18/3/19

சீஸரின் மனைவி ..



இந்திய வான்படை 75 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றையும் , பாரம்பரியத்தையும் கொண்டது.   1932ம் ஆண்டு  அன்று  இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட இந்தப்படை . இந்திய  விடுதலைக்குப்  பிறகு  இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமானது.  இன்று  இந்திய வான்படை, 1.70 லட்சம் வீரர்களுடனும்   1,130 போர் விமானங்களுடனும்  1,700 மற்ற பயன்பாட்டு   விமானங்களுடனும்   உலகில் நான்காவது பெரிய வான்படையாகத்  திகழ்கிறது.  நமது  வான் படை வீரர்கள்  பல சாகச சாதனைகள்  செய்து பெருமையை  நிலைநாட்டியவர்கள்.

அண்மையில்  நடந்த ஒரு தாக்குதலில் பாக்கிஸ்தானின் சக்திவாய்ந்த F16  விமானத்தையே  மிராஜ் என்ற விமானத்தின் மூலம் தாக்கி விழ்த்தினதைக்கண்டு  உலகமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. காரணம் மிராஜ் 2000 வகை விமானங்கள் பழையவை. அவற்றை நமது HAL சக்தி வாய்ந்ததாக மாற்றி அமைத்திருந்ததால் அதன் மூலம் அமெரிக்கத் தயாரிப்பான F16 க்கூட விழ்த்த  முடியும்  என்பதைச்  செய்துகாட்டியது.   மிராஜ் தயாரிப்பாளர்களான இஸ்ரேல்  மட்டுமில்லை  உலகிலுள்ள அனைத்து விமானப்படையினரும் வியந்துபோன விஷயம் இது. (ரபேல் பிரச்சினையில் இந்தHAL க்குதான் நவீன விமானங்களைக் கையாள  போதுமான   கட்டமைப்பு       வசதிகள் இல்லை என்று ஏற்கனவேயிருந்த ஒப்பத்தந்திலிருந்து HAL  கழட்டிவிடப்பட்டு  ரிலயன்ஸ் போன்ற தனியார்நிறுவனங்கள்  சேர்க்கப்பட்டது  என்பது தனிக்கதை)
 ஆனால் சமீபத்தில் நடத்தப்பட்ட எல்லை தாண்டிய விமானப்படை தாக்குதல் பற்றிய விமர்சனங்கள் ,சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.  விமானத் தாக்குதலில் பலியானவர்கள் பற்றிய அறிவிப்பை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என இந்திய விமானப்படை தளபதி தனோவா  அண்மையில்    அறிவித்திருந்தார்.   ஆனால் இந்திய விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல்  ஆர்.ஜி.கே.கபூர் இலக்கு தாக்கப்பட்டது. ஆனால், எத்தனை பேர் இறந்தார்கள் என்பது தெரியவில்லை என்று செய்தியாளர்களிடம் சொன்னார்.

இந்தியாவின்  வான்வழித் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட சேதாரம் என்ன? எவ்வளவு பேர்  கொல்லப்பட்டனர் என்ற கேள்விக்கு இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்காமலிருந்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் வி.கே.சிங், அண்மையில் ‘‘பாகிஸ்தானில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தீவிரவாத முகாம் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில், 250 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றார்.  பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா இறந்தவர்கள் 200 பேர் என்று ஒரு கூட்டத்தில் சொல்லியிருக்கிறார்.  ஆனால்  இதுபற்றி பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா  சீதாராமனிடம்  கேட்கப்பட்டபோது  அரசின் வெளி விவகார துறைச்செயலர் பத்திரிகையாளார் கூட்டத்தில் அறிவித்ததுதான்  அரசின்  அதிகாரப்பூர்வமான  கருத்து என்று சொல்லியிருக்கிறார். .(இந்தச் செய்தியாளர் கூட்டத்தில் கேள்விகள் அனுமதிக்கப்படவில்லை)

