சமுக பிரச்சனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுக பிரச்சனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15/11/14

ஒரு உடைந்த சுவரும் இணைந்த தேசங்களும்


வரையறுக்கபட்ட எல்லைகளை  நிர்ணயக்க நிறுவப்பட்ட சுவர்கள் பாதுகாப்பின் அடையாளம். என்பதை சரித்திரம் நமக்கு சொல்லுகிறது. ஆனால்  உடைக்க பட்ட ஒரு சுவற்றின் வெள்ளி விழாவை ஜெர்மனி  இந்த ஆண்டு  அரசு விழாவாக கொண்டாடுகிறது
இரண்டாம் உலகபோர் முடிந்தபின் வெற்றிபெற்ற நாடுகள் ஜெர்மனியை பங்குபோட்டுபிரித்துகொண்டன. ஒரு பகுதி கம்னியூச சித்தாந்தத்தை நிலைநிறுத்திய ரஷ்யாவும் மற்றொன்று நேசநாடுகள் என்று தங்களை அழைத்துகொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் எடுத்துகொண்டன.  இந்தபகுதி மேற்குஜெர்மனி,என்றும் சோவியத்தின் கட்டுபாட்டிலிருந்த பகுதி கிழக்கு ஜெர்மனி என்றும் அழைக்கபட்டுவந்தது. ஒரே நாட்டு மக்கள் பிரிக்கபட்டனர். என்பது மட்டுமில்லை, தலைநகரான பெர்லின் நகரத்தையும் பிரித்துகொண்டார்கள். பங்காளிகளின் சண்டையில் தேசமும், நகரமும் நான்கு துண்டுகளாகின. நேச நாடுகள் ஒவ்வொன்றும்  ஒவ்வொரு பகுதியை சொந்தம் கொண்டாடி தங்களது ராணுவத்தை செக்போஸ்ட்களில் நிறுத்தியிருந்தன.  கம்யூனிச கட்டுபாட்டில் இருந்த  ஜெர்மனியார்கள்,  சுதந்திர காற்றை சுவாசிக்க மறுபக்கத்துக்கு  நகர துவங்கினார்கள் ஒரே ஆண்டில் 35 லட்சம்பேர் கட்டுபாடுகளை மீறி தப்பித்துவிட்டார்கள்  ராணுவ கெடுபிடிகளினால் இவர்களை நிறுத்த முடியவிலை. அதன் விளைவாக   அரணாக ஒரு சுவரை எழுப்பியது சோவியத் ரஷ்யா.   பெரிலின் சுவர் என அறியபட்ட இதற்கு கிழக்கு ஜெர்மனி நிர்வாகம் இட்டிருந்த பெயர் பாசிசஸ்ட்களிடமிருந்து மக்களை காக்கும்  ”பாதுகாப்பு அரண்”. . மேற்குஜெர்மனி அரசு  அழைத்த பெயர் ”அவமானத்தின் சின்னம்”

1961ஆம் ஆண்டு ஒரு ஆகஸ்ட் மாத நள்ளிரவில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ரஷ்யா தங்கள் எல்லையாக அறவிக்கபட்டிருந்த பகுதியில் கம்பி முள் வேலிகளை அமைத்து, அடுத்த சில நாட்களிலேயே வலுவான கான்கீர்ட் சுவற்றை எழுப்பினார்கள். இந்த சுவர் ரஷ்ய எல்லைக்கோடு முழுவதிலும் எழுப்பட்டது.  நாட்டின் எல்லையின் ஒருமுனையில்  துவங்கிய சுவர்  பெர்லின் நகரின் நடுவே, வீதிகள்  வீடுகள், பள்ளிகள்  அலுவலகங்கள்  எல்லாவற்றையும் மட்டும் வெட்டிப் பிரிக்கவில்லை  உறவுகளையும் நட்புகளையும் குடும்பங்களையும் பிரித்தது.  நகரின் மறுபகுதியில் வசித்த பெற்றோர், ஒரே இரவில் மகனுக்கு  எட்டிகூட பார்க்கமுடியாத அன்னிய நாட்டினராகி போயினர்..  பெர்லின் நகரின்  அழகான தூண்களுடன் நிற்கும் பிரம்மாண்டமான வாயில் பிராண்டன்பர்க் கேட். அதன் முன்னும் சுவர் எழுந்தது. 

 நாட்டின் எல்லைகோட்டில் 156 கீமிக்கு 13 அடி உயரத்தில் எழுப்பபட்ட அந்த சுவர், பெர்லின் நகரின் வழியே மட்டும் 27 கீமிக்கு சென்றது. அதன் அருகில் நூறு மீட்டர் இடைவெளியில். மற்றுமோர் சுவர். இடைவெளியில் பல இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் தப்ப முயற்சித்தவர்கள் சுடபட்டார்கள்.. பலர் இப்படி இறந்துவிழுந்ததால் அந்த சுவரின் இடைவெளிப்பகுதி   ”மரணபடுகுழி” என அழைக்கபட்டது. இரவுபகலாக காவல். இரவெல்லாம் சுழலும் பெரிய ஒளிவிளக்கு. ஆனாலும் நம்பிக்கையை கைவிடாது சுரங்க வழி, சிறிய விமானம், பலூன்கள் போன்றவைகளில் தப்பிக்க முயன்று தோற்றவர்களின் சோக்கதைகள் ஏராளம்.
 குடும்பத்தினருடன் இணைய, நல்ல வேலைதேடி சுதந்திரமாக வாழ என  இந்த சுவர் எழுப்பும் போது தப்பிக்க முயன்றவர்கள 5000பேர்.  இறந்தவர்கள் 200க்கும் மேல். பலர் சரணடைந்து கைதியாக வாழ்ந்தார்கள்.  இந்த அவலம் 28 ஆண்டுகள். தொடர்ந்தது, சுவரின் மறுபக்கம்  நமக்கு மறுக்கபட்ட சொர்க்கம் என கிழக்கு பகுதி மக்கள் ஏங்கிகொண்டும், நம்முடைய நாட்டை அநியாமாக பிரித்துவிட்டார்கள் அரக்கர்கள் என மேற்குபகுதி மக்கள் பொருமிக்கொண்டுமிருந்தார்கள். 
1980களின் இறுதியில்  சோவியத் யூனியனில் எழுந்த சுதந்திர சூறவளி,, அன்றைய அமெரிக்க பிரதமர் ரீகனின் வெளிப்படையான மேற்கு ஜெர்மனியின் நிலைக்கு ஆதரவு,  உச்சகட்டத்தை அடைந்திருந்த மக்களின் கோபம் எல்லாம் சேர்ந்து கனிந்து கொண்டிருந்தது. , புரட்சி வெடித்துவிடுமோ என்ற நிலையில் கிழக்கு ஜெர்மனி நிர்வாகம்  எல்லைகளை கடக்க மக்களுக்கு தடையில்லை என 1989 நவம்பர் 9ம் தேதி அறிவித்தது.  அறிவிப்பை ரேடியோவில் கேட்ட  அந்த சந்தோஷமான கணத்தில்  மக்கள் செய்ய ஆரம்பித்த காரியம்  அவமான சின்னமான அந்த சுவரை இடித்தது தான். பெரிய இயந்திரங்களை வைத்து அரசாங்க அலுவலர்கள் செய்ய வேண்டிய பணியை அதற்காக காத்திராமல். வீட்டிலிருந்து சுத்தியல் கடப்பாரை எல்லாம்  கொண்டுவந்து இடிக்க ஆரமபித்துவிட்டார்கள். ஆளுக்கு ஒரு சின்ன பகுதியை வீட்டிற்கு கொண்டுபோய்விட்டார்கள்.  இன்றும் பல ஜெர்மானியர்களின் வீட்டில் ”இது பெர்லின் சுவற்றில் நான் உடைத்ததாக்கும்” என  காட்ட ஷோகேஸ்களில் வைத்திருக்கிறார்கள்.
 .
 அந்த நாளைத்தான் 25 ஆண்டுகள் கழித்து  வெள்ளிவிழாவாக கொண்டாடுகிறார்கள்.  மக்கள் உடைத்ததுபோக  பெர்லின் நகரில் ஒருபகுதியில் இருந்த சுவரையும் ஒரு கண்காணிப்பு கோபுரத்தையும் நினைவுச்சின்னமாக அறிவித்து பாதுகாக்கிறார்கள்.  அங்கு நாட்டின் அதிபர் திருமதி ஏஞ்சலா மெர்கலும் அவரது அமைச்சர்களும் வெள்ளை ரோஜா மலர் அஞ்சலி செலுத்தினார்கள். நகரின் பெருமையான பிராண்டன்பர்க் கேட் என்ற நுழைவாயிலின் முன்னே  ஒளிவெள்ளத்தில்  ஆராவார விழா..  ஆயிரகணக்கான மக்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த சுவரினால் ஒரு கண்ணீர்கதை இருக்கும்.  நகர் முழுவதும் இடிக்கபட்ட சுவரின் பகுதிகளில்  நிறுத்தபட்டிருந்த ஸ்டீல் குழாயிலிருந்து ஒளியூட்டபட்ட வெள்ளை ஹீலியம் பலூன்கள் ஒவ்வொன்றாக மக்களின் கரகோஷத்துடன் வானில் பறக்க விடப்பட்டது. விழாவில் முன்னாள் ரஷ்ய அதிபர் கோர்ப்சேவ் பங்க்கேற்றார்.
நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல்  பேசும்போது சொன்னது.” இந்த இடிந்த சுவர் சொல்லும் உண்மை - மனிதர்களின் கனவுகள் ஒரு நாள் பலிக்கும்” இவர் தன் இளமைகாலத்தை கிழக்கு ஜெர்மனியில் கழித்தவர்,
அதிகாரத்தை காட்ட அரசினால் எழுப்பட்ட  சுவர் ஒன்று, மக்களிடம். எழுந்த சுதந்திர தாகத்தால் மக்களாலேயே இடிக்கபட்டது
இன்று வலிமையான பெர்லின்  சுவர் இல்லை. ஆனால் அதைவிட மிக வலிமையான ஒருங்கிணைந்த ஜெர்மனி உருவாகியிருக்கிறது. 
23/11/14 கல்கியிலிருந்து 
  



