சந்திப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3/9/16

இரும்பு பட்டாம்பூச்சி

இந்த மாத மங்கையர் மலரில் எழுதியிருப்பது  


 இரும்பு பட்டாம்பூச்சி 
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், முதல்வர் திரு இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில், சீனாவின் தூண்டுதலுடன், அவ்வப்போது, போராட்டங்கள் வெடித்து வந்ததால், பாதுகாப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்பட்டது. மணிப்பூர் உள்ளிட்ட 7 வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டவரின் ஊடுருவலைத் தடுக்கும் வகையில் அங்கு 1958-ஆம் ஆண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் முழுக்க முழுக்க பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டனர்.இந்தச் சட்டத்தின் மூலம் சந்தேகிக்கப்படும் நபரின் வீட்டுக்குள் நீதிமன்ற அனுமதி இல்லாமல் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட முடியும். மேலும் சந்தேகப்படும் நபர்களை யும் கைது செய்ய முடியும். அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாது. 
பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரங்களை இச்சட்டம் வழங்குவதால் மனித உரிமைகள் அதிக அளவில் மீறப்படுவதாக அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், கடந்த 2000-ஆம் ஆண்டு மணிப்பூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 10 பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். ஆனால், இதுதொடர்பாக பாதுகாப்புப்படையினர் முறையாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இந்தச் சம்பவமே சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளாவை போராட்டத்தில் இறங்கத் தூண்டியது. இதன் தொடர்ச்சியாக, மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி இரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால், அவரது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால் தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என இரோம்ஷர்மிளா அறிவித்தார்.மணிப்பூர் மாநில உரிமைகளை மீட்கக் கோரி பொதுமக்களுடன் இணைந்து பல்வேறுகட்ட போராட்டங்களில் அவர் ஈடுபட்டார்.
இந்த ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து, 16 ஆண்டுக்காலம், இரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்தார். உணவு, தண்ணீர் குடிக்க மறுத்து வரும் அவரை, தற்கொலைக்கு முயன்றதாக அரசு கைது செய்தது. 2006ம் ஆண்டு, டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டார்; பின், விடுவிக்கப்பட்டார். எனினும், மணிப்பூர் திரும்பிய அவர், மீண்டும் கைதானார். உணவருந்தாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மீது தற்கொலைமுயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. எனினும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த ஷர்மிளா, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. 
 இம்பாலில் உள்ள, ஜவகர்லால் நேரு மருத்துவமனையில், வலுக்கட்டாயமாக அவருக்கு மூச்சு குழாய் வழியாக உணவு செலுத்தப்பட்டுவந்தது. . தொடர்ந்து, 16 ஆண்டுகளாகப் போராடி வரும்  இரும்பு பெண் என  வர்ணிக்கப்பட்ட அவர்  சிலவாரங்களுக்கு முன் இம்பால் நீதிமன்றத்தில் ஆஜரானபோது  “:ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை, உண்ணாவிரதத்தால் மட்டுமே, முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியாது. எனவே, ஆகஸ்ட் 9ம் தேதியுடன், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்கிறேன் என நீதிபதியிடம் தெரிவித்தார்.  
.உண்ணாவிரதப் போராட்டம் இருந்த வரை அவருக்கு இருந்த ஆதரவு அத்தனையும் அவரது அறிவிப்பு வந்தது  முதல் எதிர்ப்பாகிப் போனது. அவர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதற்கு  மணிப்பூர் தனிநாடு கோரும் தீவிரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இரோம் உண்ணாவிரதத்தைக் கைவிடுவதாக அறிவித்த அதே நேரத்திலேயே அவருக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. 
தன்னுடைய  உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினார் இரோம் ஷர்மிளா. ஆனால் தாய், சகோதரர்கள் உட்பட உறவினர்கள் யாரும் அவரை வீட்டில் தங்க அனுமதிக்கவில்லை. இதற்குத் தீவிரவாதிகள் வந்து தாக்குதல் நடத்துவார்களோ என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம்.  இரோம் ஷர்மிளா சென்ற இடமெங்கும் எதிர்ப்பு போராட்டங்கள்தான் நடந்தன... பின்னர் காவல்துறை அவரை மருத்துவர் தியாம் சுரேஷ் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அங்கும் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் வேறுவழியின்றி இரோம் ஷர்மிளா காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் ஒருவழியாக அவர் இதுவரை சிறைவாசம் அனுபவித்த 'மருத்துவமனை'யில் தங்க வைப்பது என  முடிவு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் மருத்துவமனைக்கே அவர் திரும்ப நேரிட்டதுதான் சோகம்!
மறுநாள்  பத்திரிகையாளர் கூட்டத்தில் “எனது உண்ணாவிரதத்தால் மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் ரத்து செய்யப்படும் என்ற நம்பிக்கை பொய்த்துவிட்டது. எனவே அரசியலில் இணைந்து அதன்மூலமாக எனது போராட்டத்தை தொடருவேன். வரும் 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் குரால் தொகுதியில் இருந்து சுயேச்சையாக போட்டியிடுவேன். இதில் வெற்றி பெற்று முதல்வரானால் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நிச்சயம் ரத்து செய்வேன்’’ என்று இரோம் ஷர்மிளா அறிவித்திருக்கிறார்..
எந்த  ஒரு அரசியல்கட்சியின் பின்னணியும் இல்லாமல் ஒரு மிக நீண்ட போரட்டத்தை நடத்திய இந்த இரும்பு பெண் அரசியலுக்கு வரப் போவதை நமது  அரசியல் வாதிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?



 திருமதி ஜோதிமணி (தேசிய காங்கிரஸ்)
நான் பெரிதும் மதிக்கும் ஓர் ஆளுமை இரோம் ஷர்மிளா. வன்முறைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்திலும் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்தி அண்ணல் காட்டிய சத்தியாகிரஹ வழியில் 16 ஆண்டுகள் உண்ணாவிரதமிருந்து போராடியவர். தனது இளமையையே பலி கொடுத்த அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவர் அரசியலுக்கு வருவது என்பதை என் போன்ற பெண் அரசியல்வாதிகள் பெருமையாகப் பார்க்கும் விஷயம். அவருடைய சமூகப் பார்வையும் போராட்ட குணமும், துணிவும் அரசியலில் ஈடுபடுவோருக்கான தகுதிகள்