இந்த தாக்குதல் அரசியலாக்கப்படுகிறது என்கிறார் ராகுல்காந்தி. தாக்குதல் விவகாரத்தில் விசாரணை தேவை என்கிறார் அகிலேஷ் யாதவ். விமானப்படை தாக்குதல் தொடர்பான ஆதாரத்தை வெளியிட வேண்டும் என்கிறார் மம்தா.. ராணுவம் பொய் சொல்லாது. நம் ராணுவத்துக்கு ஒட்டுமொத்த மக்களும் துணை நிற்பார்கள். ஆனால், மத்திய பா.ஜ அரசு உண்மை நிலையை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்கிறார் கெஜ்ரிவால்
இந்திய  எதிர்க்கட்சி தலைவர்களின் இக்கருத்துக்கள் பாகிஸ்தானை மகிழ்ச்சியடைய  வைத்துள்ளன. இதற்காக நம் எதிர்க்கட்சி  தலைவர்கள்  வெட்கி, தலைகுனிய வேண்டும் என்கிறார் பிரதமர் மோடி..  ஆக இரண்டு தரப்பும் இதை அரசியலாக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே  இந்த விஷயத்தை அரசியல் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
 இலக்குத் தாக்கப்பட்ட விபரங்கள் உடனடியாக வெளியிடப்படாவிட்டாலும்., சக்தி  வாய்ந்த அதிதொழில் நுட்பத்துடன் அந்த  இடம் பகலில் அடையாளம் காணப்பட்டு,  அதே இடத்துக்கு தொழில்நுட்ப உதவியுடன் இரவில் தாக்கக்கூடிய   லேசர்  குண்டுகளால்தாக்கப்பட்டிருக்கிறது.  அந்த இடம் ஒரு மதார்ஸா என்ற போர்வையில் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் இடம்  என்பதையும்  அங்கு 300 செல்போன்கள் இயங்குவதையும்  கண்டுபிடித்தறிந்து  குறிப்பாக அந்த இலக்கைத் துல்லியமாகத் தாக்கி,       கட்டிடத்தின்  மேற்பகுதியை துளைத்து     உள்ளே புகுந்து வெடித்து, சேதத்தை ஏற்படுத்தியது"    என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.
உலகெங்கும்  இதுபோல்  அதிரடி தாக்குதல் எதாவது நிகழ்ந்தால் உடனடியாக நிகழ்ந்ததற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம் என்று ஒரு பயங்கர வாத அமைப்பு அறிவிக்கும். அல்லது அந்த மாதிரி  அமைப்புகளின் இடங்கள் தாக்கப்பட்டால் அதைச்  செய்த அரசின் படைகள்  படங்களுடன் அந்தச் செய்தியை  வெளியிடும். ஆனால் தாக்குதல் நடந்திருப்பதை ஒப்புக்கொண்ட  பாக்கிஸ்தான்  அரசு உயிரிழப்பு, சேதம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.  இறந்தவர்கள் எங்கள் ராணுவம் இல்லை பயங்கரவாதிகள்தான்  என்று சொன்னால் அவர்கள்  பாக்கிஸ்தான் எல்லைக்கு ள்ளிருந்ததை உறுதி செய்வதாகிவிடும் என்பது காரணமாகயிருக்கலாம். இந்த நிலையில்  வெளிநாட்டு ஊடகங்களும் இந்த தாக்குதலைக்  கேள்விக்குறியாகியிருப்பது  இந்தச் சர்ச்சையை வலுப்படுத்துகிறது.   
 இந்நிலையில் பால்கோட் பகுதியில் தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பால்கோட் பகுதியின் செயற்கைகோள் எடுத்த புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த புகைப்படங்கள்  அமெரிக்காவின் சான்ஸ்ப்ரான்ஸ்கோவை சேர்ந்த பிளானட் லேப்ஸ் நிறுவனத்தால்  தாக்குதல் நடந்த  6 நாளைக்குப் பின்  எடுக்கப்பட்டவை.  அந்தப் படத்தையும் அதே இடத்தை கடந்த ஆண்டு எடுக்கப் பட்ட ஒரு  படத்துடன் ஒப்பீட்டு  அங்குள்ள கட்டிடங்களில்,  வனப்பகுதியில் மரங்களில்கூட எந்த மாறுதலும் இல்லை.  என்று செய்தியை வெளியிட்டிருக்கிறது.  தாக்குதலில் குறி தவறியிருக்கலாம் என்கிறார்கள் இந்த வல்லுநர்கள்.
புல்வாமா  தாக்குதலினால் கொதித்தெழுந்த  ஒவ்வொரு குடிமகனும்  இந்த பதிலடி விமானத்தாக்குதலினால்  மகிழ்ந்ததும்,  விமானி அபிநந்தன்  சாகசத்தால்  பெருமிதம் கொண்டதும் நிஜம்.  ஒன்றுவிடாமல் நாட்டிலிருக்கும்  எல்லா மீடியாக்களும்  அரசின் செயலைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் தாக்குதலின் விபரங்களை வெளிப்படையாக மக்களுக்குச் சொல்லுங்கள் என எதிர்க்கட்சிகள் கேட்பதை,அவர்கள்  ராணுவத்தைச்  சந்தேகிக்கிறார்கள்  நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று பிரதமரும் அவரது  கட்சிக்காரர்களும்  கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
‘நமது ராணுவத்தின் வலிமையை நாங்கள் ஒருபோதும் சந்தேகிக்கவில்லை. பிரதமர் கூறுவது போல் மத்திய அரசை  தர்மச்சங்கடப்படுத்தி,  எதிரி  நாட்டுப் படைகள் சந்தோஷப்படும்படியாகவும் நடந்து கொள்ளவும் இல்லை. அதேநேரம், ஒரு நாட்டின் ராணுவம், மற்றொரு நாட்டின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தும்போது, அதன் முடிவு என்ன? என்பதை மக்களுக்கு  தெரிவிக்கவேண்டியது அந்த அரசின்  கடமையில்லையா? . என்கின்றனர் எதிர்க்கட்சிகள்.
உயிர்ச் சேதம் இருப்பின் இத்தனை பேர் உயிரிழந்தார்கள் எனவும், இல்லையேல்,  உயிரிழப்பைத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை என்றோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.  அதுதான்  நமது  ஜனநாயகத்துக்கு ஆளும்  பொறுப்பிலுள்ளவர்கள்   அளிக்கும் மரியாதை.

அரசாளுவோருக்கு எவ்வளவு அதிகாரமிருந்தாலும்

 அவர்கள் சீஸரின் மனைவியாகத்தானிருக்க வேண்டும்

2/3/19

சர்ச்சைகளில் சிக்கும் புன்னகை அரசி



இதுவரை  உலகில் மனிதன் வரைந்ததிலேயே மிகச் சிறந்த ஓவியம்' என்றும், மிக விலை உயர்ந்தது என்றும் தினசரி பல ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது  என்று  வர்ணிக்கப்படுகிறது  பாரிஸ் நகரிலுள்ள லூவர் அருங்காட்சியகத்திலிருக்கும்
மோனாலிசா ஓவியம்

.அந்த மகத்தான ஓவியத்தை வரைந்தவர் இத்தாலியைச் சேர்ந்த ஓவிய மேதை  லியான்ட்ரோ டாவின்சி. இந்த ஓவியம் 1503 மற்றும் 1506 ஆண்டுகளின் இடையே வரையப்பட்டது என்று நம்பப்படுகிறது.500  ஆண்டுகளுக்குமேலாக போற்றப்படும் இந்த ஓவியம் பாராட்டுக்களைப் போலவே  தொடர்ந்து பல சர்ச்சைகளுக்கும் உள்ளாகியிருக்கிறது.

இரண்டுமுறை திருடப்பட்டு தேடிக்கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. முதல் முறை  இந்த ஓவியம். திருடியவரை இரண்டு ஆண்டுகள் கழித்து  கண்டுபிடித்தபோது அந்த இத்தாலியருக்கு கடும் தண்டனை எதுவும் கொடுக்கப்படவில்லை. நீதிமன்றத்தில்   “இந்த ஓவியம் எங்கள் நாட்டு ஓவியர் எழுதிய கலைச்செல்வம் அது பிரான்ஸில் இருப்பதை நான் விரும்பவில்லை.  எங்கள் தாய்நாட்டில் வைப்பதற்காகத்தான் திருடினேன்” என்று அவர் சொன்ன பதில் தான் காரணம்.  இரண்டாம் முறை திருட்டு சொத்தாக கைப்பற்றப்பட்டது ஆனால் திருடியவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 


இன்று பல லட்சம் டாலர்களுக்கு இன்ஷ்யூரன்ஸ் செய்யப்பட்டிருக்கும் இந்த ஓவியம்  துப்பாக்கி குண்டுகள் துளைக்கமுடியாத கண்ணாடிகளால் பாதுகாக்கப்படுகிறது. 

-என்ன மாதிரியானது என்று கண்டேபிடிக்கமுடியாத அதன் புன்னகை தான் இந்த ஓவியத்தின் தனிச்சிறப்பாக ஓவிய வல்லுநர்கள் கருதுகிறார்கள்.  ஓவியத்தில்  உதடுகள் வரைந்திருக்கும் முறை,கண்களின் ஓரத்தில் செய்யப்பட்டிருக்கும் கருப்பு ஷேட் போன்றவற்றினால் அந்தப் புன்னகை தனித்துவம் பெற்றிருக்கிறது.  அந்தப் புன்னகை சொல்வது சந்தோஷமா? சோகமா? நையாண்டியா எனப் பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது. 