21/10/14

அதிகம் அறியப்படாத இந்தியருக்கு அமைதி நோபல்

அம்மா என் பள்ளிக்கூடத்தின் வாசலில் என்னை மாதிரி ஒரு பையன்  தினமும் அவன் அப்பாவுடன் செருப்பு தைத்து கொண்டிருக்கிறான். அவன் ஏன் படிக்க போகாமல் வேலைசெய்து கொண்டிருக்கிறான்?”   8 வயது மகனின்  எதிர்பாராத கேள்விக்கு அவனும் உழைத்தால் தான் அந்த குடும்பத்தினர் சாப்பிடமுடியும்என்ற பதிலை தந்தார் அந்த தாய்.
அப்படியானால் அவன் படித்து வேறு வேலைக்கு போகவே முடியாதா?” என்ற அடுத்த கேள்விக்கு அம்மாவால் உடனே பதில் சொல்லமுடியவில்லை.
விதிஷா என்பது போபால்  நகரிலிருந்து 50கீமி தொலைவிலுள்ள சின்னஞ்சிறிய கிராமத்தில்ஒரு மத்தியதரகுடும்பத்தில்  தந்தையையிழந்து தாயாரால் வளர்க்கபட்ட  கைலாஷ் சத்யார்த்தி தான்  அந்த கேள்வியை கேட்ட சிறுவன்இன்று நோபல் பரிசு பெற்றிருக்கிறார்.
சிறுவயதிலிருந்தே அடிமனத்தில்  இவருக்கு எழுந்தகேள்வி  ஏன் சிலகுழந்தைகள் மட்டும் மற்ற குழந்தைகள் போல சந்தோஷமாக இல்லாமல்   கஷ்டப்டடு வேலை செய்யவேண்டும்? பள்ளியில், கல்லூரியில் படிக்கும்போது இவர்களுக்கு உதவிகள் செய்து  கொண்டிருந்தாலும் இதை ஒழிக்கவேமுடியாத எனற எண்ணம் எழுந்துகொண்டிருந்தது. எஞ்னியரிங்படிப்பை முடித்து பணியில் சேர்ந்த போதும் இதற்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து கொண்டே இருந்தது.. கிராமங்களில் மட்டுமில்லாமல்  பணி செய்த நகரங்களில்  எல்லாம்கூட படிக்க வேண்டிய வயதில் தொழிலாளி ஆகும் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல். காலையில் இருந்து நள்ளிரவு வரை கொத்தடிமைகளாக நடத்தப்படுவதும் சிறுமிகள்  பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதும்  இவரை நிலைகுலைய வைத்தது.

இதை வேரோடு வெட்டி சாய்க்க 1980ல் தனது 26 ஆம் வயதில் "பச்பன் பசாவோ அந்தலன்" (குழந்தை பருவத்தை காப்போம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அறவழிப்போராடத்தை தொடங்கினார். நேரடியாக காவல்துறையை அணுகி புகார் செய்தால் புகார் செய்தவருக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால்  ; இந்த அமைப்பின் மூலம் குழந்தை தொழிலாளர்களை மீட்க வழி செய்தார்.
இங்கு வரும் புகார்களை வைத்து அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் முதலில் அங்கு நடக்கும் அவலங்களை ரகசியமாக  கண்காணிப்பார்கள். புகார் உறுதி செய்யப்பட்டதும் ; அந்த ஊரின் லோக்கல் மாஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்துறை உதவியுடன் ரெய்டு நடத்தப்பட்டு குழந்தைகளை மீட்பார்கள். பின்னர்  சத்யார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட முக்தி ஆசிரமத்தில்  அக்குழந்தைகள் சேர்க்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பிவைக்கப்படும் வரை அங்கு தங்கவைக்கப்படுவார்கள்.
தற்போது டெல்லியில் வசித்து வரும் 60 வயதாகும் கைலாஷ் சத்யார்த்தி, 1990 ஆம் ஆண்டு முதல் குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சுரண்டலை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளில் இவரது குழந்தைகள் மீட்பு அமைப்பு இதுவரை 80,000 குழந்தைகளை பல்வேறு விதமான சுரண்டல்களிலிருந்து மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளது.குழந்தைகளுக்கு கல்வி அளிக்காமல் சிறுவயதிலேயே வேலைக்கு அனுப்பப் படுவது ஒரு குற்றம் என்று கூறும் சத்யார்த்தி, இதுவே வேலையில்லாத் திண்டாட்டம், நாட்டின் வறுமை, கல்வியறிவின்மை ஆகியவற்றுக்குக் காரணம் என்கிறார். இவரது இந்த கருத்துக்கள் பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.அனைவருக்கும் கல்வி என்ற திட்டம் உருவானதில் கைலாஷ் சத்யார்த்தியின் பங்களிப்பு உணடு
சினிமா, அரசியல், சினிமாவில்-அரசியல் பாலியல் குற்றங்கள் பற்றி அதிகம் பேசும் மீடியாக்கள்  இவரைபோன்றவர்களை பற்றி  மிக குறைவாகவே பேசுவதால்நம் நாட்டுகாராரன இவரைப்பற்றி நமக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை. ஆனால் பிபிசி, சின்பிசி போன்றவைகள்  இவரது கருத்துக்கள், இவரது இயக்கம் ஆகியவைகள் பற்றி  நிறைய ஆவணப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விழிப்புணர்வு படங்கள் வெளியிட்டு உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இவரது இந்த தன்னலமற்ற அயராத பணிக்காக இதற்கு முன்னர் ஏகப்பட்ட விருதுகளை வென்றி ருக்கிறார்.  அமெரிக்க அதிபர் கிளிண்டன் விருது கொடுத்து கெளரவித்திருக்கிறார். உஅகின் 144 நாடுகளில் இவரது அமைப்புக்கு தொடர்புகள் இருக்கிறது. அதன் மூலம் அங்குள்ள குழந்தைகளை காப்பாற்றவும் உதவுகிறார். சாக்ஸ் (SAACS) என்றும் அமைப்பின் தலைவர் இவர்இது  தெற்காசியா முழுவதும் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்களை கண்காணிக்கிறது. நாட்டின் அதிபர்களும், பிரதமர்களும் உறுப்பினராக இருக்கும் யுன்ஸ்கோவின் உயர்மட்டகுழுவில் இவரும் ஒரு உறுப்பினர்,. 2006 ஆம் ஆண்டே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்டவர். ஆனால் அந்த ஆண்டு பங்களாதேஷில் கீராமியன் வங்கியை துவக்கிய மக்மத் யூனஸ்க்கு வழங்கப்பட்டது., இந்த ஆண்டு பரிந்துரைக்கபட்ட 278 பெயர்களில் இவர் தேர்ந்தெடுக்கபட்டிருக்கிறார். இதுவரை இவ்வளவு பெயர்கள் பரிந்துரைக்கபட்டதில்லை. 2000ஆம் ஆண்டில் உலகில் குழந்தை தொழிளார்களின் எண்ணிக்கை 246 மில்லியன் ( ஒரு மில்லியன் =10லட்சம்) இன்று அது 168மில்லியனாக ஆக குறைந்திருக்கிறது இந்த நிலைக்கு கைலாஷ் சத்யார்த்தியின் பங்கு முக்கியம் வாய்ந்தது என்கிறது நோபல் பரிசு குறிப்பு.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசை இவர் பாக்கிஸ்தான் மலாலாவுடன் இணைந்து பெறுகிறார். இதுவரை நோபல் பரிசுபெற்றவர்களின் சராசரி வயது 60. முதல் முறையாக 17 வயதுபெண் பரிசு பெறுகிறார்இவர் கைலாஷுடன் இணைந்தும் உலக குழந்தைகள் கல்விக்காக செயல்படுவேன் என அறிவித்திருக்கிறார்.
பரிசு அறிவிக்கபட்டவுடன் பிரதமர் மோடி நாட்டுக்கே பெருமைஎன பாராட்டியிருக்கிறார். பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் வாழ்த்துகள் மழையாக கொட்டின. அதில் கவர்ந்தவைகளில் ஒன்று  பாடகர்  எஸ் பி பியின் பேஸ்புக் கமெண்ட்..” இன்று இந்திய பாக்கிஸ்தான் சரித்திரத்தில் ஒருமறக்க முடியாத நாள். இவர்களுக்கு தலைவணங்குகிறேன் மலாலாவின் பேச்சு  என் மனதைத்தொட்டது. ” எங்கள் இருவருக்கும் கிடைத்திருக்கும் இந்த கெளரவம்தலைவர்கள், அரசியல்வாதிகள், ராணுவதளபதிகளின் கண்களை திறக்கட்டும்இனம், மதம், ஜாதி போன்ற நம்மைபிரிக்கும் அற்ப விஷயங்களுக்கு அப்பாற்பட்டது மனிதம், கடவுளுக்கு அடுத்தபடியாக மதிக்கபடவேண்டியது அது என்பதை. அவர்கள் புரிந்து கொள்ளட்டும்.” என்று பேசியிருக்கிறது இந்த குழந்தைமலாலா நீங்கள், அவர்களை மன்னித்துவிடுங்கள்’”.உலகம் உங்கள் தன்னலமற்ற பணிகளை பெரிது மதிக்கிறது எனகேட்டுகொள்கிறேன்.   
டெல்லியில் கைலாஷ் சத்யார்த்தி மனைவி, மகள், மகன் மற்றும் மருமகள்  என முழுக்குடும்பமே  இவரது அமைப்பில் ஈடுபட்டு உதவுகிறார்கள்.
______________________________________________________________________________________
  • அன்னை தெரசா , பாரக் ஓபாமா , நெல்சன் மண்டேலா , தலாய்லாமா வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசை இம்முறை  பாகிஸ்தானின் 17 வயது  மலாலாவுடன் இணைந்து இந்தியாவின் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி அவர்களும்  பெற்றுள்ளார். 1901 ஆண்டு முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் நோபல் பரிசை பெரும் எட்டாவது இந்தியர் இவர. அமெரிக்காவில் வாழும் இந்தியர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேதியியல் துறையில் செய்த ஆராய்ச்சிக்காக 2009 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

 ________________________________________________________________________________________

  • நோபல்  பணத்தை என்ன செய்யபோகிறார். எங்கள் அமைப்பில் 400 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளால் தேர்ந்தெடுக்கப்ட்ட பாய் ம்ஹா பஞ்சாயத் என்ற அமைப்பு இருக்கிறது. அதன் கூட்ட்த்தில் முடிவு செய்வோம். ஆனால் நிசியமாக ஒரு பைசாவைக்கூட வீணாக்க மாட்டோம் என்கிறார் சத்யார்த்தி.


 __________________________________________________________________________________________

13/9/14

நாடு திரும்பிய நடராஜர்



ஆஸ்திரேலிய பிரதமர்  டோனி அபோட்டின் சமீபத்திய இந்திய வருகையினால் மிக சந்தோஷம் அடைந்தவர்கள் தமிழ்நாட்டின் அரியலூர் அருகிலிருக்கும் சின்னஞ்சிறிய கிராமமான ஸ்ரீபுரந்தன் கிராம மக்கள்தான். காரணம் அவர்கள் ஊரிலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன 1000 ஆண்டுகள் பழமையான நடராஜார்  சிலையை  அவர் கொண்டுவந்திருக்கிறார் என்பது தான்.
ஸ்ரீபுரந்தன்  அரியலூர்  மாவட்டத்திலிருக்கும் ஒரு மிகச்சிறிய கிராமம். இங்கு  சோழர்கள் காலத்தில் கட்டபட்ட  ஒரு பிரகதீஸ்வரர் கோவில்  இருக்கிறது. அதனுள் நிறுவபட்டு பல நூற்றாண்டுகள்  வழிபடபட்டுவந்த தெய்வம் நடராஜரும் அன்னை சிவகாமிசுந்தரியும். 1970களின் இறுதியில்; போதிய வருவாய் இல்லாதால் அர்ச்சகர் பணிவிலகி போனபின் கோவில் பூட்டப்படுவிட்டது. கிராமத்தின் காளி கோவில் பிரபலமாகிவந்ததால் மக்கள் மெல்ல இதை மறந்தே போனார்கள்.  மீண்டும் திறந்து வழிபடும் ஆர்வத்துடன் இருந்தவர்களுக்கும் போதிய ஆதரவும் உதவிகளும் கிடைக்கவில்லை. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை காளிபூஜை அன்று இந்த கோவில் முன் கொண்டு வந்து வழிபடும் முறையும் ஒரு முறை அந்த பூசாரியை இந்த பழையகோவிலின் உள்ளிருந்து வந்த ராட்சத தேனி கொட்டிவிட்டதால்  நின்று போயிருந்தது.  ஊரில்  இன்றய தலைமுறையினர்  அந்த கோவிலின் பாரம்பரியத்தையும், அந்த விக்கரகங்களின் பெருமையும் அறிந்திருக்கவில்லை.
2008ம் ஆண்டில்  அருகிலுள்ள சுத்த மல்லி என்ற கிராமத்தின் கோவிலில் இருந்த விக்கரகங்கள் காணமல் போன சமயத்தில்  இம்மாதிரி கோவில்களின் விக்கரகங்களை  அருங்காட்சியகத்தில் பத்திரபடுத்தலாம் என்று யோசனை தெரிவிக்கபட்டிருந்தது. அதற்கான முயற்சியில் தொல்பொருள் துறை இறங்கிய போது  கிராம மக்கள் எங்கள் தெய்வத்தை எல்லையை விட்டு வெளியே அனுப்ப சம்மதிக்க மாட்டோம் என ஒத்துழைக்க மறுத்தார்கள். பாதுகாப்பகாக கோவிலின் நுழைவாயில்களுக்கு சுருக்கி –விரிக்கும் இரும்புகதவுகளை (collapsible gate) போடலாம் என்று பஞ்சாயத்தாயிற்று.   போலீஸின் சிலைதிருட்டுகளை தடுக்கும் பிரிவின் உதவியுடன் அதற்காக கோவிலின் கதவுகளை திறந்த போது அதிர்ச்சி.  உள்ளே இருக்கும் நடராஜர் உள்பட 8 சிலைகளும் காணவில்லை, எப்போது எப்படி திருடு போனது? என்பதே தெரியவில்லை.. இந்த அதிர்ச்சியான செய்தி வெளியானபோது நடராஜர் 9000 கிமீ பயணித்து ஆஸ்திரேலியாவில் கானிபரா  நகரத்தில் தேசிய அருங்காட்சியகத்திலிருக்கிறார் என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாமில்லை.
சிலை எப்படி திருடபட்டது?
சுபாஷ் கபூர் கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் நீயூயார்க் நகரில் கலைப்பொருட்கள் இறக்குமதி செய்து விற்கும் கடையை நடத்தி வரும் அமெரிக்க இந்தியர்.  உலகின் பல பிரபல மீயூசியங்களுக்கும், கலைச்செல்வங்களை சேகரிக்கும் உலக பணக்கார்களுக்கும் அறிமுகமானவர் ஆனால்  இறக்குமதி என்ற போர்வையில் பாரம்பரிய சிலைகளை கடத்தி விற்பனை செய்வது தான் உண்மையான தொழில் என்பது யாருக்கும் தெரியாது.  உலகின் கண்ணுக்கு இவர் ஒரு செல்வாக்குள்ள, நிறைய விஷய்ங்கள் தெரிந்த  ஆர்ட் டீலர்.
.100 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான (1மில்லியன்= 10 லட்சம்) 150க்குமேலான  இந்தியாவிலிருந்து பழைய சிலைகளை கடத்தியிருப்பதாக  இவர் மீது வழக்கு போடபட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இண்டர்போலால் தேடப்பட்டு வந்த இவரை ஜெர்மானிய போலீஸார் கைது செய்து தமிழக போலீசிடம் ஒப்படைத்தது. இப்போது சிறையில் இருக்கிறார், இவருக்கு உதவிய ஆட்களையும் கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் தந்த ஓப்புதல் வாக்குமூலத்தின் படி குற்ற பத்திரிகை தயாரிக்க பட்டிருக்கிறது.

கபூருக்கு  உலகம் முழுவதுமுள்ள கோவில்களில், அரண்மனைகளில் இருக்கும் பராம்பரிய சின்னங்கள் சிலைகளின் விபரங்கள் அத்துப்படி.  இந்தியாவைத்தவிர பாக்கிஸ்தான். ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ்,ஹாங்காங்,இந்தோனிஷியா,துபாய்.கம்போடியா என உலகின் பலநாடுகளில்   இவருக்கு உள்ளுர் எஜெண்ட்கள். தாஜ் மாதிரியான  ஆடம்பர ஹோட்டல்களில் தங்கி தனது ஏஜெண்ட்களிடம் எந்த கோவிலிருந்து எந்த சிலை வேண்டும் என்பதை போட்டோவை காட்டி சொல்லிவிடுவார். அவர்களுக்கு பெருமளவில் பணம் தரப்படும். 28 சிலைகளுக்கு 7 லட்சம் டாலர்கள்   இவருடைய எச் எஸ் பி வங்கி கணக்கிலிருந்து இந்தியாவிற்கு இதற்காகவே மாற்றபட்டிருக்கிறது என்கிறது போலீஸ் குற்றபத்திரிகை.  அந்த ஏஜண்ட்கள் உள்ளூர்  ஆட்கள் மூலம், யாருக்காக செய்கிறோம் என்பது கூட  தெரியாமல் வேலையை முடித்து கொடுப்பார்கள்.  சென்னையில் இவரது எஜெண்ட் அசோகன்  இவர் இந்த பணியை செய்ய ஓப்புகொண்டார். இந்த கோவிலில் பாழடைந்த நிலையில் இருந்தது வசதியாக போய்விட்டது.  முதலில்  அந்த பழைய பூட்டை உடைத்து 3 சிலைகளை அப்புறப்டுத்திவிட்டு பூட்டை மீண்டும்  பூட்டிய நிலையில் இருப்பது போல ஒட்டிவிட்டார்கள். கிராமத்தில் யாருக்கும் சந்தேகம் வரவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டு சில நாட்களில் ஒரு லாரியில் நிறைய மண்ணை கோண்டுவந்து அருகில்  நிறுத்தி கொண்டு 3 அடி உயரமும் 150கிலோ எடையையும் கொண்ட அந்த நடராஜரை கோவிலிலிருந்து கிளப்பி மண்ணில் புதைத்து கொண்டுபோய்விட்டார்கள்.
நடராஜர் ஆஸ்திரேலியா எப்படி போனார்.?
சர்வதேச சிலைகடத்தல் மன்னன் கபூரின் நெட் ஒர்க் மிகப் பெரியது. வலிமையானது. இந்தியாவிலிருந்து ஒரு சிலை அல்லது கலைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படவேண்டுமானால் அது பழங்கால அல்லது பாதுக்காக்க பட்ட சிற்பம் இல்லை என்பதை தொல்பொருள் துறையினர் அல்லது அவர்து அங்கீகாரம் பெறப்பட்டவர்கள் சான்றிதழ் அளிக்கவேண்டும். கபூர் தான் திருடும் சிலைகளின் படங்களையும் மாதிரிகளையும் கொடுத்து ஸ்வாமிமலையில் சிற்பிகளிடம்  புதிய சிலைகளை வடிக்கசெய்யவார். ”பழையது மாதிரியான (”antic look சிலகளுக்கு இப்போது மவுசு அதிகம் என்பதால் அதே போல் செய்ய சில சிலைகளைச் செய்ய  சொல்லி அதற்கு சான்றிதழ் வாங்கி  அனுப்பும் போது அதில் ஒன்றாக திருடிய சிலையையும் கலந்து  அனுப்பிவிடுவார்.  நியூயார்க்கில் அவருடைய நிறுவனதிற்கு எது மதிப்பு வாய்ந்தது என்பதை கண்டுபிடிக்க தெரியும். இப்படி கொண்டுவரபட்ட சிலைகளை தனது  நிறுவன கேட்லாக்கில் மிகபழமையான அரிய சிற்பம் என்றும் அது எங்கிருந்து  எப்போது வாங்கி யாரல் விற்பட்டது என்ற சரித்திரங்களை, ஆதாரங்களாக போலியாக தயரித்து ஆவணமாக்கியிருப்பார். அப்படி 2010ம் ஆண்டு இவர்  வெளியிட்டிருந்த கேட்லாக்கிலிருந்த இந்த நடராஜரை ஆஸ்திரேலிய தேசிய மீயூசிய இயக்குனர் பார்த்துவிட்டு நியார்க் வந்து இவரை சந்தித்து விலை பேசி தனது மியூசியத்திற்கு வாங்கியிருக்கிறார். விலை என்ன தெரியுமா? இந்திய மதிப்பில் 31 கோடிகள்.
காட்டிக்கொடுத்தார் கணேசர்
இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ள திருடர்களில் ஒருவன் பிச்சுமணி. ஸ்ரீபுரந்தன் நடராஜரை திருடும் முன் சுத்த மலை சிலைகலை திருடிய போது ஒரு நாலு அங்குல அளவில் ஒரு அழகான வினாயகர் சிலையை தனக்காக ஒதுக்கி கொண்டுவிட்டான். அன்னை பார்வதியை வினாயகர் மடியில் இருத்தியிருக்கும் அபூர்வமான சிலை அது.  எப்போதும் அதை தன்னுடன் வைத்திருப்பான். ஒரு நாள் கேரள எல்லையை தாண்டும்போது மதுபானம் இருக்கிறதா என சோதனையிட்ட செக்போஸ்ட் போலீஸாருக்கு இது கோவில் சன்னதி சிலையாக இருக்கும் என்ற சந்தேகத்தில் கைது செய்து தமிழக சிலை திருட்டு பிரிவு போலீசிடம் ஒப்படைத்ததுவிட்டார்கள்.  சுத்த மலை சிலை திருட்டை ஆராய்ந்து கொண்டிருந்த அவர்களுக்கு  அப்போது லட்டுவாக கிடைத்த துப்பு இது. அவர்களது கவனிப்பில் அசோகன் தொடர்பு, ஸ்ரீபுரந்தன் கோவில் திருட்டு வெளிநாட்டிலிருந்து பணம், உடன் வேலை செய்தவர்கள் எல்லாம் வெளிவந்துவிட்டது.
ஆண்டவனே ஆனாலும் ஆவணம் முக்கியம்
தமிழகத்தில்  பெருமளவில் சிலைகடத்தல் நடைபெற்றுகொண்டிருந்ததால்  காவல்துறையின் அந்த பிரிவு விரிவான  ஆராய்ச்சியில்  ஈடுபட்டிருந்தது.  அவர்கள் எதிர் கொண்ட ஒரு விஷயம் ஆஸ்திரேலிய  தேசிய மீயூசியத்தின் ஆண்டுமலர் புத்தகத்தில்  புதிய சேர்க்கை என போடபட்டிருக்கும் நடராஜரின் படம் நமது ஸ்ரீபுரந்தன் கோவிலைச்சேர்ந்தது என்பது. உடனே முழித்துகொண்டார்கள்.    அதை அவர்களிடமிருந்து மீட்க கோர்ட் உத்தரவு வேண்டும். என்பதால்  சட்ட விதிகளின்படி உள்ளூர்  மாஜிஸ்ட்ரேட் கோட்டில் மனுச்செய்தார்கள். நீதிபதி கேட்ட கேள்வி இந்த சிலைதான்  கோவிலில் இருந்தது என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?   தெய்வ சன்னதிகளை படம் எடுக்க அனுமதிப்பதில்லை என்பதால் ஒரு போட்டோ கூட இல்லை. அரசின் அறநிலத்துறையிலும் இல்லை. திகைத்தது போலீஸ்.  செய்திகளை தினசரியில் பார்த்து கைகொடுத்து உதவினர் பாண்டிச்சேரியை சேர்ந்த பிரென்ச் இன்ஸிடியூட் ஆப் பாண்டிச்சேரி என்ற நிறுவனத்தினர். இவர்களின் ஆராய்ச்சையில் ஒரு அங்கம் இந்து கோவில்களீன் சிலைகள். உரிய அனுமதியுடன் தமிழக பண்டைய கோவில்கலையும் சிலைகளை ஆராய்பவர்கள். அவர்களிடம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கோவில் சிலைகளின் படங்கள் இருக்கின்றன.  அதன் ஆராய்ச்சியாளர் முருகேசன் இந்த நடராஜரின் படத்தை கொடுத்து உதவினார். அவர் 1958ல் எடுத்தது, 1994ல் மீண்டும் எடுத்ததையும் கொடுத்தார். (இந்த படங்களும்,ஆஸ்திரேலிய மீயூசிய படமும் கபூரின் போனிலிருந்த படமும் ஒத்துபோயிற்று. இதனால்தான் இண்டர்போல் கபூரை கைது செய்யவும் முடிந்தது.) அதை ஏற்று மாஜிஸ்ட்ரேட் ஆஸ்திரிலியே மீயூசியத்துக்கு நோட்டிஸ் அனுப்பினார்.  மத்திய அரசு அதிகாரிகளுக்கு மீயூசியம் இம்மாதிரி சிறிய கோர்ட்  ஆணைகளை ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில்லை. ஆனால் ஆச்சரியமாக அந்த மியூசியம்  உடனடியாக செயலில் இறங்கி  விசாரணையில் அது திருட்டு பொருள் என கண்டுபிடித்துவுடன்.இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிவிடுவதாக அறிவித்துவிட்டார்கள். கபூர்நிறுவனத்தின் மீது தாங்கள் செலுத்திய பணத்தையும் நஷ்ட ஈடாக மிகப்பெரிய தொகையையும் கேட்டு வழக்கு போட்டிருக்கிறார்கள்.

