8/1/18

குடகு மலைக்காற்றினிலே 5

குடகு மலைக்காற்றினிலே   5

அந்தச் சின்னக் கிராமத்துக்கு வெளியே இருக்கிறது அந்தக் கோவில். கிராமியச் சூழலிலிருந்து முற்றிலும் மாறுபட்டுப் படு சுத்தமான பசும் புல்வெளிக்கிடையே அழைத்துச் செல்லும் பாதையும் தோட்டமும் அது தொல்பொருள்த்துறையால் பரமரிக்கப்படுவதைச் சொல்லுகிறது. நீண்ட சுற்று சுவர்களுடனும் மிகச்சிறிய வாயிலுடனும் இருக்கும் அந்தச் சென்ன கேசவர் கோவில் முதல் பார்வையில் நம்மைக் கவரவில்லை. ஏதோ இன்னுமொரு பழைய கோவில் என நினைத்துக்கொண்டு நுழைகிறோம்.




உள்ளே நிழைந்ததும் பளீரென்று கோவிலின் அழகும், பிரமாண்டமும் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. பேலூர் ஹளபேடு கோவில்களின் பாணி. வெளிச்சுவர் முழுவதும் சிற்பங்கள், சிற்பங்கள், சிற்பங்கள் முதலில் எங்களைப்பாருங்கள் என்று அழைக்கிறது.

சோமநாத்பூர் மெடிக்கேரியிலிருந்து 150 கீமி தொலைவில் உள்ள ஒரு சின்னக் கிராமம். அங்குதான் ஹொய்சளர்களால் கட்டபட்ட கடைசிக்கோவில் இருக்கிறது. கட்டாயம் பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொன்ன நண்பரை வாழ்த்துகிறோம்.

கலைநயம், அழகு, சிற்பகலைஞர்களின் அற்புதமான திறன் என அடிக்கொண்டே போகலம். அத்தனை அழகு, அத்தனையும் அழகு. வெளிச்சுவர்கள் மட்டுமில்லை கோபுரத்தின் மாடங்கள், பிரஹாரம் அனைத்துமே மிக அழகாக உருவாக்கபட்டிருக்கிறது.
. ஒரு ஆறு முனை நட்சத்திரத்தின் வடிவில் எழுப்பட்டிருக்கும் இந்தக்கோவிலின் மூன்று கோபரங்களும் அறுபட்டைக்கோணங்களில் எழுந்த நிற்கிறது. கோவிலின் வெளிப்புறமும் கோபுரங்களும் பல சிறிய சிற்பங்களால நிரப்பட்டிருக்கிறது. ஒரு சதுர அங்குலம் கூட வெறும் கல்லாக இல்லை. ராமயணம், பாரதம், பாகவதம் எனப்பலகதைகள்.சொல்லுகின்றன


                                வெளிச்சுவற்றிலிருந்து சற்றே இருட்டாகஇருக்கும் அந்தக் கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் நம்மை ஆச்சரியத்துடன் நிறுத்துகிறது அந்த மண்டபத்திலிருக்கும் அழகான தூண்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில் ஆனால் ஒரே உயரம் சுற்றளவில். ஒன்று இரும்புத்துதூண் போல வழவழவென்று, வட்டத்தட்டுக்களை அடுக்கியது போலஒன்று பின்னப்பட்ட ஒலைக்கூட போல ஒன்று. என்றும் ஒவ்வொன்றும் அசத்துகிறது. மரங்களை மிஷினில் கடைசல் வேலை செய்து உண்டாக்கும் வளைவுகளையும்
நெளிவுகளையும் கல்லில் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு சில தூண்கள் முழுவதும் இரும்பில் வார்க்க்கப்பட்ட வளையங்கள்போல, இடைவெளிகளுடன் பின்னப் பட்ட மூங்கில் கூடைகள போல நுணுக்கமாகச் செதுக்கபட்டிருக்கிறது. அந்த வளைவுகளில் விரல்களைக் கூட விட்டுப்பார்க்க முடிகிறது.


வெளியே கூம்பாகத் தெரியும் கோபுர விதானங்களில் உள்ளே ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள். (படங்களைப் பாருங்கள்) அத்தனை சிற்பங்கள். வாழைப்பூ ஒன்று ஒரு இதழ் பிரிந்த நிலையில். திராட்சைகொத்து ஒன்று இலைகளூம் பூவூமாகக் கொடி ஒன்று என ஒவ்வோரு உள் விதானத்திலிருந்தும் தொங்குகிறது. அதன்சுற்று புறம் முழுவதும் சின்ன சின்ன சிற்பங்கள் கழுத்து வலிப்பதால் ஒரே சமயத்தில் நீண்ட நேரம் தொடர்ந்து உற்று பார்க்க முடியவில்லை.

மூன்று கர்பஹகிரகங்கள் கேசவன், ஜனார்த்தனன். வேணுகோபாலன் என்று முன்று சன்னதிகள் வேணுகோபலனின் சிலையில் அழகு கொஞ்சுகிறது
. கேசவன் சன்னதியில் சிலை இல்லை. உலகின் எந்த  மியூசியத்தில் இருக்குமோ? சிலைகடத்தல் மன்னன் கபூரைக்கேட்டால் சொல்லுவானோ என்னவோ? ஜனார்த்தனும் கம்பீரமாகயிருக்கிறார்.

உற்றுகவனித்தால் மட்டுமே தெரியக்கூடிய அளவிற்கு தெய்வச்சிலைகள் பின்னப்படுத்தபட்டிருக்கிறது மூக்கின் நுனி, ஆசிர்வதிக்கும் கையின் விரல்கள், பாதங்களில் விரல்கள் போன்றவைகள். இவைகள் முஸ்லீம் படையெடுப்பின்போது செய்யபட்டிருக்கிறது. பின்னமான சிலைகளை இந்துக்குள் வணங்கமாட்டார்கள் என்பதால் இப்படிச்செய்வதின் மூலம் வழிபாட்டை, கோவில் பூஜைகளை நிறுத்திவிட்டார்கள் என்கிறார் கைடு.
இந்தகோவிலின் காலம் 13ம் நூறாண்டு என்கிறது வரலாறு. அதற்கு முன்னரே சாளுக்கியர்கள் கற்சிலைப்படைப்புகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார்கள். இதிலுள்ளவைகளை கச்சிதமாக் டிசைன் செய்து கல்லில் வடித்தி த்ருக்கிறார்கள். இந்த நுணுக்கமான வேலைகளுக்கு லேத் போன்ற இயந்திரங்கள் பயனபடுத்தியிருப்பார்களா? அப்படியானால் அப்போதே       tool engineering அறிந்திருப்பார்களா? மெஷின்கள் டூல்கள் பற்றி எழதும் ஜவர்லால் போன்றவர்கள் சொல்ல வேண்டும் .  இத்தனைத்  தூண்கள்  உருவாதற்குள் நிறையச் சேதமாகியிருக்குமோ எனப் பல கேள்விகள் அலைஅலையாக எழுந்தன

முழுவதும் அழகான தூண்களால் நிறைந்த நீண்ட வெளிப்பிராகாரம். அதில் சன்னதிக்கான மண்டபங்கள். பல காலியாக இருக்கிறது. கருப்புநிற பளிங்குக்கல்லில் மிக ப்பெரிய கல்வெட்டு நிற்கபதைக் கவனிக்கிறோம். அது முழுவதும் கன்னட ஜிலேபி எழுத்தில் இருப்பதால் ஒருரைப்படிக்கச்சொல்லி கேட்கிறோம். (பேசினால் புரிந்து கொள்ளும் அளவிற்குதான் நமது கன்னடஞானம்.)