ஆனால் அவர் இந்த முடிவை அறிவித்தவுடன் அங்குள்ள போராளிகள் வரவேற்காமல் எதிர்ப்பு தெரிவித்திருப்பது எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தந்த விஷயம். இது இம்மாதிரி போராட்டங்களை மேற்கொள்பவர்களின் மன உறுதியை குலையச் செய்யும் கவலையளிக்கும் விஷயம். தன் குறிக்கோளை நோக்கிச் செல்ல அவர் வேறுபாதையைத் தேர்ந்தெடுக்க முயலுவதைத் தவறு என்று சொல்லுவது எந்தவகையிலும் நியாயமாகாது. அதேபோல் அவர் தன் திருமணம் பற்றி அறிவித்திருப்பதும் எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டிருப்பது மிகவும் துரதிரஷட்டமானது. திருமணம் செய்தபெண் அரசியலுக்கு வரக் கூடாது என்று .பேசப்படுவது பெரும் துயரமான அதிர்ச்சி
வடகிழக்கு மாநிலங்களின் எங்கள் கட்சி பொறுப்பாளராக நான் இருந்திருக்கிறேன். அதனால் அங்குள்ள பிரச்சனைகளின் முழுத்தீவீரமும் அறிந்திருக்கிறேன். சுயேட்சையாக வெற்றி பெற்று முதல்வராக முடிந்தால் கூட அவரால் மட்டும் இந்தச் சட்டத்தை நீக்கிவிட முடியாது. அது முழுக்க முழுக்க மத்திய அரசின் கையில் இருக்கிறது. இப்போது மணிப்பூரில் இருக்கும் காங்கிரஸ் அரசும் இந்தச் சட்டத்தை நீடிக்க விரும்பவில்லை. ஆனால் நாட்டின் பாதுகாப்பை கருதி எல்லைப்பகுதியில் இப்படியொரு சட்டதேவையை ராணுவ அமைச்சகமும் உள்துறை அமைச்சகமும் உணர்ந்ததனால் அங்கு இது இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அது அத்துமீறி மக்களுக்கும் குறிப்பாகப் பெண்களும் பெருமளவில் பாதிக்கப்படும்போது அதுகுறித்து பெரிய அளவில் விவாதம் செய்யப்படவேண்டிய விஷயம் என்பதை ஏற்கிறேன்
--------
திரு அருணன். (இந்திய மார்க்ஸிஸ்ட் கட்சி)


   16 ஆண்டுகள் இப்படி உலகில் யாருமே செய்யத்துணியாத ஒரு உண்ணாநிலையை நிகழ்த்தித் தன் நோக்கத்தை உலகமறியச் செய்த இந்தப் பெண்மணியின் மகத்தான தியாகத்தை ஒரு அரசியல் வாதி என்ற முறையில் நான்  போற்றி பாராட்டுகிறேன். 28 வயதில் துவங்கி 44 வயது வரை இப்படித் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தவரை உலகம் இதுவரை சந்தித்தில்லை என் கார்டியன் பத்திரிகை எழுதியிருக்கிறது. இவர் செய்துவந்தது ஒரு தியாக வேள்வி. அதன் மூலம் தன் இலக்கை அடைவதில் வெற்றிபெற முடியவில்லை என்ற நிதர்சனத்தை உணர்ந்து தானே அதைக் கைவிடவும், ஆனாலும் தொடர்ந்து தன் லட்சியத்துக்காக வேறு வழியில் போராட துணிந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கது.

7 சகோதரிகள் என்றழைக்கப்படும் இந்த மலைப்பகுதிகளில் அமுலாக்கியிருக்கும் வலிமைவாய்ந்த இந்தச் சட்டத்தின் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு இந்திய ராணுவம் அளித்த வலி, வேதனை இந்த நாட்டில் பலருக்குத்தெரியாது. அன்னிய ஊடூஉருவலையும், தீவிரவாதிகளையும் தடுக்க உதவும் இந்த சட்டத்தைத் துஷ்பிரோயகம் செய்து அங்குள்ள மக்கள் குறிப்பாகப் பெண்கள் பாலியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதைக்கண்டு கொதித்தெழுந்த இரோம் ஷர்மிளா   தன் போராட்டத்தைத் துவங்கினார். ஒரு கட்டத்தில் மக்கள் ஆதரவு திரண்டு பெண்கள் நிர்வாணமாக நின்று சாலைமறியல் செய்தார்கள். எந்த அளவு அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் இதைச் செய்திருப்பார்கள்?. அவர்களின் இந்த நிலையை, ராணுவத்தின் அத்துமீறலை நாட்டுமக்களின், உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தது இவரின் போராட்டம் தான். இன்று அவர்  உண்ணாவிரதத்தைக் கைவிட்டதை அங்குள்ள சிலர் எதிர்ப்பதாகச் செய்திகள் வருகின்றன. இது எந்தவகையிலும் நியாமில்லை. கொள்கைக்காக 16 ஆண்டுகள் போராடிய ஒரு போராளியை யாரும் வாழ்நாள் முழுவதும் தொடரும் படி நிர்ப்பந்திக்க முடியாது. அது தவறு.

இரோம் ஷர்மிளா  அரசியலில் களம் இறங்குவேன் என்ற அறிவிப்பு வரவேற்கப்படவேண்டிய ஒன்று. இம்மாதிரி தீவிர கொள்கைப்பிடிப்பு இருப்பவர்கள் இந்திய அரசியலுக்கு வரவேண்டியது இன்றைய சூழலுக்கு மிக அவசியம். ஆனால் சுயேட்சையாக நின்று முதல்வராகி சட்டத்தை நீக்குவேன் என்பதுதான்  சற்று புதிராக இருக்கிறது. மணிப்பூர் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே கொண்ட சிறிய மாநிலம். அதில் 31 பேர் சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றால் தான் இது முடியும். மிகச்சவாலான இது இன்றைய பெரும்பான்மை கட்சி ஜனநாயகத்தில் இந்தக் கனவு சாத்தியப்படும் என்று தோன்றவில்லை. சிலநாட்கள் முன் அவர் ஒரு புதிய கட்சி துவக்கி களம் காணுவார் என்ற செய்திகள் வந்தனஒருக்கால் அப்படி நிகழ்ந்தால் இவரது கனவு நனவாகும் வாய்ப்புகள் அதிகம்
-------
திருமதி வாசுகி ( தலைவி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்)


இதுநாள்  வரை ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்து  தனிநபர்  சத்தியாகிரஹ போராட்டத்திற்குக் கிடைத்த மக்கள் ஆதரவை  உணர்ந்த அவர் தன் போராட்டவடிவை மாற்றி   அரசியல் தளத்திற்கு வர முடிவுசெய்திருப்பது  மிகவும்  வரவேற்கத்தக்க விஷயம்.
சுயேட்சை வேட்பாளராக  மக்கள் ஆதரவுடன் தேர்தலில் அவர் பெரிய வெற்றி பெறலாம். ஜெயிக்கும்கட்சி  அல்லது அணி அவரை அமைச்சராகக் கூட அறிவிக்கலாம். ஆனால் அவருடைய இலக்கை அடைய  அரசியலில் அவர் எடுக்கப்போகும் நிலைப்பாடு மிக முக்கியம். அவர் இத்தனை நாள் போராடிய. விஷயத்தை ஆதரிக்காத கட்சிகளுடன் இணைந்தாலோ அல்லது சுயேட்சையாக இருந்து அவர்களின் ஆதரவைப்பெற்றாலோ  இதுநாள் வரை அவர் போராடியது அர்த்தமில்லாமல் போய்விடும்,