இந்த நடராஜரைத்தான் ஆஸ்திரேலிய பிரதமர் தன் கையோடு கொண்டுவந்திருக்கிறார். இந்திய பிரதமரிடம் ஒப்படைத்திருக்கிறார்.  இந்த நடராஜருடன் ஆஸ்திரேலிய பிரதமர் கொண்டுவந்தது ஒரு அர்தநாரிஸ்வரர் சிலை. இது விருத்தாச்சலத்திலிருக்கும் விருந்த கீரிஸ்ரவர் கோவிலில் இருந்து திருடபட்டு ஆஸ்திரேலியாவிற்கு கடத்தபட்ட கற்சிலை. இது ஆஸ்திரேலியாவின் நீயூ சவுத் வேல்ஸ் பகுதி மீயூசியத்தில் இருந்தது..  கர்பக்கிருஹத்தின் பக்கவாட்டு சுவரிலிருந்த இதன் இடத்தில் ஒரு போலியை நிறுவி விட்டு  இதை அபேஸ் செய்திருக்கிறார்கள்.  எப்போது காணாமல் போனது என்று யாராலும் சொல்ல முடியவில்லை. பாண்டிச்சேரி இன்ஸ்டியூட் 1974ல் படம் எடுத்திருக்கிறார்கள். அதற்கு பின்னால் என்றோ ஒரு நாள் இடம் மாற்றப்பட்டிருக்கிறது
.
எப்போது இந்த சிலைகள் கோவிலுக்கு வரும்?
டில்லி வந்து விட்ட நடராஜர் எப்போது ஸ்ரீபுரந்தன் வருவார்?   நாட்டின் பிரதமரே கொண்டுவந்து கொடுத்தாலும்  சில சட்ட சிக்கல்களை   நடராஜர்  சந்திக்கவேண்டியிருப்பதை  தவிர்க்க முடியாது. . சட்டப்படி இவைகள் கோர்ட்டால் ஆணையிட்டு கண்டுபிடிக்க பட்ட திருட்டு சொத்துக்கள். வழக்கு முடியம் வரை இவை கோர்ட்டின் பாதுகாப்பில்தான்.  இருக்க வேண்டும். வழக்கு, மேல்முறையீடுகள் முடிய பல வருடங்கள் ஆகலாம். ஆனால்  இம்மாதிரி வழக்குகளில் சில முன்மாதிரிகள் இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்  கும்பகோணம் அருகே உள்ள சிவபுரம் நடராஜர் கடத்தபட்டு மீட்க பட்ட போது  வழக்கு முடியம் வரை அதை மயிலாப்பூர் கபாலி கோவிலில் பாதுகாக்கவும் பூஜிக்கவும் நீதிபதி அனுமதித்தார். அதுபோல் இதற்கு அனுமதிப்பார்கள் என கிராம மக்கள் எதிர்பார்த்துகொண்டிருக்கிறார்கள். பாழடைந்த கோவிலை சீராக்க நிதி திரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
நம் கடவுள்கள் பத்திரமாக இருக்கிறார்களா?
 அபின் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கடத்துவதைவிட  சிலைகடத்தல் மிக பெரிய லாபத்தைக்கொடுக்கும் பிஸினஸ் என்பதால் உலகின் பல இடங்களில் கபூர்கள் இயங்கிகொண்டிருக்கிறார்கள். இந்தியா ஒரு  முக்கிய டார்கெர்கெட். தமிழக காவல்துறையின் சிலைகடத்தல் தடுப்பு  பிரிவு கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறார்கள்.  இப்போது 28 சிலைகளை மும்பரமாக தேடிக்கொண்டிருக்கிறார்கள். 5  சிலைகள் மீயூசியங்களில் இருப்பதை கண்டுபிடித்துவிட்டார்கள்.  இவர்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை  மாநிலத்தில் இருக்கும் 45000 கோவில்கள். இதில் பலவற்றில் சிற்பங்களுக்கும் சிலைகளுக்கும் போட்டோக் களோ விபரங்களோ இல்லை. காணாமல் போனால்  அடையாளம் சொல்லக்கூட முடியாது.  இவர்கள் முயற்சியில் ஒரு 900 ஆண்டு பழமையான நடராஜர் சிலையும் ஒரு1000 ஆண்டு பழமையான சம்பந்தர் சிலையும் வெளிநாட்டு மியூசியத்தில் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். அவைகள் தமிழ்நாட்டிலிருந்து கடத்த பட்டிருக்கும் தொன்ம சிலைகள் என நம்புகிறார்கள்.  ஆனால் எந்த கோவிலுடையது என்பது தெரியவில்லை. அது தெரியாமல், அதை நீருபிக்காமல்  அவைகளை மீட்க முடியாது. அந்த கோவில்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கேட்டு  திரு பொன் மாணிக்கம் டிஐஜி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். (அவசியமானல் போலீஸ் அறிவிப்பை பாக்ஸில் போடாலாம்-தந்தி 7/9/14)
ஸ்ரீபுரந்தன் நடராஜர். கூடவே இருந்து காணமல் போன அம்பிகை இப்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்.  நல்ல வேளையாக விற்பனை செய்யப்படுமுன் அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை கைபற்றிவிட்டது.  இந்தியா கொண்டுவர முயற்சிகள் துவங்கியிருகின்றன. உலகம் சுற்றியபின் ஆண்டவன் வந்துவிட்டார். அம்பிகை எப்போது வருவாரோ? .
அரும் சிலைகளும் கலைப்பொருட்களும்  வெளிநாடுகளுக்கு கடத்தபடுவதும், மீட்கபடுவதும்  நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும்  விஷயங்கள். ஆனால் ஒரு நாட்டின் பிரதமர் நல்லெண்ண பயணத்தின் போது கொண்டுவந்து தருவது இதுவே முதல் முறை.  நமது பிரதமர்  இதற்காக நன்றி சொன்ன போது  டோனி அபோட் சொன்னது ”இந்தியர்களின்  கோவில் வழிபாட்டு முறைகளை நாங்கள்  அறிவோம். அவற்றை மதிக்கிறோம்”  

