் மிதவை ஆழமுள்ள அதிநவீன துறைமுகம் அமைக்கப்பட்டால் இந்திய சரக்கு பெட்டகங்கள் வெளிநாடுகளில் இருந்து நேராக இங்கு வந்து சேரும். இங்கிருந்து உலக துறைமுகங்களுக்கு செல்ல வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் புதிய தொழில் முதலீடுகள் குவிய  வழிவகுக்கும். பொருளாதார ரீதியில் தென்பகுதி வளர்ச்சிக்கு வாசல் திறக்கும்.
கடலை ஆழப்படுத்த ரூ.809 கோடி செலவாகும். இது முதற்கட்ட பணிக்காக ஒதுக்கீடாகும் ரூ.6,575 கோடியில் இருந்து அளிக்கப்படுகிறது. கடலை ஆழப்படுத்தும்போது கிடைக்கும் மணலைக் கொண்டு கடற்கரையை ஒட்டி 230 ஏக்கர் நிலம் செயற்கையாக உண்டாக்கப்பட்டு அதில் துறைமுகம் அமைக்கப்படும்.

சரக்குப் பெட்டகம் மற்றும் சரக்குப் போக்குவரத்தின் நுழைவு வாயிலாக குளச்சல் துறைமுகம் திகழும். சர்வதேச கப்பல் போக்குவரத்தில் அரபிக்கடல் நாடுகளையும், வங்கக்கடல் நாடுகளையும் ஒருங்கிணைக்க முடியும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். தென் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தமிழகம் மட்டுமின்றி, ஒட்டு மொத்த இந்தியாவின் கடல் வாணிபம் மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சிக்கு குளச்சல் துறைமுகம் வித்திடும்என்கிறது அரசின் குறிப்பு.
ஆனால் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே  , இனயத்தில் சர்வதேச துறைமுகம் அமைக்க, உள்ளுர் மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான போராட்டங்களும் நடந்து கொண்டு வருகின்றனஅரசியல் கட்சிகளும் தேர்தல் நேரத்தில் இந்தப் போராட்டங்களை ஆதரிக்கும் நிலை எழுந்திருக்கிறது.

  இந்த எதிர்ப்பு  ஏன் எழுந்திருக்கிறது ?

மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமா?
இனையம் துறைமுகம் கடல் பகுதியில் 500 ஏக்கரில் அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த 500 ஏக்கர் முழுவதும் மணல் நிரப்பப்படும் பொழுது அந்தப் பகுதியின் சூழலியல் சமநிலை பாதிக்கப்படும் என்று சூழலியலாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது துறைமுகம் அமைக்கப்படும் இனையம் பகுதி அதிக கடல் அலைகளையும் நீரோட்டத்தையும் கொண்டது. மிகப் பெரிய அலைகளைத் தடுப்பதற்கு குறைந்தது இரண்டு அலைமுறிகள் அமைக்கப்பட வேண்டும். ஐந்து கிலோ மீட்டருக்கு அலைமுறி அமைக்கப்படும் போது சிறு மீனவர்களும் பல பாரம்பரிய தொழில்களும் அழிந்துவிடும் என்கின்றனர். மேலும் இதற்கான செலவும் அதிகம். மேலும் இந்தச் சரக்கு முனையத்திற்குத் தேவையான சாலைகள், ரயில் பாதைகள் அமைப்பதற்குக் கடற்கரையிலிருந்து 1,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இனையம் பகுதி அதையொட்டிய மீனவ கிராமங்களில் கிட்டத்தட்ட 25,000 மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். நிலம் கையகப்படுத்தும் போது இவர்கள் எங்கே போவார்கள்? இவர்களின் வாழ்வாதாரம் என்னாவது? என்ற கேள்விகள் எழுகின்றன.
பொருளாதார ரீதியில் நன்மையா?
மொத்தம் இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள் இருக்கின்றன. அதில் 3 துறைமுகங்கள் தமிழ்நாட்டில் இருப்பது நமக்குப் பெருமையான விஷயம்தான். 4-வதாக இனையம் துறைமுகமும் வர இருக்கிறது. ஆனால் பொருளாதார வகையில் இந்தத் துறைமுகம் நன்மையை ஏற்படுத்தாதுஎன்கிறார்பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் பொறியாளர் சுந்தர்ராஜன்.  ``தற்போது அமையவிருக்கும் இனையம் துறைமுகத்திற்கு அருகில் மூன்று துறைமுகங்கள் இருக்கின்றன.இனையத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் விழிஞ்சம் சர்வதேச துறைமுகமும் 271 கிலோ மீட்டர் தொலைவில் வல்லர்பாதம் பன்னாட்டுச் சரக்கு பெட்டக மாற்று முனையம் மற்றும் தூத்துக்குடியில் சர்வதேச துறைமுகமும் உள்ளது. மேலும் கொழும்பு துறைமுகமும் அருகே உள்ளது. இப்படி அருகருகே மிகப்பெரிய துறைமுகங்கள் இருக்கையில் நான்காவதாக இந்தத் துறைமுகத்தை அதிக முதலீட்டுத் தொகையில் அமைப்பதால் ஒரு நன்மையும் ஏற்படாது. ஏனெனில் அருகருகே மிகப் பெரிய துறை முகங்கள் இருக்கும் பொழுது கப்பல்கள் வருவது எண்ணிக்கை அளவில் மிக குறையும். இதனால் துறைமுகங் களிக்கிடையே சரக்குகளைக் கையாளு வதில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். இந்த ஏற்றத்தாழ்வு அருகிலுள்ள துறைமுகங்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும்’’ என்கிறார் இவர்.
கொழும்பு துறைமுகத்துடன் போட்டி போடமுடியுமா?
மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் கொழும்புக்கு அதிகம் செல்கின்றன. தென்னிந்தியாவில் உள்ள அனைத்துத் துறைமுகத்திலும் மொத்தம் 30 லட்சம் டன் சரக்குகள்தான் கையாளப்பட்டு வருகிறது. ஆனால் கொழும்பு துறைமுகத்தில் மட்டும் 50 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டு வருகிறது. இதைக் காரணமாக கொண்டுதான் குளச்சல் துறைமுகம் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. ஆனால் கொழும்பு துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்கு விதிக்கப்படும் கட்டணம் மிகக் குறைவு. இதனால் பெரும்பாலும் சரக்குக் கப்பல்கள் கொழும்பை நோக்கிச் செல்ல வாய்ப்பு அதிகம் இருக்கிறது. கட்டணத்தைக் குறைத்தால் மட்டுமே இந்தத் துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவது அதிகமாகும் அது நம்மால் முடியாது. . அதுமட்டுமல்லாமல் சரக்குக் கப்பல்கள் வருவதால் துறைமுகப் பகுதியை அதிகம் ஆழப்படுத்த வேண்டிருக்கும். இதற்கு மிக அதிக அளவில் செலவு ஏற்படும். இவ்வளவு தொகை செலவழித்துக் கொண்டு வரப்படும் இந்தத் திட்டம் பொருளாதார அளவில் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.
 ஏன் உள்ளூர் மக்கள் ஆதரவு இல்லை?
நாங்கள் பல நாட்களாகக் கேட்டுக்கொண்டிருப்பது ஒரு நவீனமான மீன்பிடி துறைமுகம்தான்அரசியல் வாதிகள் அந்த வேண்டுகோளை  சரக்கு துறைமுகம் என மாற்றி  எங்களையும் எங்கள் கிராமத்தையும் அழிக்க நினைக்கிறார்கள். நாங்கள் விடமாட்டோம் போராடுவோம் என்கிறார்கள் உள்ளூர்  மீனவர்கள்

சேது சமுத்திரம் திட்டம் என்னவாயிற்று என யாருக்கும் தெரியவில்லை.மதுரையில் சர்வதேச விமானநிலையம் உருவாக்கும் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. விமான ஓடுபாதை விரிவாக்கத்திற்கு ஆர்ஜிதம் செய்யப்பட்ட 620 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு விமான ஆணையத்திடம் ஒப்படைக்காமல் இழுத்தடிக்கிறது. சென்னை முதல் குமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம் பாதியில் நிற்கிறது. இதனால் புதிய ரயில்களை காணோம். இதுபோன்ற முக்கிய திட்டங்களின் முடக்கத்தால் தென்தமிழக வளர்ச்சியில் தேக்கநிலை நீடித்துக்கொண்டிருக்கும் போது என் இப்படி ஒரு பெரிய திட்டத்தில் பணத்தை வீணடிக்க வேண்டும் என்கிறார்  மத்திய அரசின்  ஒரு  முன்னாள் மூத்த அதிகாரி.


