19/9/10

எரியும் திரியின் பின்னே..


எரியும் திரியின் பின்னே..


அருப்புகோட்டை நகரின் தெற்கு தெரு. மாலை நேரம். அன்று மின்வெட்டில்லை ஆனாலும் இருட்டு.
பற்ற வைத்துவிட்டு பரபரவென்று நாம் ஓடிவருவதற்குள் சரசரவென்று தங்கப் பொறியாக நகர்நது பலத்த ஒசையுடன் கிளம்பி வானில் ஒளிப்பூவாய் சிதறும் பட்டாசுகளின் திரிகளின் பிறப்பிடம் அது. இருண்டு கிடக்கும் சிமிண்ட் பூசாத செங்கல்சுவர்களும் ஓட்டுகூரையுமாகயிருக்கும் சின்ன சின்ன வீடுகள். ஒருகாலத்தில் நெசாவளார் வீதியாகயிருந்தது, இன்று ஒரு தறி கூட கிடையாது. மிகக்குறுகிய அந்த தெரு முனைகளில் குவியல்களாக திரி நூல்கள். கந்தக வாசனை.. குடும்பம் முழுவதும் குனிந்த தலை நிமிராமல் பிசியாகயிருக்கிறது. தெரியாதவர்கள் அனுமதிக்கபடாத அந்த தெருவில்நுழைந்த நம்மை சந்தேகத்துடன் பார்க்கும் கண்களும் உயரும் புருவங்களும் உடன் வரும் அவர்களின் தலைவர் களின் நண்பரை பார்த்ததும் அமைதியாகின்றன.
மிகமிக ஆபத்தான இந்த பட்டாசு திரி தயாரிக்கும் தொழில், இங்கே 100 வீடுகளில் எந்த அனுமதியுமில்லமல் திருட்டுதனமாக இருட்டில் நடந்துக்கொண்டிருக்கிறது. ஒரு சிறிய நெருப்பு பொறி பட்டால் கூட பெரும் விபத்தாகவிடக்கூடிய அபாயமிருப்பதால் வீடுகளில் சமையல் கிடையாது, பூஜை விளக்கு கூட கிடையாது.. கார்கள் கூட போக முடியாத இந்த தெருக்களில் தீயனைக்கும் வண்டிகள் நுழைவதை நினைத்துகூட பார்க்கமுடியாது.
இந்தியாவின் பட்டாசு நகரமான சிவாசியில் பட்டாசு திரிகள் தயாரிக்கபடுவதில்லை. ஒரு சில பெரிய நிறுவனங்களில் மட்டும் இதற்கு தனி பகுதி வைத்திருக்கிறார்கள். மற்ற ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளுக்கு இங்கிருந்துதான் திரி போகிறது. பொட்டாசியம் நைட்டிரேட், கந்தகம், மற்றும் கரித்தூளில் தோய்த்த கருப்பு நூலும், மெல்லிய பேப்பரும் இவர்களுக்கு வழங்கபடுகிறது. அதை 3 மீட்டர் நீளத்திற்கு வெட்டி டேப்பாக வரும் பேப்பரை அழகாக அதன்மீது சுற்றய பின் ஆண்கள் அதை பெண் தொழிலாளிகளிடம் தருகிறார்கள். அவர் அதை தன் வெற்று தொடையில் திரித்து அளவான திரியாகாக்கி அடுக்கிறார். இந்த வெடி மருந்து பொருட்கள் இப்படி வெற்று உடலில் படுவது ஆபத்து என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அதற்காக பவுடராக அரைத்த கரியை பூசிக்கொள்கிறார்கள். அது இன்னும் எவளவு பெரிய ஆபத்து எனபது அவர்களுக்கு தெரியவில்லை. 1500 திரி தயாரித்தால் கூலி 150 ருபாய்கள். வாரத்திற்கு 800 முதல் 1000வரை ஒரு குடும்பம் சம்பாதிக்கிறது. சீஸன் நேரமாதலால் ஓவர் டைம் வேலை செய்கிறார்கள். சில தெருக்கள் தள்ளியிருக்கும் உறவினர்களுக்கும் வேலை கொடுக்கிறார்கள். ஆண்டுதோறும் பட்டாசு தொழிலில் நிகழும் விபத்துகள் பற்றி கேட்டால் இதுவரை திரி தயாரிப்பில் எதுவும் நடக்கவில்லையே என்கிறார்கள். ஆனால் தாங்கள் யாருக்காக வேலை செய்கிறோம் என்றுகூட தெரியாத இவர்களில் சிலருக்கு இது அனுமதியில்லமல் சட்டவிரோதமாக செய்யபடும்தொழில் என்பது தெரிந்திருக்கிறது. “இங்கு போலீஸ், மற்ற அதிகாரிகள் வரமாட்டார்கள்.எங்கள் தலைவர்கள் பார்த்துகொள்வார்கள்” என்று சொல்லும் இவரகளின் இந்த தொழில் இரண்டு பெரிய கட்சிகளின் உள்ளூர் தலைவர்களின் ஆசியுடன் இயங்குகிறது. தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்கள். தமிழகத்தின் மிக முக்கிய ஓட்டு வங்கிகளில் ஒன்று அதை இழக்க எந்த கட்சியும் தயாரில்லை
பலஆண்டுகளாக பலருக்கு வேலைவாய்ப்பு தரும், இருட்டில் திருட்டுதனமாக நடைபெறும் இந்த தொழிலுக்கு தனியாக எல்லாவித பாதுகாப்பு வசதியுடன் அரசு ஒரு ‘வெடிமருந்து பூங்கா' இதே பகுதியில் நிறுவ முடியதா?




ழு படங்களுடன் பேட்டிகள் வெளியானால் அவர்கள் குடும்பத்திற்கு வேலை போய்விடும் என்பதால் படங்கள் எடுக்க அனுமதிக்க படவில்லை.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள்