கங்கைக்கரை ரக்சியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கங்கைக்கரை ரக்சியங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15/3/14

கங்கைக் கரை ரகசியங்கள் 10



புத்தகயாவில் போதிமரத்தினடியில்  மெய்ஞானம் பெற்ற புத்தர், கடல் அலைகளைப்போல விழுந்து, எழுந்து. மீண்டும் விழுவது போன்றது தான்  மனித உயிர்களின் பிறப்பும் இறப்பும். இதனால் வாழும்போது மனிதன் செய்ய வேண்டியவைகளை அவன் சரியாக புரிந்துகொண்டால் வாழ்க்கை இனியதாக அமையும் என்று தான் தெளிவாக புரிந்து கொண்டிருந்ததை மக்களுக்கு, குறிப்பாக எளிய மக்களுக்கு சொல்ல,   சீடர்களை உருவாக்க சாரநாத் சென்று ஒரு ”பள்ளி”யை நிறுவுகிறார். அது மிகப்பெரிய பள்ளியாகி அதிலிருந்து  சீடர்கள் நாடெங்கும், நாட்டுக்கு வெளியேயும் பயணிக்கிறார்கள். இதுபோல பள்ளிகளையும் நிறுவுகிறார்கள்,  பின்னாளில் இதனுடன் புத்தரின் உருவத்துடன் கோவில்களைம் ஏற்படுத்துகிறார்கள்.  அவைகள் விஹார்கள் என அழைக்கப்பட்டது.
மிக அதிக அளவில் இத்தகைய விஹார்கள் இருந்ததால் தான் அந்தப் பகுதியே அப்பெயரால் அழைக்கபட்டு பின்னாளில் ”பீஹார்” ஆகியிருக்கிறது என்று ஒரு ஆசிரியர் எழுதியிருக்கிறார்.. இப்போது நாம் புத்த தேசமான பிஹாரில் புத்தகயாவிலிருந்து சென்றுகொண்டிருப்பது “ராஜ்கீர்”  என்ற இடத்திற்கு. கயாவிலிருந்து  80 கீமி தூரத்திலிருக்கும் இது  ஏழு சிறிய மலைகள் சூழந்த  கிராமம். மிகமிகப்பழமையான கிராமம்.  நாளந்தா மாவட்டத்திலிருக்கிறது. முதல் நூற்றாண்டின் கால  சாட்சியங்கள் கிடைக்கப்பட்டிருக்கும் இடம். இது மகத மன்னர்களின் தலைநகராக 4 ஆம் நூற்றாண்டுவரை இருந்திற்கிறது.. கிபி  5 நூற்றாண்டில் தான் மன்னர் அஜாதசத்ரு தலைநகரை பாடாலிபுத்திரத்திற்கு மாற்றியிருக்கிறார் என்கிறது வரலாறு. அப்போது இந்த இடம் “ராஜகிருஹம்” என அழைக்கப்பட்டிருக்கிறது  ஜிவகன் செட்டி என்பவர் அன்பளித்த மாமரதோப்பில் தன்பணிகளை துவக்கினார் என்கிறது இங்குள்ள குறிப்பு. பாலிமொழியின்  ஆங்கில மொழிபெயர்ப்பு செட்டி என்று சொல்லுகிறது. செட்டியாராக இருப்போரோ?. என்ற எண்ணம் எழுகிறது.

இந்த இடத்தில்  இருக்கும் மலைக்குகைகளில் புத்தர் தவம் இருந்திருக்கிறார். அடர்ந்த மாமரங்களின் காடாக இருந்த பகுதியில் வாழந்திருக்கிறார். அருகிலுள்ள மலைஉச்சியில் துறவிகளுக்காக ஒரு மாநாட்டை நடத்தியிருக்கிறார்.  இங்கிருந்து நிகழத்த பட்ட உரைகளில் புதிய போதனைகளை அறிவித்திருக்கிறார். இவைகளினால் இந்த இடம் புத்தமதத்தினருக்கு மிக புனிதமான இடம். அந்த குகைகளையும் அதில் சிதலமாகியிருக்கும் புத்தர் உருவங்களையும் பார்க்கலாம். மகத மன்னர் பிம்பிசாரன் இந்த இடத்தில்தான் புத்தமதத்தில் இணைந்திருகிறார். அவருடன் அவரது நாட்டு மக்களும் மதம் மாறியிருக்கிறார்கள். புத்த மதத்தினருக்கு மட்டுமில்லை சமணர்களுக்கும் இது முக்கியமான இடம். இந்த காட்டு பகுதிகளில் 14 ஆண்டு வாழ்ந்த மாஹாவீர்ர்  இந்த ராஜ்கீரில் ஒரு மலையில் சில ஆண்டுகள் தங்கியிருக்கிறார். இப்போது அங்கு ஒரு ஜெயின் கோவில் இருக்கிறது, இது ஒரு இந்துக்கள் இன்றும் வழிபடும் தலமாகவும் இருக்கிறது. ஒரு மலையில் பாறைகளுக்கிடையில் பிரம்மதீர்த்தம் என்ற  வற்றாத  சுடு நீர்ச்சுனை இருக்கிறது. அருகில் ஒரு சிறிய சிவன், காளி கோவில்கள்
 புத்தர் மாநாடு நடத்திய மலைஉச்சியில்  இப்போது   வெள்ளை சலவைகற்களால்  எழுப்பபட்ட  ஒரு ஸ்தூபி பளீரென்று நிற்கிறது. பல கீமி க்களுக்கு   தெரிகிறது.  இந்த பிரமாண்ட ஸ்தூபியின் பெயர் ”விஜய சாந்த ஸ்தூபி.” இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் உலகில் அமைதி நிலவ ஜப்பானிய புத்தமதசொசையிட்டியினர் உலகில்  80 இடங்களில் இத்தகைய ஸ்தூபிகளை நிறுவியிருக்கின்றனர்.  அதில் ஒன்று இது. அசோகரும் மற்ற மன்னர்களும் எப்படி புத்தர் சம்பந்த பட்ட இடங்களில் ஸ்தூபிகள் எழுப்பினார்களோ அதைப்போல இந்த  சொஸையிட்டினர் இப்போது செய்து கொண்டிருக்கிறார்கள். இதை அவர்கள் ’பகோடா’ என அழைக்கின்றனர்.
இதைப்பார்க்க மலைமேல் போக பாதை படிக்கட்டுகள் இருக்கின்றன. துறவிகள் அதில் தான் போகிறார்கள்.
நம்மாதிரி ஆட்களுக்கு ஒரு சேர் லிப்ட் இருக்கிறது. ஒருவர் அமரக்கூடிய அந்த  தொங்கும் ஒற்றைச்சேர்கள்  இணைக்கப்பட்ட   ரோப் கார் மாதிரியான ஒரு அமைப்பு.  மெதுவாக நிற்காமல்  சுற்றி கொண்டே இருக்கிறது. . ஏறும் இடத்திற்கு அது வரும்போது அதில் சட்டென்று உட்கார்ந்துகொள்ளூங்கள். பயப்படாதீர்கள்  நாங்கள் உதவுவோம் என்றார்கள்., நகர்ந்துகொண்டிருந்த அதற்குள் நம்மை அவசரஅவசரமாக தள்ளித் திணித்த போதுதான் இது தான் அவர்கள்  சொன்ன உதவி என்பது என்று தெரிந்தது. நகர ஆரம்பித்தபின்தான் நமது சேருக்கு மற்ற எல்லாவற்றுக்குள்ளும் இருக்கும் பாதுகாப்பு கம்பியை மாட்டிகொள்ளும் வளையம்  இல்லை என தெரிந்தது.  அந்த கம்பியையும் , உயிரையும் கையில் பிடித்துகொண்டு புத்தரை வேண்டிக்கொண்டு மேலே போகிறாம்.
 மிகபிரம்மாண்டமாக இருக்கும் அந்த ஸ்தூபியின். வட்ட வடிவ அடுக்குகள் மேல்  ஒரு டோம் ஆகவும் அதன் மேல் கூர்மையான விதானமும் அதன் உச்சியில் தங்கத்தில் ஜொலிக்கும் புத்த முத்திரையும். பார்த்து பிரமித்துப்போகிறாம். முழுவதும் வெண்சலவைக்கலால் இருக்கும் அதனை சுற்றி வந்து அதன் வாயிலை தேடுகிறோம். எதுமில்லை. அப்போது இது பகோடா என்று சொன்னது நினைவு வருகிறது. அவைகள் உள்ளே நுழையும்படி அமைக்கபட்டுவதில்லை. ஒரு நினைவுச்சின்னம் மட்டுமே. மேலே நான்கு திசைகளைப்பார்த்து நான்கு வெவ்வேறு வடிவில் புத்தர் சிலைகள். அவை தங்கத்தினாலனது என்பதை அறிந்தபோது ஆச்சரியம்.  அவைகள் பிறப்பு, ஞானோதயம்,போதனை, இறப்பு என்ற புத்தரின் வாழ்க்கையை குறிக்கிறதாம். அருகில் ஒரு பிரமாண்டமான மணி அலங்காரமான வளைவிலிருந்து தொங்கிறது  எழுத்துக்கள் பாலிமொழியில்


வட்ட வடிவிலிருக்கும் அதன் பாதையில் நம் குழுவினர் அமர்ந்து தியானிக்கின்றனர். ஒரு முறை சுற்றி வெளியே வந்த பின், புத்த விஹாரங்களையும், ஸ்தூபிகளையும் வலது புறத்திலிருந்துதான் வலம் வரவேண்டும் என்று சொல்லபட்டது நினைவிற்கு வந்ததால் மீண்டும் ஒரு முறை சரியாக சுற்றி வருகிறோம்.
அங்கிருந்து பார்க்கும்போது 7 மலைகளும் தெரிகிறது. ஸ்தூபிக்கு வெளியே அருகில் ஜப்பானியர்கள் அமைத்திருக்கும் கோவில்.  அதில் மிக ஆடம்பர பின்னணியில் புத்தர். அதுவும் தங்கச்சிலை என்கிறார்கள். எளிமையைப் போதித்த புத்தர் எல்லா இடங்களிலும் தங்கமாகத்தான் மின்னுவார் போலிருக்கிறது என எண்ணிக்கொள்கிறோம். கோவிலின் உள்ளே ஒரு மெகா ஸைசில் மத்தளம் தொங்குகிறது.

அருகிலுள்ள மற்றொரு மலைஉச்சியில்,  புத்தர் அருளுரை  வழங்கிய இடத்தில் ஒரு குழு பிராத்தனை செய்து கொண்டிருக்கிறது.
இந்த கோவிலையும் ஸ்தூபியையும் அன்றைய குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் திறந்து வைத்திருக்கிறார். அவர் கையெழுத்தில் ஜப்பானியர்களின் முயற்சியை பாராட்டி எழுதியிருப்பதைப் பார்க்கிறோம்.
கோவில் முகப்பு, போகும் பாதை, பெயர்கள், மைல்கல்  பாத்ரூம் இருக்குமிடம் வரை (நல்ல வேளையாக உருவம் வரைந்திருந்தது.) அனைத்து அறிவிப்புகளும் ஜப்பானிய அல்லது பாலிமொழியில். இருக்கிறது.


கிழே வர சேர்லிப்டில் பாதுகாப்பான சேரை கண்டுபித்து அதனுள் தாவி
ஏறி தரையிறங்குகிறோம். இந்த இடத்திலிருந்து புத்தர் ஒரு நாள் இரவு  எங்கும் நிற்காமல்  நடந்து ஒரு இடத்துக்கு போயிருக்கிறார்.  அந்த இடத்திற்கு தான் இப்போது நாம் பயணித்தை தொடர்கிறோம். அது எந்த இடம்? ஒருவாரம் பொறுங்களேன்.
-----------------------------------------------------------------------------------
சத்குரு பதில்கள்
நீங்கள் “ அனைத்துக்கும் ஆசைப்படு என்கிறீர்கள் புத்தர்  ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்று சொல்லியிருக்கிறாரே ?
 உங்களுக்கு உயிர்வாழ ஆசையிருக்கிறதா? உங்கள் குடும்பம் நன்றாக வாழவேண்டும் என்ற ஆசையிருக்கிறதா?  இல்லாமல் இருக்கமுடியாது. உலகில் மனிதனுக்கு  எதன்மீதும் ஆசையில்லாவிட்டால்  அது எப்படி இயங்கும்? புத்தரின் ஆசை என்னவென்று நீங்கள் நினைத்து பார்த்துண்டா?  தான் பெற்ற மெய்ஞானத்தை எல்லோருக்கும் போதிக்க வேண்டும் என்ற ஆசையினால் தானே கிராமம் கிராமாக 40 வருட காலம் அலைந்தார். அதனால் அவர் ஆசை என்று எதனைச்சொல்லியிருப்பார்- என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர் குறிப்பிட்டது தனிமனிதனின் மண். பொருள் போன்ற சுயநல ஆசைகளை.  அது பேராசையாக மாறும். எது பேராசை என்பதற்கு அளவுகோல் கிடையாது. எது கிடைத்தாலும் அதைவிட மேலானதுக்கு மனம் ஏங்கும். அதனால் மனித உயிருக்கும் உடமைக்கும் சேதம் நிகழும். அதைத் தவிற்க சொன்ன வார்த்தைகளாக இருக்கலாம்.  நான் சொல்லுவது அதுதானே. அனைத்துக்கும் என்று நான் சொல்லுவதை தாங்கள் விரும்பும் பொன் பொருள்,மண்  போன்றவைகளுக்கு மட்டும் என புரிந்துகொண்டால் அது தவறு. நான்  சொல்லும் அனைத்தும் என்ன என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இந்த உலகம் உங்களுடையதா? இந்தபிரபஞ்சத்தின் சக்திகளில் உங்களுக்கு பங்கு உண்டா. ஆம் என்றால் அவைகளை அடைய, அனைத்துக்கும், சகலமும் இந்த கல் செடி கொடி எல்லாம் நன்றாக இருக்கவேண்டும். அதனால் என் வாழ்க்கை அடுத்தவருக்கு இடையூறு இல்லாதிருக்க வேண்டும் என்று அனைத்துக்கும் ஆசைப்பட சொல்லுகிறேன்.  நகை, கார் போன்ற பொருளாசையை மட்டுமில்லை. கூர்ந்து கவனித்தால் புத்தனும் இதைத்தான் சொல்லியிருப்பது புரியும். வெறும் வார்த்தைகளை மட்டும் தெரிந்து கொள்ளாமல்  அது தரும் பொருளை சரியாக புரிந்துகொள்ளுங்கள். அப்படி புரிந்து கொள்ளவேண்டும் என்றும் ஆசைப்படுங்கள்
கல்கி 23/03/14








8/3/14

கங்கை கரை ரகசியங்கள் 9 ....



ஞானத்தை தேடி அலைந்து சாரநாத்திலிருந்து கயா வந்து 7 வாரம் தவமிருந்து மெய்ஞானத்தை கண்ட புத்தருக்கு இங்கு  எழுப்பட்டிருக்கும்  இந்த கோவிலின் வரலாறு ஆச்சரியமானது. புத்தர் ஞானோதயம் பெற்ற இந்த இடத்தில் மன்னர் அசோகர் 200 ஆண்டுகளுக்குபின்னர்  இந்த கோவிலை எழுப்பியிருக்கிறார். தொடர்ந்து வந்த குஷானர்,

கோவில் ஒரு பெரிய வளாகத்தின் நடுவிலிருக்கிறது. ஒரு நீள்சதுரத்தின் மேல் எழுப்பட்ட  நான்குபுறமும் பட்டையான கட்டமைப்பின் மீது கூர்மையான விதானத்துடன் கோபுரம். 150 அடி உயரமிருக்கும்.  வளாகம் முழுவதும் பெரிதும் சிறிதுமாக பல ஸ்தூபிக்கள்.  நுழையுமிடத்திலிருந்து

  படிகளில் இறங்கி  நடக்கவேண்டும்  கடந்த வருடம் ஜுலை மாதம் இங்கு ஒரு வெடி குண்டு தகர்ப்பு முயற்சி நடைபெற்றது. மிக அதிர்ஷ்ட வசமாக முக்கிய இடங்களில் வெடிகள் வெடிக்காததால் கோவில் தப்பியது இரண்டு புத்த பிட்சுக்களுக்கு படுகாயம். இந்த அழகான அமைதியான இடத்தில் வெடிவைக்க  எப்படித்தான் மனம் வந்ததோ.? இந்த நிகழ்ச்சியினால் செக்யூரிட்டி கெடுபிடிகள் மிக அதிகம். கோவில் பணியிலிருக்கும் பிட்சுக்களுக்கும் கூட சோதனை.                      
    

கோவில் வளாகம் படு சுத்தமாகயிருக்கிறது.  அணிஅணியாக புத்த துறவிகள். காவியாடைகளில் தான் எத்தனை வண்ணங்கள். மஞ்சள், இளம்சிவப்பு, கடும் சிவப்பு தவிட்டின் வண்ணம் என பலவகைகள். அணியும் பாணி ஒன்றாக இருந்தாலும் வண்ணங்கள் வேறு. ஒரு துறவியுடன் பேசியதில் அறிந்தது அது அவர்கள் உட்பிரிவுகளை குறிக்கிறதாம்  கடும்சிவப்பு மகாயான பிரிவினராம்,மஞ்சள் தேரவாதிகள் சற்றே மங்கிய சிவப்பு அணிந்திருப்பவர்கள் வஜ்ராயனம் என்று சொல்லிகொண்டே போனார். இங்கு புத்த பிக்குகளுடன் பேசும் முன் பேசலாமா? என கேட்டுகொள்ளவேண்டும். ஏனெனில் அவர் மெளனத்தில் இருக்கலாம் அல்லது ஆங்கிலம் பேசாதவராக இருக்கலாம். உட்கார்ந்திருப்பவர் அருகில் ஏதாவது மலர் இருந்தால் அவர் தொடர்ந்த தவத்திலிருப்பவர் ,

இப்படி வரும் பிக்குகளும் உடன் வருபவர்களும் ஆங்காங்கே அணியாக உட்கார்ந்து மெல்லிய குரலில் ஜபித்து கொண்டிருக்கிறார்கள். பாலிமொழியை எல்லோரும் அறிந்திருக்கிறார்கள். சிலர் சீன மொழியில் எழுதபட்ட புத்தங்களைலிருந்து வாசிக்கிறார்கள்.  வளாகத்தில் பல இடங்கள் புனிதமாக்கருதபடுகிறது.  கோவிலின் பின் சுவருக்கு அருகில் போதிமரம். புத்தர் அமர்ந்த இடத்தில்  வஜ்ராசனம் என்று சொல்லபடும் சிறிய பீடம். மலர்களினாலும் பட்டுதுணியினாலும் அலங்கரித்திருகிறார்கள். மரத்தை சுற்றி கல் பலகைகளினால் வேலி.மரத்தை தொடமுடியாது.  நல்லவேளை  இல்லாவிட்டால் போதிமரம்  இங்கில்லாமல் பலர் வீட்டிற்கு ஞானம் வழங்க போயிருக்கும் 


தியானம் செய்ய தூண்டும் அந்தச்சுழலில் நாமும் அமர்கிறோம்.  நம்மைப்போல உடன்வந்த நண்பர்களும். அமர்கிறார்கள்.  மூடிய கண்களின் முன்னே புத்தர் வருகிறார். ஒருமணிநேரம் போனதை உணரமுடியவில்லை. வாழ்க்கையில் மிகப்பயனுள்ளதாக செலவிட்ட நேரம்.
இந்த கோவிலின் விதானத்தின் கூர்மையாகயிருக்கும் பகுதியை தங்க மயமாக்க போகிறார்கள். தாய்லாந்து அரசி 
நன்கொடையாக 300 கிலோ தங்கம் தந்திருக்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் முதலில் ஏற்பதற்கு தயங்கிய முதல்வர் நித்திஷ் குமார்  பின்னர் மத்திய அரசுடன் மிக உயர்ந்த மட்டத்தில் பேச்சுகள் நடத்தியபின் ஒப்புக்கொண்டிருக்கிறார்,  ஒரு நாள் மிக ரகசியமாக 24 கமோண்டோக்களின் பாதுகாப்புடன் விமானத்தில் 13 பெட்டிகளில்  வந்திறங்கிய தங்ககட்டிகள் இப்போதும் அவர்கள் பாதுகாப்பில் தான் இருக்கிறது. 500 பக்தர்களின் சிறப்பு பூஜையுடன் துவக்கி 40 கலைஞர்கள் இரவுபகலாக தங்க்க்கூரை வேலைகள்
செய்து கொண்டிருக்கிறார்கள். அவ்வப்போது ஒரு தாய்லாந்து அமைச்சர் வந்து பார்வையிடுகிறார். . நீங்கள் அடுத்த முறை வரும்போது தங்கமயமாக மின்னும்  கோபுரத்தைப் பார்க்கலாம். கோவில் வளாகத்தின் உள்ளே  பல இடங்களில் சிலபுத்த பிக்குகள் தொடர்ந்து சாஷ்ட்டாங்கமாக நமஸ்காரம் செய்து கொண்டே இருக்கிறார்கள். உடலின் எட்டு அங்கங்களும் தரையில் படும் அந்த நமஸ்காரங்களை செய்ய ஊஞ்சல் பலகை போல வழவழப்பான நீண்ட பலகை,  உள்ளங்கை  உரசி புண்ணாகமலிருக்க கையில் கோர்த்து கொண்டிருக்கும் சிறியகுஷன், முழங்கால் அடிபடாமலிருக்க சின்ன மெத்தை இப்படி ஏற்பாடுகள். நிறுத்தாமல் செய்கிறார்களே எவ்வளவு  நமஸ்காரம்? என கேட்ட போது அருகிருந்த  ஒரு பிக்கு சொன்னது ஒரு லட்சம் !


. நமக்கு சரியாக கேட்கவில்லையோ என மீண்டும் கேட்டபோது  துறவியின் அடுத்த நிலைக்கு போக இது அவசியம் எனவும் ஒரு  நாள் 1000 அல்லது 500 வீதம் பல நாட்கள் செய்வார்கள் எனவும் சொன்னார். நாம் கேட்கும் முன்னரே  அவர் கையிலிருக்கும்  விரலால் அமுக்கினால் நகரும் எண்ணை காட்டும் ஒரு சிறிய  கவண்ட்டரை காட்டி இங்குள்ள தலமை துறவியிடம் பதிவுசெய்வோம் என்றார்.  நமது மதங்களில்தான் எத்தனைவித பிரார்த்தனைகள், நியமனங்கள்? என எண்ணிக்கொள்கிறோம்.   இந்த கோவில் வளாகத்தில்  போதி மரத்தடியில்  புத்தர்  ஞானம் பெற்றபின்னர் 7 இடங்களில் ஒவ்வொரு வாரம்  தவமிருந்து அருள் பெற்றிருக்கிறார். ஒரிடத்தில் ஒருவாரம் கண் இமைக்காமல் எதிரே இருக்கு ஆலமரத்தையே நோக்கியிருக்கிறார். ஒரு இடத்தில் 7 நாட்களும் ஒரே இடத்தில்  முன்னும் பின்னுமாக நடந்திருக்கிறார்.. மற்றொரு இடத்தில் அசையாமல் நின்றிருக்கிறார். ஒரிடத்தில் இவர் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தபோது கடும்மழையும் புயலும் தாக்கியிருக்கிறது அப்போது ஒரு நாகம் அவரை நனையாமல் காத்து நின்றிருக்கிறது. அந்த இடங்களெல்லாம்  புத்தமத்ததினருக்கு புனிதமான இடங்கள்.




