13/1/14

ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த அபூர்வராகம்


11-1-14


இன்று கீரின் ஏக்கர்ஸ் கிளப் பில் சக்தி பாடினார். ஒரே வார்த்தை அற்புதம். 1 மணி நேரத்திற்கும் மேல் நடந்த  அருமையான கச்சேரி. தமிழ் பாடல்,கன்னட கீர்த்தனை என எல்லாமே சூப்பர்.  ஆங்கில ஒப்ரா (OPERA) பாடலைப் பாடி அதை ஒரு கர்நாடக ராகத்துடன் தமிழ்பாடலாக பாடி முடித்தார்.  . இந்த பெண்ணிடம் நிறைய விஷயமிருக்கிறது. AR ரஹ்மான்  கேட்கவேண்டும்.  கச்சேரியின் கடைசியில்  
முத்தைத் தரு பக்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண
முக்திக்குஒரு வித்து குருபர என ஓதும்

என்ற அருணகிரிநாதரின் திருப்புகழலிலிருந்து பாடியது தான் ஹைலைட். தமிழ்பாடகர்களே பல்லை உடைக்கும் இந்த பதிகத்தை பாடத்தயங்கும் ஒரு  பாடல் இது. இதை இந்த ஆஸ்திரேலிய பெண் அனாயசயமாக பாடியது ஆச்சரியமான விஷயம் 


12/1/14

உலகளவில் தமிழ் -புதிய பார்வை

இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளர்கள், அறிஞர்கள் பங்கேற்கும் தாயகம் கடந்த தமிழ் என்ற அனைத்துலக மாநாடு கோவையில் ஜனவரி 20,21,22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மாநாட்டின் அமைப்புக்குழு தலைவராக எழுத்தாளர் மாலன் உள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து
இந்த மாநாடு எதற்காக?
தமிழ் என்பது இன்று உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ள மொழி. தமிழ் என்று பேசும் தருணங்களில் எல்லாம் பெரும்பாலும் நாம் அதன் இலக்கியத்தை குறித்துப் பேசுகிறோம். ஆனால் மொழி என்பது இலக்கியம் மாத்திரம் அல்ல. தமிழர்களின் பாரம்பரியத் தாயகங்களான தமிழகத்திலும்   இலங்கையிலும், அந்தத் தாயகங்களுக்கு அப்பாலும் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சென்று அது தளராமல் தாங்கி நிற்பது இலக்கியம், ஊடகம், கல்வி, தொழில்நுட்பம் ஆகிய நான்கு தூண்களே. இந்தத் துறைகளில் கணிசமான பங்களித்தவர்கள் கூடிக் கருத்துக்கள் பரிமாறிக் கொள்கிறோம். இந்தத் துறைகளில் முன்னேறிச் செல்ல இந்தக் கருத்துப் பரிமாற்றங்கள் பயனளிக்கும் என எண்ணுகிறோம். ஒரு வேளை இதன் காரணமாக இந்தத் துறைகளிடையேஓர் கூட்டாற்றால் (synergy) ஏற்படவும் கூடும் என்றும் நம்புகிறோம்

இந்த மாநாட்டில் நீங்கள் எப்படி ஈடுபட்டுள்ளீர்கள்?
ஒரு தமிழ் எழுத்தாளன் என்ற முறையில் பத்துப் பனிரெண்டு ஆண்டுகளாக தமிழிலக்கியம் என்பது தமிழ்நாட்டில் எழுதப்படும் இலக்கியம் மாத்திரமல்ல என்ற கருத்தைத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறேன். இந்தக் கருத்தை வலுப்படுத்தும் நோக்கில்  திசைகள் என்ற மின்னிதழை ஆசிரியராகவும் பதிப்பாளராகவுமிருந்து வெளியிட்டுள்ளேன். யூனிகோடில் அமைந்த முதல் தமிழ் மின்னிதழ் அது. 2004ல் அயலகத்தில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து சிங்கப்பூர் தேசியப் பலகலைக் கழகத்தில் உரை நிகழ்த்தியிருக்கிறேன். 2011ம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம், தேசிய கலைமன்றம் இவற்றின் ஆதரவில் நடத்தப்பெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் முக்கியப் பங்காற்றியுள்ளேன். இந்த மாநாட்டின் அமைப்புக் குழு தலைவராக உள்ளேன். அயலகத்தில் உள்ள கட்டுரை வாசிப்போரைத் தேர்ந்தெடுப்பது,  கட்டுரை பெறுவது, மாநாட்டின் நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பது, கட்டுரைகளுக்கு நூல் வடிவம் அளிப்பது ஆகியவை என் பணிகளாக அமைந்தன