தமிழகத்திற்கு இவ்வளவு பெரிய திட்டத்தைக் கொண்டு வந்த அளவில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நிச்சயமாகப் பாராட்டுக்கள் தெரிவிக்க வேண்டும். ஆனால் அதற்கான இடத்தைத் தேர்வு செய்ததிலும்உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற முயற்சிக்காலும்   மத்திய அரசு அவசரம் காட்டிவிட்டதோ என்று தோன்றுகிறது

(18/09/16) கல்கியில் எழுதியது 










7/9/16

காஷ்மீர் ஏன் எரிகிறது?

 காஷ்மீர்  ஏன் எரிகிறது?




கடந்த ஒரு மாதத்தில்

1018 வன்முறைச் சம்பவங்கள்
1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது
1000க்கும் மேல் துப்பாக்கி சூடு
3500க்கும் மேல் வீரர்கள் படு காயம்
கலவரத்தில் பலியானவர்கள் 70 பேர்
கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள் 410 பேர்
 ________________________________________________________________________________

எரியும் நெருப்புக்கு எண்ணை

காஷ்மீர் போராட்ட தியாகிகளுக்காக நாம் பிரார்த்தனை செய்வோம். பாகிஸ்தானின் ஒரு பகுதியாக காஷ்மீர் உருவாகும்நாளுக்காக நாம் காத்திருப்போம். இன்னும் பல பர்கான்வானிக்கள் இந்தியாவிற்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கையில்இறங்குவார்கள்
-நாவஸ் ஷெரிப்- பாகிஸ்தான் பிரதமர்

__________________________________________________________________________________  காஷ்மீர் எரியவில்லை                            

காஷ்மீரில் தேர்தலில் 61 % மக்கள் வாக்களித்திருக்கின்றனர். இது அவர்களுக்கு ஜனநாயகத்தில் அவர்களுக்கு இருக்கும்நம்பிக்கையைக் காட்டுகிறது. ஒரு சிலரை வைத்து பிவினை வாதிகள் வன்முறையைத் தூண்டுகின்றனர். காஷ்மீர் ஒன்றும்பற்றி எரியவில்லை.
ஷம்ஷேர் சிங் மன்னாஸ்
காஷ்மீர் பாஜக எம்.பி

_________________________________________________________________________________ 

கடந்த இரண்டாண்டுகளாகப் பதற்றமான காஷ்மீர் பகுதியில் இன்று இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது..அதுவே அங்கே தீவிரவாதம் வளர ஒரு களமாகவும் மாறியுள்ளது
காஷ்மீரில் ஹில்புல் முஜாகிதின் இயக்கத்தின் கமாண்டராக இருந்தவர் புர்ஹான் வானி என்ற 22 வயது இளைஞன். இவர்காஷ்மீர் விடுதலை பெறவேண்டும் என்று தனது வலைத்தளம். பேஸ்புக், ட்விட்டர் எல்லாவற்றிலும் போட்டோ, விடீயோஆடியோ எல்லாம் வெளியிட்டு எக்கச்சக்கமான ஃபாலோயர்களை கொண்டு பிரபலமானவர். இவர் தலைமையில் நடந்தபேரணியில் பல இளைஞர்கள் பாகிஸ்தான் கொடியுடன் கலந்து கொண்டபோது. பாதுகாப்பு படையினர் மீது தொடர்ந்துகல்வீச்சு தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். இவரைக் கடந்த மாதம் நடந்த ஒரு என்கவண்ட்டரில் பாதுகாப்பு படையினர்சுட்டுக் கொன்றனர். இதன் விளைவாகச் சற்றும் எதிர்பாராதவிதமாக எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீர் இளைஞர்கள்சாலைகளில் போர் புரியத் தொடங்கினர். கடும் வன்முறை வெடித்து இதுவரை 68 பேர் பலியாகியுள்ளனர். பாதுகாப்புபடைகள் ரப்பர் குண்டுகளை பயன்படுத்துகின்றனர். இது ரத்த காயம் ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதிவேகமாகத்தாக்குவதால் உடல் உறுப்புகள் செயலிழந்து போய்விடும். தாக்குதிலில் முகம், கண்களில் அடிபட்டவர்கள் அதிகம்.


