2/11/12

007க்கு 50வது பிறந்தநாள்



திரைபடங்களில்  பெயர், கதை, காட்சிகளின் களன்கள், கதாநாயகர், நாயகிகள் எல்லாம் மாறும். ஆனால் கதாநாயகரின் பெயர் மட்டும் மாறாது. இப்படியொரு  அரை நூற்றண்டு சரித்திரத்தை படைத்திருப்பவை ஜேம்ஸ்பாண்ட் படங்கள்.   1953 ல்இயான்பிளிமிங் என்ற நாவலாசிரியர்  எழுதிய டாக்டர் நோ என்ற நாவலின் நாயகனின் பெயர் ஜேம்ஸ்பாண்ட்இது இப்படி ஹாலிவுட்டில் ஒரு நிரந்தர பெயராக நிலைத்துநிற்கும் என அவர் நினைத்துபார்த்துக்கூட இருக்க மாட்டார்.

இதுவரை வந்த படங்கள் 22  இறுதியாக  இம்மாதம் திரைக்கு வந்திருப்பது ஸகை ஃபால். எல்லாவற்றிலும் நாயகனின் பெயர் ஜெம்ஸ்பாண்ட் தான்.  <இங்கிலாந்து அரசியினால்  நியமிக்க பட்ட ஒரு சர்வ வல்லமை வாய்ந்த ரகசிய ஏஜெண்ட்களின் குழு M16 அதில் 007 என்ற கிரேடில் இருப்பவர்கள் தேச நலத்திற்காக எவரையும் கொல்லும் லைசென்ஸ் பெற்றவர்கள். இதன் தலமையில்என்ற பெயர் கொண்ட பெண் அதிகாரி.>  உலகின் அத்தனை விஷயங்களையும் நன்கு அறிந்த சுப்பர்புத்திசாலியான ஜேம்ஸ்பாண்ட் இவர் நமபிக்கைக்கு பாத்திரமானவர், உலகின் எந்தப்பகுதியிலும் வீர திர சஹாஸங்களை மிக அனாசியமாக செய்பவர் என வர்ணிக்கப் படும் இந்த  ஜேம்ஸ்பாண்ட்ட் படங்களினால் உண்மையிலேயே பிரிட்டிஷ் அரசில் அப்படி ஒரு அமைப்பு இருப்பதாக பலரும் நம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஒவ்வொரு படத்திலும் ஜேம்ஸ்பாண்ட் பயன்படுத்த சக்தி வாய்ந்த கார்கள், துப்பாக்கிகள் \கடிகாரங்கள் தயாரிக்கபடுவதாக காட்டப்படும். பாண்ட்படங்களில் மிக அழகான பெண்கள் அவருக்கு துப்பறியும் வேலைகளில் உதவுவார்கள். ஆனால் அவர் அவர்களை காதலிக்கவோ அல்லது மணம்செய்துகொள்ளவோ மாட்டார். அவர் என்றும் எலிஜிபிள் பேச்சலர்தான்.
கடந்த 50 ஆண்டுகளில்  ”டாக்டர் நோபடத்தில் சீன்கானரியில் துவங்கி டேனியல் கிரேக் வரை இதுவரை 6 கதாநாயகர்கள் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்திருக்கிறார்கள். நாயகர்கள் மாறினாலும், எல்லாபடங்களும் ஹிட்.காட்சி அமைப்புகளும், உலகின்பலநாடுகளின் கதைக்களன்களும் ஒரு காரணம். கடந்த சில ஆண்டுகளாக உலகின் பலமொழிகளில்(தமிழ் உள்பட) மொழிமற்றம் செய்யபட்ட எல்லா பழையபடங்களும் பணத்தை கொட்டுகின்றன.  இந்த அழியா இமேஜை உருவானதற்கு முக்கிய காரணம் முதல் 6 படங்களில் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்த சீன்கானரி. இவர் இதைத்தவிர பல படங்களில் நடித்திருந்தபோதிலும், இன்றும் (வயது82) ஜேம்ஸ்பாண்ட் கானரியாகத்தான் பிரபலம்.