மூன்றாம் நரசிம்மன் என்ற ஹொய்சள மன்னரின் தண்டநயாகா (தலைமைத்தளபதி) சோமா தன்கிராமத்தில் ஒரு கிருஷ்ணன் கோவில் கட்ட அனுமதி கேட்டபோது மன்னர் அதைச் சிறப்பாகசெய்ய பணமும் இந்த கிராமத்தையும் கொடுத்ததாகவும் 1268ல் கட்டி முடிக்கப்பட்டதாகவும் (அதற்கு 200 ஆண்டுகளூக்கு முன்னரே ஹொய்சளர் காலம் துவங்கிவிட்டது) சொல்லபட்டிருக்கும் அந்தக்கல்லில் சொல்லபட்டிருக்கும் ஆச்சரியமான விஷயம். இந்தக்கோவில் உள்ள சிற்பங்களைச் செதுக்கிய சிற்பிகளீன் பெயர்கள். (தமிழகத்தில் ஒரு கோவிலில் கூட இதைப்பார்க்க முடியாது) கோவிலின் வெளிச்சுவரில் இருக்கும் 194 பெரிய சிற்பங்களில் 40 யைச் செய்தவர் மல்லித்தம்மா, மற்றவைகளைச் செய்தவர்கள் பல்லையா, செளடையா, காமய்யா என்று பல பெயர்கள். இவர்கள் கல்லில் கலைவண்ணத்தை மட்டும்காணவில்லஇ கடவுளையே கண்டிருக்கிறார்கள்.


வெளியே வரும் நம்மை ஒரு பெரிய ஆலமரமும் அதைசுற்றியிருக்கும் வட்டவடிவதிண்னையும். சுகமான காற்றில் சற்று உட்காரச்சொல்லுகிறது.
அந்த மரத்தில் தொங்கும் போஸ்ட் பாக்ஸில் இந்த பெட்டியில் போடும் தபால்களில் மட்டும் இந்த கோவிலின் படத்துடன் சரித்திரசின்னம் என முத்திரையிடப்படும் என எழுதியிருந்தது. பிக்கசர் போஸ்ட் கார்டு அல்லது கவர் தருவார்களா காவலளிகளைக் கேட்டபோது அது 6 கீமியிருக்கும் போஸ்ட் ஆபிஸில் தான் கிடைக்கும் என்றார்கள்.
“ நாலு டயர்கள் வாங்கினால் கார் இலவசம். ஆனால் டயர்கள் விற்பனை செயவதில்லை” என்ற ஜோக் தான் நினைவிற்கு வந்தது. சென்னைக்கு போனவுடன் தொல்பொருள் துறைக்குக் கடிதம் எழுத வேண்டும் எனக் குறித்துக்கொண்டேன்.

அடுத்த முறை மைசூர் சென்றால் இந்தக் கலைப்பொக்கிஷத்தை மறக்காமல் போய்ப் பார்த்து வாருங்கள் மைசூரிலிருந்து 38 கீமிதான்
.
















4/1/18

குடகு மலைக் காற்றினிலே 4


மலைச்சரிவில் ஒரு காபி தோட்டத்துக்கு நடுவே அமைக்கப்படிருக்கும் பாதையின் வழியே 1 கீமி நடக்க வேண்டும். பாதுகாப்பான பாதையில் நாம் போய்க்கொண்டிருந்தாலும் இருபுறமும் உயர்ந்த மரங்களூம் பசுமையான செடிகளும், இருப்பது ஒரு காடு எனபதைச்சொல்லுகிறது. காபி பழங்கள் பழுக்கத்தொடங்கி விட்டதால் ஒரு வினோதமான மணம். தாக்குகிறது. சற்று அருகில் நீர் வீழ்ச்சியின் சத்தம், நம்மை ஈர்க்கிறது. நெருங்கியபோது ஒரு அழகான அருவி. பளிரென்ற வெள்ளியாக நீர் பாய்ந்து விழுகிறது. சுற்றிலும் அருவியின் நடுவிலும் பசுமை. படர்ந்திருக்கிறது. பார்க்க ரம்மியமாக இருக்கிறது. பருவ மழை தொடங்கிவிட்டதால் பாறைகள் முழுவதையும் மறைத்து நீர் தாரையாகக் கொட்டிக்கொண்டிருக்கிறது. இதமான வானிலையும் இயற்கை சூழலும் நேரத்தை மறக்கச்செய்கிறது. நெருங்கும்போது சாரல் நீர்முத்துக்களைத் நம் மீது தூவுகிறது. எவருக்கும் குளிக்க அனுமதியில்லை


.
நல்ல வேளை இல்லாவிட்டால் நமது குற்றாலம் போல் அடுத்தவர் பூசிய எண்ணையை நாம் இலவசமாக வாங்கி வர வேண்டியிருக்கும். தமிழகத்தில் மட்டும் தான் இப்படி அருவிகளில் குளிக்க முடியும் என நினைக்கிறேன். இந்தியாவின் பல பகுதிகளிலும் உலகின் சில நாடுகளிலும் அருவி என்பது பார்த்து ரசிக்க மட்டும்தான்.
இந்த அருவி கூட அரைநிமிட நிற்குமோ என்னவோ, ஆனால் செல்பி பிரியர்கள் கூட்டம் அலை அலையாக அதன் முன் வந்துகொண்டேயிருக்கிறது. அருவி 70 அல்லது 80 அடி உயரமிருக்கும். பக்கவாட்டில், பாதுகாப்பான தொலைவிலிருந்து பார்க்க வசதி செய்திருக்கிறார்கள். நேரடியாகப்பார்க்கும் ஒரு வசதியுடன் இருந்த தொங்கு பாலம் மிகவும் வீக் ஆகிவிட்டதால் மூடப்பட்டு இப்போது அதுவும் ஒரு காட்சிப்பொருளாக நிற்கிறது,

இதி அபி ஃபால்ஸ் என அழைக்கிறார்கள். யார் இந்த அபி எனத் தெரியவில்லை. மெடிக்கேரியிலிருந்து 8 கீமி தொலைவில் இருக்கிறது. குறுகிய பாதை என்பதால் கார்களுக்கு மட்டுமே அனுமதி. பஸ்ஸில் வருபவர்கள் 1 கீமி நடக்க வேண்டும் பல ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயேர் ஒருவரிடமிருந்து இந்த இடத்தை விலைக்கு வாங்கிய உள்ளுர்காரர் காபி தோட்டத்துக்காகச் சீரமைத்த போது “கண்டுபிடிக்கபட்டதாம்” இந்த அருவி. இப்போது அவரிடமிருந்து வன வாரியம் இடத்தைப்பெற்று இதை நிர்வகிக்கிறது. இந்த அருவி, காவிரியின் ஒரு சின்ன உப நதியிலிருந்து இங்கு விழுந்து கிழே மீண்டும் காவிரியில் இணைகிறது. என்றார்கள்.


நாம் அடுத்தப் போக வேண்டிய யானை கேம்ப்க்கு செல்லுமிடத்திலிருக்கும் கடைசி போட் 12 மணிக்கு என டிரைவர் நினைவு படுத்துகிறார். அருகில் இருப்பதால் நாளை மாலை நேரத்தில் மீண்டும் ஒரு முறை பார்க்க வருகிறோம் என்று அருவியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறோம்.
மெடிக்கேரியிலிருந்து 37 km தொலைவில் இருக்கிறது துபாரே(Dubarae) யானை முகாம். வனத்துறையினர் இங்கு யானைகளை வளர்க்கிறார்கள். காடுக:ளில் மரங்களைத் தூக்கை வரபழக்கப்படுத்தவும், மைசூர் தசரா ஊர்வலத்துக்குச் செல்லவும்பயிற்சி கொடுப்பதற்காக ஏற்படுத்தப் பட்ட கேம்ப் இது. இப்போது காடுகளில் யானைகளை வேலி வாங்குவது தடை செய்யப்ட்டுவிட்டதாலும்,  மைசூர் தசரா முன் போல ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவதில்லையாதலாலும் யானைகளை என்ன செய்வது தெரியாமல் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். கர்நாடக அர்சுக்கு நிஜமாகவே இவை ஒயிட் எலிபென்ட்கள் தான். இப்பபோது மனிதர்களுடன் பழகச்சொல்லிக் கொடுக்கிறார்கள்,. பழக்கபடுத்த பட்ட யானைகளையும் குட்டிகளையும் கோவில்களுக்கி விற்பனை செய்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதா குருவயூர் கோவிலுக்குக் கொடுத்த யானை கூட இங்கிருந்து தான் என்பது தானாகக் காதில் விழுந்த தகவல்.