லியான்ட்ரோ டாவின்சி  ஓவியர் மட்டுமில்லை கணிதம் விஞ்ஞானம்  அறிந்த மேதை. இவ்வளவு பெரிய அறிவாளியைக் கவர்ந்த, ஓவியமாகத் தீட்ட வைத்த முகம் யாருக்குச் சொந்தமானது, அது ஆணா, பெண்ணா? ஒருவேளை அது டாவின்சியாகவே இருக்குமோ? அதற்கு ஏன் புருவங்கள் இல்லை?  டாவின்சி  அந்த அழகுத் தேவதையை எங்குச் சந்திருப்பார்  எனப்  பல கேள்விகளும் அதற்குப் பதிலாக யூகங்களும் சர்ச்சைகளும் நீண்ட நாள் தொடர்ந்தன. இதற்கு முக்கிய காரணம் . டாவின்சி அவரது எல்லா ஓவியத்திலும்  ஏதேனும் குறிப்பை விட்டுச் சென்றிருக்கிறார் ஆனால் இதில் எதுவுமில்லை.

ஓவியத்திலிருப்பது  லிசா டெல் கியோகாண்டோ. அவர் , பிளாரன்டைனிலுள்ள பிரபல பட்டுவியாபாரி பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி என்கிறது ஒரு குறிப்பு. ஆனால் இதை ஏற்பவர்களைவிட மறுப்பவர்களே அதிகம்..


சில ஆண்டுகளுக்கு முன்  இத்தாலிய ஓவிய ஆராய்ச்சியாளர்  சில்வானோ வின்செடி என்பவர் உலகப் புகழ்பெற்ற மோனாலிசா ஓவியத்தின் மாடல் பெண் அல்ல ஒரு ஆண் என்று  சொல்லி ஓவிய உலகத்தையே திடுக்கிட வைத்தார்.  அவர் தனது ஆய்வு முடிவில் உலகப் புகழ்பெற்ற ஓவியம் மோனாலிசாவுக்கு போஸ் கொடுத்தவர் கியான் கியாகோமோ காப்ரோட்டி என்னும் ஆண். அவர் சுமார் 20 ஆண்டுகளாக லியோ நார்டோ டாவின்சியிடம் உதவியாளராக இருந்தார். அவரை முன்மாதிரியாக வைத்துத் தான் மோனாலிசா வரையப்பட்டுள்ளது என்றார்..நீண்ட நாள் சர்ச்சையிலிருந்த இந்த  விஷயம் பின்னர் ஒய்ந்துவிட்டது. 

ஒவியம் எழுதப்படும்போது அந்த மாடல் கர்ப்பணியாக இருந்திருக்கிறார் என்பது அவரது கன்னங்களில் தெரிகிறது என்று கூட சொல்லப்பட்டது. இப்படி   ஒவியத்தின் சிறப்புகளைவிட அந்தமாடலைப்பற்றி பேசப்பட்டது தான் அதிகம் 

லியான்ட்ரோ டாவின்சியின் ஓவியங்களிலேயே மிக அதிகமான விலை மதிப்புள்ள ஓவியம் மோனாலிசா . இந்த ஓவியத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது.? 


.இந்த ஓவியத்தில்  மோனோலிசாவின் புன்னகை  எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.. “உண்மையிலேயே புன்னகை இருக்கும்-  ஆனா இருக்காது” டைப். புன்னகைப்பது போல் தோன்றும்- ஆனால் தோன்றாது.   பார்ப்பவர் மனசுக்கேற்றார் போல் மாறும் மந்திரப் புன்னகை.  

இந்தப் புன்னகையை  பல விதமாக  ஆராய்ச்சியே செய்திருக்கிறார்கள்.  .சற்றுத் தொலைவைவிலிருந்து  பார்த்தால், ஆங்கிளை மாற்றினால், வெறும் கண்களை மட்டும் பார்த்தால் புன்னகைப்பது போல் தோன்றும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.  வரைந்த ஓவியர் லியோர்னோ டாவின்சி மிக சாமர்த்தியமாக இப்படித் தோன்றுவதற்காகவே வாய் அருகில் சிலவகையான கலர் டச் அப் கொடுத்திருக்கிறார் என்று  சொல்லுகிறார்கள் சில ஓவிய வல்லுநர்கள். ..  இந்த  ஓவியத்தை எங்கிருந்து பார்த்தாலும் மோனோலிசாவின் கண்கள் உங்களைப் பார்ப்பது போலிருக்கும் என்பது மற்றொரு சிறப்பாகச்  சொல்லபட்டுவந்தது.



அண்மையில் ஒரு ஜெர்மானிய ஆராய்ச்சிக்குழு  ஓராண்டு ஆராய்ச்சிக்கு பின் அறிவித்திருப்பது. “அப்படியெல்லாம் ஒன்றும்  இல்லை. படத்தில் “மோனோலிஸா எபஃகட்” எதுவுமில்லை.. அந்த ஓவியத்தின் கண்கள் வலது பார்ப்பது போல் தான் வரையப்பட்டிருக்கிறது.  யாரோ ஒரு பார்வையாளரின் கற்பனை கருத்தாக சொல்லப்பட்டு பரவலாக்கப்பட்டிருக்கிறது. இதுநாள்வரை அந்த நம்பிக்கையுடனேயே பார்வையாளர்கள் இந்த ஓவியத்தை ரசித்திருக்கின்றனர். 
நேரான பார்வையுடன் கூடிய ஒரு  ஓவியத்தின் கண்கள்.. நாம் வலது அல்லது இடது என்று எங்கிருந்து பார்த்தாலும் அதன் கண்கள் நம்மை நோக்குவது போல ஓவியங்களை எழுதுவது ஒரு கலை. இதற்கு “மோனாலிசா எபஃக்ட்” என்று பெயர். ஆனால்  மோனோலிசாவின் ஓவியம் அந்த வகையில் வரையப்படவில்லை என்கிறார்கள் ஜெர்மனியின்  பெய்லபீல்ட் பல்கலைக்கழக (Bielefeld University) ஆராய்ச்சியாளர்கள்.  இந்த ஆராய்ச்சி முடிவை குழு  ஐ பெர்ஸ்ப்ஷன்  (i perception)  புகழ் பெற்ற  ஆராய்ச்சி கட்டுரை இதழலில் வெளியிட்டிருக்கின்றனர்,
உலகம் முழுவதும் உள்ள ஓவியர்கள் இதுபற்றி விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். 