23/8/14

உயிர் துறக்கும் உரிமை



ஒரு மனிதனுக்கு தான் உயிரை விரும்பிய போது துறக்கும் உரிமை உண்டா? தன்னுயிரை தானே மாய்துகொள்வது என்பது  தற்கொலை அதுவும் அதற்காக முயற்சிப்பதும்  உலகின் பல நாடுகளில் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். ஆனால் ஸ்விஸ் நாட்டில் இது  குற்றமில்லை. சட்ட விதிகளுக்குட்பட்டு ஒருவர் தன் மரணத்தை தீர்மானித்துகொள்ள முடியும்.
ஸூரிச் நகரில் இதை செய்து கொடுப்பதற்காகவே ஒரு அமைப்பு செயல் படுகிறது. அதன் பெயர் டிகினாட்ஸ் (DIGNITAS) இவர்கள் தன் உயிரைப்போக்கிக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு, உடல் ரீதியாக எந்த பிரச்ச்னைகள் இல்லாவிட்டாலும் கூட, மரணத்தை அவர் விருப்பம்போல செய்ய திட்டமிட்டுகொடுத்து அனுமதிகள் பெற்று செய்துகொடுக்கிறது.
இதைப்போல  உலகின் 23 நாடுகளில, உயிரை விரும்பி போக்கிகொள்ளு விரும்புபவர்களின் 38 சொஸைட்டிகளின் கூட்டமைப்பு ஒன்றும் 1980லிருந்து இயங்கி வருகிறது.  1998ல்  துவக்கபட்ட டிகினாட்ஸ் அமைப்பில்  உலகின் பல பகுதிகளிலிருந்தும் பதிவு செய்துகொண்டிருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7000 த்த தாண்டுகிறது.  உயிர் போக்கி கொள்ள விரும்புகிவர்களைத்தவிர இந்த அமைப்புக்கு உதபவர்களும் இதில்  அடக்கம். இதுவரை  உலகின் வெவேறு நாடுகளைச்சேர்ந்த 1800 பேருக்கு  அவர்கள் விரும்பியபடி உயிரை போக்கிகொள்ள உதவியிருக்கிறது.  அதிகமாக பயன் படுத்தியவர்கள் ஜெர்மானியர்கள் இதுவரை 840 பேர். குறைவாக  செய்துகொண்டிருப்பவர்கள் இஸ்ரேலியர் 19 பேர். மிக குறைவாக பயன்படுத்திய நாடுகளில் இந்தியா ஒன்று. இதுவரை இதைப்பயன்படுத்திய இந்தியர் ஒருவர் மட்டுமே. இந்த சேவைக்கு இவர்கள் வசூலிக்கும் கட்டணம்10,500 ஸ்விஸ்பிராங்க்கள் இந்திய மதிப்பில் ரூபாய் 7 லட்சம்
ஏன் இவ்வளவு கட்டணம்?  இதில் பதிவுகட்டணம். ஆலோசனை கட்டணம், உயிரைபோக்கிக்கொள்ள உதவும் சேவைக்கான கட்டணம் உதவும் டாக்டரின் பீஸ்,அரசாங்கத்துக்கு அனுப்பும் ரிப்போர்ட்,  எரிப்பது புதைப்பது மற்றும் இறுதிச்சடங்குகளுக்கான செலவு, அவசியமானால் குடும்பத்தினருக்கு பதில் கோர்ட் கேஸ்களை சந்திக்க நேரும் செலவு  எல்லாம் அடங்கும் என்கிறார்  இந்த அமைப்[பின் தலைவர்  லூட்விக் மின்லி.
 81 வயது ஆகும் இவர் ஒரு வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர்.. விரும்பும் நேரத்தில் விரும்பும்படி இறப்பது தனிமனித உரிமைகளில் ஒன்று என்பது இவர் வாதம்.  சரி இதில் டாக்டர் எங்கிருந்து வருகிறார்.? உயிரை போக்கிகொள்ள வேதனை தராத விஷ ஊசி போட்டுகொள்ள ஒரு டாக்டரின் மருந்து சீட்டு வேண்டும். அதற்காக தான் அவருக்கு பீஸ். நல்ல உடல் நிலையில் இருப்பவருக்கு அத்தகைய விஷமருந்துக்கு  டாக்டர் அனுமதி தரலாமா?. இது இன்னும் ஸ்விஸ்  சட்டம் மறுக்காத விஷயம். என்கிறார் லூட்விக்.

 ஸ்விஸ் நாட்டு சட்டங்களின் படி  தன் சொந்த நலனுக்காக ஒரு தற்கொலையை மறைத்தால் குற்றம். ஆனால் கெளரமாக இறக்க விரும்பும் ஒருவருக்கு விஷ மருந்து கொடுத்து இறக்க உதவிசெய்தால் அது குற்றமாக கருத படமாட்டாது.
 ” நாங்கள் செய்வதில் சொந்த நலனோ அல்லது நிகழந்ததை மறைப்பதோ இல்லை.  உருப்பினர் விரும்புவதைச் செய்கிறோம்  அதனால் சட்டபடி  இதில் எந்த தவறும் இல்லை” என்கிறார்.

ஆனால் இவரின் இந்த அமைப்பை கண்டனம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இந்த மனிதனினால் ஸ்விஸ் நாட்டின் பெருமை குறைகிறது. தற்கொலை செய்யதுகொள்ளவிரும்புவர்களின் சொர்க்கமாக ஸ்விஸ் மாறுவதை  நாங்கள் விரும்பவில்லை என்கிறார்கள் இவர்கள்

 தற்கொலை செய்துகொள்வது  தடைசெய்யபட்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளிலிருப்போருக்கு இது நல்ல வாய்ப்பாகிடாதா? மேலும் இம்மாதிரி வசதிகள்  அதிகமான தற்கொலை முயற்சியை ஊக்குவித்துவிடாதா?
இல்லை என்கிறார் லூட்விக்.” இந்திய சட்டங்கள் பிரிட்டிஷாரால்  இந்திய வாழ்க்கைமுறைகளை  நெறிகளை பின்பற்றாமல் இயற்றபட்டவை. இந்திய வேதங்களில் ஒரு மனிதன் தன் குடும்ப பொறுப்புகளை முடித்தவுடன் உணவு நீர் இவற்றை துறந்து  நீண்ட பயணம் செய்து உயிர் துறக்கும் உரிமை தரபட்டிருக்கிறது  இந்திய ஜெயின் சமூகம் இதை அனுமதிப்பதோடு  கெளரவமாகவும் கருதுகிறதே என்கிறார்.  மேலும் இந்த அமைப்பினால் தற்கொலைகள் பெறுகாது  ஒவ்வொரு வெற்றிகரமான தற்கொலைக்கும் பின்னால் 49 தோற்ற முயற்சிகள் இருக்கிறது. மேலும் எங்களிடம் விரும்பி வருவர்களை மறுநாள் காலையில் நாங்கள் கொன்று விடிவதில்லை. 3 கட்ட ஆலோனைகள் வழங்க படுகிறது, மனம் மாற, வாழும் வழிக்கான வெளியேரும் கதவுகள் திறந்தே இருக்கும். அந்த பச்சை விளக்கு காட்டப்படும் கட்டத்தில் பலர் மனம் மாறியவர்கள் பலர். இருக்கிறார்கள்.””
 இந்தியாவில் சட்டம் என்ன சொல்லுகிறது.?
தற்கொலை மரணங்களில் பல வகைகள். உணர்ச்சி வசப்பட்டு உயிர் போக்கிக்  கொள்வது,  உடல் உபாதைகள் பொறுக்காமல் உயிரைபோக்கிகொள்வது, டாக்டரின் உதவியோடு கருணைக்கொலை செய்ய வேண்டுவது எல்லாம் இந்தியாவில் குற்றம்.  உடலில் உயிர் மட்டும் தங்கி மற்றவை செயலிழந்த கட்டத்தில் கூட கருணைக் கொலையை கூட கோர்ட் அனுமதியில்லாமல் டாக்டர்கள் செய்ய முடியாது.  1994ல்  தற்கொலை முயற்சி  என்ற குற்றவியல் சட்டமே சட்டவிரோதமானது என  உச்ச நீதி மன்றம் ஒரு அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால் 1996ல் மற்றொரு  தீர்ப்பில் “வாழும் உரிமைகள் என்பதில் சுய மரணத்தை வரவழைத்துகொள்வது அடங்காது” என்றும் 1994 தீர்ப்பு தவறு என்றும் சொல்லபட்டது. கருணைக்கொலைகளுக்கு அனுமதிக்க அரசின் சட்டம் தேவை என்று சொன்னது இந்த தீர்ப்பு. இதுவரை  மரணம் அடையமுடியாமல் தவித்து கொண்டிருக்கும் உடல்நிலையை காரணம் காட்டி உறவினர்கள் கருணைக்கொலைக்கு அனுமதிகோரி 15  வழக்குகள் தொடரபட்டிருக்கின்றன. எதற்கும் அனுமதி தரப்படவில்லை.  இது நாடுதழுவிய அளவில் விவாதிக்க பட வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்பதால் சமீபத்தில் உச்சநீதி மன்றம்  மாநில அரசுகளின் ஆலோசனைகளை கேட்டிருக்கிறது
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? 