    






காவிரி இரு பிரிவாகப் பிரிந்து ஓடும் இடத்தில் நடுவில் இருக்கும் ஒரு தீவு மாதிரியான இடத்திலிருப்பதால் படகில் போக வேண்டும். தூரம் அதிகம் இல்லை ஒடும் காவிரிநதிக்கிடையில் மரங்களும் பசுமை திட்டுக்களும் இனிய காட்சியாக இருக்கிறது, படகு சேருமிடத்தில் கேம்ப்பில் இருக்கும் யானைகள் குளிக்க வருகின்றன. ஒவ்வொரு யானைக்கும் 3 பேர் டீம். அவர்கள் மஹாரஜாக்கள் போல அதன் மீது உட்கார்ந்து வருகிறார்கள். நீரில் அவர்கள் சொல்வது போல எல்லாம் திரும்பிக் காட்டி தேய்த்துவிடும் சுகத்தை அனுபவித்து குளிக்கிறது யானைகள். பலர் பார்க்கிறார்களே என்ற வெட்கமே தும் இல்லாமல் சந்தோஷமாகக் குளிக்கின்றன. நாம் அருகில் சென்று பார்க்கலாம் பாகன் அனுமத்திதால் யானைக்குத் தேய்த்துக்கூட விடலாம். ஒவ்வொரு யானைக்கும், நீ குளித்தது போதும் என்று அதன் பாகன் சொன்னதும் எழுந்து நடக்க ஆரம்பிக்கிறது. நான் நிறைய படங்கள் எடுத்துக்கொண்டிருந்ததால் சந்தோஷமோ அல்லது கோபமோ தெரியவில்லை அருகிலிருந்த என மனைவிமீது துதிக்கையிலிருந்த நீரைப் பீச்சி குளிபாட்டி விட்டது. ஒரு யானை. நீங்கள் மிகவும் லக்கி என்றார்கள் அங்குள்ளவர்கள். கேமிரா தப்பியது தான் லக்கி என நான் நினைத்துக்கொண்டேன்

குளித்தபின் இந்த யானைகள் சென்று நிற்கும் இடத்திலிருக்கும் 3 அடி உயர சுவர்தான் அவைகளுக்கும் நமக்கும் இருக்கும் ”அரண்” சில இடங்களில் அவைகல் அரை வினாடியில் தூக்கி ஏறியக்கூடிய மரக் கம்புகள் தான் வேலி. யானைகளின் அருகில் தந்தங்களை தொட்டுபார்க்கலாம். ஒரு ஒற்றை கொம்பனை மிகஅருகில் பார்த்தோம். வயதாகிவிட்டதால் அதற்குப் பார்வை மங்கி வருவதாக அதன் காப்பாளர் சொன்னார். யானைகளுக்குக் கேட்ராக்ட் ஆப்ரேஷன் செய்வார்களா? யானை டாக்டர் எழுதியிருக்கும் ஜெயமோகனிடம் கேட்க வேண்டும்.
12 மணிக்கு மேல் அங்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை. சாப்பாட்டுக்குபின் யானைகள் காட்டுக்குள் போய்விடுமாம். இனி நாளைகாலைதான். மழையிருந்தால் குளியல் கிடையாது. அந்தக் காட்டுக்குள் ஒரு ஃபாரஸ்ட் லாட்ஜ் இருப்பதாகவும் வெளிநாட்டு பயணிகளூம், ஆராய்ச்சியாளர்களூம் தங்குகிறார்கள் என்று ஒரு வெளிநாட்டு தம்பதியுடன் வந்திருந்த கைடு சொன்னார். அவர்களை லாட்ஜுக்கு யானைமீது அழைத்துச் செல்வார்களாம்
.
திரும்பும்போது நதியில் நிறைய ராப்ட் போட்களை- பலூன்போல் காற்றடைத்து செல்லும் படகுகள்- பார்த்தோம். காவேரி சீறிப்பாயும் காலத்தில் இதில் பயணத்து அருகிலிருக்கு இடத்துக்கு நீரோட்டத்துடன் செல்வார்களாம். இந்தத் திரில் பயணத்துக்குக் கட்டணம். கைடு உண்டாம். அங்கிருந்து நதியை எதிர்த்து வரமுடியாத்தால் படகுகளும், பயணிகளும் லாரியில் இங்கு திரும்புவார்களாம் அடுத்தமுறை திட்டமிட்டு வந்து இதைச் செய்து பார்க்க வேண்டும்.

30/12/17

கண்ணுறாங்காக் காவல் வெளீயீடு திருச்சி 24/12/2017


 தமிழ் படைப்பிலக்கியவாதிகளில் மொழிபெயர்ப்பாளனுக்கு பொதுவெளியில் அங்கீகாரம் கிடைப்பது என்பது அரிதான விஷயமாகயிருக்கும் இன்றைய காலகட்டத்தில் திரு ப. சிதம்பரம் அவர்களின் ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழாக்கம் செய்த எழுத்தாளர்களை அவரது “எழுத்து” இயக்கம் சார்பில் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழா மேடையில் அவரே கெளரவித்தது தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்குக் கிடைத்த கெளரவம்.

.நான் பல ஆண்டுகளாகக் கண்டுபிரமித்துப் போயிருக்கும் ஆளுமைகளில் முக்கியமானவர் திரு. ப சிதம்பரம். அவரது உரைகளில் ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி அது பாராளுமன்றத்தின் விவாதங்களாகயிருக்கட்டும், இலக்கிய சிந்தனை, அல்லது கம்பன் கழக விழாவாக இருக்கட்டும். தங்கு தடையின்றி அழகான, தேர்ந்தெடுத்த சொற்களில் தனது ஆழமான அழுத்ததமான கருத்தைத் தெளிவான குரலில் சொல்லுவார்.அவரது ஆங்கில நூலைத் தமிழாக்கம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தவுடன் மிக மகிழ்ந்து போனேன். காரணம் அவரது ஆங்கிலத்தைபோலவே அரசியல் பார்வைவைகளையும் ரசித்துக்கொண்டிருப்பவன் நான். (சில சமயங்களில் ஏற்காவிட்டாலும் கூட).அரசியல், சட்டம், பொருளாதாரம் நன்கு அறிந்த திரு சிதம்பரம் அவர்களின் ஆங்கிலம் எளிதானது. ஆனால் சொல்லும் கருத்தின் வலிமையை, ஆளுமையை வெளிப்படுத்த அவர் பயன் படுத்தியிருக்கும் சில ஆங்கிலச்சொற்களை எளிதில் தமிழ்படுத்த முடியாது.
ஒவ்வொரு மொழியிலும் ஒரு குறிபிட்ட வார்த்தை பல அர்த்தங்களைக் கொண்டிருக்கும். அதை மொழிமாற்றம் செய்வது சவாலான சிக்கலான ஒரு பணி ஒரு சிறிய தவறு கூட வீபரீத விபத்தாக மாறிவிடக்கூடிய ஆபத்துண்டு . இதுபற்றி நானும் என்னுடன் அவருடைய மற்றொரு புத்தகத்தை இதே சமயத்தில் மொழியாக்கம் செய்த நண்பர் வெங்கிடேஷும் அடிக்கடி விவாதித்திருக்கிறோம்இந்தப்பணியை அவர் எனக்குத் தரும் முன், அவரே தேர்ந்தெடுத்த இரண்டு அத்தியாங்களை மொழியாக்கம் செய்து அனுப்பச்சொன்னார். அது ரோஹித் சக்ரவர்த்தி வெமூலா, என்ற தலித் இளைஞன் தற்கொலை தொடர்பாக எழுந்த பிரச்னை. உணர்ச்சியின் கொந்தளிப்பாகக் கடுமையான ஆங்கில வார்த்தைகளில் அரசைச் சாடிய கட்டுரை.
என்னுடைய மொழியறிவு, மொழிசார் பண்பாடுகுறித்த புரிதல், படைப்பின் தொனி, படைப்பு மொழியின் சிக்கல் போன்றவற்றில் என் உள் வாங்கும் திறனுக்கான சோதனை அது எனப் புரிந்துகொண்டேன். கஷ்டமான கணக்கைக்கொடுத்து மாணவனைச் சோதிக்கும் ஒர் ஆசிரியரை அதில் நான் பார்த்தேன்.சவாலான அந்தக் கட்டுரயை படைப்பின் தொனி மாறாமல், தமிழ் மொழியின் மரபுகளுக்கேற்ப மொழியாக்கம் செய்து அனுப்பினேன். தலைப்பையும் தமிழ் மரபிற்கேற்ப மாற்றியிருந்தேன். விமானப் பயணம் ஒன்றில் அதைப்படித்துவிட்டு நன்றாக வந்திருக்கிறது பணியைத்தொடருங்கள் என்று செய்தி அனுப்பினார். இது அவரது தமிழ் மொழி ஆளூமையையும் ஒரு படைப்பாளியின் உழைப்பை பாராட்டும் பண்பையும் காட்டுகிறது.