மணிப்பூரைப் போன்ற சுழலில் இருக்கும் திரிபுராவிலும் இந்தச் சட்டம் இருக்கிறது. அங்கு இருக்கும் இடதுமுன்னணி கூட்டணி ஆட்சி அதை அவசியமான எல்லைப்பகுதிகளில் மட்டும் தேவையான அளவில் செயல்படுத்துகிறது. அதைப்போல ஒரு நிலை மணிப்பூரில் ஏற்பட இடது சாரிகளுடன் இணைந்து தோள்கொடுப்பதுதான் அவர் எடுக்க வேண்டிய அரசியல் நிலைப்பாடு என் நான் நினைக்கிறேன். இது பலவகையில் பலன் தரக்கூடிய முடிவாக இருக்கும் .
  மங்கையர் மலர்  அக் 16






30/8/16

அமெரிக்காவிலிருந்து குஜராத்திற்கு படம் எடுக்க வந்த மைதிலி




அமெரிக்காவிலிருந்து  குஜராத்திற்கு  படம் எடுக்க வந்த மைதிலி


2010ஆம் ஆண்டு தெஹல்கா இதழில் பணியாற்றிய பத்திரிகையாளரான ரானா அயூப் ஒரு துணிச்சலான பத்திரிகைபுலானய்வு பணியை தன் உயிரைப் பயணம் வைத்து மேற்கொண்டபெண்மணி.  2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் படுகொலைகள், பின்னர் அதைத்தொடர்ந்து நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் குறித்து  அந்தக் காலகட்டத்தில்(2001-2010)  குஜராத் மாநிலத்தில் காவல்துறை மற்றும் உள்துறை அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள் மனம் திறந்து பேசியதை ஒரு ஸ்டிங் ஆப்ரேஷன் மூலமாக ரகசியமாகப் பதிவு செய்தவர்.ஒரு சமூக படுகொலை நடைபெற அரசு இயதிரம் பயன்படுத்தப்பட்டதையும், முக்கிய அதிகாரிகள் அதற்கு மௌன சாட்சியாகவும் இருந்தை அவர்கள் வாக்குமூலமாகவே வெளிக்கொண்டுவந்திருப்பவர்.இவரது புலனாய்வு கட்டுரைகள் அம்பலப் படுத்திய தகவல்களினால்தான் 2010ஆம் ஆண்டு அமித்ஷா சிறைக்குச் சென்றார். தொடர்ந்து அவர் செய்த பணியில் தொகுத்த தகவல்களை  அரசியல் காரணங்களால் அவரது தெல்ஹா நிறுவனம் அவரது பதிவுகளை புத்தகமாக்க மறுத்துவிட்ட நிலையில் குஜராத் கோப்புகள்-(GUJARAT FILES)  என்ற பெயரில் தானே சொந்தமாக புத்தகமாகப் பதிப்பித்துள்ளார். நூல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் அதன் வெளியீட்டு விழாவிற்காகச் சென்னை வந்திருந்தார். திருமதி ரான அயூப்
புத்தகத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது.?
 5 லட்சம் வங்கியில் என்பெயரில்  கடன் வாங்கிப் பதிப்பித்த புத்தகத்தின் அறிமுக விழாவிற்கு டெல்லியில்  பல பத்திரிகைகள் உள்பட 400 பேர் வந்திருந்தனர். ஆனால் மறுநாள் தினசரிகளில் ஒருவரி செய்திகூட இல்லை. இப்போது சமூக வலைத்தளங்களில் புத்தகம் அதிகம்  பேசப்படுவதால் மெல்லச் சூடுபிடிக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்புக்குப் பலர் முன்பதிவு செய்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.


எப்படி இந்த ஆப்ரேஷனைச் செய்தீர்கள்?
2002ல் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் காரணமாக ரத்த ஆறு ஓடிய சமயத்தில் பணியிலிருந்த பல நேர்மையான அதிகாரிகள் இந்த அக்கிரமங்களிலிருந்து ஒதுங்கியிருந்தது எனக்குத் தெரியும். தெல்ஹாவின் பத்திரிகையாளரான எனக்கு அவர்கள் ஏதேனும் ஒரு விதத்தில் உதவ முடியும் என்று அவர்கள் வீட்டு கதவைதட்டியபோதெல்லாம் அவை மூடப்பட்டன. உண்மையைக் கண்டறிய பத்திரிகையாளர் கடைப்பிடிக்கும் கடைசி வழி மாறுவேடம் அணிவது. நான் ஒரு பெண்,அதுவும் ஒரு  முஸ்லீம் பெண் என்பது நான் செய்யப் போகும் பணிக்கு  உதவாது என்பதால் ரானா அய்யுப் கான்பூரில் இருந்து வந்த மைதிலி தியாகி என்ற ஒரு காய்ஸ்தா(இந்துபிராமண) பெண்ணாக மாறவேண்டியிருந்தது. மேலும் நான் அமெரிக்கத் திரைப்பபடகல்லூரி ஒன்றின் மாணவி என்றும், குஜராத்தின் வளர்ச்சி மாடல் குறித்தும். உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் வளர்ந்துவரும் நரேந்திரமோடியின் செல்வாக்கு குறித்தும் ஒரு திரைப்படம் தயாரிப்பதற்காக வந்திருப்பதாகவும் சொல்லி பலரைச் சந்தித்தேன்.  என் உடை, பாவனை மொழி எல்லாவற்றையும் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. குர்த்தாபட்டனில் பொருத்திய ரகசிய கேமிரா  கையில் அதை இயக்கும் வாட்ச், டைரியின் அட்டையில் இன்னொரு கேமிரா  எனப் பல ரகசிய ஏற்பாடுகளுடன் செய்ய வேண்டியிருந்தது..நம்பகத்தனமை அதிகரிக்க நிஜமாகவே மைக் என்ற ஒரு பிரெஞ்ச் மாணவனை உதவியாளானாகச் சேர்த்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் போனேன்
பல முன்னாள் போலீஸ்  சீனியர் அதிகாரிகளை, உளவுத்துறை அதிகாரிகளைக்கூடச் சந்தித்து  சந்தித்திருக்கிறீர்கள். அவர்களுக்குச் சந்தேகம் வரவில்லியா?
நான்முதல் சந்திப்பிலேயே எல்லாம் பேசுவதில்லை. என்மீது நம்பிக்கை வந்து அவர்கள் என் படத்திற்கு உதவ முன்வரும்போதுதான் தொடரும் சந்திப்புகளில் தேவையான கேள்விகளை எழுப்புவேன். சிலமுறை மயிரிழையில் தெய்வாதீனமாக மாட்டாமல் தப்பியிருக்கிறேன். சந்தேகமும் வந்திருக்கிறது. நான் தங்கியிருந்த அறை நான் இல்லாதபோது ஒரு சோதனையிடப்பட்டிருந்தது.. ஆனால்  பாதுகாப்புடன் என் லேப்டாப்பிலிருந்து எல்லாவற்றிலும் நான் ஒரு   இந்து, அமெரிக்க பல்கலைக்கழக மாணவியின் அடையாளங்கள் மட்டுமே அறையிலிருக்கும்படி பார்த்துக்கொண்டிருந்தேன்