அந்த இடங்களில் சிறிய மேடைகள். வருகிறவர்கள் அதில் அமர்ந்து தியானிக்கிறார்கள்  ஒவ்வொருநாள் தவத்திலும் அவரது உடலில் ஒருவண்ணம் ஓளிர்ந்திருக்கிறது..அந்த வண்ணங்கள் தான் புத்தமதத்தின் கொடியாகியிருக்கிறது. இன்று உலகம் முழுவதும் புத்த கோவில்களில் பறக்கிறது.

வளாகத்தை சுற்றிப் பார்த்தபின்னர் சன்னதிக்குள் நுழைகிறோம். கோவிலின் கம்பீரத்துக்கு சன்னதி மிகச் சிறியது.  பத்தடி உயரமிருக்கும்  பொன்வண்ண சிலை. அவர் ஞானம்பெற்ற நிலையை காட்டும் உட்கார்ந்த நிலையில் சிலை. சிவப்பு அங்கி சாத்தியிருந்தார்கள்.அமைதியாக சற்று நேரம் அமர்ந்திருக்கிறோம். மண்டியிட்டு அமரவேண்டும் என  மெல்ல காதில் யாரோ கிசுகிசுக்கிறார்கள்:. மெல்லிய மந்திரங்களின் ஒலியில்  சந்தன மணம் நாசியை தொட. எழ மனமில்லாமல் மெய்மறந்து கண்மூடி இருக்கிறோம். சற்றே சத்தமாக ஒலிக்கும் தமிழ் குரல்கள் நம்மை தாக்க, எழுந்திருக்கிறோம்.

கோவிலை விட்டு வெளியே வரும்போது “என்னுடைய போதனைகள் கோட்பாடுகள் அல்ல நான் சொல்வதையும் கேள்விகள் கேட்டு ஆராயுங்கள்”
”எவரும் பிறப்பால் உயர்ந்தவர்கள் இல்லை. தன் செயலால் மட்டுமே உயர்ந்தவன் என்ற நிலையை அடைய முடியும்” போன்ற புத்தரின் வாசகங்கள் கண்ணில் படுகிறது.  தான் பெற்ற ஞானத்தை தனக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்லாமல்  எல்லோரும் அதை அடையும்வழியை சொன்ன இந்த மனிதன் தான் உலகின் முதல் பொதுவுடமைப் புரட்சியாளன் என்று தோன்றிற்று.


சத்குருவின் பதில்கள் 


ஞானோதயம் என்பது என்ன? புத்தரைபோல எவரும் அதை அடையமுடியுமா?
 உங்களிடம் செல்போன் இருக்கிறதா?  காமிரா இருக்கிறதா? இன்றைக்குதான் எல்லாம் ஒன்றாக இருக்கிறதே.  அதிலிருக்கும் அத்தனை வசதிகளையும் உங்களுக்கு பயன்படுத்த தெரியுமா? நீஙகள் எந்த கருவியை பயன்படுத்துபவராக இருந்தாலும் அதைப்பற்றி முழுமையாக தெரிந்திருக்கும் பட்சத்தில் அதனை நீங்கள் திறம்பட கையாள  இயலும். அதனைப்பற்றி அதிகமாக தெரிந்துகொள்ளும் பட்சத்தில் உங்களால் அந்த கருவியை வைத்துக்கொண்டு என்ன செய்ய இயலுமோ அது பல மடங்கு மேம்படும். நாம் கையாளும் ஒவ்வொருபொருளுக்கும்  இது பொருந்துவது போல நம் மனத்தின் முழு சக்தியை முழுமையாக ஆழமாக புரிந்துகொள்ளும்போது அதை நீங்கள் கையாளும் விதமும் பன்மடங்கு மேம்படும்.. ஞானோதயம் என்றால் தன்னை முழுமையாக உணர்தல். இந்த நிலையை அடைந்தவர்கள் நிறைய விஷயங்களை எளிதில் செய்ய முடியும்.. உடலின் செயல்களை கட்டுபடுத்தமுடியும். இருந்த இடத்திலிருந்தே கண்மூடிய தூங்கும் என்ற நிலையில் இருந்தாலும்  செய்யவிரும்பியதை செய்ய முடியும். இந்த சக்திகளை பெற்றிருந்த புத்தர் அதனை  தன் நலத்திற்கு பயன்படுத்திகொள்ளமல் கண்டூணர்ந்தவகைகளை மற்றவர்களுக்கு போதிக்க துவங்கினார். ஞானோதயம் என்பது ஏதோ இமயமலைகுகைக்களும் காட்டுபகுதிகளில் கடும்தவம் செய்தால் தான் கிடைக்கும் என்பதில்லை. அப்படியும் நிகழந்திருக்கிறது. நிகழ்ந்துகொண்டுமிருக்கிறது.  ஞானோதயம் அடைய எவரும் முறையான பயிற்சிகளுடன் முயற்சிக்கலாம்.  முதலில் உங்களால் உங்களை உணர  முடியுமா என சோதித்துக்கொள்ள வேண்டும்.
(கல்கி 16/03/14)


படங்கள் ரமணன்

  