மூல நூலின் ஆசிரியர் தமிழ் அறிந்தவர் மட்டுமில்லை, எழுத்தாளரும் கூட என்பதினால் பணி இன்னும் சவாலானது என்பதை உணர்ந்து செய்த 6 மாத உழைப்பு அரங்கத்தில் அங்கீகரிக்கபட்டதில் மகிழ்ச்சி
புத்தக வெளியீட்டில் விழாவில் பங்கேற்ற கனையாழி ஆசிரியர் முனைவர் ராஜேந்திரன், திருவைரமுத்து. திரு ப.சிதம்பரம் அனைவரும் மொழிபெயர்ப்பைப் மிகப் பாராட்டினார்கள். திரு ப. சிதம்பரம் சொன்னதை எங்களால் வாழ்க்கையில் மறக்கமுடியாதது. “நானே தமிழில் எழுதியிருந்தால் இத்தனை அழகாகச் செய்திருக்க மாட்டேன்”
இந்தப் மொழியாக்கப் பணியில் நான் பார்த்து வியந்த விஷயம் அவர் பல இடங்களில் பிரச்சனைகளை ஆக்பூர்வமான விமர்சனத்துடன் குறிப்பிட்ட தீர்வும் சொல்லுகிறார். ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்பற்றிய கட்டுரையில் திரு. சிதம்பரம். ஐக்கிய முன்னணி அரசில் கருத்து ஒற்றுமை யில்லாததால் தன்னால் அந்தச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய முடியவில்லை என்பதை நேர்மையாக ஒப்புகொள்கிறார். இதன் மூலம் அவர் எந்த அரசியல் ஆதாயத்தையும் அடைந்துவிடவில்லை. அரசியல் வாதிகளின் நேர்மையைப் பற்றி விமர்சிக்கப்படும் இன்றைய கால கட்டத்தில் இவரது துணிவு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது துணிவு என்பது முன்னெடுப்பது மட்டுமில்லை. முடியாதவற்றின் பொறுப்பை ஏற்பதும் தான் என்பதைப் புரிய வைக்கிறார்.
இந்த விழாவிற்கு முக்கிய காரணம் இந்தப் புத்தகத்தை அழகாக வடிவமைத்து வெளியிட்டிருக்கும் பதிப்பாளர் திரு சொக்கலிங்கம். அவர் எங்களைப் போன்ற எழுத்தாளர்களின் எழுத்தை மட்டுமின்றி அவர்களது உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவர். அவரது கவிதா வாயிலாக எனது இந்த எழுத்துக்கள் வெளியானதைப் பெருமையாகக் கருதுகிறேன்.புத்தகம் இப்போது கவிதாவிலும், கண்காட்சியிலும் கிடைக்கும்

22/12/17

குடகு மலைக் காற்றினிலே 3


காலையில் துயிலெழுப்பியது  தொலைவில் கேட்ட ஒரு  தெளிவில்லாத பாட்டு. “குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா”  என்ற பாடல் நினைவில் வர பால்கனிக்கு வந்து  எதிரில் தெரியும் பனி விலகிக்கொண்டிருக்கும்   மலைச்சரிவைப் பார்த்துக்கொண்டிருந்தபோது நெருங்கி வந்து கொண்டிருந்த அந்தப்  பாட்டு ஒரு கன்னடப் பாடல் எனப்புரிந்தது. அவ்வப்போது நின்று நின்று கேட்டது.  சிறிய அந்த மலைச் சாலையில் ஊர்ந்து வரும் டிராக்டர். அதன் என்ஞின்  மீது ஒரு ஸ்பீக்கர். அது குப்பை சேகரிக்கும் வண்டி. நம் நகரை சுத்தமாக வைத்துக்கொள்வோம் என்ற பாடல் அதன் வருகையின் அடையாளம். விசில், மணி எல்லாம் கிடையாது,  டிராக்டரைப்போலவே அந்த டிரைவரும் உதவியாளரும் பளிச்சென்றிருக்கிறார்கள்.பாடல் நின்றவுடன் அருகிலிருந்த விட்டினர் நிறைய குழந்தைகள் “ குட் மார்னிங் சொல்லி    தங்கள் குப்பை கூடைகளைத் தருகிறார்கள். சேகரித்தப் பின்னர்  பாடல் ஒலிக்க வண்டி பயணத்தைத் தொடர்கிறது. நகரிலுள்ள CLEAN GREEN  என்ற அமைப்பை கடந்த4 ஆண்டுகளாக இதைச்செய்து வருகிறதாம். நகரின் பல இடங்களில் இந்த பெயரில்  குப்பைகளை சேகரிக்கும் பைகள் தொங்குகின்றன. நகரில் பிளாஸ்டிக் கவர்களுக்குத் தடை..

 திட்டமிட்டபடி  காபி தோட்டத்தை கண்ன்டுபிடித்துப்  போகும் வழியில் பார்த்த மாறுதலான  drink and drive என்ற போர்ட்  நிறுத்தியது.  சுய உதவிக்குழு  நடத்தும் ஒரு சின்ன காபிஸ்டால், .வரவேற்ற பெண்மணி அப்போதுதான் அரைத்த காபிபொடியிலிருந்து தயாரித்த கொடுத்த அருமையான காபியை விட ஆச்சரியம் அவர் சொன்ன செய்திகள்..   அந்த கடை யிருக்கும் இடத்தின் பின்னே இருக்கும் சின்ன காபி தோட்டம் அவர் குடும்பத்தினுடையது.  அதில் பணி செய்யும்   தொழிலாளிப் பெண்களுக்கு   உதவ அவர்களுடனும்  தன் நண்பர்களுடன்  இந்த சுய உதவிக்குழுவைத்  துவக்கியதாகவும் குழுவின் திட்டப்படி வாரத்தில் 2 நாள் இங்கு விற்பனையைக்கவனிப்பதாகவும் சொன்னார். ஸ்டேட் பேங்க் கடன் வழங்கியிருக்கிறது. காபி போர்ட் வறுத்து அரைக்கும் இயந்திரத்தை  இலவசமாக வழங்கியிருக்கிறது. என்றார். இந்த குழுவின் சிறப்பானபணிகளுக்காக பரிசுகள் வாங்கியிருப்பதைச் சொல்லும் படங்களை பெருமை பொங்க காட்டினார்