 இப்படி துணிச்சலான வேலைகளைசெய்தது உங்கள் குடும்பத்துக்கு தெரியுமா?
நன்றாக. முந்திய மணிப்பூர் பணியினால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த என்னிடம்  என் அம்மா தான் செர்ராபுதின்  கொலைச் செய்தியைக் காண்பித்து இதைப்பற்றி எழுதேன் என்று சொன்னார். நான் இந்தப் பணியிலிருந்தபோது மனம் தளரும்போதெல்லாம் அம்மாவிடம் போனில்பேசுவேன். அண்ணன். அப்பா எல்லோருக்கும் தெரியும்.
 இந்த ஆப்ரேஷனில் மோடியைச் சந்தித்திருக்கிறீர்களா?
ஆம் ஒரு முறை.  அவர் முதல்வராக இருந்தபோது கேமிரா, மைக் சகிதம் அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறேன்..மெட்டல் டிடக்கரில் மாட்டிக்கொண்டால் அடுத்த நிமிடம் கைது என்ற பயத்துடன் தான் சென்றேன். ஒபாமா பற்றி நிறையப் பேசினார்.  மேஜையில் அவர் புத்தகங்கள்
என படத்துக்கு உதவ  அவர் பயணப் படங்கள் ஆடியோ டேப்கள் கொடுக்க அவர் உதவியாளர்களிடம் சொன்னார். கலவரம், படுகொலைகள் பற்றி அடுத்தடுத்த சந்திப்பில் பேச திட்டமிட்டிருந்தேன். அதற்குள் வேறு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.
உங்கள் புத்தகத்தில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள்,  வகித்தபதவிகள் விபரங்களுடன் உரையாடல்களை வெளியிட்டிருக்கிறீர்கள். புத்தகம் வெளிவந்து  பார்த்தபின் யாராவது பேசினார்களா?
இதுவரை இல்லை, இனி நிகழலாம். உண்மைதகவல்தானே எனக் கண்டுகொள்ளாமலும் இருக்கலாம். ஆனால் இதுவரை இதில் பேசயிருப்பவர்கள் எவரும் சொன்னதை மறுக்கவில்லை.


 இந்தஆப்ரேஷனின் திருப்புமுனை என எதைச் சொல்வீர்கள்?
  பாதுகாப்பற்ற நீண்ட பயணத்தின் முடிவில்-  அனைத்தும் வெளிப்படும் நிலையில், முதல்வர் மோடி மீண்டும் அழைப்பார் என்ற நிலையில், என் டெல்லி அலுவலகம் என்னைத் திரும்ப அழைத்தது.  தலைமை ஆசிரியர்கள் “ மோடி பிரதமராகப் போகிறார். மிக வலுவான பிரதமராக இருப்பார்.  அவர் மீது கைவைத்தால் நாம் அனைவரும் தீர்த்துக் கட்டப்பட்டுவிடுவோம். பங்காரு லஷ்மணன் விஷயத்தில் நம் அலுவலகத்தை மூட வைத்தவர்கள் அவர்கள்.”  அதனால்  புலனாய்வை பிரசுரிக்க வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறோம் என்றனர்..
அதிகாரத்திலிருப்பவர்கள்  பேச்சைக்கேட்டு என் கடின உழைப்பில் பிறந்த  உண்மைக் கதை வெளிவராமலே கொல்லப்படும்போது என்னால் தாங்கிக் கொள்ள முடியவே இல்லை.
ஒரு நல்ல  புலனாய்வு இதழியலாளர் தான் உருவாக்கிடும் கதைகளிலிருந்து தன்னைக் கத்தரித்துக் கொண்டு நடைமுறையில் இயல்பாக இருக்கவேண்டும் என ஆசிரியர் சொன்னார். என்னால் அப்படியிருக்க முடியவில்லை.
இன்று அமித்ஷா. மோடி போன்றவர்கள் அதிகாரத்தில் இருக்கும் சமயத்தில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். . உங்களுக்கு  அச்சமாக இல்லையா?
உண்மைச்சொன்னதற்காக சில சமயம் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். இன்று தேசத்துரோகம் என  எதையும் சொல்லிவிடலாம் என்ற நிலை எழுந்திருக்கிறது. . அந்த சட்டத்தின் கீழ் நான் கைது செய்யப்பட்ட செய்தி வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.
                                             
4/09/16 கல்கியில் எழுதியது 

1/6/16

செவ்வாய் கிரகத்திற்குச் செல்லப்போகும் முதல் பெண்.

செவ்வாய் கிரகத்திற்குச் செல்லப்போகும் முதல் பெண்.


மெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லாஸேஞ்சல்நகருக்கு அருகிலிருக்கும்  பாஸடினா(Pasadena) பகுதியிலிருக்கிறது நாஸா (NASA)வின்  செவ்வாய் கிரக ஆராய்ச்சி நிலையம். 80களின் இறுதியிலிருந்தே தனது ஆய்வுகளை செய்து கொண்டிருக்குக்கும் இந்த நிறுவனம்   பூமியிலிருந்து 57 கோடி கீமீ தொலைவிலிருக்கும் செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ தேவையான ஆக்ஸிஜன்.தண்ணீர் இருக்கிறதா என்பதை அறிந்தபின்னர்  அங்கு முதலில் மனிதனை அனுப்பும் மிகப்பெரிய கனவு திட்டத்துடன் இயங்குகிறது .  இப்போது 14000க்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் இந்த நிலையத்தில் இதற்காக தொடர்ந்து முயற்சிகள், பரிசோதனைகள் செய்யபட்டுவருகிறது. , முதல் கட்டமாக செவ்வாய் கிரகத்தின் அருகில்  சென்று சுற்றி வந்து தகவல்கள் பெற  விண்வெளிகலங்கள் அனுப்பட்டன. அதன் மூலம் கிடைத்த அடிப்படை தகவல்களின் அடிப்படையில் நேரிடியாக செவ்வாய் கிரகத்தில் ஒரு விண்கலத்தை இறக்கி சோதனைகள் செய்ய முடிவு செய்து அதற்காகவே உருவாக்கபட்டது கியூரியாஸிட்டி”“ எனற விண்கலம்.   அதுவெற்றிகரமாக தரையிறங்கி செய்திகளை அனுப்பிகொண்டிருக்கிறது.  இதன் அடுத்த கட்டமாக அடுத்த 15 ஆண்டுகளுக்குள் மனிதனை அனுப்பும் திட்டங்களை தயாரித்துகொண்டிருக்கிறது.
அலீஸா கார்சன் என்ற  13 வயது பெண், ஏழாம் வகுப்பு மாணவி இப்போதே அந்த பயணத்துக்கான  பல தகுதிகளையும் பெற்று தன்னை தயாரித்துகொண்டிருக்கிறார்..  நாசா இந்த பெண்ணுக்கு நிறைய முன்னுரிமைகளை அளித்து ஊக்குவிக்கிறது. அனேகமாக செவ்வாயில் காலடி வைக்கபோகும் முதல் மனித இனம் இந்த பெண்ணாக இருக்கலாம் என அமெரிக்க பத்திரிகைகள் எழுதுகின்றன.  மத்திய அமெரிக்காவின்  லூயிசினா(Louisiana) மாநிலத்தில் வசிக்கிறார். அவரை போனில் தொடர்பு கொண்டபோது அவரது தந்தையுடனும் பேசும் வாய்ப்பும்கிடைத்தது. அலீஸா  புதியதலைமுறைக்காக  போனில் அளித்த  எக்ஸ்கூளிஸிவ் பேட்டி