இந்த மாநாட்டினால் என்ன பயன்?
தமிழ் மக்கள் தமிழ் மொழி, இலக்கியம், கல்வி ஆகியவை குறித்த ஓர் புதிய பார்வையும் பெருமிதமும் பெறுவார்கள். மாநாட்டுக் கட்டுரைகள் நூலாக வெளியாகின்றன. அவை ஆய்வு மாணவர்களுக்கும், முதுநிலை மாணவர்களுக்கும் பயனளிக்கும்.

சந்திப்பு 

ஆதித்யா

(கல்கி19/01/14)

10/1/14

கலக்குகிறார் கலாவதி

”அப்பா ! இன்று எதலெல்லாம்  விற்கலாம் , புதிதாக எதை வாங்கலாம் என லிஸ்ட் எழுதி வைத்திருக்கிறேன். மார்கெட் ஒப்பன் ஆனதும் உடனே செய்து விடுங்கள். நான் குறித்திற்கும் விலைக்கு மேல் போனால் வாங்கவேண்டாம். எனக்கு இன்று டெஸ்ட் இருக்கிறது வரட்டுமா? “ என்று சொல்லி விட்டு ஸ்கூலுக்கு போகிறார்    9ம் வகுப்பு படிக்கும் கலாவதி. அவரின் தந்தை திரு பாண்டியன் அவர்சொன்னது போல  செய்துவைக்கிறார்.  மாலையில் பள்ளியில் இருந்து திரும்பிய பின் செய்த  டீலிங்களை தனது கம்ப்யூட்ரில் பதிந்து கொள்ளுகிறார். அடுத்த  இரண்டு மணிநேரம் அன்று நாள்முழுவதும்  நடந்த டிரேடிங் பேட்டர்னை அலசுகிறார். தன் கையில் இருக்கும் ஷேர்களில்  விற்க வேண்டியவைகளையும் புதிதாக வாங்க வேண்டியவைகளையும் பட்டியில் இடுகிறார். பின்னர் ஸ்கூல் பாடங்களை முடித்துவிட்டு டிவி பார்க்கிறார். இதுவரை  ஷேர் மார்கெட்டில்  குறைவாக இழந்து நிறைய சம்பாதித்திருக்கிறார். இந்த வயதில் இந்தியாவில் இதை செய்தவர் இவர் மட்டுமே