இந்த ஆய்வுக்காக  ஒரிஜினலின் அளவுகளிலேயே   எடுக்கப்பட்ட மோனோலிஸாவின் படத்தை  ஒரு பெரிய கம்யூட்டர் ஸ்க்ரீனில் 2000 பேர்களுக்கு காட்டி   சோதித்திருக்கிறார்கள்.. படத்தை தலையிலிருந்து  கண்கள் வரை 15 பகுதிகளாகப் பிரித்து  வெவ்வேறு தூரங்களிலிருந்து பார்வையாளர்களைப்  பார்க்கச்செய்திருக்கிறார்கள். அவர்கள் பார்த்து சொன்னதைப் பதிவு செய்திருக்கிறார்கள்.  படத்திலிருந்து அவர்கள் நிற்கும் தூரத்தையும் அளந்து குறித்திருக்கிறார்கள் இதன்மூலம் அவர்கள் நிறுவியிருக்கும் விஷயம் மோனோலிஸாவின் கண்கள் நேராகப்பார்க்கவில்ல. அது பார்வையாளரின் வலது புறம் தான் பார்க்கிறது. இப்படி கண்கள்  நேராகப் பார்க்காத படத்தில் மோனாலீஸா எபஃகெட் கொண்டுவர முடியாது.   இந்தப்படத்தில் அது இல்லை.. அது ஒரு வளமான கற்பனை என்பது தான். 
அறைக்குள் வருபவர்களை அவர்கள்  எங்கிருந்தாலும் மோனாலிஸா  பார்க்கிறாரோ இல்லையோ  ஆண்டுதோறும் உலகெங்கிலிருந்து வரும் அறுபது லட்சம் பார்வையாளர்கள் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தி வெளியானதால் இந்த ஆண்டு அது  இன்னும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது  



பேனாக்களும் பேசுகின்றன



ஒருவரின் எண்ணங்களை எழுத்துக்களாக்குவதில்  பேனாவிற்கு ஒரு முக்கிய இடமுண்டு.. பறவையின் இறகு முனை,  முனை கூராக சீவப்பட்ட கட்டைகள், பொருத்தப்பட்ட உலோக நிப்பை மையில் தொட்டு எழுதும் கட்டைப்பேனாக்கள் எனப் பல பரிணாம வளர்ச்சியைம்  நீண்ட சரித்திரத்தையும் கொண்டது  பேனா.  இந்த எழுதுகோல்    இங்க்கையும் நிப்பையும் ஒருங்கே கொண்ட பவுண்டன் பேனாவானது 1867ல் தான். 

ஸ்பிரிங், ரோலர், ஜாட்டர்,  ஜெல் என்று பலவிதமான  பால்பாயிண்ட் பேனாக்களைப் பயன்படுத்தும் இன்றைய தலைமுறையினரில் பலர் மைநிரப்பி எழுதும் பேனாக்களை பார்த்தே கூட இருக்கமாட்டார்கள். தேர்வு எழுதப்போகும் குழந்தைகளுக்காக,  ஒரு பொட்டுக்கூட சிந்திவிடாமல் பில்லரினால் எடுத்து  பேனாவில் நிரப்பி நிப்பில் இங்க் சரியாக வருகிறதா என்று சோதித்தபின் பூஜையில் வைத்து மாணவர்களுக்குக்  கொடுத்த  சென்ற தலைமுறை பெற்றோர்கள் கூட மறந்து போன இந்தப் பவுண்டன் பேனாக்கள் இன்னும் தயாரிக்கப்படுகிறது, விற்கப்படுகிறது என்பது தான் ஆச்சரியம்,
பார்க்கர், வாடர்மென், லெமி மான்ட்பிளாங்க் போன்ற உலகப் புகழ்பெற்ற  நிறுவனங்கள் இன்னும்  பவுண்டன் பேனாக்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சாதாரண பேனாக்களை மட்டுமில்லாமல் மிக விலையுயர்ந்த பேனாக்களைத் தயாரிக்கிறார்கள்  வைரங்கள் பதித்தது, தங்கம்,  வைர நிப், கையால் உருவங்கள் செதுக்கப்பட்ட பேனாக்கள். ஒவ்வொன்றிலும் தனித்தனி வண்ண ஓவியங்கள்  இப்படிப்பல வகைப் பேனாக்கள். எழுத மட்டுமில்லாமல் கலைப் பொருளாக சேர்ப்பவர்கள் இந்தப் பேனாக்களை வாங்குகிறார்கள். 