1/3/14

கங்கை கரை ரகசியங்கள் 8





எப்போதும் ஏதோவொரு சப்தம்,  எங்கும் மக்கள், மக்கள்,  குறுகியசந்துகள்,  அதனுள்ளிருந்து மின்னாலாய் வரும் மாடுகள், பராமரிக்கப்படாத பழைய கட்டிடங்கள், குப்பைகள் அப்புறப்படுத்தாத தெருக்கள்  போன்ற நகரின் அழகற்ற முகங்கள்,  வழி கேட்டால் பதில்சொல்லாத உள்ளுர்மனிதர்கள்,   சுத்தமில்லாத சூழலை சகித்து கொண்டு நடக்கும் வெளிநாட்டினர்,.     நமக்கே அன்னியமாகதோன்றும் இந்தியர்கள், செல்வந்தர்கள், சன்னியாசிகள், வாழ்வின் லட்சியத்தை அடைந்தவிட்ட மகிழ்வில் தளர் நடையில் முதியவர்கள், மண்குடுவையில்
தேனீர், பளபளக்கும் பித்தளைடம்பளரில் லஸ்ஸி,  மிகப்பெரிய இரும்பு  வாணலியில் எப்போதும் கொதித்துகொண்டிருக்கும்  பால், என  கதம்பக் கலவையாக யிருக்கும் இந்த காசி நகரம் ஏதோ ஒரு இனம் தெரியாத வகையில் வந்தவர்களையெல்லாம் வசீகரிக்கிறது.  பலருக்கு வாழ்நாள் கனவாகயிருக்கும் விஷயம் நமக்கு இன்று கிடைத்திருக்கிறது என்ற சந்தோஷத்தையும்,,பல ஜென்மங்களுக்கு முன் இந்த நகரத்தில் நாமும்  வாழ்திருப்போமோ என்ற பந்தத்தை ஏற்படுத்தும்  சக்தி இங்கு இருக்கிறது. அதானால்தான் என்னவோ மார்க் டைவன் என்ற  புகழ் பெற்ற அமெரிக்க நாவலாசிரியர் இந்த நகரை ”நமது சரித்திரங்களைவிட, நாம்  அறிந்த  பாரம்பரியங்களைவிட நமக்கு தெரிந்த இதிகாசங்களைவிட இரண்டு மடங்கு பழையது” என்கிறார். கடவுளுக்கும் முக்திதந்த,பலருக்கு ஞானக்கண் திறந்த, உலகின் எந்த இடத்திலும் இல்லாத சக்தி அதிர்வுகள் நிறைந்த இந்த காசிநகரம் ஒரு விஷயத்தை மெனமாக அழுத்திச்சொல்லுகிறது. ”எனக்கு  என்றும் அழிவில்லை”.என்பது தான் அது. அத்தகைய ஒரு பெருமைமிக்க நகருக்கு நாமும் வர ஒரு வாய்ப்பு கிடைத்தற்கு  இறைவனுக்கும் அதை கிடைக்கசெய்த
ஈஷா குழுவினருக்கும்   நன்றி சொல்லி இந்த அதிகாலைப் பொழுதில் புத்ததேசமான புத்தகயாவிற்கு பயணத்தை துவக்கியிருக்கிறோம்.புத்த கயா என்பது காசியிலிருந்து 250கீமி  தூரத்திலிருக்கிறது. இதற்கும் காசி என்ற வார்த்தையுடன் எப்போதும் சொல்லப்படும் கயாவிற்கும் சம்பந்தமில்லை. அது கங்கைநதிக்கரையில் இன்னும் தொலைவிலுள்ள மற்றொரு கிராமம்.. புத்தர் ஞானம் பெற்ற போதி மரம் இருக்குமிடம், புத்த கயா என்று அழைக்கப்படுகிறது.  வாரணாசியிலிருந்து கிளம்பி சாரநாத்தில் தன்  கடுந்தவத்தை துவக்கிய சித்தார்த்தன் இங்கு வந்து போதிமரத்தடியில் அமர்ந்து தவமிருந்தபோதுதான் ஞானோதயம் அடைந்து புத்தராகியிருக்கிறார்.
 வெளிப்புறம் பூசப்படாத சுவர்களுடன் வீடுகள். களிமண் குடிசைகள்  என்ற காட்சிகளை காட்டிய குறுகியசாலைகள் நாம் பீஹார் மாநிலத்திற்கு வந்திருக்கிறோம் என்பதைச்சொல்லுகிறது.பிஹார் வரண்டபிரதேசம் என்று சொல்லப்படுவது தவறு எனபதைபோல தலையாட்டி கொண்டிருக்கும்  பசும் பச்சை நெற்பயிர்களுடன் வயல் வெளிகள்.  நம் ஏஸி பஸ் குலுக்கிப் போடுவது நமக்கு கஷ்டமாகயிருக்கிறது.  ஒரிடத்தில் கங்கையை கடக்கும் பாலத்தை.   தாண்டியபின்  ஒரு சின்ன கிராமம் கூட கண்ணில்படவில்லை. ஏதோ ஒரு காட்டை அழித்து உருவாயிருக்கும் குறுக்குப்பாதை அது, பஸ் மெல்ல போவதால், தூரத்தை அதிகமாக உணர்வதால் களைப்பாக  தோன்றுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்  சித்தார்த்தன்   இந்தவழியாகதானே நடந்திருப்பார். கங்கையை எப்படி கடந்திருப்பார்?. எவ்வளவு நாள் பயணம் செய்திருப்பார்? என்ற எண்ணங்கள் எழுகின்றன. அதை விட ஏன் சாரநாத்திலிருந்து  புத்த கயாவிற்கு போனார்?  என்பது இந்த புனிதரின் வாழ்க்கையில் புரியாத கேள்விகளில் ஒன்று.
தலைப்பைச் சேருங்கள்
உடலை வருத்தி ஞானத்தை தேடி அலைவது பயனற்றது. அடைந்த ஞானத்தை அடுத்துவருக்கு போதிக்க நல்ல ஆன்மாவுடன் உடலும் தேவை எனபதை உணர்ந்த சித்தார்த்தன் சாராநாத்தில் கடும் தவத்திலிருந்தபோது உடல் வற்றி வெறும் எலும்பும் தோலுமாக மயக்க முற்ற நிலையில் சுஜாதா என்ற ஆயர்குல சிறுமி  பாலில் சமைக்கப்பட்ட சாதத்தை அளிக்கிறார். இப்போது பயன்பாட்டில் இல்லாத அந்த அரிசி காலா நமக் என்ற கருப்பு வகை.அரிசி. இதன் மாதிரியை ஊளுந்தூர் பேட்டை சாராத ஆஸ்ரமத்தில் பாதுகாக்கிறார்கள்.
பட்டினிகிடப்பவன்  மெய்ஞானத்தை அடையமுடியாது என்பதை சித்தார்த்தன் உணர்ந்த தருணம் அது. அவர் அந்த சாதத்தை சாப்பிட்டதைப் பார்த்ததும்  அவருடன் தவத்திலிருந்தவர்கள் அவரை வெறுத்து  விலகி செல்லுகின்றனர். தனித்துவிடப்பட்ட  சித்தார்த்தன் மீண்டும் நடக்க துவங்குகிறார்.  தீவிரமான தேடியது தான்அடைய வேண்டியதற்கான முயற்சிக்காக ஒரு சரியான இடம்..  அடர்ந்த வனத்தையும் நதிகளையும் தாண்டி அவர் கண்ட இடம் தான் புத்தகயா. அன்று அதன்பெயர்  உருவெல்லா என்ற வனப்பகுதி. அதில் அவர்  தவம் செய்ய தேர்ந்தெடுத்தது ஒரு அரசமரத்தினடி. அந்த மரத்தடியை தேர்ந்தெடுத்தது தற்செயலா? அல்லது அவர் குறிப்பாக தேடிக்கண்டுபிடித்ததா? என்பது இன்றும் விவாதிக்க பட்டுகொண்டிருக்கும் ஒரு விஷயம். அந்த மரத்தையும் அதன் அருகில் எழுப்ப பட்டிருக்கும் மஹாபோதி கோவிலையும்  தரிசிக்க தான் இந்த பயணம்.
 மாலைநேரத்தில் பஸ்ஸுக்கு வெளியே  மாறும் காட்சிகள்  புத்தகயாவிற்குள்  நாம் நுழைந்து விட்டதை உணர்த்துகிறது. மிகச் சிறிய நகரம். பல புத்த விஹார்கள்,  வீடுகளைவிட ஹோட்டல்கள் அதிகம் என தோன்றிற்று. கடைகள், ஹோட்டல்கள், ரெஸ்டோரண்ட்கள் எல்லாவற்றிருக்கும்  சுஜாதா, சித்தார்த், அசோகா  ராகுல் என புத்தமத சமபந்த பட்ட பெயர்கள்.தான். தங்கிய ஹோட்டலிலும் ரிசப்ஷனில் கண்ணாடியில் செதுக்க பட்ட பெரிய புத்தர் படம்.   அன்று மாலையில் லாவோஸ் நாட்டின் பிரதமர் சார்பில்  மஹாபோதியில் பிராத்தனைகள் இருப்பதால்  அதிகாரிகள், லவோஸ்மக்கள் என்று ஒரு பட்டாளமே வந்திருந்தது.  அதனால் மறுநாள் மஹாபோதி புத்தரை பார்க்கலாம்  என முடிவு செய்து நகருக்குள் நடக்கிறோம்.. இருப்பது பாங்காங் அல்லது சீனாவின் ஒரு பகுதியோ என்று தோன்றும் அளவிற்கு புத்தகோவில்கள்.