காபி தோட்டத்தின் நுனியில் அங்கு விளைந்து காய்ந்த  புதிதாக அரைத்து தயாரித்த காபி  20 ரூபாய். 
“குழந்தைகள் வளர்ந்து வெளிநாட்டில் இருக்கிறார்கள். நானும் கணவரும் மட்டும் இந்த காபிதோட்ட்த்தைப்பார்த்துகொண்டிருக்கிறோம் நிறைய நேரமிருப்பதால் இந்தப் பணியையும் செய்கிறேன். எங்கள் காபியை வாங்கிம்காபி டே போன்றவர்கள் ஒரு கப் 150க்கு விற்கும்போது நாங்கள் ஏன் செய்யக்கூடாது எனத்தோன்றிற்று. மேலும்  உங்களைப்போன்றவர்களை  அடிக்கடி சந்திப்பதும் மகிழ்ச்சியாகயிருக்கிறது” என்கிறார். இவரும் பல கூர்க் குடும்ப்ப்  பெண்களைப்போல் வீட்டிலேயே ஒயின் தயாரிக்கும்  home made wineல்  எக்ஸ்பர்ட்டாம்.  இங்கு கிடைக்கும் பல வகைப் பழங்களை ஜூஸ் எடுத்து 45 நாள் திறக்காமல் வைத்திருந்தால் அது சற்று புளித்து இயற்கையாகவே உருவாகும் 2% ஆல்காலாகிறது. அதை ஹோம் மேட் ஒயின் என்கிறார்கள்.  ருசித்துப்பார்க்கச் சொன்னார். ஒயின்  என்ற பேரே நமக்கு  அலர்ஜி என்பது அவருக்குத் தெரியாது. பார்ட்டிகளில் பெண்களூம் குழந்தைகளூம் அருந்துவார்களாம். 
ஒருகிலோ உள்நாட்டில் 8000த்துக்கும் வெளிநாட்டில் 22000 ரூபாய்க்கு விற்பதாகச் சொல்லப்படும் காபி தோட்டத்தைப் பார்க்க விரும்பி போய்க்கொண்டிருப்பதை கேட்டவுடன் அவர். கட்கடவெனச் சிரித்தார்.  அது ஒருவிசேஷ பயிர் இல்லை சார். அந்த இடத்திலிருக்கும் ஒரு வகைப் பூனைகள் காபிபழத்தின் சதையை சாப்பிட்டு  கொட்டைக:ளை துப்பிவிடுகிறது. அதைப் பொறுக்கி  அது எதோ மிக சுவையானதாக இருப்பதாக சொல்லி லண்டனிலிருக்கும் ஒரு கம்பெனி மார்க்கெட் செய்கிறது. நல்ல விலை கொடுப்பதாகச் சொல்லுகிறார்கள் எனக்கு நம்பிக்கையில்லை. விலை அதிகமில்லாவிட்டாலும் எங்கள் காபிபயிர்களை நாங்கள் குழந்தைகளைப் போல பார்த்துகொள்கிறோம். அதையே நீங்கள் வாங்கலாம் என்றார். . 
நாம் பார்க்கவிரும்பும் காபி தோட்டத்தைப் பற்றி இந்த த்தகவலைக் கேட்டதும் சே என்றாகிவிட்டது. 
ஒரு ஏலக்காய் எஸ்டேட்டை பார்த்தால் என்ன என்று தோன்றியது. குடகு மலைப்பகுதியில் தான் ஆராய்ச்சி மையம் இருப்பது நினைவுக்கு வந்த்து. அதை விசாரித்து போகமுடிவு செய்தோம். மத்திய அரசு ஆராய்ச்சி நிலையங்கள் என்றால் இஸ்ரோ ரேஞ்சுக்கு  பாதுகாப்பு பந்தா இருக்குமென்ற எண்ணத்துடன் போனவர்களுக்கு அங்கு ஆச்சரியம் காத்திருந்த்து. நிலை இயக்குனர் DR.AnkeGowda  நம் ஆர்வத்தைப் பாராட்டி வரவேற்றார். மனுஷர் பயிர் ஆராய்ச்சியில் 2 டாக்டர் பட்டம் வாங்கியவர். புதிய கண்டுபிடிப்புக்ளூக்காக விருதுகள் பெற்றவர்.  இந்த மையம் இபோது வெறும் ஏலக்காய் மட்டுமில்லாமல் பலவிதமான  ஸ்பைஸ்களையும் பற்றி ஆராயும் அகில இந்திய நிறுவனம்.. இங்கு  6 இளம் வேளான் விஞ்ஞானிகள் தங்கள் டாக்டர்பட்டத்திற்கு பின் ஆராய்சியைச் செய்கிறார்கள் அன்புடன் தோட்டம் முழுவதும் பார்க்க நமக்கு  விளக்கிசொல்ல ஒரு உதவி ஆராய்ச்சியாளாரையே அனுப்பினார்
.   ஏலக்காய் செடி மஞ்சள் செடி போலிருக்கிறது. அதன் வேரிலிருந்து சரம் சரமாகத் தொங்குகிறது இந்த காய்.. அதில் நன்கு விளைந்ததை மட்டுமே பறிக்க வேண்டும். கவனமாகப் பறிக்காவிட்டால் விணாகிவிடும் என்பதால் எக்ஸ்பர்ட் பெண்கள் மட்டுமே இந்த வேலைக்கு.. கூலி மிக அதிகமாம்.. ஏலக்காய் விலை அதிகமாக இருக்க  இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். நம் பாயஸத்தில் மணக்கும் இது காயாக இருக்கும் போது வாசனையே இல்லாதது ஒரு ஆச்சரியம். பறித்தவைகளை நிழலில் உலர்த்தி பின் 59 டிகிரியில் அவனில் பிஸ்கட்  செய்வது போல டிரேயில் இட்டு சூடுகிறார்க்ள். பின்னர் மீண்டும் நிழல் குளியல். அபோது தான் அதற்கு நாம் பார்க்கும் நிறமும் மணமும் வருகிறது. இந்த சென்டரில் ஏலக்காய் மட்டுமில்லாமல் பலவகைத் திரவியப்பயிர்களையும்  ஆராய்கிறார்கள்.-. கொடியில் விளைவதால்  மிளகை ஏணிவைத்துத்தான் பறிக்க வேண்டியிருப்பதால் அதை குத்துச்செடியாக்க முற்சிக்கிறார்கள். இப்படி பல ஆராய்ச்சிகள். . விவசாயதிலும் தாவரங்களிலும்  ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது.
 
மாலையில் நகரில் பவனி வந்தபோது  கவனித்த ஒரு விஷயம். இங்கு பல ஏற்றுமதி நிறுவனங்கள்   கடைகள் வைத்திருக்கிறார்கள். ஏலக்காய் போன்ற விலையுர்ந்த பொருட்களை நிறைய ஸ்டாக். அதையும் அழகாக டிஸ்ப்பிளேயில் வைத்திருக்கிறார்கள். சணல் சாக்குகள் கிடையாது டிரான்ஸ்ப்ரண்ட் பிளாஸ்டிக்க சாக்குகள். மட்ஜ்ஹிப்பு கோடிகளில். 100கிராம் கூட அதிலிருந்து  எடுத்து  தருகிறார்கள்  காபி, தேன், மிளகு ஜாதிக்காய்,  அத்திபழம்(அனுமார் வடை மாலை மாதிரி கோர்க்கபட்டிருக்கிறது)  எல்லாம் கிடைக்கிறது. 

எல்லோரும் ஒரே மாதிரி எங்கள் காபிதான் கூர்க்கிலேயே பெஸ்ட் என்றார்கள். நாளை நீத்துவிடம்  ஏது நிஜமாகவே பெஸ்ட் என்ற கேட்டபின் வாங்கலாம் என எண்ணிக்கொண்டே வீடு திரும்பினோம். 



19/12/17

குடகு மலைக் காற்றினிலே ... 2



மடிக்கேரி ஒரு சிறிய மலை நகரம். நகரில் பல முக்கிய இடங்களில் கம்பீரமாக நிற்கும் ராணுவ அதிகாரிகளின் சிலைகள். டூரிஸ்ட் கூட்டம் இவைகளை கடந்து நகரின் கோடியில் ஒரு பெரிய பார்க். அதிலிருந்து மேற்கு மலைத்தொடரின்பசுமைச் சரிவுகளையும் சிகரங்கங்களையும் பார்க்க அந்தப் பார்க்கின் விளிம்பில் வசதி செய்திருக்கிறார்கள். ஒரு மலைச்சரிவை காலரியாக மாற்றி அதன் முன் ஒர் அரைவட்டவடிவ தளமுமாக அழகான amphitheatre அரங்கமாக வடிவமைத்திருக்கிறார்கள். விழா நாட்களில் இசை நடன நிகழ்ச்சிகள் நடைபெறுமாம்




இந்த இடத்திலிருந்து பார்த்தால் மாலையில் சன் செட் அழகாக இருக்கும் என்பதால் அதற்காகக் காத்திருக்கும் கூட்டம் காலரியை ஆக்ரமிதிருக்கிறது. உனண்மை தான்
ஆதவன் அணுவணுவாகக் கண்ணிலிருந்து மறையும் காட்சி அற்புதமாகத்தான் இருக்கிறது.  வாணத்தையே ஜொலிக்கும் தங்கத்தகடுகளாக்கியபின் .சட்டென்று பிங்க் கலந்த ஆரஞ்ச் வண்ணப் பந்தாக மாறி மெல்லிய நீலத்துடன் மாறிச் சட்டென்று மலைகளுக்குப் பின்னால் காணமல் போகும் அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத ஒன்று மனத்ஜில் நிற்கும் ஓவியம்.  அஸ்தமனம் முடிந்தவுடனும்  எடுத்தவைகளுடன் திருப்தி அடையாமல் இன்னும் சில செல்பிகள் எடுத்துக்கொண்டு  திரைப்படம் முடிந்தவுடன் தியட்டர்காலியாவதைப் போல அரங்கம் காலியாகிறது. தினசரி வாக்கிங் வரும் உள்ளுர் மக்கள் சிலருடன் நாமும் உட்கார்ந்திருக்கிறோம். குளிர் மெல்ல தாக்க ஆரம்பித்தாலும் இதமாக்யிருக்கிறது.  தொலைவில் வளைந்த மலைச்சாலைகளில் செல்லும் வாகனங்களின் விளக்குகள் நகரும்  நட்சந்திரங்களகத் தெரிவதை ரசித்துக்கொண்டிருக்கிறோம்.
 இந்த இடத்திலிருந்து தான் குடகு மன்னர் தன் குடும்பத்துடனும் பரிவாரத்துடனும்  அமர்ந்து மாலைவேளைகளை இசை நடன நிகழ்ச்சிகளுடன் ரசிப்பாராம். அதனால் இந்த இடத்தை ராஜா சீட் என்று அழைக்கிறார்கள். அதை நினைவு கூறும் வகையில் ஒரு மண்டபமும் நிறுவியிருகிறார்கள். அதைப்பார்த்ததும் குடகு மன்னர்களைப்பற்றிக் காலையில் மீயூசியத்தில் பார்த்தறிந்த செய்திகள் மீண்டும்   மனதில் எழுந்தன.