மான்ட்பிளாங்க்  என்ற நிறுவனம் மிக விலையுர்ந்த பேனாக்களைத் தயாரிப்பவர்கள். (இந்தியாவில் குறைந்த பட்ச விலை ரூ51,575)  ஆண்டு தோறும் தேசியத்தலைவர்கள், புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்கள்,  எழுத்தாளர்களை கௌரவிக்க அவர்கள் பெயர், அல்லது கையெழுத்துப் பொறிக்கப்பட்ட  “லிமிட்டட் எடிஷன்” என்று அழைக்கப்படும் பேனாக்களைக் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே  வெளியிடுகிறார்கள். மிக விலையுயர்ந்த இந்தப் பேனாக்களை  வாங்க   உலகின் கோடிஸ்வர வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி காத்திருக்கிறார்கள் .
இந்த ஆண்டு 17ஆம் நூற்றாண்டு சீன மன்னரின் நினைவாக  5 தங்கப்பேனாக்கள் மட்டும் உருவாக்கியிருக்கிறார்கள். ஒரு பேனாவின் விலை   12 கோடிக்கும் மேல்.
 இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மான்ட்பிளாங்க் நிறுவனம்  இம்மாதிரி  விசேஷ பேனாக்கள் வாங்கியவர்களை உலகின் பல பகுதிகளிலிருந்தும்  சுவிஸ்ர்லாந்துக்கு விருந்தினர்களாக அழைத்து ஆடம்பர ஹோட்டல்களில் தங்க வைத்து   தங்கள் தொழிற்கூடத்தை காட்டினார்கள். 
ஹாலிவுட் நடிகை மர்லின் மன்ரோவிலிருந்து அதிபர் ஒபாமா வரை  நினைவுப்பரிசாக லிமிட்டட் எடிஷன் பேனாக்கள் தயாரித்திருக்கும் இவர்கள்  சில  பிரச்சினைகளிலும் சிக்கியிருக்கிறார்கள்.  
2010ஆம் ஆண்டு அண்ணல் காந்தியின்  தண்டி யாத்திரையின் நினைவாக  மஹாத்மா காந்தி 241  என்ற பேனாவை வெளியிட்டார்கள். 241 என்பது அவர் தண்டி யாத்திரையில் பயணம் செய்த மைல்களைக் குறிப்பது. அந்தப் பேனாவின் தங்க நிப்பில் காந்தி கைத்தடியுடன் நடக்கும் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. பேனாவின் விலை 14 லட்சம்.
‘எளிமையான வாழ்க்கையின் சின்னமாக வாழ்ந்த காந்தியின் பெயரால் இப்படி ஒரு ஆடம்பரப் பேனா வெளியிட்டிருப்பது  அவரது கொள்கைகளுக்கு முரணாது மட்டுமில்லை அவரை அவமதிக்கும் செயல்  என்பதால் இந்த நிறுவனம் பேனாக்களை தயாரிப்பதையும் விற்பதையும் தடைசெய்ய வேண்டும்’ என கேரள நீதி மன்றத்திலும்  உச்ச நீதிமன்றத்திலும்  வழக்குகள் தொடரப்பட்டன.  மான்ட்பிளாங்க் நிறுவனம் இந்தப் பேனாக்களின் விற்பனை மூலம்  9 லட்சம் டாலர்கள்  அரசு சொல்லும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்க இருப்பதாகத் தெரிவித்தது  ஆனாலும் வழக்கை விசாரித்த  நீதி மன்றம் பேனாக்களைத்  தடைசெய்துவிட்டது.  நீதிமன்றம் தடையாணையில்  சொன்ன  காரணங்களில் ஒன்று  காந்தியின் உருவம் 1950 சட்டங்களின் படி  தவறாகப் பயன்படுத்தக்கூடாத  தேசிய சின்னம். அதை வணிக ரீதியாகப் பயன்படுத்தமுடியாது. என்பது.   மான்ட் பிளாங்க் நிறுவனம் மன்னிப்பு கோரி பேனாக்களின்  தயாரிப்பையும் விற்பனையையும் நிறுத்திவிட்டது. 
அண்ணல் காந்தி நீண்ட நாட்களுக்கு  மெல்லிய கட்டையின் நுனி கூராக்கப்பட்ட மைதொட்டும் எழுதும் பேனாவைத்தான் பயன்படுத்திக்கொண்டிருந்தார்.  மவுன்ட் பேட்டனுக்கு கூட அந்தப் பேனாவினால் தான் கடிதம் எழுதியிருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் நான் எழுதும் அழுத்தத்தில் நிப்புகள் வளைந்து போகின்றன. இது வசதியாகயிருக்கிறது என்பது தான். 
ஆந்திர மாநில ராஜமந்திரியில் தங்க ஆபரணங்கள் செய்து கொண்டிருந்த கே.வி ரத்தினம் என்பவர் 1932ல் பேனாக்கள், நிப்புகள்  தயாரிக்கும் தொழிலைத் தொடங்கியிருந்தார். காந்திக்கு எபொனைட் என்ற பொருளில்(பிளாஸ்டிக் அப்போது வரவில்லை)  தாங்கள் தயாரித்த பேனாவை அன்பளிப்பாக அனுப்பியிருந்தார்.  அதைப்பயன் படுத்திய காந்தி அதன் நிப்பு வளையாமலும், பேனாவின் வடிவம் எழுத வசதியாகியிருப்பதாகவும் ரத்தினத்துக்குக் கடிதம் எழுதினார்.  இன்று பேனாக்களும், பால்பாயின்ட் பேனாக்களும் தயாரிக்கும் அந்த நிறுவனம் இந்தக் கடித்ததை தங்கள் ஷோரூமில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்   தன் வாழ்நாளின் இறுதிவரை ராஜமந்திரி ரத்தினம் தயாரித்தப் பேனாக்களைத்தான் காந்தி பயன்படுத்திக்கொண்டிருந்தார்.,  அந்தப்பேனாக் களில் சிலவற்றை இன்றும் காந்தி மியூசியங்களில் பார்க்கலாம்.
காந்தியைப்போலவே  ராஜாஜி  இந்திராகாந்தி  போன்ற பல தலைவர்கள் ஒரே மாதிரியான பேனாக்களைத்தான் தொடர்ந்த பயன் படுத்தியிருக்கின்றனர்.  சௌகரியமா, சென்டிமென்டா என்பது தெரியாவிட்டாலும் அந்தப்பேனாக்கள்  அவர்களின் அடையாளமாகிப்போய்விட்டது. 
கலைஞர் கருணாநிதி  பால்பாயிண்ட் உபயோகித்து இல்லை.    சென்னை பிராட்வே பகுதியில் இருக்கும் ஜெம்&கோ  விற்பனை செய்யும்  வாலிட்டி(Walilty) பேனாக்களை மட்டுமே எப்போதும் பயன்படுத்தி வந்தார். எழுதிக்கொண்டிருக்கும்போது இங்க் தீர்ந்தால் அவர் எழுதும் வேகம் தடைப்படும் என்பதால்  அருகிலேயே இரண்டு பேனாக்கள் தயாராகயிருக்கும். .சற்று கனமான பேனாவாகயிருந்தாலும் கலைஞருக்கு நெருக்கமான விஷயங்களில்  இந்தப் பேனாக்களும் ஒன்று.  இதை அவரிடமே பரிசாக கேட்டுப்பெற்றவர்களில் சிலர்  கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் இந்துமதி.
அவரது இறுதியாத்திரையின் கடைசிக் கட்டத்தில்  எப்போதும் தாத்தாவின்  சட்டைப்பையிலிருக்கும் பேனா மிஸ்ஸிங் என்பதைக்கவனித்த பேரன் ஆதித்தியா (கனிமொழியின் மகன்), ஓடிப்போய் ஒரு பேனாவை அவரின் சட்டைப்பையில் சொருகிய நெகிழ்ச்சியான காட்சியை டிவியில் பார்த்தது நினைவிருக்கலாம். 
பேனாக்கள் தனிமனித உணர்வுகளில் மட்டுமில்லை நாடுகளின் சரித்திரங்களிலும்  முக்கிய இடம்பெற்றவை.  
இந்திய அரசியல்  அமைப்புச்சட்டதின் இறுதி வடிவம்  முடிவானதும் அதன் முதல் பிரதியை அழகான கையெழுத்தில் தயாரிக்கும் பணி  பிரேம் பெஹாரி ரெய்ஸ்டா என்ற கையெழுத்துக் கலைஞருக்கு(calligraphist ) வழங்கப்பட்டது. இதற்காக பணம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் பெரிய கெளரவமாக்கருதி  ஆறு மாத காலம் உழைத்த  இந்த  கலைஞர் அதை எழுதப் பயன்படுத்தியது வெவ்வேறு 254  பேனா நிப்புகள். இந்த நிப்புகளையும், அதுபொருத்தப்பட்ட பேனாக்களையும் டெல்லி அருங்காட்சியகத்தில் பார்க்கலாம்.
உலகின்  பல சுவையான வரலாறுகளை எழுத உதவிய கருவியான  பேனாவின் வரலாறும் சுவாரஸ்யமாகத்தான்  இருக்கிறது,