ஒரு பள்ளிகுழந்தையின் சந்தோஷத்தோடு ஆனால் மிக தெளிவான ஆங்கிலத்தில்   ”என் உச்சரிப்பை புரிந்துகொள்வதில் கஷ்டம் ஏதுமில்லையே?”  என கேட்டு  பேசுகிறார். இந்தியாவைப்பற்றி அறிந்திருக்கிறார்.

செவ்வாய் கிரகத்தின் மீது உங்களுக்கு என் ஆர்வம் ஏற்பட்டது?
நான் 3 அல்லது 4 வயது குழந்தையாக இருந்தபோது, செவ்வாய் கிரகத்திற்கு போகும்மனிதர்கள் பற்றி ஒரு படம் பார்த்தேன். அப்பாவிடம் இதுவரை யாராவது இப்படி போயிருக்கிறார்களா? என்று கேட்டேன். அவர்  இதுவரை யாரும் போகவில்லை என்றும் அந்த கிரகத்தைபற்றியும் நிறைய சொல்லிகொடுத்தார். ஒரு மேப் கூட கொடுத்தார்.  தொடர்ந்து அதை பார்ர்துகொண்டே இருப்பேன்.  நிறைய படித்துதெரிந்து கொண்டேன். பள்ளியில் சேரும்போதே நான் விண்வெளி பயணியாகி செவ்வாய் கிரகத்திற்கு போக முடிவு செய்துவிட்டேன்.  தொடர்ந்து எல்லோரிடமும் செவ்வாய் கிரகத்தைப்பற்றி கேட்டுகொண்டே இருப்பேன் பள்ளியில் என் எல்லா பிராஜக்கெட்டும் செவ்வாய் கிரகம் பற்றிதான்.
உங்களுக்கு நாசாவில் பயிற்சி கொடுத்திருக்கிறார்களாமே?
நாஸாவில் ”பாஸ்போர்ட்” என்று ஒரு திட்டமிருக்கிறது. இது பள்ளி மாணவர்களுக்கானது. அமெரிக்காவில் நாஸா 14 இடங்களில் தகவல் மையங்களை அமைத்திருக்கிறது.  ஒவ்வொன்றும்  அவர்களின் ஒரு திட்டம் பற்றியது. அதில் படங்கள் சார்ட்கள் புத்தகங்கள் ஸ்லைடு காட்சிகள் எல்லாம் இருக்கும். அதை நன்கு பார்த்த பின் விரும்பினால் ஒரு பரீட்சை எழுதலாம். அப்படி எழுதி தேர்ந்தால்  பாஸ்போர்ட் மாதிரி  ஒரு புத்தகத்தில்  சீல் இட்டு கொடுப்பார்கள். நான் அந்த 14 நிலையங்களுக்கும் சென்று பரீட்சைகள் எழுதி என் பாஸ்போர்ட்டில் அந்த ஸீல்களை பெற்றேன்.  எல்லாபரிட்சைகளிலும் முதல் மார்க் வாங்கியிருகிறேன். இதை முதலில் செய்திருக்கும் ஒரே அமெரிக்க மாணவி நான் தான்
 இதனால் நாஸாவில் விஞ்ஞானிகளுக்கு மட்டுமே அனுமதியுள்ள இடத்திலிருந்து ஏவுகணைகள் ஏவப்படுவதை பார்க்க என்னை அனுமதிப்பார்கள்  ஏரோநாட்டிக்ஸ் முடித்தவர்களுக்கு நடத்தும் ஒரு பயிற்சி முகாமுக்கு என்னையும் அழைத்தார்கள். அதில் அவர்களோடு நானும்பயிற்சியை முடித்திருக்கிறேன் அந்த பரீட்சையையும் எழுதினேன்.,. அந்த பயிற்சியின்  ஒரு பகுதியாக சிறுவிமானம் ஓட்ட கற்று கொடுப்பார்கள். எனக்கு கார் டிரைவிங் லைசென்ஸே இல்லாதால், முதலில்  அதை வாங்கிகொண்டு மீண்டும் பயிற்சிக்கு வா என்று சொல்லியிருக்கிறார்கள்.  ஸ்டூடண்ட் கார் டிரைவிங் லைசன்ஸ் வாங்க நான் அடுத்த பெர்த்டே வரை காத்திருக்கவேண்டும்.
பள்ளி படிப்பையும் இவைகளையும் எப்படி செய்யமுடிகிறது?
 பள்ளியில் பாடங்கள் எனக்கு கஷ்டமாக இருப்பதில்லை. நல்ல கிரேடுகளை வாங்குகிறேன்.  நேரத்தை சமாளிப்பது தான் சவால்.சிலசமயம் மிக கஷ்டமாக இருக்கும். ஆனால் அப்பா நேரத்தை எப்படி செலவழிக்க வேண்டும் என சொல்லிகொடுத்திருக்கிறார். எதை முதலில் எதை பின்னால் செய்யவேண்டும் என்று எனக்கு 5ஆம் வகுப்பில் படிக்கும்போதே சொல்லி கொடுத்துவிட்டார்.   பள்ளிகூடத்தில் என் ஆசிரியர்களுக்கும் பிரண்ட்ஸ்களுக்கு என்னைப்பற்றி ரொம்ப பெருமை அதுவும் ஒரு வசதியாக இருக்கிறது.
வானியல்,ராக்கெட்சயின்ஸ் தவிர வேறு எதில் ஆர்வம்.?
பள்ளியில் புட்பால் ஆடுவேன், இபோது கூட  உங்கள் போனுக்கு முன்னால் ஒரு மாட்ச் ஆடிவிட்டுதான் வந்தேன். பியோனோ வாசிக்க கற்றிருக்கிறேன்.  டான்ஸும் தெரியும். எங்கள் பள்ளி ரோபோடிக்ஸ் பிரிவு ஒரு ரோபோவை உருவாக்குகிறது.  அந்த டீமில் நான் இருக்கிறேன் நான் ஒரு கேர்ல் ஸ்கெளட். நிறைய பேட்ஜ் வாங்கியிருக்கிறேன் பெர்ஸி ஜாக்ஸன் புத்தகங்கள் படிப்பேன்.
நீங்கள் மற்ற பள்ளிகளில் சிறு குழந்தைகளுக்காக பேசுகிறீர்களாமே? அது எதைப்பற்றி?
பள்ளிகளுக்கு போய் பேசுவதில்லை. ஸ்கைப்பில் அவர்களிடம் பேசுவேன். இதுவரை  நடந்த நாஸாவின் விண்வெளிபயணங்களைப்பற்றி சொல்வேன். கேள்விகள் கேட்பார்கள் பதில் சொல்லுவேன். தெரியாததை அப்பாவிடம் கேட்டு பின்னாளில் சொல்லுவேன். முக்கியமாக உங்களுக்கு பிடித்த பாடத்தை கண்டுபிடித்து படிக்கவும் என்ன நீங்கள் என்ன ஆகவேண்டும் என்பதை நீங்களேதான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் இல்லை என்று சொல்லுவேன். இரண்டு பள்ளிகளில் நான் பேசியது பிடித்திருந்ததால்.  மற்ற பள்ளிகள் இப்போது அழைக்கிறார்கள். எனக்கு பரிட்சைகள் இருக்கும்நாட்களில் நான் இதைச்செய்வதில்லை.
 செவ்வாய் கிரகம் போகவேண்டும் என்ற உங்கள் லட்சியம் நிறைவேறினால் அதன் பின் என்ன செய்வீர்கள்? ஒருவேலை போக முடியாமல் போனால் என்ன செய்யபோகிறீர்கள்?
அந்த லட்சியத்தை அடைய நான் இன்னும் நிறைய செய்யவேண்டும். முதலில் 17 வயது ஆனபின் பைலட் லைசன்ஸ், ஸ்கை டைவிங் லைசன்ஸ் எல்லாம் நல்ல கிரேடில் வாங்கவேண்டும் இங்கிலாந்திலிருக்கும்  கேம்பிர்ட்ஜ்ஜின் இண்டர்நேஷனல் ஸ்பேஸ் பல்கலைகழகத்தில் போஸ்ட்கிராஜ்வேட் படிப்பேன் பின்னர் அமெரிக்காவின் MIT யில் (மாசாசூஸ்ட் இன்ஸ்டீயூட் ஆப் டெக்னாலாஜி) டாக்ட்ரேட் வாங்க வேண்டும். இடையில் நாசா நடத்தும்  முகாம்களிலும், பரிட்சைகளிலும்  பங்கு கொண்டு தேர்வாவேன்.
ஒருவேளை நீங்கள் கேட்பதுபோல செவ்வாய் போகும் வாய்ப்பு நழுவினால்…  நாஸாவின் செவ்வாய் திட்டத்தில் மிஷின் கண்ட்ரோலில் ஒரு எஞ்னியாராக இருப்பேன். செவ்வாய் கிரகம் என் வாழ்க்கையோடு இணைந்து போன விஷயமாக செய்துகொள்வேன்.
 உங்கள் பெற்றோர்கள், நண்பர்கள் பற்றி சொல்லுங்கள்.