இதுவரை எந்த கதாபாத்திரமும் 50 ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்தில்லை என்பதால்,ஜேம்ஸ்பாண்டின் 50வது பிறந்த நாளை ஹாலிவுட்டும், இங்கிலாந்து சினிமா உலகமும் ஆர்பாட்டமாக கொண்டாடுகிறது. இதுவரை வந்த ஜேம்ஸ் படங்களின் காட்சிகள், செட்களுடன் ஒரு மியூசியம். எல்லா ஜேம்ஸ்படங்களை திரையிடும் விசேஷ திரைப்படவிழா என அமர்களப்படுத்துகிறார்கள்.  இதுவரை வந்த படங்களில் வசூல் சாதனை  விபரங்களைத்தாண்டி எந்த கதாநாயகன்,  “பாண்ட்-ஜேம்ஸ்பாண்ட்என்ற புகழ்பெற்றார் வசனத்தை சொன்னார்,? எத்தனைபேரை கொன்றார்?, எந்த பாண்டுக்கு காதலிகள் அதிகம்?, சினிமாவிற்கு வெளியே இந்த பாண்டுகளில் யாருக்கு எத்தனை காதலிகள் போன்ற புள்ளிவிபரங்களை பிரிட்டிஷ் சினிமா பத்திரிகைகள் அள்ளிவீசுகின்றன. இங்கிலாந்து நாட்டின் சுற்றுலா வாரியம் “  ”ஜேம்ஸ்பாண்ட் எவரிதிங் ஆர் நத்திங்என்று ஒரு ஆவணபடத்தை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. (பாண்ட்கதைகளின் படி ஜேம்ஸ் அரசிக்கு விசுவாசமுள்ள ஒரு பிரிட்டிஷ் பிரஜை)
இத்தனை ஆர்பாட்டங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல விஷயம். இரண்டு தலமுறையாக ஜேம்ஸ்பாண்ட் படங்களை தயாரித்து கொண்டிருக்கும் இயான் நிறுவனத்தினர் இதுவரை ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பயன்படுத்தபட்ட கார்,கைக்கடிகாரம், உடை கேமிரா போன்றவைகளை ஏலமிட்டு அந்த பணத்தை யூனீசிப் போன்ற தொண்டு நிறுவங்களுக்கு வழங்குவதுதான். ஆன்லையினில் மட்டும் நடைபெறும் இநத ஏலத்தில் இதுவரைகிடைத்திருப்பது ஒருமில்லியன் (பத்து லட்சம்) பவுண்ட்களுக்கும் மேல். இன்னும் ஏலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஐம்பது ஆண்டுகள் திறையில் வாழும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தின் பெயரின் புகழ்  இத்தகைய பணிகளுக்கு பெரும் நிதிகிடைக்க உதவுமானால் இன்னும் பல ஆண்டுகள் அந்த பெயர் வாழ வாழ்த்தலாம்.

29/10/12

அந்த கிராமத்தின் பெயர்... ...