மன்னர்கள் வாழ்ந்த  அரண்மனை இபோது அரசு அலுவலகங்களாகமாறி ப்பாழாகிக் கொண்டிருக்கிறது .அதிலிருந்த பொருட்களையும் படங்களையும் கொண்டு அருகில் ஒரு மியூசியம் அமைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில்இந்தச் சின்னஞ்சிறு குடகு தனி மலைநாடகவே 1600களிலிருந்து மன்னர் ஆட்சியிலிருந்திருக்கிறது. அண்டைநாடான மைசூர் அரசர்களால் வெல்லப்பட்டு அவர்களின் ஆட்சியின் கிழ் வந்திருக்கிறது. . பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் ஆட்சியில் தனி நாடகாவும் அரசபரம்பரம்பரையாகவும்  மீண்டும் அங்கீகாரம் பெற்றிருக்கிறது. ஆனால் தொடர்ந்து வந்த அரச பரமப்ரையினர் பிரிட்டிஷ் கம்பெனியின் மேலாதிக்கத்தை விரும்பாமல் புரட்சி செய்ததால் ஒரு போரைச் சந்தித்திருக்கிறார்கள். கோட்டைகள், மதில் சுவர்கள் எதுவும் இல்லாத போதும் நான்கு புறமும் காடுகளாகச் சூழபபட்ட இந்தக் குட்டி மலைநாட்டைபிரிட்டிஷார் எளிதில் நெருங்க முடியவில்லை. ஒரு போருக்குப் பின்னர் சரணடைந்த மன்னரைக் கைது செய்து வேலூரில் சிறை வைத்திருக்கிறார்கள். சிறையில் மன்னர் தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகும், பதிலுக்குத் தன் ஒரே மகளை லண்டனில் படிக்க வைக்க விரும்புதால் அதற்கு உதவி செய்யவும் கேட்டிருக்கிறார். சம்மதித்த ஆங்கிலேயே அரசு அவரையும் மகளையும் லண்டன் அனுப்பினார்கள். ஆனால் அங்கு இளவரசி படிப்பைத்தொடர கிருத்துவ மதத்திற்கு மாற நேர்ந்திருக்கிறது. ராணி விக்டோரியாவால் முன்பொழியப்பட்டு இளவரசி மதம் மாறியிருக்கிறார். சில நாட்களுக்குப் பின்னர் ஒரு ஆங்கிலேயரை மணந்திருக்கிறார். இங்கிலாந்திலேயே இறந்த மன்னரின் கல்லறை அங்கிருக்கிறது மடிகேரியில் இருக்கும்  மறைந்த மன்னர்களின் சமாதி வளாகம் மிகப்பெரியதாகயிருக்கிறது. வாசலில் துவாரபாலகர்கள் உருவங்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.  இவர்கள் எப்படி அங்கு வந்தார்கள் எனத் தெரியவில்லை
 ஆனால் இங்கிலாந்தில் படித்த மன்னரின் மகள்  பின்னாளில் என்னவானார்? அவரது வாரிசுகள் எங்கே என்பது தெரியவில்லை.


மியூசியத்தில் பளிச்சென்று வீபூதி பட்டையுடன் இருக்கும் அந்த அழகான இளவரசியின் படத்தைப் பார்த்தபோது இளவரசியாக இருந்தபோதிலும் படிப்புக்காக மதம் மாறிய செய்தி மனதை  உறுத்தியது உண்மை.  இந்த மத மாற்றத்தைப் படிப்பின் மீதிருந்த ஆர்வம் என எடுத்துக்கொள்வதா? அல்லது அதிகாரத்துக்கு அடிபணிந்த அடிமைத்தனமாக எடுத்துக்கொள்வதா? என்று சிந்திக்கொண்டிருந்தேன்.

குடகு மன்னர்கள் மிகப்பெரிய சிவ பக்கதர்கள். கனவில் வந்து சொன்னதற்காகவே மன்னர் கட்டியிருப்பதாக வரலாறு சொல்லும் ஒம்காரஸ்வர் கோவில் நகரின் நடுவில் இன்றும் இருக்கிறது. கோபுரங்கள் எதுமில்லாத கேரளபாணிக் கோவில். அர்ச்சகர் பிங்க் வேஷ்டியில் இருக்கிறார். வரும் பக்தர்களுடன் பேசுவதில்லை. அவர் சொல்லும் பூஜை மந்திரங்கள் என்ன பொழியென்றும் புரியவில்லை. கோவில் மிகச்சுத்தமாகயிருக்கிறது.  பிறந்து சில மாதங்களே ஆன சின்னக்குழந்தைகளைக் கொண்டுவந்து சன்னதியின் முன் கிடத்துகிறார்கள்
பிரிட்டிஷாரால் தனி நாடாக அங்கிகரிக்கப்பட்டிருந்ததால், சுதந்திர இந்தியாவிலும் முதலில்  இது தனி மாநிலமாகவே இருந்திருக்கிறது. ஆம் ஸ்டேட் ஆப் கூர்க்.! 1956ல் மொழி வாரியாக மாநிலங்கள் உருவானபோது இது மைசூர் ராஜயத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது அந்த இணைப்பின்போது  முன்னாளில் போரில் வென்று  மைசூர் எங்களை ஆட்சி செய்தபோது கொடுமைப்படுத்தியவர்கள். அதனால் அவர்கள் வேண்டாம் எங்களை மெட்ராஸ் ராஜதானியுடன் சேர்த்துவிடுங்கள் என்று போராடியவர்களும் இருந்திருக்கிறார்கள் என்பது நான் அறிந்த ஒரு புதிய செய்தி.
பிரிட்டிஷாரை துணிவுடன் ஈஸ்ட் இந்திய கம்பெனிகாலத்திலேயே எதிர்த்த பாரம்பரியத்தாலோ  இந்திய ராணுவ அதிகாரிகளில் பலர் இந்தப் பகுதியிலிருந்து தான் வந்திருக்கிறார்கள். கரியப்பாவைத்தொடர்ந்து பெல்லியப்பா, பொன்னப்பா போன்று பல அப்பாக்கள் இங்கிருந்து வந்த ராணுவ அதிகாரிகள். இன்றும் இது தொடர்வது பெருமைக்குரியவிஷயம்.

உலகிலேயே மிக விலையுர்ந்த காபி இங்குதான் விளைகிறது என்று கேள்விபட்டிருந்த்தால் அதைப் பார்க்க விரும்பி விபரங்கள் சேகரித்துக் கொண்டிருந்தேன். லண்டனிலிருந்து ஒரு நண்பர் கொடுத்திருக்கும் அறிமுகத்துடன் நாளைக் காலை அந்த இடத்துக்குப்  போகலாம் என்று எண்ணித் திரும்பினோம்
“வெளியிலேயே சாப்பிட்டுவிட்டீர்களா? அல்லது ஏதாவது தயாரிக்கவா? என நீத்து கேட்டபோது உண்மையிலேயே இது ஹோம் ஸ்டே தான் என்பது புரிந்தது

12/12/17

குடகு மலைக் காற்றினிலே 1



10/12/2017


பொன்படு நெடுவரைபயணம் எப்படியிருந்தது ? என்றார் நண்பர். விழித்தேன்.