எங்கு காணினும் புத்தனடா என சொல்லவைக்கிறது. அத்தனை கோவில்கள். அவ்வளவும் அழகாக இருக்கிறது அருமையாகப் பராமரிக்க படுகிறது.  பூட்டான், சீனா,மியாமர்,நேப்பாள், இலங்கை தைவான்,தாய்லாந்து திபேத்,வியட்நாம்.பங்களாதேஷ் என பல நாட்டினர் இங்கு புத்தகோவில்கள் அவரவர் நாட்டின் பாணியில் பகோடா, பாகன் பாணிகளில் அமைத்திருக்கிறார்கள். கண்ணைப்பறிக்கும் வண்ணத்தில் அந்தந்த தேசங்களின் கலைநுணுக்கங்களைக்  காட்டும் கோவில்கள். ஒவ்வொன்றிலும் புத்தர். பூடான்கோவிலில் வண்ணமயமான் பின்னணியில் தங்க புத்தர்.  
எல்லாகோவிலின் புத்தசபாக்கள் ( மடங்கள் என்று சொல்லக்கூடாதாம்) சில கோவில்கள் பல ஆண்டுகளாக இருக்கிறது. தாய்லாந்து கோவிலின் அருகில்  பிரமாண்டமான  புத்தர் சிலை 80 அடிக்குமேல் உயரம். ஒரு அழகான தோட்டத்தின் நடுவே இருக்கிறது,  இது கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கிறது.  சிலையின் கம்பீரமும்,புத்தரின் முகத்தில் தெரியும் சாந்தமும் எவரையும் மயக்கும்

 இந்தியாவின் மிக குட்டி காரான நானோவில் இந்தியாவை சுற்றும் ஒரு தம்பதியனர் தங்கள் காரை இந்த பிரமாண்டத்தின்  முன்னே காரை நிறுத்திபடமெடுத்துகொண்டிருந்தார்கள்.  ஏன் இவ்வளவு  புத்தர் கோவில்கள்? இந்த இடம் புத்தமத்தினருக்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு புத்த மத்தினரும் தங்கள் வாழ்க்கையில் நான்கு முக்கிய இடங்களில் வழிபட வேண்டும். அவை நேப்பாளத்தில் இருக்கும் புத்தர் பிறந்த இடம் லூம்பினி,  அவர் ஞானம்பெற்ற புத்தகயா, புத்தர் தன் போதனைகளை துவக்கிய முதல் இடமான சாரநாத்,  அவர் உயிர்நீத்த இடமான குஷி நகர். அதனால் தான்  உலகெங்குமிருக்கும் புத்தமதத்தினர் இங்கு வந்துகொண்டேயிருக்கின்றனர். தங்கள் நாட்டு அரசின் உதவியோடு இங்கு ஒரு கோவிலையும் நிறுவி இங்கு வரும்போது வழிபடவும் வரும் துறவிகள் தங்க சபாக்களையும் நிறுவியிருக்கிறார்கள்.  சில மிக பழமையானவை. இலங்கை கோலில் 18ஆம் நூற்றாண்டிலேயே  நிறுவப்படிருக்கிறது. எந்த புத்தர் சன்னதியிலும் தனியாக ஆராதனை எதுவும் கிடையாது.  நள்ளிரவு வரை திறந்திருக்கும்  நாம் போய் அமர்ந்து பிராத்திக்கொள்ளாலாம்.  கட்டணம் எதுவும் கிடையாது. ஒரே ஒரு கோவிலில் மட்டும்  கோவிலை போட்டோ எடுத்தால் உண்டியலில் 20 ரூபாய் போடுங்கள் என்ற அறிவிப்பு.  மெல்லக்கவியும் இருள், இதமான நிலையிலிருந்து தாக்கும் நிலைக்கு மாறிக்கொண்டிருக்கும் குளிர், லேசாக வலிக்க  துவங்கியிருக்கும் கால்கள் ஹோட்டலுக்கு திரும்பச் சொல்லுகின்றன.  தொலைவில் ஒளிவெள்ளத்தில் மஹாபோதி கோவில்
. நாளைகாலை நம்மை அருள் பாலிக்க காத்திருக்கும்  புத்தரை தரிசிக்கபோகிறோம்.


சத்குருவின் பதில்கள்
வழிபாடுகளுக்காக ஏற்படுத்த பட்டவை கோவில்கள். எல்லா மதங்களிலும்  இவற்றில் சில பிரமாண்டமாக அல்லது ஆடம்பரமாக இருக்கிறதே ஏன்?
 கோவில்கள் என்பது ஏற்படுத்தபட்டதின் நோக்கம்  மனிதனுக்கு  எளிதில் உதவதற்காக. அவைகள் ஒரு சக்தி வளையமாக உருவாக்கப்பட்டு,பேணபட்டுவந்தது.  ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆன்மீக சக்தி இயற்கையாகவே அமைந்திருக்கிறது.  இந்த சக்தி வளையங்கள் அவைகளை தூண்ட, அவனுள் மனிதம் மலர, நல்ல மனிதாக வளர உதவி செய்ய வேண்டி  உருவாக்கபட்டன.  அதனால்தான்  நாம் கோவிலில் சில நேரமாவது உட்காரவேண்டும் என சொல்லுகிறோம். யோகா, கிரிகைகள், பல வேறு சதானாக்கள் இதற்காக இருக்கின்றன. ஆனால் அவை எல்லா மனிதர்களாலும் செய்ய முடியாது என்பதினால்  அவர்களுக்கு எளிதாக இந்த சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கோவில்கள் உருவாயின. சுருக்கமாக சொல்ல வேண்டுமானானால்  கோவில்கள் பப்ளிக் சார்ஜிங் செண்ட்டர் மாதிரி. அங்கு தினசரி வருபவர்கள் மிக எளிதாக தங்கள் சக்தியை புதுபித்துகொண்டு தினப்பணிகளில் ஈடுபடமுடியும்.  அந்த சக்தியை வழங்க நிறுவபட்ட கோவில்களுக்கு  அந்த சக்தி எப்படி வந்தது? அந்த சூட்சமம் தெரிந்தவர்கள் உருவாக்கிய கருவிதான் கோவில். அதில் அத்தகைய சக்தியை பிரதிஷ்ட்டை என்கிறோம். இதை எல்லோராலும் செய்யமுடியாது. இதைசெய்தவர்கள் மிக அற்புதமாக அதைச் செய்திருக்கிறார்கள். அதனால் தான் பல ஆயிரம் வருடங்களாக அவை தொடர்ந்து சக்தி வளையமாக இருந்து வருகிறது.  அந்த சக்தியை பெற மனிதன்  தன் ஆணவங்களை, அகங்காரங்களை மறந்து சமநிலையான மனத்துடன் கோவில்களுக்கு வர வேண்டும்..ஆனால் காலப்போக்கில் இது பிராத்தனைக்கூடமாகி எனக்கு வேண்டியைதையெல்லாம்  நான் கேட்டால் ஆண்டவன் கொடுப்பான். அவனுக்கு நான் இதைக்கொடுத்தால் அவன் எனக்கு அதை கொடுப்பான் என்றாகி விட்டது. அதைபோல கோவிலை சமூகத்துக்காக உருவாக்கி உதவுபவர்கள் தங்கள் செழிப்பையும் அந்தஸ்த்தையும் காட்ட ஆரம்பித்தார்கள். இது சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே துவங்கிவிட்டது. ஒருகோவில் எவ்வளவு பெரிது, எவ்வளவு செல்வ முள்ளது என்பதைவிட  அதன் சக்தி வளையம் எவ்வளவு சக்தி வாய்ந்தது  என்பது தான் முக்கியம். 
கல்கி 8/3/14