 எப்படி எங்கே இதையெல்லாம் கற்றார்?  என்று ஆச்சரியபடுத்தும்  இந்த
பெண்ணின் குடும்பத்தில் யாரும் ஷேர் பிஸினஸில் ஈடுபட்டிருப்பவர்கள் இல்லை. தந்தை பாண்டியன்   நிறுவனங்களுக்கு தரசான்றிதழ்  பெற, தர நிர்ணயம் உறுதி செய்யும் நிருவனத்தை நிர்வகிப்பவர். தாய் இல்லத்தரசி.
”அப்பா வீட்டில் கம்பெனிகள் பிராண்டுகள் எல்லாம் பற்றி பேசுவார். அதில் ஷேர்களில் முதலீடு அதன் மூலம் கம்பெனியின் லாபம் நமக்கு வரும் என்பது எனக்கு இண்ட்ரஸ்ட் ஆன விஷயமாகயிருந்தது. அதை பற்றி அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டு தொந்தரவு செய்துகொண்டிருந்தேன். நிறைய சொன்ன அவர் கேப்பிட்டல் மார்கெட் பத்திரிகையை படிக்க வாங்கி தந்தார். முதலில் புரியாத விஷயங்களை திரும்ப திரும்ப படித்து புரிந்து கொண்டேன். நெட்டில்  மணி கண்ட்ரோல் என்ற தளத்தில் நிறைய படித்து தெரிந்து கொண்டேன். போனவருடம் 8ம் கிளாஸில் இருக்கும் போது முதல் ஷேரை வாங்கினேன். இப்போது  நான் நிறைய வாங்கி விற்கிறேன். என்கிறார் கலாவதி.
 ”ஹர்ஷெத் மேத்தா காலத்தில் ஷேர்மார்கெட்டில் மூதலீடு செய்து கையை சுட்டுகொண்டவன் நான். பெரிய நஷ்டத்தை சந்தித்த பின்  நமக்கு இதெல்லாம் சரிஇல்லை என ஒதுங்கியவன் நான்.  இந்த பெண்ணின் ஆர்வமும் சாமர்த்தியமும் எனக்கே ஆச்சரியமாகயிருக்கிறது என்கிறார் தந்தை பாண்டியன். சிறு பெண்ணாக இருப்பதால் அவர் பெயரில்  வங்கியில் டி மாட் (ஷேர் மார்க்கெட் மூதலிட்டு இது அவசியம்) கணக்கு துவங்க முடியாதாலால் என் பெயரில் கணக்கை  துவங்கி அவர் அதை கையாளுகிறார். இந்த பெண்ணுக்காக நான் டிமேட் கணக்கு பற்றி முதலில்  தெரிந்துகொண்டேன்.  எல்லா முடிவுகளும் அவருடையதுதான்.  டிரெண்ட் அனலைஸ் என்பது ஒரு நிறுவனஷேர் கடந்த  வாரம், கடந்த மாதம், கடந்த ஆண்டு எப்படியிருந்தது என்பதின் அடிப்படையில் இன்றைய நிலையையும் அடுத்து எந்த கட்டத்தில் விலைஉயரும் அல்லது குறையும் என்பதை கணிப்பது. அதை இவர் மிக பிரமாதமாக செய்கிறார். ஒரு சில கம்பெனிகளின் கிராப் களின் மூலம் நமக்கு டெமோவே காட்டுகிறார். எல்லா வல்லுனர்களின் கருத்தையும் அப்படியே ஏற்க கூடாது. சிலர் சொல்லுவதை மாற்றி விற்க சொன்னால் வாங்க  வேண்டும் என அவர்களின் பட்டியலும் வைத்திருக்கிறார்.
உன்னுடைய கணிப்புகளை யாருக்காவது டிப்ஸ் கொடுத்திருக்கிறயா? என கேட்டால் என் பள்ளியில் ஸ்டாக் மார்கெட் பற்றி ஒரு முறை பேசினேன். யாருக்கும் புரியவில்லை. என் குளோஸ் பிரண்ட்ஸ்க்கு நான் டிரேடிங் செய்வது தெரியும் ஆனால் என்ன என்பது விபரமாக தெரியாது என்று சொல்லும் கலாவதிக்கு கணக்கு பாடத்தில்  அவ்வளவு இஷ்டமில்லை  இங்கிலீஷ், சயின்ஸ்தான் பிடித்திருக்கிறது.   சராசரி 75% மார்க்குகள் வாங்கும் இந்த மாணவிக்கு பிடித்த மற்றவிஷயங்கள் பாடுவது,
சினிமாபார்ப்பது. இந்த உலக சாம்பியன் போட்டிக்கு பின் செஸ்.
படிப்பை முடித்தபின் என்னவாக எண்ணம்.?  “ தெரியவில்லை அங்கிள்! நிச்சியமாக டாக்டர், எஞ்சினியர் ஆக மாட்டேன். ஷேர் புரோக்கராகவும் மாட்டேன்.  மார்கெட் அனலிஸ் செய்வது பிடித்திருக்கிறது அதில் ரிசர்ச் செய்ய முடியுமா என்பதை அப்பாதான் சொல்ல வேண்டும். என்கிறார்.
கலாவதி ஒர் அதிர்ஷ்டகாரபெண். ஷேர்மார்கெட்டில் லாபம் சம்பாதிப்பதினால் மட்டுமில்லை. எல்கேஜி படிக்கும் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என திட்டமிட்டு அதை குழந்தைகள் மீது திணிக்கும் பெற்றோர்களிடையே  தங்கள் மகள் விரும்புவதை செய்ய அனுமதித்து  அதை ஊக்கபடுத்தும் பெற்றோர்களை அடைந்திருப்பதிலும்தான்.