நாட்டின்  தலைநகரிலிருந்து  200 மைல் தொலைவில் தென்மேற்கு கோடியிலுள்ள  30000 பேர்களே வசிக்கும் அந்த சிறு கிராமம் பின்லாந்து நாட்டின் மிக அழகிய பகுதிகளில் ஒன்று. ஊரின் நடுவே அமைதியாக ஓடும் அழகிய  நதியின் பெயர்தான் அந்த நகருக்கும். ஊரின் ஜனத்தொகையில் 50% மேல் 65 வயதுகாரர்கள். அதில் பலருக்கு உலகம் முழுவதும் தங்கள் ஊரின் பெயர் உச்சரிக்கபடுவதில் மிக பெருமை. சிலருக்கு என்ன பிரயோசனம்? ஊருக்கு ஒன்றும் லாபமில்லையே என்ற ஆதங்கம். இன்னும் சிலருக்கு சொல்பவரகள் எலோருக்கும் அது நம் ஊரின் பெயர் என்றே தெரியாதே என்ற வருத்தம்.
இந்த சின்ன கிராமத்தில் 1871ல்   தொடங்கபட்ட பேப்பர் தொழிற்சாலைக்காக மரக்கூழ் தயாரிக்கும் ஆலைக்கு ஊரின் பெயரையே வைத்து வியாபரம் செய்து வந்த ஒருகுடும்பத்தின் அடுத்த தலைமுறை ரப்பர் டயர்கள் தயாரிக்கும் தொழிலை துவங்கியது. பனிகட்டிநிறைந்த சாலைகளில் ஓட்டக்கூடிய  விசேஷ டயர்களை தயாரித்து புகழ்பெற்ற அந்த நிறுவத்தின் அதற்கு அடுத்த தலைமுறை  தொழிலை புதிதாக அறிமுகமான ஒரு துறைக்கு மாற்றியது. மாற்றாதது நிறுவனத்திற்கு முன்னோர் இட்ட தங்கள் ஊரின் பெயர்
தங்கள் நாட்டின் மக்கள்  நண்பர்கள், உறவினர்களுடன் எப்போதும் பேசிக்கொண்டே (நம்மை விடவா?)இருக்கும் பழக்கத்தை பணம் பண்ணும்  ஒரு தொழிலாக இவர்கள் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திய  தொழில்நுட்பம் 10 ஆண்டுகளில் உலகத்தையே கலக்கி தங்கள் நாட்டின் பொருளாதரத்தையே மாற்றபோகிறது என்பது அப்போது  அவர்களுக்கு தெரியாது. நாட்டின் தலைநகருக்கு மிக அருகில் மிகபிராமண்டமான நவீன தொழிற்கூடத்தில் இன்று இயங்கும்  இவர்கள் முதலில் 1987ல்    எந்த அளவிற்கு வரவேற்பு இருக்குமோ என்ற அச்சத்துடன் வெளியிட்ட  கருவி இன்று  உலகில் 150 நாடுகளில் பல லட்சகணக்கான பணியாளார்களின் உதவியுடன் தயாரிக்கபடுகிறது.கருவியிலுள்ள 100%பாகங்களும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் வகையில் அமைக்கபடுவதால் சுழல் மாசுபடுவதில்லை. கோடிகணக்கானோர் பயன்படுத்துகின்றனர்,அந்த தொழிலில் உலக மார்க்கெட்டில் 40% தங்கள் வசத்தில் வைத்திருக்கும் இவர்கள். தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் மீதி  மார்க்கெட்டையும்  வளைக்கிறார்கள்.
ஆனால் பெயரிலிருக்கும் சொந்த ஊரில் ஒன்று கூட தயாரிக்கபடுவதில்லை.
அந்த ஊரின் பெயரும் அந்த கருவியின் பெயரும்  நோக்கியா.!