15/2/14

கங்கைக் கரை ரகசியங்கள் ....6



இந்த கங்கைக்கரை  இந்துகளுக்கு மட்டும் புனிதமானதல்லசமணர்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் மூஸ்லிம்கள் ஆகிய அனைவருக்கும் மிக முக்கியமான தலம். மஹாபாரத காலம் முதல் இன்றுவரை போற்றபடும் இந்த கங்கைக்கரையின் மஹோன்னதம் பற்றி பலர் எழுதியிருக்கிறார்கள்பெர்ஷியாவிலிருந்து கஜினி படையெடுத்து வந்து இந்த நகரத்தை அழித்தபோது அவருடன் வந்த அமைச்சர்களில் ஒருவரான அல்-பைரனி என்பவர்அனைத்து மதத்தினரையும் ஈர்க்கும் இந்த நகரிலேயே தங்கி விட்டார். காரணம்  இந்த சக்தி வாய்ந்த நகரில் ஒரு மசூதி எழுப்பி மூஸ்லீம் இனத்தவர் வழிபட வழிசெய்ய விரும்பினார். இதை  1019ம் ஆண்டு தனதுகுறிப்பில் எழுதியிருக்கிறார்இப்படி காலங்காலமாக எந்த மதத்தவரையும்  தன்னை நோக்கி பயணிக்க செய்த கங்கைக்கரைதான்  சித்தார்த்தன்  புத்தராகும் முன் வந்த தங்கிய  முதல் இடம்மன்னன் சித்தார்த்தன்  துயரங்களைப் பார்த்து கலங்கி ஞானம்  அடையும் வழியை தேடினாரோஅல்லது சமீபத்திய ஆய்வுகள் சொல்லுவது போல அவருடைய நாட்டில் எழுந்த  நதி நீர்பிரச்ச்னையை  தீர்க்க எழவிருந்த போரை விரும்பாமல் துறவறம் பூண புறபட்டாரோ - வந்த இடம்  இந்த கங்கையின் கரைநேப்பாளத்திலிருந்து இங்கு வரை நடந்திருக்கிறார்உடன் வந்தவர் அவரது பணியாளர் சன்னாகடலென விரிந்திருக்கும் கங்கையின் கரையில் வழிபாட்டுக்கு பின்  அமர்ந்து தன் உதவியாளரிடம் இந்த கங்கையில் குளிப்பதால் முக்தி கிடைக்கும் என நினைக்கிறாயா? என கேட்கிறார். சில நொடிகளுக்கு பின் அவரே  அது உண்மையானால் இந்த நதியிலிருக்கும் மீன்களும் இறால்களும், சிப்பிகளும்  முக்தி அடைந்து அந்த இனம் இல்லாமலே போயிருக்குமே என சொல்லிக்கொண்டு எழுந்துஞானத்தை தேடி அலைந்த அந்த இளைஞன்  உடலை வருத்தி கடும் தவம் செய்யும் வழியை நாடி  நடக்க ஆரம்பிக்கிறார்மான்கள்  துள்ளி ஓடும் ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு தன் தவத்தை துவக்குகிறார். அது தான்  இன்று சாரநாத்அழைக்கப்படும் ரிஷிபட்டினம்பல ஆண்டுகள் பலரிஷிகள் கடும் தவமிருந்து தங்கள் உடலை துறந்து முக்கி அடைந்த இடம் அது.   காசி நகரிலிருந்து  10 கீ மீ தூரத்திலிருக்கும்  சாரநாத்திற்கு  இப்போது வந்திருக்கிறோம்இந்தியாவிற்கும் புத்தமதத்திற்கும்  இருக்கும் தொடர்புகளை உலகுச்சொல்ல உதவிய இடம் இதுதான்.



 பரந்த ஒரு பசும் புல்வெளிகளின் நடுவே  , அகழ்வாய்வு ஆராய்ச்சியின் அடையாளங்களான கண்டுபிடிக்கப்பட்ட இடிபாடுகள், சிறிய ஸ்தூபிகளின் அடிப்பகுதிகள்,பெரியபிராகாரங்களின் அடையாளங்கள்  என நிறைந்திருக்கும் பகுதியின் நீண்ட பாதையை கடந்து வந்த பின் நாம் பார்ப்பது சாரநாத் ஸ்தூபி. இபோது இந்த ஸ்தூபி தூண் வடிவில் இல்லை. வட்டவடிவில் . ஒரு உடைந்த செங்கல் கட்டித்தின் வட்ட அடிப்பகுதியைபோல  50 அடி உயர்ந்திருக்கிறதுகற்களாலான அடிப்பகுதியில் சில சிற்பங்களும் புத்தர் உருவங்களும் இருக்கிறது
கிமு 600 லியே சாரநாத் சமணர்களுக்கு  ஞானம் அருளுமிடமாகயிருந்திருக்கிறது. சமண தீர்த்தங்கர்களில் மூவர் வாழ்ந்து உயிர் துறந்த இடம் இது. இதற்கு 300 ஆண்டுகளுக்கு பின்னர் தான் சித்தார்த்தன் இந்த இடத்திற்குதான் காசியிலிருந்து  கடும் தவம் செய்து ஞானம் அடையும் வழியை தேடி வந்திருக்கிறார்பின்னர் சமணர்களுடன் சேர்ந்து உடலை வருத்தி கடும்தவம் செய்வதினால் உடல் மட்டுமேநலிந்துபோகிறது ஞானம் எதுவும் அடைய முடியாது என்பதை உணர்ந்து தனியாக தவம் செய்ய  கயாவிற்கு பயணம் செய்துபோதியின் அடியில் தவம் செய்து ஞானம் பெற்று புத்தராகி இதே சாரநாத்துக்கு திரும்பி தன்னுடன் தவத்திலிருந்த  5 சமணர்களுக்கு தான் உணர்ந்ததை போதித்து மனம் மாற்றுகிறார். இந்த மனமாற்றத்தில் பிறந்ததுதான் பெளத்தம். அதனால் இந்த இடம் தான் புத்தமார்க்கத்தின் பிறப்பிடமாக அறியப்படுகிறது.
பின் நாளில்  புத்தர் தன் முதல் 5 சீடர்களை பெற்ற இடம், தான் பெற்ற ஞானத்தை மக்களுக்கு எடுத்து சொல்லி முதல் உறையாற்றிய இடம் என்பதை கெளரவிக்க  மன்னர் அசோகர் எழுப்பிய சின்னம் இது. இந்த இடம் புத்த மத்த்தினருக்கும் மிகமுக்கியமான புனிதஸ்தலம், வாழ்நாளில் ஒருமுறையாவது வர விரும்பும் இடம். அணி அணியாக ஜப்பானியர், சீனர், ஸ்ரீலங்கர் வந்து அமைதியாக வளாகத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து பிரார்த்திக்கிறார்கள், சிறிது மண் எடுத்து பத்திரப்படுத்திகொள்கிறார்கள். புத்தர் வாழ்ந்த காலத்தில் இது அவர்கள் மார்க்கத்தின் தலமைப்பீடமாகவும், சீடர்களுக்கு போதிக்கும் கல்விக்கூடமாகவும் இருந்திருக்கிறதுஆனால் சுல்தான்களில் படையெடுப்பால் கால் வெள்ளத்தில் கரைந்து காணமல்போன புத்தமதத்தினால் இந்த இடமும் மறக்க பட்டு சாரநாத்  மடிந்து கொண்டிருந்தது. இதை நமக்கு கண்டுபிடித்து புத்தரின் சரித்திரத்தை அறிய உதவியவர் ஒர் ஆங்கிலேலே அதிகாரிஅலக்ஸாண்டர் கன்னிங்ஹாம் என்ற அந்த ஆய்வாளருக்கு  நாம் என்றென்றும் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம். இந்த மனிதனின் முயற்சியில்லை என்றால் இன்று சாரநாத் இருக்கிறத்தில் தொழிற்சாலைகளோ அடுக்குமாடி கட்டிடங்களோ எழுந்திருக்கும். இவர் இந்த ஸ்தூபியை பற்றி அறிந்தது ஒரு எதிர்பாராத ஆச்சரியம். 1794ல் காசியில் மன்னர் ஆட்சி இருந்தாலும் மற்ற பல ஸமஸ்தான்ங்களைப்போல ஆங்கிலேயரின் ஆதிக்கமும் நுழைந்துகொண்டிருந்த காலம் அது.   காசி நகரில் ஏதேனும் கட்டிடம் கட்டவேண்டுமானால் இந்த இடிபாடுகளுக்கிடயே இருக்கும் தரமான செங்கற்களை எடுத்து செல்வார்கள்காசி அரசவை அமைச்சர் தன் வீட்டு கட்டிடத்திற்காக  இந்த இடிபாடுகளின் மேல்பகுதியை உடைத்து தரமான நன்கு சூடப்பட்ட முழு செங்கற்களை எடுத்துவரச்சொன்னர். அதை செய்து கொண்டிருந்தவர்கள் கண்டது ஒரு பெட்டியையும் அதனுள் ஒரு மரகத புத்தர் சிலை மற்றும் சில ஆபரணங்களையும்அதிர்ந்து போன அமைச்சர். மன்னரிடம் சொல்ல அவர் ஆங்கிலேயர்களிடம் கூற உடனே யாரும் இடிக்கூடாது என்ற ஆணையுடன் ஆராய்ச்சி துவங்குகிறது. போதிய பணம் ஒதுக்காத பிரிட்டிஷ் அரசுடன் போராடி இங்கிலாந்திலிருந்து நிபுணர்களை வரவழைத்து அகழ்வாரய்ச்சியை தொடர்ந்து நமது சரித்திரத்தை மீட்டெடுத்து கொடுத்திருக்கிறார் இந்த ஆங்கிலேயர்.
இந்த சரித்திர சான்றுகள்  கிடைத்த இடத்திலியே ஒரு அருங்காட்சியகம் நிறுவியிருக்கிறார்கள். இம்மாதிரி சான்றுகள் இருக்குமிடத்திலியே காட்சியகம் இருப்பது சில இடங்களில் மட்டுமே. மிக அழகாக நிர்வகிக்கபடும் இந்த காட்சியகத்தில்தான்  முதல்முதலாக கண்டெடுக்கபட்ட புத்தரின் சிலை இருக்கிறது. அதுவரை  அனைவரும் பார்த்த  புத்தர் உருவம்  ஓவியர்களின்  கற்பனையில் பிறந்தவை அசோகர் நிறுவிய இந்த ஸ்தூபியின் முன்னால் நின்று கொண்டிருந்த  வெற்றித்தூண் இன்று 6 பகுதிகளாக உடைந்த நிலையில் இருக்கிறது. அதன் தலையில் இருந்த நான்கு சிங்களும் சக்கரமும் உள்ள சிலைதான் நம் தேசிய சின்னமாக அறிவிக்கபட்டிருக்கிறதுநான்கு திக்குகளுக்கும் புதிய மார்க்கத்தை பரப்ப புத்தர் இந்த இடத்திலிருந்துதான்  சீடர்களை  அனுப்பினார் என்பதை உணர்த்த  எழுந்த சின்னம் இது  அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த உடனே நம்மை அசத்தி  நிற்க வைப்பது
தலைப்பைச் சேருங்கள்
இந்த கம்பீரமான சின்னம்தான்
, ராஜஸ்தான் பகுதியில் காணப்படும் ஸாண்ட் ஸ்டோன் என்ற வகை சலவைக்கல்லில் பழுப்பு நிறத்தில் தொட்டு பார்க்க அழைக்கும் வழவழப்புடன் பளீசென்றிருக்கிறது. கவிழ்த்த தமாரை மலர் பீடத்தில் மான், சக்கரம், யானை சிற்பங்களுடன் இருக்கிறது. சக்கரத்தில் காணப்படும்  36 ஆரக்கால்கள் , நமது தேசிய சின்னத்தில் 24 தானே? என்ற கேள்வியை எழுப்பிற்று. அந்த சிலையின் வடிவமைப்பும் கம்பீரமும் இது தேசிய சின்னமானது சரிதான் என்ற எண்ணவைக்கிறதுநல்ல வேளை இது ஒரு மதம் சார்ந்தது, அஹிம்சையை போதித்த தேசத்திற்கு ஏன் சிங்கங்கள்? என யாரும் அப்போது போராடவில்லைகாட்சியகத்திற்குள் இருக்கும் புத்தர் சிலைகள் அற்புதமானவை. மெல்லிய ஆடை, விரல்நகங்கள் கூட நுட்பமாக வடிக்கபட்டிருக்கின்றன.
அருகில் புத்தருக்கு  ஒரு கோவில். உள்ளே தங்கத்திலான புத்தர். வளாகம் முழுவதும் ஜப்பனிய, சீன  பாலி மொழிகளில் வாசகங்கள் பெரிய பெரிய கல்வெட்டுகளாக படிக்க வசதியாக சாய்வாக நிறுத்தபட்டிருக்கிறது. நாம் பார்க்க மட்டுமே செய்கிறோம். கம்பீரமான ஒரு மணி. புத்த பூர்ணிமா அன்று மட்டும் தான் ஒலிப்பார்களாம்முதல் 5 சீடர்களுக்கு உபதேசம் செய்த காட்சி சிலையாக்கப்பட்டிருக்கிறது.
அதில்  முற்றும் துறந்த புத்தருக்கும் அவர் சீடர்களுக்கும் பளபளக்கும் பட்டாடை. கோவிலின் பின்னே ஒரு ஆலமரம். புத்தகயாவிலிருந்து கொண்டுவந்த கிளை மரமாக வளர்க்கபட்டிருக்கிறது. தொட அனுமதியில்லை.
உருவ வழிபாடு அவசியமில்லை என்று சொன்னவர் புத்தர். அவரையே கடவுளாக்கி வழிபடும் முறை  எப்படி தோன்றியிருக்கும்? என சிந்தித்துக் கொண்டே காசி நகர் திரும்புகிறோம். மாலையில் பனாராஸ் புடவைகள் வாங்குவதைப்பற்றி  பஸ்சில் பலர் பேசிகொண்டிருக்கிறார்கள். நாம் காசியில் வேறு என்ன பார்க்கலாம் என யோசித்து கொண்டிருக்கிறோம்
-----------------------------------------------------------------------------------------------------------------------------