இந்த வன்முறை காரணமாக பள்ளி, கல்லூரிகள்.கடைகள் பெட்ரோல் பங்குகள், வங்கிகள் மூடப்பட்டிருக்கின்றன.இன்டர்னெட், மொபைல் போன் சேவைகள் முடக்கப்பட்டிருக்கின்றன. சுருக்கமாக சொல்லுவதானால் காஷ்மீரில் மக்கள்வாழ்க்கை கடந்த இரண்டு மாதங்களாக ஸ்தம்பித்து நிற்கிறது.
கல்விப் பின்புலம் வாய்ந்த புர்ஹான் வானி காஷ்மீரின் புதிய தலைமுறை போராளிகளின் அடையாளம். புர்ஹான் வானிஸ்கூல் ஹெட்மாஸ்டரின் மகன், பள்ளிப்படிப்பில் நன்றாக விளங்கிய புர்ஹான் வானி தனது 15-வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி அந்தப்பகுதியின் மிகப்பெரிய போராளிக்குழுவுடன் இணைந்தார் வானி மற்றும் அவரது சகோதரரைஅரசுப்படைகள் வீட்டுக்கு வரும் வழியில் நிறுத்தி அடித்து உதைத்து கடுமையாக இழிவுப் படுத்தியதாலேயேதீவிரவாதத்தைத் தனது பாதையாக வானி தேர்ந்தெடுத்ததாக சொல்லியிருந்தார்..
.
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் தனது படங்கள், தான் கண்ட களங்கள் என்று துப்பாக்கியுடன் புகைப்படங்களைவெளியிடத் தொடங்கினார். தனது சக போராளிகள் குழுவுடன் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார். அதாவது தீவிரவாதிஎன்றால் தலைமறைவாக இருக்க வேண்டும் என்ற மரபை மீறியதால் புர்ஹான் வானியை ஒரு ஹீரோவாகப் பின்தொடரும் இளம் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரித்தது. அவரது பதிவுகள் பல்வேறு கணக்குகளிலிருந்து பதிவானதால்அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஆனால் இவரது பதிவுகள், வீடியோக்கள் அவர்பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பட்டுள்ளது. இவரது இறுதிஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் .
 இவரது மரணத்துக்குப்பின் இவர் தியாகியாகஅறிவிக்கப் பட்டு பள்ளிகளில் அவரது வாழ்க்கை நாடகமாக நடிக்கப்படுகிறது.  நினைவு கிரிகெட் மாட்ச்கள் நடைபெறுகின்றன.மரணத்திற்குப் பின் மிகப்பெரிய ஹீரோவாக மதிக்கப்படுகிறார்.
சமூக வலைத்தளங்களில் புர்ஹான் வானியின் காட்டிய வழியால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உருவாகும்தீவிரவாதிகள் எண்ணிக்கைவிட இந்திய பகுதியில் உள்நாட்டிலேயே தீவிரவாதிகள் பலர் உருவாகிவிடுவார்கள் என்றஅச்சம் இப்போது எழுந்திருக்கிறது. இவரது மரணத்திற்குப் பின் பெரிய அளவில் எழுந்திருக்கும் மக்களின் அனுதாப அலைமத்திய அரசுக்கு மிகவும் சவாலாகியிருக்கிறது.
புர்ஹான் வானி என்கவுண்டர் குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ட்வீட் செய்யும் போது, “என்னுடையவார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் - சமூக வலைத்தளம் மூலம் அவர் போராட்டத்துக்கு திரட்டியஉறுப்பினர்களை விட தற்போது தான் புதையுண்ட சுடுகாட்டிலிருந்து போராட்டத்துக்கு ஆட்களைத் திரட்டும் எண்ணிக்கைஅதிகமாகும் புர்ஹானின் திறமையை நாம் பார்க்கத்தான் போகிறோம்
நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து ஜம்மு காஷ்மீரில் பிரிவினை வாதிகள், தேசிய வாதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்.நாங்கள் பாக்கிஸ்தானுடன் சேரவிரும்புகிறோம் என்று சொல்லுபவர்கள் குறைந்தகொண்டுவரும் இந்த நேரத்தில் ஒருபிரிவினை வாதியின் மரணத்தை உயிர்த்தியாகமாக்கி ஒரு அரசியல் தலைவர் கொண்டாட ஆரம்பித்திருப்பது ஆபத்தானஎச்சரிக்கை. என்பதை உணர்ந்த நாட்டின் எல்லா முக்கிய கட்சியினரும் ஒன்று சேர்ந்து நல்ல முடிவை எடுக்கத்தயாராகியிருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
உடனடியாக காஷ்மீர் மக்கள் அமைதியான,இயல்பு வாழ்க்கை அளிப்பது ஒரு சில தீவிரஅமைப்புகளுடன் போரிடுவதை முக்கியமானது.

(இந்த வார கல்கியில் எழுதியது )