 அதான் சார் கூர்க் (coorg) டிரிப் என்றார். புறநானூறு பாடலில் அப்படித்தான் அந்த இடம் சொல்லப்பட்டிருக்கிறது. பொன்போலத்தோன்றும் மலை என்று அர்த்தம் அங்கு மழைபொழிந்தால் காவிரியில் வெள்ளம் வரும். அதானால் தான் காவிரியாற்றுக்கு பொன்னி என்றும் எனப்பெயர் என்றார். மனுஷர் சங்க இலக்கியங்களைத் தினசரி படிப்பவர்,  அதை அக்குவேறு ஆணி வேறாக அலசுபவர்

அட! நாம் போன இடம் தமிழிலக்கியத்தில் பேசபட்ட இடமா? என்று ஆச்சரியத்துடன் பயணம் பற்றிப் பேசினேன். HOME STAY பற்றிக்கேட்டுக்கொண்டிருந்தார்.( நல்ல வேளையாக இதுவும் சங்க காலத்திலேயே இருந்தது என்று சொல்ல வில்லை.)

கர்நாடகத்தில் கூர்க் ஒரு மிகச்சிறிய மாவட்டம். 3 தாலுக்காக்கள்தான். மக்கள் தொகை 30000க்கும் கீழ்.மக்கள் வாழும் பகுதிகளைவிட மலைப்பகுதிகள்தான் அதிக. . 1000 மீட்டர் உயரத்திலிருக்கும் மடிக்கேரி நகர தான் மாவட்ட தலைநகரம் மைசூரிலிருந்து 120 கீமி. மலைப்பாதை வழியெங்கும் காபிதோட்டங்களும் அதன் அருகே நிற்கும் ஒக் மரங்களைத் தழுவிக்கொண்டிருக்கும் மிளகுக்கொடிகளையும் பார்த்தபோது





 
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா என்று சொன்ன பாரதி நினைவிற்கு வந்தான்

இங்கு நல்ல ஹோட்டல்கள் இருந்தாலும் ஹோம் ஸ்டே என்பது மிகப் பாப்புலாரன ஒரு விஷயம். விருந்தோம்பலுக்குப் பெயர்போன குடகு மக்களிடம் தங்கள் வீட்டில் எல்லா வசதிகளுடனும் இருக்கும் ஒரு பகுதியை  தங்கள் நகருக்கு வரும் பயணிகளுக்கு  ஒதுக்கி அவர்களைக் கவனித்துக்கொள்ளும் வழக்கமிருந்திருக்கிறது.. இலவசமாகக் இப்படி கொடுக்கும் பழக்கம். நாளடைவில்  மெல்ல ஒரு பிஸினஸாக டெவலப்பாகியிருக்கிறது, இன்று அந்தச் சின்ன ஊரில் 1500க்கும் மேல் இப்படி ஹோம் ஸ்டே வீடுகள். இதற்கு நகரசபையில் லைஸ்ஸென்ஸ் வாங்க வேண்டும், ஒவ்வொரு விருந்தினருக்கும் வரி செலுத்த வேண்டும்(நம் பில்லில் வருகிறது). (லைசென்ஸ் இல்லாமல் நடத்துபவர்களும் நிறைய இருக்கிறார்கள்) இந்தப் பிஸினஸ் இன்ட்ர்நெட்டின் புண்ணியத்தில் கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு வளர்ந்திருக்கிறது
.
டூரிஸ்ட்களுக்கு உதவும் பிசினஸ் ஆகிவிட்டதால், make my trip.com. Mytravel போன்ற நம் நாட்டு நிறுவனங்கள் இறங்கிவிட்ட இந்தப் பிஸினஸில் இப்போது airbnb போன்ற சரவதேச நிறுவனங்கள்  இறங்கி விட்டன.(அயர்லாந்திலிருந்து உலகளவில் பல நகரங்களில் இந்த வசதியைத் தருபவர்கள்)

இவர்கள் இப்படி ஹோம் ஸ்டே வசதி தருபவர்களைப் பற்றி அழகான படங்களூடன் தங்கள் தளத்தில் விளம்பரப்படுத்துகிறார்கள். பல நிறுவனங்கள் வசதிகளை நேரில் பார்த்து உறுதி செய்துகொள்வதாலும், சில கண்டிப்பான நிபந்தனைகள் வைத்திருப்பதாலும் நம்பி புக்  பண்ணலாம்..
 இந்த நிறுவனங்கள் ஹோம் ஸ்டே தருபவர்களுக்கு டூரிஸ்ட்களிடமிருந்து ஆர்டர் வாங்கிக்கொடுத்து தங்கள் கமிஷனைப்பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களிடம் நீங்கள் பணம் செலுத்தி புக் செய்யும் வரை host என்று சொல்லப்படும் அந்த வீட்டின் உரிமையாளாரை நீங்கள்  தொடர்பு கொள்ள முடியாது. (நேரடியாகப் பிஸினஸ்பேசிவிடுவதைத் தவிர்க்க)

ஒரு சின்ன இரண்டு பெட் ரூம் ஃபிளாட் +கிச்சன்(கியாஸ். பாத்திரங்களுடன்) வசதியிலிருந்து காபி எஸ்டேட்க்குள்ளிருக்கும் பெரிய பங்களாவரை கிடைக்கிறது. சின்ன காபி எஸ்டேட் வைத்திருப்பவர்கள் நகரிலிருக்கும் தங்கள் வீட்டைப் பெரிதாகக் கட்டி இப்படி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாடகை ஒரு நாளுக்கு 2000(4 பேர்)லிருந்து 25000 வரை இருக்கிறது. உணவு (ஸ்பெஷல் கூர்க் உணவுகள்) தயாரித்துத் தருவார்கள் அதற்குத் தனிக்கட்டணம், ஆனால் ஹோட்டல்களை விடக் குறைவு.
நாங்கள் நகருக்கு அருகில் அதே நேரத்தில் இயற்கைச் சூழலுடனும் இருக்கும் மலைச்சரிவிலிருக்கும் ஒரு வீட்டைப் படத்தைப் பார்த்துத்தேர்ந்தெடுத்திருந்தாலும் நேரில் எப்படியிருக்குமோ என்றுதானிருந்தது. நகரை நெருங்கும்போது எங்கள் ஹோஸ்ட் திருமதி நீத்து விடம் பேசி பாதைகேட்டபோது தெளிவாகச்சொல்லிக்கொண்டே வந்தார். அழகான வீட்டைப் பார்த்ததும் சந்தோஷமாக யிருந்தது. ஆனால் வீட்டை அடைந்த பின் தான் தெரிந்தவிஷயம் அவர் பெங்களூரிலிருந்து பேசிக்கொண்டிருக்கிறார் என்பது.


நான் ஒரு அவசர வேலையாகப் பங்களுர் வர வேண்டியதாகிவிட்டது. உங்களைக் கவனித்துக்கொள்ள என் பெற்றோர்கள் அங்கு வந்திருக்கிறார்கள் (நகரில் வேறு பகுதியில் இருப்பவர்கள்) என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே வெல்கம் டூ கூர்க் எனக் காபியுடன்       (அருமையான காபி  ) வரவேற்றார் நீத்துவின் தந்தை பொன்னப்பா (78வயது). ந்த அளவுக்கு இதைப் பிஸினஸாக மட்டுமில்லாமல் குடும்பமே சந்தோஷமாகசெய்கிறார்கள். என்று புரிந்தது.
 நகருக்குள் நீங்கள் நுழையும் போதே நான் வீட்டில் இல்லை எனறு சொன்னால் நீங்கள் வருந்தக்கூடும் என்பதால் நான் முதலில் அதைச் சொல்லவில்லை. என் பெற்றோர்கள் உங்களுக்காக மத்தியானத்திலிருந்தே காத்திருக்கிறார்கள் நான் நாளை மாலை வந்துவிடுவேன் என்று நீத்து சொன்ன அந்த வினாடியே அந்த வீட்டை மட்டுமில்லை அந்தக் குடும்பத்தையே எங்களுக்குப் பிடித்துப் போய்விட்டது. மறு நாள் வந்தவுடன் எங்களுக்காக பிரேக்பாஸ்ட் தயாரித்துக் கொண்டுவந்தவருடன்  நிறையப் பேச முடிந்தது. ஹோம் ஸ்டே பிஸினஸ் நன்றாக் இருப்பதாகச்சொன்னார்.. டிசமபரில் இவரது மட்டுமில்லை அனேகமாக எல்லாவீடுகளுமே புக்காகி விட்டது என்றார். ஒவ்வொரு ஆண்டும் டூரிஸ்ட் எண்ணிக்கை உயர்கிறது என்கிறார்.