26/10/12

காப்பாற்றபட்ட காண்டாமிருகம்




அஸ்ஸாம் மாநில காசிரங்கா வனவிலங்கு சரணாலயம் அங்கு வாழும் ஒற்றைகொம்பு காண்டாமிருகங்களுக்காக உலகப் புகழ்பெற்றது
சமீபத்தில் அந்த காட்டுப்பகுதியில் சூழந்த தீடிர் வெள்ளத்தில் சிக்கிய ஒரு காண்டாமிருகத்தை பிரம்ப்புத்திரா நதியின் வெள்ளம் கெஹாத்தி நகருக்கு அருகிலுள்ள ராணிசாப்பூரி என்றஊரின் கரையில் கொண்டு சேர்த்ததுநதிக்கரையின் சேற்றுப்பகுதியில் புதையுண்டுசிக்கி கொண்டு வெளியே வரமுடியாமல் தவித்த அந்த காண்டாமிருகத்தை 7 நாட்கள் போராடி காப்பாற்றியிருக்கிறார்கள்அஸ்ஸாம் காடுகளில் காணப்படும் இந்த ஒற்றைகொம்பன்  5 வகை காண்டாமிருகங்களில் ஒன்று. இந்த வகை உலகில் அரிதாகி கொண்டுவரும் ஒரு அரிய விலங்கினம். உலகில் இருக்கும் 2000 மிருகங்களில் 95% அஸ்ஸாம் காடுகளில் இருப்பதாக கணக்கிட்டிருக்கிறார்கள். இதன் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகள் போல எலும்பாக இல்லாமல்  முடிகற்றைகள் இறுகியபகுதியாக இருப்பதாலும் அதிலுள்ள சில விசேஷ  மருத்துவ பொருட்களினாலும் மிக விலைமதிப்பு வாய்ந்தது. ஒரு கொம்புக்கு 2.25லட்சம் அமெரிக்கடாலர் வரை கிடைக்கும் என்பதால் அந்த காட்டுப்பகுதிகளிலிருக்கும் வீரப்பர்களுக்குஎப்போதும் இவைகளின் மீது ஒரு கண். அதுவும் இதுபோல் எதாவது விபத்தில் சிக்கி இறந்துவிட்டால் வேட்டையாடமலேயே  அவர்கள் வேலை மிக எளிதாகிவிடும். அதனால் வனப்பாதுகாவலர்கள் இந்த காண்டாமிருகத்தை காப்பாற்றி அதன் கூட்டத்துடன் சேர்க்க முயற்சிசெய்தனர். ஆனால் அது அவ்வளவு எளிதானாதாக இல்லை. கயிற்றினால் இணைத்து ஒரு டிராக்கடர் மூலம் இழுக்க முயன்றபோது

24/10/12

ஒபமா தோற்க போகிறாரா?


அமெரிக்க அரசியல் ஆடுகளம் சூடுபிடித்து விட்டது.. அடுத்த மாதம் 7 ம் தேதி நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி  ஒபாமா இரண்டாம் முறை போட்டியிடுவார் என  இந்த ஆண்டு துவக்கத்திலேயே அறிவித்துவிட்டது. குடியரசு கட்சி நீண்ட உட்கட்சி போராட்டங்களுக்குபின் ராமினியை தங்கள் வேட்பாளாராக அறிவித்தது மாநில மாநாடுகள்  நகர கட்சி கூட்டங்கள், என்ற நிலைகளை தாண்டி பிரசாரம் இப்போது தேசிய அளவிலான டி.வி விவாதங்களுக்கு வந்திருக்கிறது இதுவரை நடந்த பல்வேறு கருத்து கணிப்புகளில் இருவரும் சமமான நிலையில் இருந்தனர். கடந்த வாரம் நடந்த நேருக்கு நேர் விவாதத்தில், அதிபர் பராக் ஒபாமாவை குடியரசுக் கட்சி வேட்பாளர் மிட் ரோம்னி முந்தியுள்ளார்.90 நிமிட விவாதத்தை தொடர்ந்து, சி.என்.என் மற்றும் சி.பி.எஸ் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 67 சதவீதம் பேரின் ஓட்டுகள் மிட் ரோம்னிக்கு கிடைத்தது. ஆனால், ஒபாமாவுக்கு 25 சதவீத ஓட்டுகளே கிடைத்தது.