நான் குடும்பத்தின் ஒரே பெண்.  அன்பான தந்தையால் வளர்க்கபடுகிறேன். என் விருப்பங்களை கனவுகளை பெரிதும் மதித்து அதை அடைய உதவி செய்யும் அன்பான மனிதர் அவர்.  என் கனவுகளுக்கு உதவுவதை தன் லட்சியமாக கொண்டிருப்பவர்.சொந்தமாக டிவி சானல் வைத்திருக்கிறார் எனக்கு அதில் ஆர்வம் இல்லை. . நண்பர்கள் பற்றி கேட்கிறீர்கள்…ம்ம் பள்ளீயில் நிறைய, முகாம்களுக்கு போனதால் நாசாவில் சிலர், ஆனால் பெஸ்ட் பிரண்ட் என் வகுப்பு தோழி மேகி தான்.  இப்போது உங்களுடன் பேசுவதை ரிகார்ட் செய்துகொண்டிருகிறேன். இரவில் அவளுக்கு போட்டுகாட்டுவேன்.
இந்தியாவின் மங்கள்யாண் திட்டம் பற்றி தெரியுமா?
ஓ தெரியுமே!. அதுபற்றி பள்ளியில் ஒரு பேப்பர் தயாரித்து படித்திருக்கிறேன், உங்களுக்கு அனுப்புகிறேன்.
பேட்டி அளித்ததற்கு நன்றி அலீஸா. உங்கள் கனவுகள் வெற்றியாக  எங்களுடைய வாழ்த்துக்கள்
நன்றி சார். பேட்டி வெளியான உங்கள் பத்திரிகையை அனுப்புவீர்கள்தானே?
நிச்சியமாக.
நன்றி சார்.

(புதிய தலைமுறை இதழ் )

4/8/15

நீங்கள் நீங்களாக இருந்தால் வெற்றி நிச்சியம்

` சென்னை நந்தம்பாக்கம்  வணிக வளாகம். கறுப்பு கவுன், தொப்பிகளுடன் சந்தோஷப் பூக்களாக மலர்ந்திருக்கும் மாணவ மாணவிகளின் சிரிப்புஅலைகளினாலும்  மகிழ்ச்சி குரல்களினாலும் நிறைந்திருக்கிறது செல்பி எடுத்துக் கொண்டிருக்கும் குழுக்கள். பரவசத்தில் பெற்றோர்கள் .. படிப்பை முடிக்கு முன்னரே வேலை கிடைத்த அதிர்ஷட்ட சாலிகளான கிரேட் லேக  மானேஜ்மெண்ட் இன்ஸ்டியூட்டின்  மாணவர்களின் பட்டமளிப்பு விழா.
டாட்டா  குழுமத்தின் முன்னாள் தலைவர் திரு ரத்தன் டாட்டாவும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் ஊர்வலமாக நுழைந்தவுடன் கனத்த அமைதி. சம்பிரதாயமான பட்டமளிப்புவிழா உரையாக இல்லாமல்.  மாணவர்களின் தேர்ந்தெடுத்த கேள்விகளை பல்கலைகழக டீன் பாலா பாலசந்தரன் கேட்க  பதில் தந்தார் ரத்தன் டாட்டா.  அவற்றிலிருந்து  சில