5/1/14

ஒரே இரவில் 85000 ரூபாய் !

மனதில் பதிந்த பதிவுகள்

 


இ.ரா மணிகண்டன் என்பவரின் வலைப்பூ(BLOG)  ”நிசப்தம்” பார்த்தது, படித்தது,.கேட்டது,ஆபிஸ்,  அடுத்தவீட்டுகாரன்,  சினிமா, புத்தகம், வம்பு அரசியல், பயணங்கள்  என்று எதைப்பற்றியாவது   படிக்க ஆர்வம் மூட்டும் வகையில் தினமும் எழுதி தள்ளிக்கொண்டிருப்பவர். கொங்குநாட்டு வாழக்கைமுறை, சாப்ட்வேர்துறை ஆகியவைகளின்  தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். சிறந்த வலைப்புக்கான சுஜாதா விருதை 2013ம் ஆண்டில் பெற்ற இவர் தளத்தில் தன் படத்தை கூட போட்டுகொள்ளாத எளிய மனிதர். பங்களூரில் வசிக்கிறார்.
பாலாஜி சென்னை எஸ் ஆர் எம் கல்லூரியில் முழுஸ்காலர்ஷிப்பில் ரோப்டிக்ஸில் ஏம் டெக் படிக்கும் ஒரு மாணவர்.  மிக எளிய குடும்ப பின்னணியுள்ள இவருக்கு  ரோபோவின் மீது வெறும் ஆர்வம் மட்டுமில்லை. வெறி, காதல் என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். வெறும் ஆர்வத்தோடு நின்றுவிடாமல் தனது ஆர்வத்தை செயலாக்கிக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் ஏகப்பட்ட ரோபோக்களை சுயமாக வடிவமைத்திருக்கிறார். இவரது லிஸ்ட்டில் பறக்கும் ரோபோட், விவசாய ரோபோட் என்று பலவகைகள் அடங்கும்.
இவருக்கு ஜப்பானில் நடைபெறும் ஒரு சர்வதேச ரோபோட்டிக்ஸ் கருத்தரங்கிறகுற்கு அழைப்பு வந்திருக்கிறது. ஆனால் போவதற்கு முயற்சி எடுக்க கூட  முடியவில்லை காரணம் டிக்கெட்டுகான பணம். தன்னுடைய பிளாக்கில் மணிகண்டன் இதை எழுதி உதவி செய்யமுடியுமா? என கேட்டிருந்தார். முதல் நாள் இரவில் எழுதிய பதிவிற்கு மறுநாள் மாலைக்குள் வந்த பணம்  85000 ரூபாய்கள்.! அமெரிக்காவிலிருந்து 50000, கத்தாரிலிருந்து 30000 என்று சிலமணிநேரங்களில் பணம் வங்கி கணக்கில் சேர்ந்தது.. இவர்களில் யாரையுமே இதுவரை மணிகண்டன் நேரில் பார்த்ததில்லை என்பது  ஒரு முக்கியமான விஷயம்.