27/1/19

அலஹாபாத் அழகாகிக்கொண்டிருக்கிறது


4 நகரங்கள்,  இரண்டுகோடி. பக்தர்கள் ஒரே திருவிழா

கங்கையும் யமுனையும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதியும்  சங்கமிக்கும்  இடத்தில் 1580ஆம் ஆண்டு, மன்னர் அக்பர் புதிய நகரம் ஒன்றை உருவாக்கி, அதற்கு 'இலாஹாபாத்' என்று பெயரிட்டார். பின்னர்,  அது ஷாஜகான் காலத்தில் 'அலகாபாத்' என்று மாற்றப்பட்டதாக வரலாறு  சொல்லுகிறது. இப்போது. அதன் புதியபெயர்  பிரயாக்ராஜ்:

இந்த பிரயாக்ராஜ் இப்போது மிக அழகாகிக்கொண்டிருக்கிறது. புதிய சாலைகள்,, பாலங்கள் கட்டிடங்கள் மட்டுமில்லை. எப்போதும் சற்று அழுக்காகவே இருக்கும் நகரின் பல தெருக்களின் சந்துகளின் சுவர்களைக்கூட அழகான ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. பெரிய அளவில்  தெய்வ, மற்றும் இயற்கை காட்சிகள் வண்ணப்படங்களுடன் ஒரு  ஓவியகண்காட்சி போலிருக்கிறது.






12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது கும்பமேளா என்ற திருவிழா இதை  ஆர்த கும்பமேளா அல்லது  பூர்ண கும்ப மேளா என்கிறார்கள்  6 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது. அர்த்த கும்ப மேளா.  இந்த கும்பமேளா ஹரித்துவாரில் முதலில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து பிரயாக், நாசிக், உஜ்ஜயினி நகரில் நடைபெறும் மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகப் புண்ணியம்  என்பதால்   பிரயாக்ராஜ் நகரின்(அலஹாபாத்) விழா மிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டு அர்த்த கும்ம மேளா  ஜனவரி 15  மகரசங்கராந்தி தினத்தன்று அதிகாலை 4 மணிக்குத் திரிவேணி சங்கமத்தில்  பக்தர்கள்,,சாதுக்கள் என 2 கோடி பேரின்   புனித நீராடலுடன் தொடங்கியிருக்கிறது என்கிறது கும்பமேளா ஆணையம். இந்த விழா மார்ச் 4ஆம் தேதிவரை  நடைபெறும்.


இந்த நகரங்களில் மட்டும் ஏன் கும்பமேளா நடைபெறுகிறது? என்பது ஒரு சுவாரஸ்யமான கதை. இந்த நகரங்களில் மட்டும்  அமுதம் சிந்தியிருக்கிறது. . புராணக் கதையில் தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபோது, இந்திரனின் மகன் ஜெயந்தனுக்கு அவசரம் தாங்கவில்லை. பறவை வடிவில் வந்து அமுதக் கும்பத்தைத் தூக்கிக்கொண்டு பறந்தான். அசுரர்கள், வாயு வேகத்தில் அவனைத் தொடர்ந்தார்கள். இருவருக்கும் இடையே பன்னிரண்டு நாட்கள் (அதாவது பன்னிரண்டு வருடங்கள்) இழுபறிப் போர் நடந்தது. அந்தச் சமயம் சந்திரன் கும்பத்திலிருந்து அமுதம் சிந்தாமல் தடுக்க முயற்சி செய்தான். சூரியன், கும்பம் உடைந்து விடக்கூடாதே என்று வருத்தப்பட்டான். பிரகஸ்பதி அசுரர்கள் அபகரித்துச் சென்றுவிடாமல் காப்பாற்ற முயன்றான். சனி பகவானோ, ஜயந்தன் ஒரே மிடறில் சாப்பிட்டுவிட்டால் என்ன செய்வதென்று கவலைப் பட்டான். இப்படி நால் வரும் கூடி முயன்றும் நான்கு இடங்களில் அமுதம் சிந்திவிட்டது. அதன் விளைவால் அந்த இடங்களின் புனிதம் பலமடங்கு உயர்ந்தது. அந்த இடங்கள்தான் ஹரித்வார், பிரயாகை, உஜ்ஜயினி, நாசிக் ஆகியவை.. அதனால் அங்குள்ள நதியில் குறிப்பிட்ட நாட்களில்  நீராடினால் புண்ணியம் என்று நமப்ப்படுகிறது


உலகிலேயே மிகப்பெரிய எண்ணிக்கையில் மக்கள் கூடும்  இந்த நிகழ்விற்கு உலகின் மிகப்பெரிய கலாச்சார மற்றும் சமய நிகழ்வு என்ற பெருமையை யுனெஸ்கோ அளித்திருக்கிறது.


ஓவ்வொரு கும்ம்மேளாவிற்கும் பாதுகாப்பு, மற்றும் சுகாதார ஏற்பாடுகளுக்காக மாநில அரசுதான் செலவிடும் என்றாலும், இந்த ஆண்டு யோகி ஆதித்தனார் அரசு  4300 கோடி பட்ஜெட்டில் திட்டங்களை உருவாக்கிக் கடந்த ஆண்டு முழுவதும் 1000 கணக்கான அதிகாரிகளுடன்  அதைச்செயலாற்றிக்கொண்டிருக்கின்றது புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம், 6 வழிச்சாலைகள் மேம்பாலங்கள் என்று அசத்திக்கொண்டிருக்கிறார்கள். நகரம் முழுக்க சாலைகள் விரிவுபடுத்தப் பட்டுள்ளன, மேம்பாலங்கள் கட்டப் பட்டுள்ளன. மேளா நடைபெறும் பகுதிக்குள் 300 கிலோ மீட்டர் நீளத்துக்குச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் நகரம் முழுக்க பெரிய கார் நிறுத்தும் வளாகங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.


கங்கையாற்றங்கரையில் 250 கி.மீ நீளம் கொண்ட ‘கும்ப்நகரி' என்ற தற்காலிக  பெரிய  கூடார நகரம் உருவாக்கப் பட்டுள்ளது.  பாதுகாப்பு தேவைகளைக் கையாள்வதற்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும், துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. விழா நாட்களில்  நகரில் அசைவம் சாப்பிட  அனுமதியில்லாதால் . இவர்களுக்கும்  அனுதியில்லை 
•ஏழு வார காலத்திற்கு நடைபெறும் இந்த ஆண்டுக்கான விழாவில் 2 கோடி பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செளதி அரேபியாவுக்கு வந்த ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம்.

இந்த கும்மமேளாவிற்காக  இமயமலைப்பகுதிகளிலிருந்து சாதுக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அவர்களில்  பல குழுக்கள். பிரிவுகள். அரை ஆடைஅணிந்தவர்கள்,, அதுவுமில்லாதவர்கள்  ஆயுதங்களுடன், வாதியங்களுடன்  இப்படி பலவகையான குழுக்கள். இவர்கள் கங்கைக்கரையிலேயே 50 நாளும் தங்கிவிடுவார்கள்.