அமெரிக்காவில் 1960ம் ஆண்டு முதல், அதிபர் தேர்தல் நடக்கும் போது, வேட்பாளர்கள் தொலைக்காட்சி விவாதத்தில் நேருக்கு நேர் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை கூறுவார்கள். 3 முறை இதுபோன்ற விவாதம் நடக்கும். இதில் சிறப்பாக கருத்துக்களை முன் வைக்கும் வேட்பாளருக்கு உடனடியாக மக்கள் ஆன்லைன் மற்றும் போனில் ஓட்டு போடுவார்கள். அதிக ஓட்டு வாங்குபவருக்கு அது அவரின் பிரசாரத்துக்கு பெரிதும் பலம் சேர்க்கும். இம்மாதிரி விவாதங்களை நடத்துவது தேர்தல் கமிஷன்மாதிரியான ஒரு நடுநிலை அமைப்பு. பிரபல சானல்களின் அரசியல் விமர்சகர்கள் நடுவர்களாக இருந்து விவாதத்தை வழி நட்ததி இறுதியில் தங்கள் கருத்தையும் சொல்லுவார்கள். . கொலராடோவில் உள்ள டென்வர் நகர பல்கலைக்கழகத்தில்  முதல் விவாதம் நடந்தது. விவாதத்தை நேரடி ஒளிபரப்பு செய்தன. இது பல மில்லியன் டாலர் சமாசாரம். சானல்கள், அரசாங்கம், வேட்பாளார்கள் எல்லோருக்கும் நிறைய பணம்,  என்ன பேச வேண்டும் என்பதைத்தவிர, எந்த பாணியில், எந்த உடை அணியவேண்டும், கேமிராவை எப்போது பார்க்கவேண்டும், போட்டிவேட்பாளாரை எப்படி கண்களை தாழ்த்தி பார்க்க வேண்டும், கைகளை எப்படி உயர்த்தகூடாது என்பதையெலாம் பயிற்சி அளிக்க எக்ஸ்பர்ட்கள் உண்டு. இநத ஒபாமாவுக்கும் ராம்னிக்குமான  நடந்த முதல் சுற்று டெலிவிஷன் குஸ்தியில் ராம்னியே வெற்றி பெற்றார் என்பது மக்கள் கருத்து.ஏனென்றால் ஸ்டைல்பாயிண்ட்ஸ் என்று சொல்லப்படுகிற பர்சனாலிட்டி, பேச்சுத்திறன், ஆளுமை, அதிரடி இவற்றில் ராம்னி ஒபாமாவை ஒரு சில பாயிண்ட்களில் மிஞ்சி விட்டார் என்பதும் ஊடகங்களின் ஏகோபித்த கருத்து. அதில் உண்மை இருக்கிறது கென்னடி, கிளிண்டன் போன்ற முந்தைய ஜனாதிபதிகள் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு  இந்த ஸ்டைல் பாயிண்ட்கள் முக்கியமான காரணங்கள்.


இந்த முதல் விவாதத்தில் ஒபாமா, தற்போதைய பொருளாதார மந்தநிலையை போக்குவது பற்றி அதிகமாக பேசினார். ஆனால், மிட் ரோம்னி அமெரிக்க பொருளாதாரம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, நிதி தட்டுப்பாடு ஆகியவை குறித்து விரிவாக பேசினார். பொருளாதார மந்த நிலை யை போக்குவதில் ஒபாமா தோல்வி அடைந்து விட்டதாக குற்றம்சாட்டினார். இதற்கு ஒபாமாவால் சரியாக பதிலளிக்க முடியவில்லை.  விவாதம் நடந்த அன்று ஒபாமாவின் திருமண ஆண்டுவிழாநாள்.. ஆனால் மனுஷன் மிக டல்லாக இருந்தார்சதாரணமாகவே மிக நன்றாக பேசுகிறவர் அன்று சூப்பராகசொதப்பிவிட்டார். இறுக்கமான முகத்துடன் எப்படா இந்த விவாதம் முடியும்? என்று அலைபாய்ந்தது போலவே தோன்றினார்.