______________________________________________________
கருணைக்கொலை தவறில்லை: சிவசங்கரி
கருணைக்கொலை என்ற வார்த்தையே புதிதாக இருந்த 1980-களில் கருணைக்கொலைஎன்ற நாவலை எழுதியவர் எழுத்தாளர் சிவசங்கரி. நாவல் வெளிவந்து 30 ஆண்டுகள் ஆகியும் கருணைக்கொலை குறித்த விவாதங்கள் தொடர்கதையாகவே இருக்கின்றன . “கருணைக்கொலை என்பது சட்டத்தால் மட்டும் முடிவு செய்யப்படக்கூடியது அல்ல. அது உணர்வுப்பூர்வமானது. அது தற்கொலையின் இன்னொரு வடிவம் என்று மத்திய அரசு சொல்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கது. அதே சமயம், நோயின் இறுதி நிலையில் இருக்கிற ஒருவர், அதன் வலியை தாங்க முடியாமல் கருணைக்கொலை முடிவை எடுப்பதில் தவறில்லை.
நான் வாழ்ந்தது போதும், என்னால் இந்த வேதனைப் பொருத்துக்கொள்ள முடியவில்லை என்று கதறுகிறவரை, ‘நீ வாழ்ந்துதான் ஆக வேண்டும்என்று நிர்பந்திப்பது நியாயமில்லை. எனவே இதுபோன்ற வழக்குகளில் நான் கருணைக்கொலையை ஆமோதிக்கிறேன்என்கிறார் சிவசங்கரி.
 _______________________________________________________________________________

7 கருணைக் கொலையை அரங்கேற்றிய மருத்துவர்


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் ஒருவர் 7 நபர்களை கருணைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
கருணைக் கொலை என்பது பிரான்ஸ் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாகும், இதற்கு அந்நாட்டு ஜனாதிபதி பிரான்சிஸ்கோ ஹோலண்டேவும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இருப்பினும், மிகவும் தீவிரமான கட்டத்தில் நடைபிணமாய் வாழும் ஒரு சிலரை, மருத்துவர்கள் சேர்ந்து ஆலோசித்து கருணைக்கொலை செய்யலாம்.
இந்நிலையில், மருத்துவர் நிக்கோலஸ் என்பவர், தன்னுடைய நோயாளிகளில் 7 பேரை கருணைக்கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், கருணைக்கொலை செய்யப்பட்ட குடும்ப நபர்கள், இந்த மருத்துவர் செய்தது எங்களுக்கு பெரிய உதவி என்றும் அவரை கைது செய்து சிறையில் அடைக்க கூடாது எனவும் சாட்சி கூறியுள்ளனர்.
இதனால் டாக்டரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது







12/7/14

கறுப்பு பணத்தின் உண்மையான கலர்


ஆழம் ஜூலை இதழலில் எழுதியது 



பதவி ஏற்றதும் பஜக அரசு செய்த முதல் காரியம். வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய கருப்பு பணத்தை  கண்டுபிடித்து வெளிகொண்டுவர ஒரு  தனி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது  தான்.  கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இந்த விஷயத்திற்காக முந்திய அரசில் எதிர்கட்சியாக இருந்தபோது பஜக வலுவாக போராடிக்கொண்டிருந்தது.  இந்த அறிவிப்பு பரவலாக வரவேற்க பட்டாலும் இந்த சவாலான விஷயத்தை சாதிக்க  புதிய அமைப்புகளும் அறிவிப்புகளும் மட்டும் போதாது. மோடியின் அரசுக்கு ஒரு அரசியல்  துணிவு (POLITICAL WILL) இருந்தால் மட்டுமே இதைச்சாதிக்க முடியும். மக்கள் செல்வாக்கும், பாராளுமன்றத்தில்  மிகப்பெரிய மெஜாரிட்டியும் இருக்கும் இந்த அரசுக்கு அத்தகைய அரசியல் துணிவு இருக்குமா? இருந்தாலும் அதை கட்சி அரசியல் எல்லைகளை தாண்டி நாட்டின் நலனுக்காக மட்டுமே பயன்படுத்துமா? இந்திய அரசியல் கட்சிகளின் தலைவிதியை நிர்ணயக்கும் கார்பேர்ட்களும், மிகசக்திவாய்ந்த செல்வந்தர்களும்  சமப்ந்த பட்ட இந்த விஷயத்தை ”கார்ப்ரேட் பிரண்டிங்” என கருதப்படும் மோடியின் ஆட்சி எவ்வளவு கடுமையாக கையாளும்? என்ற கேள்விகளுக்கான விடையை பொறுத்து தான் இந்த விஷயத்தில் வெற்றி அமையும்.
சிறப்பு புலானய்வு குழு அமைக்க பட்டதை பிஜெபியின் சாதனையாக சொல்ல முடியாது. காரணம் இந்த குழு உச்சநீதிமன்ற ஆணைக்கேற்ப அமைக்கபட்ட ஒரு குழு.  2009ல் வழக்கறிஞர் ஜெத்மலானி, கோபால் சர்மா,பேராசிரியர் தத்தா,கேபிஎஸ் கில் திருமதி வைத்த்யா ஆகியோர் இணைந்து கறுப்பு பண விவகாரத்தில் யூபிஏ அரசு மிக மெத்தனமாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதைச்செய்ய கட்டளை இடவேண்டுமென்று ஒரு வழக்கை உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்திருந்தனர்.
உச்ச நீதி மன்றகண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு என்பது  சிலகாலம் முன்பு உச்சநீதி மன்றம் கண்டுபிடித்திருக்கும் ஒரு புதிய விஷயம். இப்படி அமைக்க சட்டபிரிவுகள் இல்லை. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கிழ் ஏற்படுத்த படும் ஒரு நிர்வாக அமைப்பு. அந்தமாதிரியான ஒரு  புலானாய்வை கோரியது ஜெத்மலானி குழு.  யூபிஏ அரசு சட்டபுத்தகத்தின் ஒட்டைகளை யெல்லாம் ஆராய்ந்து அப்படி ஒரு குழு அமைப்பதை தவிர்த்து அல்லது தாமத படுத்திகொண்டிருந்தது. இறுதி தீர்ப்பில் அப்படி ஒரு குழு அமைக்கபடவேண்டும் என ஆணையிட்டதை எதிர்த்து அப்பீல் செய்திருந்தது. அப்பீல்லிலும் உச்சநீதி மன்றம் குழு  அமைப்பதை உறுதி செய்து, அதை அறிவிக்கும்படி அரசுக்கு ஆணையிட்டிருந்தது.  பொறுப்பேற்ற புதிய அரசு அந்த ஆணையின் அடைப்படையில் தான் இந்த சிறப்பு புலானய்வு குழுவை அமைத்திருக்கிறது. அதாவது பிஜேபி தனிப்பெருபான்மையுடன் ஆட்சிக்கு வராவிட்டாலும் அல்லது யார் ஆட்சிக்கு வந்திருந்தாலும்  இந்த குழு அமைக்க பட்டிருக்கும்.
எவ்வளவு கறுப்பு பணம் இருக்கிறது?
ஒரு விடை தெரியாத கேள்வி இது. முதலில் இதை சரியாக கணக்கிட்டு உறுதி செய்ய வேண்டும்.  2012 மே மாதம் நாடாளுமன்ற கூட்ட தொடரின் கடைசி நாளன்று அன்றைய நிதி அமைச்சர் பிராணப் முகர்ஜி கறுப்பு பண நிலை குறித்து ஒரு 100 பக்க வெள்ளை அறிக்கையை  அதிரடியாக தாக்கல் செய்தார், அரசு எடுத்த பலமுனை நடவடிக்கை 5 அம்ச திட்டம் என பல விஷயங்களை பேசிய அந்த அறிக்கையின் முன்னுரையில் சொல்லப்பட்ட விஷயம். இது. ”நாட்டின் மூன்று முக்கிய உளவு நிறுவனங்கள் எவ்வளவு முயன்றும் உதேசமாக எவ்வளவு கறுப்ப பணம் இருக்கிறது என்பதை கணுபிடிக்க முடியவில்லை.”
இதற்கிடையே, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ரூ.25 லட்சம் கோடிக்கு மேல் கருப்பு பணம் பதுக்கி இருப்பதாக, சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங் 2011 பிப்ரவரி மாதம் தகவல் வெளியிட்டிருந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், ரூ.25 லட்சம் கோடியை இந்தியர்கள் பதுக்கி உள்ளனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று இந்தியாவில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் மறுப்பு தெரிவித்தது. அதன்பிறகு இந்த விவகாரம் கிடப்பில் போடபட்டது
தொடர்ந்து ஒரு ஜெர்மானிய .வங்கி தங்களிடம் பெரிய அளவில் கணக்கு இருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியலை அரசுக்கு தந்திருக்கும் செய்தி கசிந்திருந்ததால் அதை பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்று அன்றைய எதிர்கட்சியான பிஜெபி குரல் எழுப்பி கொண்டிருந்தது. ஆனால் வெள்ளை அறிக்கையில் இதுபற்றி அரசு எதுவும் சொல்லவில்லை.
எவ்வளவு  இந்திய பணம் கறுப்பு பணமாக  வெளிநாட்டில் பதுக்க பட்டிருக்கும் என்பதை  ஆய்வாளர்கள் பலவகைகளில் கணிக்க முயற்சிதிருக்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக  தங்கள் நாட்டைவிட்டு வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைப்பது என்பது இந்தியாவிற்கு மட்டும் உரிய விஷயமில்லை. உலகமயமான இந்த விஷயத்தை 1999லிருந்து 2007 வரை  162 நாடுகள் இப்படி செய்திருக்கின்றன என்கிறது உலகவங்கியின்  ஒரு அறிக்கை. நாட்டின் மொத்த GDP யில் 20 முதல் 34 % வரை இது இருக்கிறது. இந்தியாவில் 20 முதல்-23 % வரை இருக்கலாம் என்கிறது இந்த அறிக்கை.(நமக்கு அண்ணன் கள் இருக்கிறார்கள்). முந்திய அரசின் வெள்ளை அறிக்கை இந்த புள்ளிவிபரங்களை மறுக்க வில்லை. இந்த மதிப்பீட்டின் படி பார்த்தால்  குறைந்த பட்சம்  40 ஆயிரம் கோடிக்கும் மேல் கருப்பு பணம் இருக்கிறது.  இதன் சொந்தகார்கள் அடையாளம் காணப்பட்டு, பணத்திற்கான வரியை வசூல் செய்தபின் அவர்கள் தண்டிக்கபட வேண்டும்.
வெளி நாட்டில் மற்ற இடங்களை விட சுவிஸ் நாட்டில் தான் அதிக வெளிநாட்டினர் பணம் வைத்திருக்கின்றனர். அந்த நாட்டின் வங்கி விதிகளும், ரகசியம் காக்கபட வேண்டியகடுமையான சட்டங்களும் ஒரு காரணம். சமீபத்திய சர்வ தேச நெருக்கடிகளுக்கு பின்னர் சுவிஸ் தேசிய வங்கி நிர்வாகம் ஆண்டு தோறும் நாடுகள் வாரியாக தங்கள் நாட்டு வங்கிகளில்  இருக்கும் கணக்குகளின் மொத்த தொகையை அறிவிக்கிறது. இந்த மாதம் 2013ம் ஆண்டுக்கான  கணக்கு விபரங்களை அறிவித்திருக்கிறது. இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் 14000 கோடி.. ஆச்சரியம் என்னவென்றால் இது கடந்த ஆண்டைவிட 40% அதிகம். 2010-11 ஆண்டுகளில் கறுப்பு பணம் பற்றி அரசாங்க அறிவிப்புகள், பாராளுமன்றவிவாதங்கள் இருந்த காலத்தில் கணிசமாக குறைந்திருந்த தொகை இது. கடந்த ஆண்டு மெல்ல இது அதிகரித்திருக்கிறது,
கறுப்பு பணத்தை ஒழிக்க இதுவரை எடுக்கபட்ட முயற்சிகள்
1947லிருந்து இன்றுவரை 40க்கும்மேற்பட்ட கமிஷன்கள் அமைக்கபட்டு,  இந்த 65 ஆண்டுகளில் பல் கோணங்களில் அலசி ஆராயபட்ட விஷயம் இது. கறுப்பு பணத்தின் பிறப்பு, பரிமாற்றம், பதுக்கல் என பல்வேறு பரிமாணங்களில் ஆராயபட்டிருக்கும் இந்த விஷயத்தில் பல ஆயிரகணக்கான ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. மிக முக்கியமானது வாஞ்ச்சு கமிட்டியின் அறிக்கை. அருமையான யோசனைகள் சொல்லபட்ட இந்த அறிக்கை முழுமையாக ஏற்க படவில்லை. சில நல்ல யோசனைகள் ஏற்க பட்டன. ஆனால் காலபோக்கில் அவைகள் நீர்த்துபோயின. இப்படி யோசனைகள் பல இருந்தும் அரசாங்கங்கள் செயல் படுத்த முடியாமல் போனதின் காரணம் அந்தந்த அரசுகளுக்கு தேவையான அரசியல் துணிவு இல்லாதது தான். சம்பந்த பட்டவர்களினால் ஆட்சிக்கும் கட்சிக்கும் வரும் ஆபத்துக்களை விட இந்த கறுப்பு பணம் பிரச்சனை இருந்து தொலையட்டும் போன்ற உணர்கள் தான்