ஓரு மனேஜ்மெண்ட் பட்டதாரி அடுத்த 30 ஆண்டுகள் தன் தொழில் வாழ்க்கையில்ஜெயிக்கமுதல்5 ஆண்டுகள்எந்தமாதிரியானகொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்?
இம்மாதிரி இன்ஸ்டியூட்டிலிருந்து  வரும் மாணவர்கள் அதிக அளவில் சம்பளம், பெரிய நிறுவனங்களில் பதவி என்பதை மட்டும் குறிக்கோளாக கொள்ளக் கூடாது. எனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பினால் மாறுதல் களைச்  செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் மாறு பட்டு சிந்தித்து துணிவுடன் செயல்படுபவர்களாக உங்களை அடையாளம் காட்ட வேண்டும்.  பாப்புலாராக இருப்பது மட்டும் வெற்றியில்லை. பல் ஆண்டுகளுக்கு முன் நான் பொறுப்பேற்ற போது ஒரு  ஆற்றல் மிகுந்த ஒரு மிகப்பெரிய  மனிதரின் காலணிகளுக்குள் நுழைந்து செயலாற்ற வேண்டியிருந்தது. அது எனக்கு பொருத்தமாகவும் இயலாமலும் இல்லாதிருந்தது. அப்போது நான் நானாகஇருந்து பணியாற்றினேன். மாறுதல்களைச் செய்ய முடியும் என நம்பி செயலாற்றினேன். இன்று பல் லட்சம் பேர்களில்  வாய்ப்பும் அதைச்செயல்படுத்த கருவிகளும், நல்லசூழுலும்  பெற்ற அதிர்ஷட சாலிகள் நீங்கள் .  நீங்கள்: நீங்களாகவே இருந்து  உங்கள் துறையில் மாறுதல் களை செய்ய முடியும் என நம்புங்கள். நியாமன நேர்மையான வழியில் குறிக்கோள்களை அடைய முயற்சியுங்கள். நீங்கள் சரி என்று நினைப்பதை நிலைநிறுத்த அவசியமானால்  போராடாவும் தயங்காதீர்கள். நிச்சியம் வெற்றி அடைவீர்கள்

நான் சரியான முடிவுகள் எடுப்பதில்லை. முடிவுகளை எடுத்த பின்னர் அவற்றை சரியாக்குகிறேன்என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படி நீங்கள் செய்த ஏதாவது ஒரு முடிவைப் பற்றி சொல்ல முடியுமா?

சமூக வலைத்தளங்களில் நான் சொன்னதாக உலவிக்கொண்டிருக்கும் ஒரு கருத்து இது. நான் அப்படிச் சொன்னதில்லை.  இம்மாதிரி வாக்கியங்கள் ஆணவத்தைக் காட்டுகிறது அது சரியில்லை.  எல்லாராலும் எல்லா நேரத்திலும் சரியான முடிவுகளை மட்டுமே எடுக்க முடியாது.  சில முடிவுகள் தவறாகலாம். நமது முடிவுகள் தவறானால் அதன் விளைவுகளுக்குப்  பொறுப்பேற்கும் துணிவும், அதைச் சரிசெய்யும் ஆற்றலையும் நிர்வாகிகள் பெறவேண்டும்.  வருங்காலத்தில் உங்கள் தொழில் வாழ்க்கையில் நீங்கள்  நிறைய முடிவுகளை எடுக்கவேண்டிவரும். அப்போது  இதை நினைவில் கொள்ளுங்கள் . நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்கள்  கடினமான முடிவுகளை எடுக்கும்போது தனிமைப்படுத்தப்படுவார்கள். பலர் அந்த முடிவை ஏற்காமல் இருக்கலாம்.. ஆனாலும் பாப்புலாரிட்டிக்காக இல்லாமல்  துணிவுடன் செயல்பட்டு  நியாமானநீங்கள் சரியென நம்பும் முடிவுகளை துணிவுடன்  எடுக்க வேண்டும்.  இந்தச் சந்தர்ப்பத்தில் எனது முடிவுகள் பற்றி சொல்லுப்பட்டுகொண்டிருக்கும்  தவறான கருத்துகளுக்கு  ஒரு விளக்கம் அளிக்கக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

 100 கம்பெனிகளை உள்ளடக்கிய  50 லட்சம் ஊழியர்களைக் கொண்ட டாடா சாம்ராஜ்யத்தை நிர்வகித்தவர் நீங்கள். இன்று பல புதிய சிறு கம்பெனிகள் வேகமாகத் தோன்றி வளருகின்றன. சில ஆண்டுகளில் இவை டாடா போன்ற பெரிய கம்பெனிகளுடன் இணைக்கப்படுகின்றன. இந்த நிலையில் எப்படி இந்த சிறு நிறுவனங்கள் அந்தப் பெரிய நிறுவனங்களின் கலாச்சாரங்களுடன் எளிதாக ஒருங்கிணைகிறதுநிறுவனத்தின் வெற்றிக்கு எது முக்கிய காரணம் என நினைக்கிறீர்கள்

அதிர்ஷடவசமாக டாடா நிறுவனத்திற்கு 150 ஆண்டு கால பாரம்பரியம் இருக்கிறது. ஒரு நிறுவனம் பாரம்பரிய கெளரவத்தைப் பெற அதன் தலைமைப்பொறுப்பில் இருப்பவர் மிகச் சரியாக நாணயமாக இயங்க வேண்டும். ஒரு கண்ணாடி  மீன் தொட்டியிலிருக்கும் மீனைப்போல மிக சுத்தமாக எல்லோருக்கும் தெரியும் ஒளிவு மறைவு இல்லாதாக  இருக்க வேண்டும். தலைவர் இப்படி இயங்கினால் நிறுவனத்தில் மற்றவர்கள் அதைத் தொடர்வார்கள். அது மிக முக்கியம் டாடாவில் என் முன்னோர்கள் கடைப்பிடித்த இந்த விஷயத்தை நான் தொடந்தேன். என்னைத் தொடர்ந்து வருபவர்களும் செய்கிறார்கள். தலைவரின் பண்பு நிறுவனத்தின் பண்பாகிறது. இதை டாட்டா நிறுவனத்டின் வெற்றியாக கருதுகிறேன்.


 உங்கள் பணிநிறைவுக்கு பின்னர்  நீங்கள்  இப்போது புதிதாக உருவாகிக்கொண்டிருக்கும் ஸ்டார்டப் கம்பெனிகளில் மட்டுமே  அதிக அளவில் முதலீடு செய்வதாக அறிகிறோம். இது ஏன்? மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யமான டாடா நிறுவனம் இதை ஏன் செய்யவில்லை?

நான் டாடாவின் தலமைப்பொறுப்பில் இருந்த போது என் சொந்த விருப்பங்களைச் செய்ய முடியாது. அது சரியானதும் இல்லை. டாடா போன்ற எல்லாவற்றிலும் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களின் தலைவர் வேறு நிறுவனங்களில் முதலீடு செய்தால் அது டாடாநிறுவனதிற்கு  சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்பதும் ஒரு காரணம். ஒய்வு பெற்றபின் நான் மிகப்பெரிய பணக்காரன் இல்லை என்னிடமிருக்கும் சேமிப்பை நான் இ காமர்ஸ் ஆன் லைன் வணிகம் போன்றவற்றில் முதலீடு செய்திருக்கிறேன். 80களில் அமெரிக்காவில் எழுந்ததைப்போல  இங்கு ஒரு அலை எழுந்திருப்பதை உணர்கிறேன். இளைஞர்கள் இடுபட்டிருக்கும் இந்த் துறைகள் தான்  நாட்டின் மிகச்சிறந்த எதிர்காலத்திற்கு காரணமாக இருக்க போகிறது என்று கணிக்கப்பட்டிருப்பதால் நான்  அவைகளில் முதலீடு செய்துகொண்டிருக்கிறேன். . இந்த முதலீடுகளை முடிவு செய்ய தனி டீம் எதுவுமில்லை. நானே புதிய நிறுவனங்களின் வளர்ச்சியை ஆராய்கிறேன்.   முதலீடு செய்கிறேன் அதில் பலர் எனக்கு முன் அறிமுகம் இல்லாதவர்கள். .