இவர்கள் தங்க வசதியாக தனித்தனிக் கூடாரங்கள்,  அதில் மின் வசதி நீண்ட வரிசையில்  டாய்லெட்கள். சுத்தமான குடி நீர்  போன்ற எல்லா வசதிகளையும்  செய்திருக்கிறார்கள்.  இந்த சாதுகளுக்கும், மதம் சார்ந்த குழுவினர்களுக்கும்  அவர்களே உணவு தயாரித்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
இவர்களுக்காகவே  முகாமில் 160 நியவிலைக்கடைகள். இதில் மத முகாம்களுக்கு இலவசம். மற்ற பத்தர்களுக்கு நியாவிலையில்  அரிசி கோதுமை மாவு சர்க்கரை வழங்கப்படுகிறது. இதற்காகத் தற்காலிக ரேஷன் கார்ட்கள் தரப்பட்டிருக்கின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கான சப்ளைகளைத்தர உள்ளேயே ஒரு கோடவுனுமிருக்கிறது.


100க்குமேற்பட்ட மருத்துவர்களுடன் 10 சிறு மருத்தவ மனை  எக்ஸ்ரே எடுக்கும் வசதிகள், பல் மருத்துவர்கள்,  தவிர 80 ஆயுர்வேத மருத்துவர்களும் தயாராக யிருக்கின்றனர். இவர்களைத்தவிர 80 ஆம்புலன்ஸ்கள்   நதியையில் மிதக்கும் 9  ஆம்புலன்ஸ், ஒருவிமான ஆம்புலன்ஸ்  எல்லாம்  அவசரத்தேவைகளை  சமாளிக்கக் காத்திருக்கிறது..



இம்முறை உபி   முதல்வரின் நேரடிப் பார்வையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய அமைச்சர்களும், பல விஐபிகளும் விழாவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..வி.ஐ.பிக்கள் ஹெலிகாப்டரில் வந்து செல்ல வசதியாக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் பல பகுதிகளில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு..

வி.ஐ.பிக்கள், முக்கியப் பிரமுகர்கள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்  தங்குவதற்கு வசதியாக 4,000 சொகுசு  கூடாரங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. 5 நட்சத்திர ஹோட்டல் அறைகளுக்கு இணையான வசதிகளுடன் இருக்கும் இந்தச் சொகுசு குடில்களில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாயில் இருந்து 24,000 ரூபாய் வரை கட்டணம் 

சுருக்கமாகச் சொல்வதானால் கும்மமேளாவிற்காக அலகபாத் நதிக்கரையில்  சகலவசதிகளுடன் ஒரு நகரையே நிர்மாணித்திருக்கிறார்கள்..


கும்பமேளா காலத்தில் திரிவேணி சங்கமத்தில் நீராடியவர்களுக்குப் புண்ணியம் சேருகிறதோ என்னவோ  அலஹபாத் நகரம்   இப்படி ஒரு புதிய பெயருடன் புதுப்பொலிவைப்பெற  நிச்சியமாகப் புண்ணியம் செய்திருக்கிறது

கடவுள்களாக வாழும் கலைஞன்



இன்று  நம் மனதில் பதிந்திருக்கும்,வழிபடும் சரஸ்வதி, லஷ்மி முருகன் போன்ற தெய்வங்களின் உருவங்களை இந்த உலகுக்கு அந்த வடிவில் அறிமுகப்படுத்தியவர் இராஜா ரவிவர்மா.
தன் வாழ்நாளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களைப் படைத்திருப்பதாகச்   சொல்லப்படும் இந்த ஓவியனின் அத்தனைப் படைப்புகளைப் பற்றிய விபரங்கள் இன்று ஒரே இடத்தில் இல்லை. மஹாபாரதம், இராமாயணம், புராணக்கதை மாந்தர்களைத்தவிர அவர் எண்ணற்ற படங்களை  வரைந்திருக்கிறார். அவை இவர் பெயர் இல்லாமல் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல அரண்மனைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.
சாகுந்தலம் போன்ற காவியத்தின் காட்சிகள் இவரது ஓவியங்கள் மூலம் கவிதைகளாயின.  இவர் வரைந்த பெண்களின் கண்கள் உணர்ச்சிகளை மட்டுமில்லை,அந்த உருவங்களும் பெண்ணின்உடல் மொழியைப் பேசின.  இவரது ஓவியங்களில் அந்த இடத்தின் சூழல், அணிந்திருந்த ஆடைகள், தரை, சுவர் ஒளி நிழல் என எல்லாம் மிக நுணுக்கமாக வரையப்பட்டிருக்கும்.  அழகான பெண் என்றால் அவர் ரவி வர்மாவின் ஓவியம் போல என வர்ணிக்கப்பட்டார். இதை வரைய எவ்வளவு காலம் பிடித்திருக்கும் என்ற எண்ணவைக்கும் பல படங்களை இவர் சிலமணி நேரங்களில் வரைந்து தள்ளியிருக்கிறார். அதனால் தான் வாழ்நாளில் அத்தனை படங்களை வரைய முடிந்திருக்கிறது.

திருவனந்தபுரம் அருகிலிருக்கும் கிளிமானுர் ஒரு சின்ன ஜமீன். அன்றைய திருவிதாங்கூர் ராஜ வம்சத்துடன் திருமணத் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளும் உரிமை பெற்ற குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் 1848ல் பிறந்தவர் ரவி வர்மா. மிகச்சிறு வயதிலேயே கிளிமானுர் அரண்மனைச்சுவர் முழுவதும் கரித்துண்டால் படங்களாக வரைய முயன்றுகொண்டிருந்த இவரின் ஆர்வத்தையும் ஓவியத் திறனையும்  கண்டுபிடித்தவர் இவரது மாமா ராஜா வர்மா. அவரது ராஜா பட்டம் தான்  மறுமக்கத்தாயம் என்ற தாய்வழி மரபுப்படி பின்னாளில் இவரை  அடைந்தது.

மாமா  ராஜ ராஜா  வர்மாவே ஒரு ஓவியராக இருந்ததால், ஓவியத்தில் மிக ஆவர்வம் கொண்ட மருமகனை திருவிதாங்கூர்  மன்னர்  ஆயில்யம் திருநாளிடம்  14 வது வயதில் ஒப்படைத்தார். அங்கு அரண்மனை  ஓவியராக இருந்த தமிழர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் கற்றபின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடம் தைல வண்ண ஒவியநுணுக்கங்களை கற்றார். உலகம் வியந்த இந்தக் கலைஞனுக்கு குருவாகயிருந்தவர்கள்  தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.