இந்த புலானாய்வு குழு எவ்வலவு வலிமையானது,?
2ஜி வழக்கில் ஒரு குழு சிறப்பாக செயலாற்றியதால் இப்போது உச்ச நீதிமன்றம் இது போன்ற  குழுக்களை நியமிக்கிறது. ஆனால் கோல்கேட் விஷயத்தை அவர்கள் கையாண்டைதை பார்த்த போது எல்லா குழுக்களும் ஒரே தரத்தில் இருக்க போவதில்லை என்பது புரிந்தது. கறுப்பு பண விவகாரத்திற்கு  அமைக்க பட்ட குழுவில்  தலவர்  உட்பட 13 பேர்கள் உறுப்பினர்கள். நீதிபதி எம். பி ஷா தலமையைலான இந்த குழுவில் உபதலைவர் தவிர, மற்றவர்கள் அனைவரும். துறைஅதிகாரிகள். ரிசர்வ் வங்கி,  அமுலாக்க பிரிவு, உளவுத்துறை வருமானவரித்துறை, போதைமருந்து கடத்தல் தடுப்பு, பொருளாதரா குற்ற தடுப்பு துறை போன்றவற்றின் செயலர்கள். இவர்கள் எப்போது வேண்டுமானலும் பதவி உயர்வு, மாற்றம் என்ற நிலையிலிருப்பவர்கள்..  இப்படி இந்த குழுவின் அமைப்பை பார்க்கும் போதே உடனடி செயல்படக்கூடியது என்ற எண்ணம் எழவில்லை. பிரதமர் அறிவித்தவுடன்   சம்பிரதாயமாக முதல் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.
இந்த அதிகாரிகள் அனைவரும் ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனையில் தீவீரமாக இருந்து அரசு துணிவுடன் செயல்படதாதை கண்டு அல்லது நிர்பந்தம் காரணமாக ஒதுங்கியிருப்பவர்கள்.  விஷயத்தின் முழு கனத்தையும் அதன் பின்னால் உள்ள அரசியலையும் நன்கு அறிந்தவர்கள். ஆனால் பல்துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது இந்திய அதிகார வர்கத்தினரிடையே தோற்று போன ஒரு விஷயம்.  மேலும் இந்த குழுவின்  செயல் திட்டம் அறிவிக்க படவில்லை. அவை வெளிப்படையாக அறிவிக்க படுமா என்றும் தெரியவில்லை. இவர்களுக்கு அளிக்கபட்டிருக்கும்  பொறுப்புகள்(terms of Reference) பற்றியும் தெளிவாக பேசப்படவில்லை. உதாரணமாக ஜெர்மன் அரசு அளித்த பட்டியலில் உள்ள 26 பேர்களில் விசாராணை நடத்தி அதில் 8 பேர்களுக்கு போதிய ஆவணங்களும் ஆதாரங்களும் இல்லாதாதால்  கைவிடபட்டு மற்றவர்களிம் மீது விசாராணை தொடர்ந்து கொண்டிருப்பதாக முந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த பெயர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கிழ் விண்ணபித்தவருக்கு மறுக்கபட்டது.  உச்ச நீதி மன்றத்தில் இரண்டு சீலிட்ட கவர்களில்  தனித்தனியாக அந்த பெயர்களை கொடுத்த அரசு மனுதாரருக்கு மறுத்துவிட்டது. மனுதாரருக்கு வழங்க ஆணையிட்டபோதும் இது தகவல் உரிமைக்கு அப்பாற்பட்டது என சொல்லி அப்பீல் செய்திருக்கிறது. இந்த நிலையில் இந்த புதிய குழுவிற்கு  தனியாக ஆணை இடப்படாவிட்டால் தவிர அந்த 8 பெயர்களை ஆராய முடியாது.  வழக்குகள் அவசியமில்லை என கைவிடபட்ட பெயர்களில் ரிலயன்ஸ் குழும இயக்குனர்கள் பெயர்கள் இருப்பதாக, இந்த செய்தி பரபரப்பாக இருந்த காலத்தில் மீடியாவில் பேசபட்டிருக்கிறது.
இவைகளையெல்லாம் பார்க்கும் போது மோடி அரசு உச்சநீதிமன்ற ஆணையை பயன்படுத்திகொண்டு  முந்திய அரசைப்போல தாமதபடுத்தி அவபெயரை  பெற விரும்பாமல் மக்களின் செல்வாக்கை பெற அவசர கதியில் இப்படி ஒரு  வலுவில்லாத குழுவை தெளிவில்லாத கட்டளைகளுடன் அமைத்துவிட்டதோ என எண்ணத் தோன்றுகிறது.




கருப்பு பணத்தில்தான் எத்தனை வண்ணம்?
 வருமான, அல்லது மற்ற வரிகளை செலுத்த விரும்பாமல் நடக்கும் எந்த ஒரு  செயல் பாட்டிலும் கருப்பு பணம்  பிறக்கிறது. இது சிறிதும் பெரிதுமாக எல்லா மட்டங்களிலும் நுழைந்திருக்கிறது. காலப்போக்கில் இது பலராலும் ஏற்றுகொள்ளபட்ட ஒரு விஷயமாகி வளர்ந்து கொண்டே யிருக்கிறது.. கடந்த 50 ஆண்டுகளில் வரிகள் மிக்குறைக்க பட்டிருக்கின்றன. வரிச்சலுகைகள் மிக அதிகமாகியிருக்கின்றன. ஆனாலும் இந்த பழக்கமும் அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது. சுமூகம் அங்கீகரித்தவிட்ட செயலை அழிக்க சட்டங்களால் மட்டும் முடியாது.
வரிஏய்ப்புக்கு கடுமையான சட்டங்கள் இங்கே இல்லை.  நீண்டகால சட்ட போராட்டங்களுக்கு பின்னர் வழங்கும் தண்டனைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாதால் பிரச்சனை தொடர்கதையாகிறது. இன்றுள்ள சட்டங்களின் படி கணக்கு சொல்ல முடியாத பணம் கைபற்ற பட்டால் வரி மற்றும் அபராதம் செலுத்தினால் (இது மூன்றில் ஒரு பங்கு அளவிற்குதான் வரும்) மீதிப் பணம் வெள்ளை பணமாகிவிடும்.
 வரி ஏய்ப்பை தவிர ஏற்றுமதியில் வர வேண்டிய வருமானத்தை குறைவாக மதிப்பீட்டு  இந்தியாவில் பெற்று கொண்டு மீதியை அந்த வெளிநாட்டிலேயே நிறுத்திகொள்வதும் அதே போல் இறக்குமதிக்கு செலுத்தவேண்டிய அன்னிய செலாவாணியை அதிகம் செலுத்தி பணத்தை வெளிநாட்டில் சேமிப்பது போன்ற பல வழிகளில்  கருப்பு பணம் உருவெடுக்கிறது.  இந்த வழிமுறைகள் அனைத்தும் நமது அரசு அதிகாரிகளுக்கு நனறாக தெரியும் என்பதும் அவர்களில் பலர் இவைகளை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதும் தான் உண்மை.
90களுக்கு பின் இந்தியாவின் புதிய பொருளாதார கொள்கைகளின் மூலம் கதவுகள் திறக்க பட்டவுடன் வெளிநாட்டில் பதுக்கபடும் கருப்பு பணத்தின் அளவு பலமடங்கு அதிகரித்துவிட்டது. இன்று நம்ப முடியாத அளவில்  வளர்ந்து பெருகி நிற்கிறது.
FDI என்ற நேரிடையான  அன்னிய முதலீடு திட்டம் பிறக்கும் போதே இந்த கருப்பு பணம் உருவாதற்கான் வழியுடன் பிறந்த ஒரு திட்டம். இது தற்செயலா, திட்டமிடபட்ட தந்திரமா என்பது ஒரு புரியாத புதிர்,  நமக்கு வந்த அன்னிய முதலீடுகளில் 50%க்கு மேல்  எந்த வரிகளும் இல்லாத சில குட்டி நாடுகளிலிருந்துதான். இந்த நாடுகளின் பொருளாதார சட்டங்களும் நிதி வங்கி அமைப்புகளும் விசித்திரமானவை. இங்கு அதிக கஷ்டங்கள் இல்லாமல் கணக்குகள் திறக்கலாம். அதிலிருந்து எங்கு வேண்டுமானலும் எவ்வளவு வேண்டுமானலும் பணத்தை மாற்றலாம். இந்த வசதிகளினால் இந்தியாவிற்கு  இந்த நாடுகளிலிருந்து  மூதலீடுகள் கொட்டியது.  இன்னும் கொட்டிகொண்டிருக்கிறது. இவற்றி பெரும்பாலானவை இந்தியர்களின் பணம்- கணக்கில் வராத கருப்பு பணம்- உலகின் பல மூலைகளிலிருந்து இந்த குட்டி தேசங்களுக்கு அனுப்ப பட்டு அங்கிருந்து மூதலீடாக வடிவம் எடுத்து ஒரு லெட்டர் பேட் கம்பெனி மூலம் இங்கே அனுப்ப பட்டவை. இதில் முக்கியமான விஷயம் முதலீடு செய்பவர்கள் நேரிடையாக செய்யாமல் அங்கைகரிக்க பட்ட ஏஜெண்ட்கள் மூலம் செய்யாலாம். அதனால்  உண்மையில்பணம் அனுப்பியது யார் என்ற தெரிய வாய்ப்பில்லை.  பணம் அனுப்ப பட்டு முடிந்தவுடன்  அனுப்பிய  அந்த நிறுவனம் மூடபட்டதாக பதிவாகிவிடும்.
நம் நாட்டின் அரசியல் வாதிகள்  தொடரும் முதலீடுகளின் புள்ளி விபரங்களை காட்டி மக்களை மகிழ்விக்கிறார்கள். கருப்பு பணத்தின் சொந்த கார்கள் தங்கள் பணம் பத்திரமாக தாய் நாட்டில் பாதுகாப்பாக புது வடிவம் பெற்றதை கண்டு மகிழ்கிறார்கள். எல்லாம் சரி? எப்படி வெளிநாட்டுக்கு இந்த கருப்பு பணத்தை அனுப்பு முடிகிறது என்கிறீர்களா? உலகிலேயே இதற்காக மிக பாதுகாப்பான ”ஹவாலா” முறையை கண்டுபிடித்து சிறப்பாக செயல் படுத்தும் சமார்த்தியசாலிகள் இந்தியர்கள் தான். கொடுக்கபடும் உள் நாட்டு பணத்திற்கு ஈடாக வெளிநாட்டு பணம் உங்கள் வெளிநாட்டு கணக்கில் வரவு வைக்க மிக பெரிய அளவில் சில நிறுவனங்கள், அன்னிய நாட்டு வங்கிகிளைகளுடன் இயங்கிகொண்டிருக்கின்றன.  இவர்கள் கையாண்ட பணத்தின் அளவு பிரமிக்கவைப்பவை.  சில நடவடிக்கைகள கண்டு பிடிக்கபட்டபின்னரும் ( காண்க HSBC வங்கி- ஆழம் ஜனவரி  இதழ்)  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க படாத விஷயம் இது.