இந்த தேர்தலில் முன்வைக்கபடும் மூன்றே மூன்று முக்கியவிஷயங்கள்:  1. பொருளாதாரம் 2. வரிச்சுமை 3.ஹெல்த்கேர்

ஒரே நாளிலோ, நாலே வருஷங்களிலோ சரிசெய்யமுடியாத,மந்த கதியில் இருக்கும் அமெரிக்க பொருளாதாரதையும் , நாடு தழுவிய வேலையில்லா திண்டாட்ட்த்தை போக்க ஒபாமா பெரும் முயற்சி எடுத்திருக்கிறார்.     ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மீது ராம்னி வரிச்சுமையை ஏற்றி விடுவார். பணக்காரார்களுக்கு சலுகைகள் அறிவித்துவிடுவார்.கனடா, பிரிட்டன் போல்  நாடு தழுவிய ஹெல்த் இன்ஷூரன்ஸானஒபாமா கேர் திட்டத்தினால் தனியார் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் லாபம் குறையும்,  மருந்து கம்பெனிகளின், ஆஸ்பத்திரிகளின் கொட்டம் அடங்கும்.  அனைவருக்கும்   நல்ல மருத்துவ சிகிச்சைகிடைக்கும்  போன்ற  தன்னுடைய பாய்ண்ட்களை அவர் அழகாகச்சொல்லவில்லை. ஆனால் 4 ஆண்டுகள் ஒபாமா ஒன்றும் செய்யாமல் மக்களை ஏமாற்றிவிட்டார். நான்  வருமான வரியை மாற்றி அமைத்து தொழிற் துறையை மேம்படுத்தி பல மில்லியன் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்பு,தருவேன் என்பதை, எப்படி அதைச்செய்வேன் என்று சொல்லாமல் ஆர்பாட்டமாக பேசிய ரோம்னி மக்களை கவர்ந்துவிட்டார்.
 அமெரிக்கர்களுக்கு குத்துசண்டை பார்ப்பது ஒரு பிடித்த விஷயம். அதுவும் ஒவ்வொரு ரவுண்டிலும் மாறி மாறி போட்டியாளர் தோற்பதைத்தான் ஆர்வத்துடன் பார்ப்பார்கள். இது ஒரு மாதிரி செட் அப்ஃப்ளோரிடாவில் அடுத்த ரவுண்ட் ஒமாபா ஜெயிப்பார் பாருங்கள் எனறு சொல்லுபவர்களுமிருக்கிரார்கள்.
ஆனால் பெரும்பாலான அமெரிக்க மீடியாக்கள் இந்த ஆன்லைன் ஓட்டுக்கள் தொடர்ந்துவருஅம் கருத்துகணிப்பின் போக்கை மாற்றும் என்றுதான் கணிக்கின்றன

சரி இரண்டுபேரில் இந்தியாவிற்கு யாரால் அதிக நன்மை? இரண்டுபேரினாலுமே இல்லை. அவுட் சோர்சிங் முறையினால் இந்தியர்கள் அமெரிக்கர்களின் இடத்தை நிரப்பிவிட்டார்கள் எனறு ஒபாமாவும், அவுட்சோர்ஸிங் பணிகளினாலேயே கோடிகளை சம்பாதித்தாலும் இனி அதில் இந்தியாவை ஒதுக்கவைக்கபோவதாக ராம்னியும் தெரிவித்திருக்கிறார்கள். . ஆனால் ராவணனோ, ராமனோ (ராமினியோ) என  நாம்.இருக்கமுடியாது எனென்றால், சரிந்து கிடக்கும் அமெரிக்க பொருளாதாரம் நிமிர்ந்தால் பயன் பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. காரணம் நமது அன்னிய நாடுகளின் வர்த்தகத்தில் அமெரிக்காவிற்கு ஒரு முக்கிய இடமிருப்பதும், இங்குள்ள அன்னிய முதலீடுகளில் அமெரிக்கர்களுடையது கணிசமாக இருப்பதும் தான்.  நமக்கு தேவை அமெரிக்க பொருளாதாரத்தை காப்பற்ற போகும் ஒரு பிரெஸிடெண்ட்.