திருவிதாங்கூர் மன்னரின் ஆதரவுடன்.   இளம் வயதிலேயே இவரது படங்கள் வெளிநாட்டு ஓவிய கண்காட்சிகளுக்கு அனுப்பப்பட்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறது  ஓவியத்தில் தீராத ஆர்வம் கொண்ட ரவி வர்மா ஒரு காலகட்டத்துக்குப்பின் தானாகக் கற்றுக்கொண்டதுதான் அதிகம்.

இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அந்தக் காலகட்டத்தில் இந்திய ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ணங்களை ஓவியங்களில் பயன்படுத்தி வந்தனர் அந்த உத்திகளைத் . தியோடோர் ஜென்சன் என்னும் ஐரோப்பியர்  1868 இல் அரண்மனை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையையும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார்.
 தேடித்தேடிச் சேகரித்த ஐரோப்பிய ஓவியங்கள், புத்தகங்கள் இவருக்கு உதவின.  வண்ணங்களின் கலவை, ஓவியத்திலிருக்கும் உடல் பரிமாணம் இவைகள் தான் ஒரு ஓவியத்தின் கலைநயத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை உணர்ந்த ரவி வர்மா அதை தன் ஓவியங்களில் ஐரோப்பிய முப்பரிமாண ஓவியப்பாணியை புகுத்தி தனக்கென ஒரு ஓவியப்பாணியை உருவாக்கிக்கொண்டார்.  முதல் முறையாக இந்திய ஓவியங்களில் முப்பரிமாணத்தில் கடவுளர், இதிகாசக்காட்சிகள் தைல  ஓவியங்களாயின.

 10 ஆண்டுகளுக்குமேலாக தன் கிளிமானூர் அரண்மனையிலேயே படங்களை வரைந்து தள்ளிக்கொண்டிருந்த ரவிவர்மாவுக்கு  பரோடா மன்னர். சத்யாஜிராவ் கெய்க்வாட் (Sathyajirao Gaekwad) அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் உருவாக்கிக்கொண்டிருக்கும்  மிகப்பெரிய அரண்மனையின்  கூடங்களை ரவி வர்மாவின் ஓவியங்களால்  அலங்கரிக்க விரும்பினார்.. அதற்காக அந்த அரண்மனையில் 10 ஆண்டுகள் தங்கி ஓவியங்களை வரைந்திருக்கிறார்.

தொடர்ந்து மைசூர் சமஸ்தானத்தின் அழைப்பு. இப்படி மன்னர்கள், பிரபுக்களின் ஆதரவுடன் அவர்கள் படங்களையும் ,ஆங்கிலேயே அதிகாரிகளையும் வரைந்து கொண்டிருந்தாலும், அவரது சில சிறந்த படைப்புகள் அரண்மனைகளில்தான்  பிறந்தவை என்றாலும்  தன் படைப்புகள் சதாரண மனிதர்களை அடையவில்லையே என்ற ஆதங்கம் ரவி வர்மாவுக்கு இருந்தது.  அப்போது அவருக்கு எழுந்த எண்ணம் தான் அன்று ஜெர்மனியில் அறிமுகமாயிருந்த கான்வாஸில்  . வரைந்த ஓவியங்களை அதே வண்ணங்களுடன் காகிதத்தில்  அச்சிடும்  முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்தி தன் படங்களை அச்சிடவேண்டும் என்பது.
தன் சேமிப்பு அனைத்தையும் மூதலீடு செய்து 1894ல் பம்பாயில் ஒரு அச்சகத்தைத் நிறுவினார்.அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட முதல்  ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம்.



 அழகான படங்கள் நிறைய அச்சிடப்பட்டும் அச்சகம் லாபத்தில் இயங்கவில்லை. 1896ல் அதை புனா அருகிலுள்ள ஒரு சின்ன நகருக்கு   மாற்றியும் தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்தது அந்த அச்சகம்.  அச்சு இயந்திரங்களை நிறுவியபோது அவரிடம் பணியிலிருந்த ஜெர்மனியாருக்கே அதை விற்றுவிட்டு தனது ஊரான கிளிமானுருக்குத்   வருத்தத்துடன்  திரும்பிய  இந்த ஓவிய மேதையின் இறுதிக்காலம் ஒரு மோசமான ஓவியத்தைப்போலத்தான் இருந்தது.



ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்று பிரபல ஓவியர்களைச் சந்திக்க வேண்டும்  என்ற இவரது ஆசை நிறைவேறவில்லை.  அந்த நாட்களில் கடல் தாண்டி பயணம் செய்தால் திரும்பியபின் கோவில்களுகச் செல்லும் உரிமை தடை செய்யப்படும்  என்ற சமூக நிராகரிப்பைச் சந்திக்கவிரும்ப வில்லை அவர்..
அச்சகத்தை வாங்கியவருக்கு தன் கடவுளர் படங்களை அச்சிடும் உரிமையைக்கொடுத்திருந்தார். அதன் விளைவாகத்தான் கடந்த நூற்றாண்டில் காலண்டர்களாகப் பிறந்து பல இந்துக்குடும்பங்களின்  பூஜை அறையில் தெய்வங்களாக இடம்பெற்றிருக்கிறது இவரது ஓவியங்கள்.

எல்லா நல்ல கலைஞர்களைப்போல பாராட்டுகளுடன் கண்டனங்களையும் சந்தித்தவர் ரவி வர்மா.. மேற்கத்திய பாணியைப்புகுத்தி நம் பாரம்பரிய சித்திரகலையைச்சிதைத்துவிட்டார்,  நமது தெய்வங்களை கொச்சைப்படுத்திவிட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டார். அவரது ஓவியங்கள் இந்திய  கலாச்சாரத்தின் வெளிப்பாடற்றவை என்று விவேகானந்தரும், இந்திய ரசனையையும் அதன் கலைப்பண்பாட்டையும் தரம் தாழ்த்தியவர் என்று அரவிந்தரும்  எழுதியிருக்கிறார்கள்.

விமர்சனங்கள் எப்படியிருந்தாலும் சாமானிய மனிதனை ஓவியங்களை ரசிக்க வைத்த கலைஞன் அவன். .இன்றைக்கும் ஓவியராக விரும்புவர்களுக்கு  ஆர்வம்  ரவி வர்மாவின் படங்களிலிருந்துதான் துவங்குகிறது.

ஒரு நல்ல கலைஞனின் படைப்பு காலத்தால் அழிவதில்லை என்பதற்கு, ரவி வர்மா  இறந்து 100 ஆண்டுகளுக்குப்பின்னரும் அவரது படங்கள்  இன்றும் பேசப்படுகின்றன என்பதே சாட்சி.