 இதற்காக தன் நன்றியை  சொல்லும் மணிகண்டன் “இத்தனை பெரிய தொகையை ஒரே இரவில் புரட்டிவிட முடியும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. நேற்று இந்தப் பதிவை எழுதும் போது கூட பத்தாயிரம் ரூபாய் புரட்டினாலே பெரிய விஷயம் என்றுதான் தோன்றியது. ஆனால் நல்ல காரியத்திற்காகச் செய்யும் போது எல்லாமே சரியாக நடக்கின்றன. கடவுள் மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இந்த மாதிரியான கணங்களில் நம்பிக்கையை இன்னும் சற்று உறுதிப்படுத்திக் கொள்கிறேன்என்று தன் பதிவில் எழுதுகிறார்.  உதவிக்கு நன்றி சொல்லும் பாலாஜி இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம்ன்னு சொல்லிடுங்க சார்.இப்போதைக்கு இந்தப் பணம் போதும் சார். என்னை மாதிரி வேற யாராச்சும் வந்தாங்கன்னா அவங்களுக்கு தேவைப்படும்ல. அப்போ தந்துடச் சொல்லுங்கஎன்று மணிகண்டனுக்கு சொல்லியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்கள் தவறாக பயன்படுத்தபடும் அவலம், ஆபத்துகள் பற்றி மட்டுமே அதிகம் பேசப்படுகின்ற நேரத்தில் இம்மாதிரி மாறுதலான செய்திகள் ஆறுதலாக இருக்கிறது.  சமூக பொறுப்புடன், மனித நேயத்தோடு எழுதும் பதிவர்களும், அதை மதிக்கும் வலைப்பூ வாசகர்களும்  உலகில் எங்கோ ஒரு மூலையிலும் இருக்கிறார்கள் என்பது சந்தோஷத்தை தருகிறது.
ஆதித்யா (ரமணன்)

மணிகண்டனின் நிசப்தம் லிங்க்





3/1/14

மசாலா தோசையிலிருந்து மெல்போர்னுக்கு .

சென்னை  அடையார் பார்க் ஹோட்டல் டவரின் ஆறாவது மாடியில் நண்பருடன் கிளப் லெளன்ஞ்சில் பிரேக்பாஸ்ட். தவிர்க்க முயற்சித்து இயலாது போன ஒரு பிரேக்பாஸ்ட். கண்ணாடிகளின்வெளியே ஆச்சரியபடுத்திக்கொண்டிருக்கும் சென்னையின் பசுமை. நகரிலேயே காஸ்டிலியான. ஊத்தப்பம் சாப்பிட்டுகொண்டிருக்கிறோம். (நமக்கு பிடித்தது (தெரிந்தது?) வேறு எதுமில்லை) பக்கத்து டேபிளில் ஆரஞ்ச் கலர் ஜிப்பாவில் தங்க பிரேம் கண்ணாடியில் ஒருவர்.  யாருடனோ  போனில் யாழ் தமிழில் சென்னை திருவையாறு பற்றி கதைத்துக்கொண்டிருந்தார். பொதுவாக இம்மாதிரி ஹோட்டல்களில் பக்கத்து மேஜைக்கார்களுடன் பேசவே மாட்டார்கள் அதிக பட்சம் ஒரு செயற்கையான ஹலோ, மாறாக இந்த மனிதர் தான் சாப்பிட்ட மசாலா தோசையின் ருசி அற்புதம் என பேச தொடங்கினார். மசாலா தோசையிலிருந்து பேச்சு மெல்ல  மெல்போர்னுக்கு போனது. காரணம் அங்கு வசிப்பவர் அவர். சென்னை மீயூசிக் சீசனுக்கு  குடும்பத்துடன் வந்திருப்பதாகவும்,   கேட்கவேண்டிய கச்சேரிகளை  தேர்ந்தெடுத்து கேட்பதாகவும் சொன்னார். இம்மாதிரி இப்போது நிறைய NRI க்கள் வருவதால் அது எனக்கு பெரிய விஷயமாக தோன்றவில்லை.  ஆனால் தொடர்ந்து சொன்னது தான் என்னை கவர்ந்த விஷயம். இது தன் மகளுக்காக என்றும் அவர் 4 வயதிலிருந்து மெல்போர்னிலேயே கர்நாடக இசை கற்றுவருகிறார் என்றும்  ஆண்டு தோறும் இங்கு வந்து தன் மியூசிக்கை இம்ரூவ் செய்து கொள்கிறார் என்றும் சொன்னார். தன் மனைவி ஒரு கீரிஸ் தேச பெண் என்றார்.  அப்பா இலங்கை அம்மா கீரிஸ், பெண் கர்நாடக இசை கற்று கொண்டுவருகிறது என்பதை கேட்டதும்  என் பத்திரிகைகாரன் புத்தி முழித்துகொண்டது. அவர்களை சந்திக்க வேண்டுமே என்றேன்.
இரண்டு நாட்களுக்கு பின்  அந்த குடும்பத்தினரை சந்திதேன்.   ஒரு மயிலாப்பூர் பெண்ணைபோல பட்டுபுடவையில் வந்து ஆச்சரியபடுத்தியவர்  ஷக்தி  அவர் மகள் ! சென்னையில் இருக்கும்போது  இதுதான் டிரஸாம்.