நானோ காரின் டிசைன், தயாரிப்பு  விற்பனை போன்றவற்றினால் டாட்டா நிறுவனம் கற்ற பாடம் என்ன? 


நிறையக் கற்றோம். அந்த காரின் வடிவமைப்பில் ஈடுபட்டவர்களின் சராசரி வயது 26. இந்திய இளைஞர்களால் இந்தியர்களுக்காகத் தயாரிக்க பட்ட கார அது. ஆனால் திட்டமிட்ட படி அதை வெளியிட முடியவில்லை.  உற்பத்திக்கான  தொழிற்சாலையை அமைக்க அழைக்கப் பட்ட  மாநிலத்தில் இருந்து வெளியேறவேண்டியிருந்தது.  பெங்கால் டைகர் தாக்கியதாக மீடியாக்கள் சொன்னது. டைகரோ டைகரஸோ(பெண்புலி)  விளைவுகள் வீபரீதமாக இருந்தது. ஆலையை புதிய இடத்தில் மீண்டும்துவக்கியதில் தயாரிப்பு ஓராண்டு தாமதாமாகிவிட்டது.  விற்பனையிலும் எஜெண்ட்கள் இல்லாமல் நாங்கள் அறிமுகப்படுத்திய முறை வரவேற்பைப் பெறவில்லை. விளமபர்ஙளில் இது இந்தியவின்  மலிவான கார் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இந்தியாவில் கார் என்பது ஒரு அந்தஸ்தின் சின்னம். அதில் மலிவானது எனச் சொல்லப்பட்டதை வாங்க மக்கள் தயங்கினர்.  நாங்கள் ”இதுஎல்லோரும் வாங்க்கூடிய கார்” என விளம்பர படுத்தியிருக்க வேண்டும். காரின் தரம்,வசதிகளை விட இந்த மலிவு  எனற வார்த்தை பெரிய விஷயமாக போட்டியாளர்களால் பேசப்பட்டதினால் விற்பனை பாதித்தது. இப்போதுபுதிய மாடலை அறிமுகப்படுத்தி  மெல்லச் சரிசெய்து கொண்டிருக்கிறார்கள். வரும் காலங்களில் இது சீராகும்.  என்று நம்புகிறேன்
(நனறி புதிய தலைமுறை060815)

16/3/15

வெற்றி வெளியே இல்லை- கல்கியில் விமர்சனம்



”வெற்றி வெளியே இல்லை” நூலை  மூத்த பத்திரிகையாளார் ‘சுப்ர பாலன்” இந்த வார(22/03/15) கல்கியில் விமர்சித்திருக்கிறார். அதை இந்த சுட்டியில் பார்க்கலாம் 

http://ramananvsv.blogspot.in/

17/1/15

மனதில் நிற்கும் மகிழ்வான தருணங்கள்




எழுதுபவனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று அவனது புத்தகம் சிறப்பாக வெளியிடப்படுவது, அவனது எழுத்துக்காக கெளரவிக்கபடுவது,  எனக்கு அத்தகைய தருணம் 12/1/15 அன்று வாய்த்தது. அதிலும் மாலனுடன் சேர்ந்து அந்த கெளரவத்தை பெற்றது மிக சந்தோஷமாக இருந்தது. இருவரும் சேர்ந்து எழுத ஆரம்பித்தது 1975ல் மணியனின் இதயம் பேசுகிறது இதழில். பின் மாலன் எழுத்தையே வாழ்க்கையாக்கி கொண்டார். நான் வாழ்க்கையின் நடுவே அவ்வப்போது எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது சற்று அதிகமாக எழுதுகிறேன். ஆனால் இருவரும் ஒரே மேடையில் கெளரவிக்க பட்டது இதுதான் முதல் முறை.. தங்கள் பிளைகள் எழுதுவதில் பெருமை கொண்ட எங்கள் பெற்றோர்கள் சொர்க்கத்திலிருந்து பார்த்து சந்தோஷபட்டிருக்கும் இந்த காட்சிகளை காண அருமை மனைவியும் அன்பு மகனும் நேரில் பங்கேற்றது மகிழ்ச்சியின் கனத்தை கூட்டிற்று.






தமிழகத்தின் சிறு கிராமம் ஒன்றில் பிறந்த பால. பாலச்சந்திரன் இன்று உலகம் அறிந்த ஒரு மேனேஜ்மெண்ட் குரு.சிகாகோவில் வசிக்கிறார்.  கிரேட் லேக்ஸ் எனற மேலாண்மைக் கல்லூரியை நிறுவி 10 ஆண்டுகளில் அதைமுதல் 10 நிறுவனங்களுக்கள் நிலைநிறுத்தியிருப்பவ்ர்.  சவாலான, சாதனையான அவரது வாழ்க்கைக் கதையை நான் புதிய தலைமுறையில் தொடராக வெற்றி வெளியே இல்லைஎன எழுதியிருந்தேன்.  அடுத்த வாரம் அது புத்தகமாக வெளிவருகிறது.
அதன் ஆங்கில மொழிபெயர்ப்பான “DARE TO DREAM” மும்பை தாஜ் ஹோட்டலில் இந்திய கார்ப்ரேட்டின் முன்னணித் தலைவர்கள் கேக்கி டாடிசேத் (Mr.Keki Dadiseth) (இந்துஸ்தான் லீவர் தலைவர்,  ஆதி காத்திரஜ், ஜெரிராவ் (சிட்டி வாங்கியின் முன்னாள்தலைவர் விருந்தினர்களாக பங்கேற்ற விழாவில் வெளியிடப்பட்டது.உடல் நல குறைவால் ரத்தன் டாட்டா பங்கேற்கவில்லை.  மும்பயின் பல கார்ப்பெரேட்களின் ”தலை”கள் பங்கேற்ற இந்த விழாவில் ஜெரிராவ் புத்தகத்தைவெளியிட்டு பேசினார். அழகான ஆங்கில உரை.  அவருக்கு தமிழும் நன்றாக தெரிந்திருப்பது  ஒர். ஆச்சரியம் குறளை மேற்கோள் காட்டி, ஆங்காங்கே புத்தக பக்கங்களைசுட்டிகாட்டி பேசினார். பேராசிரியர் பாலாவின் வாழ்க்கை சாதனை தமிழ்நாட்டுக்கு பெருமை என்றார்.
ஆங்கில புத்தகங்களின் வீச்சு அதிகம் என்பதை அறிந்திருந்தாலும் அன்று மும்பைவிழாவில் அதை உணர முடிந்தது. மொழிபெயர்ப்பினால் என் எழுத்து புதிய திசையில பயணிக்க துவங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.