இம்மாதிரி பணபதுக்கலில் நேரிடையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக  கட்சி பேதமின்றி எல்லா அரசியல் கட்சியினருக்கும் தொடர்பு இருப்பதால் எந்த அரசு வந்தாலும் இது முழுவதுமாக ஒழிக்கபட வழியில்லை என்று ஒரு கருத்தும் இருக்கிறது. 





5/7/14

சர்வாதிகாரியின் சாபம்


நீண்ட நெடிய வரலாறு கொண்ட நாடு ஈராக். இரண்டு நதிகளுக்கு இடையே உள்ள செழிப்பான நிலப்பரப்பை கொண்டது. ஆங்கிலேயர் பிடியில் கொஞ்ச காலம் இருந்த ஈராக் மீண்டும் மன்னராட்சிக்கு திரும்பியது. ஆனால், 1958ல் நடந்த ராணுவ புரட்சியால் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து ராணுவ அதிகாரிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர். 1978ல் சதாம் உசேன் ஈராக் அதிபராக பொறுப்பேற்றார். 2003ல் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படையினரிடம் சிக்கும்வரை யாரும் அசைக்க முடியாத சர்வாதிகாரியாக சதாம் இருந்தார்.
பேரழிவை ஏற்படுத்தக் கூடிய ரசாயன ஆயுதங்களை தயாரித்து பதுக்கி வைத்திருப்பதாக கூறி 2003ல் ஈராக்கை தனது ஆளுகையின் கீழ் அமெரிக்க மற்றும் அதன் நேச நாடுகள் படை கொண்டு வந்தது.  இந்த போரின் இறுதியில்தான் தப்பியோடிய சதாம் உசேன் கண்டுபிடிக்க பட்டார். அப்போது, ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆட்சியை அமெரிக்கா உருவாக்கியது. அவர்கள் சதாமை 2006ஆம் ஆண்டு தேசத்துரோகத்திற்காக தூக்கிலிட்டனர். சன்னி பிரிவு முஸ்லிம்கள் ஒதுக்கப்பட்டனர்.  ராணுவம், அரசு நிர்வாகத்தில் அவர்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழித்தனர்.. இப்படி ஒதுக்கப்பட்ட சன்னி பிரிவினர் ஆயுதமேந்தி போராடத் தொடங்கினர். அப்போது தொடங்கிய கலவரம், 2011ல் அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறியதும் தீவிரமடைந்தது.
ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிராக சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தி வந்த பயங்கர தாக்குதல்கள் இப்போது உள்நாட்டு போராகி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த போரை நடத்துவது சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற தீவிரவாத அமைப்பு இப்போது, ஷியாக்களுக்கு எதிராக நடத்தும் இந்த யுத்தத்துக்கு சிரியாவின் ஆசி உள்ளது. சதாம் உசேனின் ஆதரவாளர்கள் அனைவரும் இந்த இயக்கத்தில் இணைந்துவிட்டனர். பல நகரங்களை அடுத்தடுத்து பிடித்த தீவிரவாதிகள் இப்போது, தலைநகர் பாக்தாத்தை தொட்டுவிடும் தூரத்தில் உள்ளனர். எங்கிருந்து இந்த தீவிர வாதிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வருகிறது ? விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறது அமெரிக்க உளவுத்துறை

 ISIS என்ற இந்த அமைப்பின் தலைவர்  அப் பக்கர் அல் பாக்தாதி. அமெரிக்க படையெடுப்புகளினால் சதாம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, ஈராக்கில் அல்கைதா என்றொரு ஆயுதக் குழு ஒன்று இயங்கி வந்தது. அமெரிக்கப் படைகளுடனான மோதலில் அதன் தலைவர்கள் கொல்லப் பட்டனர். அப்போது அமெரிக்கப் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்ட போராளிகளில் ஒருவர் தான் அல் பாக்தாதி.
2005 முதல், Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். அப்போது, "உங்களை நியூ யார்க்கில் சந்திக்கிறேன்!" என்று சிறைக் காவலர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். விடுதலையான பின்னர் எஞ்சியிருந்த போராளிகளை ஒன்று திரட்டி ISISஐ     உருவாக்கியிருக்கிறார். .

2011ம் ஆண்டு, அல் பாக்தாதி, அமெரிக்கர்களால் "தேடப்படும் பயங்கரவாதி" என்று அறிவிக்கப் பட்டார். அவரது தலைக்கு விலையாக பத்து மில்லியன் டாலர் அறிவிக்கபட்டது..  அந்தக் காலகட்டத்தில் சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அல் பாக்தாதி குழுவினர், சிரியாவில், அரச படைகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருப்பதாக நம்பபட்டது.


. தீவிர வாதிகள் ஒடுக்கப்படாவிட்டால் ஈராக் இரண்டாக உடையும் அபாயமிருக்கிறது. ஈராக்கின் இந்த நிலைக்கு ஒரு வகையில் காரணமான அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இப்போது இந்த பிரச்னையில் தலையிட தயங்குகின்றன.. அமெரிக்கா தனது தூதரக அதிகாரிகளை காக்க 275 வீரர்களை ஈராக்கிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பபெறுவோம் என்ற அறிவிப்புடன் தேர்தலை சந்தித்த ஒபமா இனி போர் எதுவும் நிகழந்தால் அமெரிக்கா தலையிடாது என்று அறிவித்துவிருக்கிறார்.
ஆனால் தன்னை ”உலக போலீசாக” வர்ணித்துகொள்லும் அமெரிக்கா ஈராக்கின்  நிரந்தர பகையாளியான ஈரான் நாட்டின்மூலம் உதவி இன்னொரு போரை உருவக்கும் என்றும் சில ஐரோப்பிய பத்திரிகைகள் எழுத ஆரம்பித்திருக்கின்றன.

இந்தியாவிற்கு என்ன பாதிப்பு?
ஈராக்கில் தீவிர வாத தாக்குதல்களால் அரசு நிர்வாகம் அடியோடு சீர்குலைத்துவிட்டது.,  நிவாரண பணிகளை கூட மேற்கொள்ள முடியவில்லை. அகதிகள் நிலைமை பரிதாபகரமானதாக உள்ளது. ஈராக்கின் உள்நாட்டு போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கிவிட்டது. இது, கச்சா எண்ணெய் இறக்குமதியை நம்பி உள்ள நமது பொருளாதாரத்தை  பாதிக்கும். பெட்ரோல் விலையேற்றம் நம் பர்சை பாதிக்கும், உள்நாட்டு போரால் பல லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகி தவிக்கின்றனர்.  அங்கு வேலை செய்யும் இந்தியர்கள் நிலைமை இன்னும் மோசம்.. ஏராளமான இந்தியர்கள்  ஈராக்கில் உள்ளனர். அவர்களில் பலர் தனியார் நிருவனங்களில் காண்ட்டிராக்டில் வேலைசெய்பவர்கள். எந்த நிமிடமும் சேமிப்புகள் பரிக்கபட்டு  அகதிகளாக வெளியேற்ற படலாம்.


8 ஆண்டுகளுக்கு முன் சதாம் உசேன் தூக்கிலிடப்படும் முன் நடந்த வழக்கில் சதாம் சொன்னது என்னை அமெரிக்க ஆதரவுடன் நீங்கள் தூக்கில் கூட போடலாம். ஆனால் நான் இறந்தாலும்  என் ஆவி என் மக்களை வழி நடத்தும்.  நடக்கபோகும் போரில் நீங்கள் தோற்பீர்கள் என்றார்.

.... இப்போது போர் நடக்கிறது.


ஆதித்யா (ரமணன்)
கல்கி07/0714 இதழில் எழுதியது