 4 வயதில் கர்நாடக வாய்ப்பாட்டு, 5 வயதில் வயலின் 6 வயதில் பியானோவுடன் வெஸ்டர்ன் மீயூஸிக் 7 வயதில்.பரதம், விணை என்று சகலுமும் ஆஸ்திரேலியாவிலேயே கற்க ஆரம்பித்து தொடர்ந்து எல்லாவற்றிலும் டிப்பளமோ வாங்கியதை மிக பணிவுடன் சொல்லி பிரமிக்க வைத்தார். ஷக்தி. வீட்டில் அம்மாவுடன் லத்தின் அப்பாவுடன் இங்கிலீஷ் என்று பேசுவதால் தமிழ் பேச தெரியாது. என்று சொன்னவர் என்னுடன் பிரிட்டிஷ் ஆக்ஸஸெண்ட் ஆங்கிலத்தில் தான் பேசிக்கொண்டிருந்தார்.  எனக்கு பாடிக்காட்ட விரும்பியபோது. (நாம் ஓளெரங்க சீப் என்று அவருக்கு தெரியாது) சட்டென்று  ஹைஹீல் செருப்பை கழட்டிவிட்டு தரையில் உட்கார்ந்து ”குறை ஓன்றும் இல்லை” பாடினார். அவரது குரு  எங்கு பாடினாலும் தரையில் உட்கார்ந்துதான்  பாட வேண்டும் எனறு சொல்லியிருக்கிறாம். நல்ல குரல்வளம்,ராகம் எல்லாம்  கண்ணைமூடி கேட்டால் ஷக்தி தமிழ் தெரியாத ஆஸ்திரேலிய பெண் என்று யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு அழகாக பாடுகிறார்.  சங்கீதத்தின் எல்லைகளை தொட முயலும் இந்த அழகான பெண்  ஸ்கூல்படிப்பு முடித்து மெடிசன் படிக்க கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். 10 வருடம் பரதம் கற்று கடந்த வருடம் அரேங்கேற்றம் செய்திருக்கிறார். படிப்பிலும் டாப். ஆஸ்திரேலியா மேக்ஸ் ஒலிம்ப்யார்ட் போட்டிகளில் முதல் 15% இடம் பெருமளவுக்கு கணக்கு தெரிந்திருக்கிறது.  டாக்டருக்கு படித்தாலும் கர்நாடக சங்கீதத்தை தொடர்வேன் Music is my life என்று சொல்லி  என்னை பிரமிக்கவைத்த  இந்த புத்திசாலிப்பெண்ணை பற்றி விரைவில் கல்கியில் எழதவிருக்கிறேன்.  இந்த வார இறுதியில் எங்கள் கீரின் ஏக்கர் கிளப்பிற்கு வந்து பாடும்படி  அழைத்திருக்கிறேன்.

நல்ல பயணங்களைப்போலவே, எதிர்பாராமல் ஆச்சரியப்படுத்தும் சந்திப்புகளும் அவ்வப்போது எனக்கு வாய்க்கிறது. 2013 ஆண்டின் இறுதிநளில்  கிடைத்த இதுவும் அத்தகைய ஓன்று இது

ஹேப்பி நீயூ இயர்.