புத்தர் தன் மனைவி மற்றும்  குழந்தையை விட்டுவிட்டு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் இரவோடு இரவாக  அரண்மனையை விட்டு வெளியேறினார்.   ஒரு கணவனாக, மன்னனாக தனது பொறுப்புகளை சரிவர செய்யாமல் இப்படி செய்தது சரியா?
  புத்தரின் அந்த செய்கையை ஒரு சதாரண மனிதனின் செயலாக நீங்கள் பார்க்கீறீர்கள். அதனால் இப்படி கேட்கிறீர்கள். சித்தார்த்னாக அவதரிக்கும் முன்னரே கருவிலிருக்கும்போதே  பிறக்கும் குழந்தை துறவியாவான் என்பது அவருடைய தாய்க்கு ஒரு கனவின் மூலம் தெரிந்தது. குழந்தை பிறந்த 7 நாளில் தாய் இறந்துபோனதால் இது பலருக்கு தெரியாதுஅவர் புத்தர் ஆகும் முன்னரே மிகசிறிய வயதிலேயே  உயர்ந்த சிந்தனைகளும்  பல நடைமுறைகளை தவறு என்று சொல்லும் துணிவுடனும் இருந்தார்அந்த காலகட்டத்தில்  சரி என்று நம்பப்பட்ட விஷயங்களை மறுத்தவர் அவர். உதராணமாக மனிதஉயிர்களை கொல்லுவது  தவறு என்று சொன்னார். இப்படிபட்டவன் எப்படி அரசனாக கடமை ஆற்றி போர் செய்ய முடியும்?. ஒரு வேடனின் அம்பினால் தாக்கப்பட்ட பறவை இவர் காலடியில் விழுந்த போது அதை காப்பற்றினார்வேட்டையாடியது வேடனுக்கு சொந்தம் என்பதை மறுத்து காப்பாற்றியவனுக்குதான் சொந்தம் என விதியை மாற்றினார்இப்படி பட்ட ஒரு மனிதன் எப்படி எல்லோருரையும் போல சாதாரண மனிதாக இருக்கமுடியும்.? பெரிய சக்தியாக உருவாகப்போகும்  மேன்மையான மனிதர்கள் இப்படி குடும்பத்தை பிரிந்ததை நீங்கள் பல மஹானின்  வாழ்க்கையில் பார்த்திருப்பீர்களே? புத்தன் செய்தது சரியா என்று யோசிப்பதை விட  இப்படி யோசியுங்களேன்.  2000 வருடங்களுக்கு பின்னரும் அவர் செய்த விஷயங்களைப் பற்றி அவர் உருவாக்கிய கோட்பாடுகள் எல்லாம் பற்றி  நாம் பேசுவது அவர் புத்தர் ஆனதினால் தானே?. எல்லா மன்னர்களையும் போல அவரும் நாடு, மனைவி, குழந்தைகளுடன் வாழ்ந்திருந்தால் இன்று நாம் அந்த சித்தார்த்தனைப் பற்றி பேசுவோமா?.