மெடிகல் டிரான்ஸ்கிரிப்பிஷன், கணவரின் எஸ்டேட்நிர்வாகத்தில் உதவி, இந்த ஹோம் ஸ்டே எல்லாவற்றையும் அழகாகக் கவனிக்கும் இந்தச் "சுப்பர் மாம்" மின்  இரண்டு மகன்கள் கல்லூரியில்.
குடகுப் பெண்கள் மிக ஸ்மார்ட் ஆனவர்கள் என்று நண்பர்கள் சொன்னதுண்டு. இன்று அதை நேரிடையாகப் பார்க்க முடிந்தது.

 அன்று மாலையில் அவர் பார்க்கச்சொல்லியிருந்த அழகான இடத்துக்கு இப்போது  போய்க்கொண்டிருக்கிறோம் .

6/12/17

உலக இசைநகரங்களில் நம்ம சென்னை


இந்த ஆண்டு இசை விழா துவங்கும் முன்னரே வந்த ஒரு மகிழ்ச்சியான செய்தி ஜக்கிய நாடுகள் சபையின் ஒர் அங்கமான யூனஸ்கோ சென்னையை உலகின் பாராம்பரிய இசை நகரங்களில் ஒன்றாக அறிவித்திருக்கிறது என்பது... (மகிழ்ச்சியில்லாத செய்தி T.N கிருஷ்ணாவின் பேச்சு என்பது வேறுவிஷயம்)
யூனஸ்கோவின் படைப்பாக்க நகரங்களின்(creative cities) பட்டியலிற்காக இந்த ஆண்டு இந்தியாவின் வாரணாசி, சென்னை, ஜெய்ப்பூர் ஆகிய 3 நகரங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் சென்னையும் வாரணாசியும் இசைக்காகவும் ஜெய்ப்பூர் கைவினை மற்றும் நாட்டுப்புறகலைகளுக்காகவும் தேர்ந்த்டுக்கப்பட்டிருக்கின்றன.
2004ஆம் ஆண்டு முதல் உலகாளாவிய நிலையில் தனிதன்மையுடன் பாரம்பரியத்தன்மைகளயும், பண்பாட்டுச்சிறப்புகளையும் கலைமரபுகளையும் கொண்டுள்ள நகரங்களைப் பட்டியலிட்டு யூனஸ்கோ அறிவித்துக்கொண்டிருக்கிறது. இத்தாலி, ஸ்வீடன், மெக்ஸிகோ நியுஸிலாந்து, போர்ச்சுகல், கஜகஸ்தான் போன்ற நாடுகளைச்சேர்ந்த சில நகரங்களே ”இசைக்கலைக்காக”. இடம் பெற்றிருக்கும் இந்தப் பட்டியலில் இப்போது. இடம் பெற்றிருப்பது “நம்மசென்னை”.
இந்த நெட் ஒர்க்கில் இணைவது மூலம் உலகின் மற்ற இசைநகரின் கலைஞர்கள் இங்கு வரவும், நமது கலைர்கள் அங்குப் பயணிக்கவும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.
யூனஸ்கோ சென்னையை இன்று ஒரு இசை நகரமாக அறிவித்துக் கெளரவித்திருப்பது பெருமையளிக்கும் செய்தியானலும், சென்னை நகரின் இசைப்பாரம்பரியம் 90 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருக்கிறது.
1927ல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னயில் நடந்த அகில இந்திய இசை மாநாட்டின் பரிந்துரையில் எழுந்த மியூசிக் அகடமி இன்றும் தொடர்கிறது. ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட சபாக்களில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்களைக்கொண்டு நடைபெறும் இசைவிழாக்கள் இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. 90 ஆண்டுகளாக தொடர்ந்து இப்படி இசைவிழாக்களை அதுவும் தனியார் உதவியுடன் நடத்திக்கொண்டிருக்கும் ஒரே நகரம் சென்னை. இசை விழாக்கள் மட்டுமின்றி நல்ல இசையின் வடிவங்களை நமக்கு அளித்தவர்களைத் தெய்வமாகப் போற்றி ஆண்டுதோறும் ஆராதிப்பதும் உலகில், தமிழகத்தில் மட்டுமே
.
இசையை மட்டுமில்லாமல் நடனம், மற்றும் அது சார்ந்த கலைகளை வளர்க்க பல ஆண்டுகளுக்கு முன்னரே 100 ஏக்கர் பரப்பில் ருக்மணி அருண்டேல் அவர்களால் சென்னையில் துவக்கபட்ட கலாஷேத்திரா என்ற கலைக்கூடம் இன்று உலகப்புகழ் பெற்ற அமைப்பு. இசையை முறையாக இளநிலைப்படிப்பிலிருந்து ஆராய்ச்சிப் படிப்புவரை கற்கும் வசதியை முதன் முதலில் அளித்த்து சென்னைப் பல்கலைகழகம் தான். 2013ல் இசையை உள்ளடக்கிய இசைமற்றும் நுண்கலைகளுக்காகத் தனிப் பல்கலைகழமே துவக்கப்பட்டது சென்னையில் தான்.
சென்னை கார்ப்ரேஷன் இந்தியாவின் மிகப்பழமையான கார்ப்பரேஷன். 1688ல் அதற்கான சார்ட்டர்(பிரிட்டிஷ் அரசின் அனுமதி) வந்தபோது அதைப் பராம்பரிய இசைக்கலைஞர்களும், நடனக்கலைஞர்களும் தங்கள் திறன்களை வெளிப்படுத்திக் கோலாகலமான ஊர்வலமாகச் சென்னை செயின்ட் ஜார்ஸ் கோட்டைக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்த அளவு இசைக்கலை பெருமைப் படுத்தபட்ட நகரம் சென்னை.
கர்நாடக இசை மட்டும் சென்னையின் அடையாளமில்லை. வெஸ்ட்டர்ன் கிளாஸிக்கல் மியூஸிக் என அறியப்படும் மேற்கத்திய சங்கித்தைப் போற்ற மெட்ராஸ் மியூஸிகல் அசோசியஷன் பல ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் துவங்கியிருக்கிறது. மேற்கத்திய இசையில் பயன்படுத்தப்பட்டுவந்த வயலினை கர்நாடக இசைக்கேற்ப மாற்றி வடிவமைத்ததில் இவர்களின் பணி முக்கியமானது.
இசைக்கச்சேரிகள் என்றால் தெலுங்கு அல்லது சமஸ்கிருத கீர்த்தனைகள் என்ற நிலையை மாற்றிப் பாரம்பரிய தமிழசைக்கு தனி அந்தஸ்துப் பெற ராஜாஜி, டிகேசி, கல்கி போன்றவர்கள் போராடி வெற்றிகண்டதின் விளைவாகத்தான் இன்று ஆண்டுதோறும் சென்னையில் தமிழிசைவிழாக்கள் நடைபெறுகின்றன.
இசைவிழாக்கள் பெரிய அரங்குகளில் மட்டுமில்லாமல் நகரின் பல இடங்களில் சிறிய அளவு ரசிகர்களுடனும் வளர்ந்துகொண்டிருக்கிறது. அண்மையில் நகரின் ஒரு பரபரப்பான மெட்ரோ ஸ்டேஷனின் அமைதியான பகுதியிலேயே, அண்மையில் ஒரு இசைக்கச்சேரி நடந்தது
.
இந்துஸ்தானி, கஜல், ராக், மேற்கத்திய கிளாஸிகல். தமிழ் திரையிசை, இந்தி திரையிசை வெளிநாட்டுகுழுவினரின் இசை என்று எல்லா வடிவ இசை நிகழ்ச்சிகளுக்கும் சென்னையின் அரங்கங்கள் நிரம்பி வழிகின்றன. அந்த அளவு இசை என்பது நகரோடு ஒன்றிப்போன சென்னை நகரத்துக்கு யூனஸ்கோ தந்திருக்கும் கெளரவம் தாமதமானலும் தகுதியானதுதானே?. மகிழ்ச்சியோடு ஏற்போம்.