சந்திப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29/12/14

அறியாத அழகிய முகங்கள்




கேரள மாநிலத்தின் மலை மாவட்டமான இடுக்கியின் காட்டுப்பகுதியில் இருக்கிறது எடுமலைக்குடி. முதுவர்கள் என்ற பழங்குடியினரின் 25 குடும்பங்கள் மட்டும்  வசிக்கும் ஒரு சின்னஞ்சிறு கிராமம்.  இங்கே போக மூணாறிலிருந்து 18 கீமீ நடக்க வேண்டும். வேறு வசதிகள் கிடையாது.
ஒரு குடிசையின் வாசலில்  ”அக்‌ஷரா ஆர்ட்ஸ் அண்ட் போர்ட்ஸ், லைப்ரரி  எடுமலைக்குடி “ என்று பேப்பரில் எழுதி பின்செய்யப்பட்ட  வெள்ளைப்பேப்பர்.  அந்த குடிசையில்  வசிப்பவர் பி.வி. சின்னதம்பி வயது 73.  அந்தகுக்கிராமத்தில் இருக்கும் ஒரே சாலையில் டீக்கடை வைத்திருகிறார்.  அதோடு அவர் செய்து கொண்டிருக்கும் மற்றொரு வேலையை  நம்மை ஆச்சரியப்பட  வைக்கிறது. அவர் ஒரு நூலகம் நடத்துகிறார்.  அது மட்டுமில்லை, கிராமத்தின் விளையாட்டுகளை நடத்தும் கிளப்பையும் நிறுவி நிர்வகிக்கிறார்.
 நீண்ட ட்ரெக்கிங்க்கு பின் அந்த  கடைக்குப் போன நாம் . லைப்ரரி எங்கே எனக் கேட்டால் குடிசையின் உள்ளே அழைத்துச் சென்று அரிசி கொண்டுவரப்படும் இரண்டு கோணிப்பைகளை எடுத்துவந்து அதிலிருக்கும் புத்தகங்களை அந்த சாக்குகளை விரித்து அதன்மேலேயே பரப்புகிறார். தினசரி நூலகம் இயங்கும் நேரத்தில் இப்படி தான் வைப்பாராம் மொத்தம் 160 புத்தகங்கள்,   வைக்கம் மகமூது பஷீர், எம். டி வாசுதேநாயர், கமலாதாஸ், தோப்பில் காந்தியின் வாழ்க்கை, என்ற அந்தப் புத்தகங்களின் தலைப்பு  நம்மை அசர வைக்கிறது.
.நூலகத்திற்கு ஒருமுறை கட்டணம் 25 ரூபாய். மாத சந்தா 2ரூபாய். எவ்வளவு நாள் வேண்டுமானலும் படிக்கலாம்.  அங்கத்தினர்களுக்கு பால் இல்லாத டீ இலவசம்.  யார் இதை பயன் படுத்துகிறார்கள்? பொருளாதார நிர்பத்தங்களினால் பள்ளிப்படிப்பைக் கூட படிக்க முடியாத எல்லா பழங்குடி மக்களைப் போல தானே இவர்களும் என்ற எண்ணத்தில் எழுந்த நம் கேள்விக்கு பதிலாக அவரது நூலக நோட்டைக் காட்டுகிறார் சின்ன தம்பி.  நூலகத்தின் புத்தகங்கள் வழங்கபட்டிருக்கும்  தேதி, உருப்பினர் பெயர் புத்தக தலைப்பு என தெளிவாக எழுதப்பட்டிருக்கும் அது கடந்த ஆண்டு  37 புத்தகங்கள் வழங்கப்படிருப்பதைச் சொல்லுகிறது.  மொத்த புத்தகங்களில் 25% புத்தகங்கள் வழங்கபட்டிருக்கிறது. இது நகரங்களிலுள்ள பெரிய நூலகங்களில் கூடஇத்தனை% வழங்கப்படுவதில்லை..  அந்த 25 குடும்பத்திலிருப்பவர்கள் தான் படித்திருக்கிறார்கள். அந்த நோட்டில் நம்மை சந்தோஷப்படுத்தும் மற்றொரு ஆச்சரியம் மலையாளத்தில் மொழிபெயர்க்க பட்ட சிலப்பதிகாரம் இரண்டு முறை வழங்கபட்டிருக்கிறது. தமிழின் பெருமைமிக்க காவியம் இந்த  மலைக்கிராமத்தில் படிக்கப் பட்டிருக்கிறது.
உடன் வந்த நண்பர்கள் புத்தகங்களை அலசிகொண்டிருந்ததில் பார்த்தது  கையெழுத்து பக்கங்களூடன்   ஒரு பைண்ட் செய்யபட்ட நோட் புத்தகம். அது சின்ன தம்பியின் சுய சரிதை.“ எழுதிக்கொண்டிருக்கிறேன் இன்னும் முடிக்க வில்லை முடித்தபின் உருப்பினர்களுக்கு வழங்குவேன்” என்று அமைதியாக சொல்லுகிறார்.
 இந்த செய்தியைக்கட்டுரையை படங்களுடன்  www.ruralindiaonline.org.  என்ற தளத்தில் பதிவு செய்திருப்பவர்  பத்திரிகையாளர் திரு சாய் நாத்.
'83.3 கோடி மக்களும், 780 வழக்கு மொழிகளும், பல்வகைக் கலாசாரங்களும், பல்வேறு தரப்பட்ட தொழில்களும் நிறைந்த  நம் நாட்டில்  கிராமங்களில் இது போல செய்திக்கதைகள் கொட்டி கிடக்கின்றன, அந்த  முகங்களை மீடியாக்கள்  நல்ல முறையில் காட்டவில்லை. அவைகளைப் பதிவு செய்ய வில்லை என்று சொல்லும் இவர்  இந்து நாளிதழின் கிராம புற செய்திகளை வெளியிடும் இணைப்புக்கு ஆசிரியாராக இருந்தவர்.  இவர்  எழுதிய பெரும்பாலான கட்டுரைகள் ஏழைகளையும் விவசாயிகளையும் கிராமப்புறப் பெண்களையும் மையப்படுத்தியே அமைந்திருந்தன. இந்தியாவின் இருள் படர்ந்த பகுதிகளில் களஆய்வு நடத்தி பல்வேறு பின்னணியைச் சேர்ந்த மக்களுடன் உரையாடி அவர்களுடைய வாழ்வையும் போராட்டத்தையும் நேரடியாகப் பதிவு செய்தவர் சாய்நாத். Everyone Loves a Good Drought என்ற இவரது புத்தகம் 43 பதிப்பு களைக் கண்ட புகழ்பெற்ற புத்தகம். 2007ல் மகசஸே(Magasaysay) விருது பெற்ற இந்த மூத்த பத்திரிகையாளர் இப்போது இந்திய கிராமங்களின் பல் வேறு முகங்களை, கலாசாரங்களை, மொழிகளை, இசைகளை, மக்கள்முகங்கங்களை டிஜிட்டலாக ஆவணப்படுத்தும் முயற்சியில் ஒரு இனைய தளத்தை துவக்கியிருக்கிறார்.  பாரி (PEOPLE ARCHIVE OF RURAL INDIA)PARI என்ற இந்த தளம் வெறும் செய்தி தளமாக இல்லாமல் இந்தியாவின் கிராமங்களைப்பற்றிய ஒரு ஆவண தொகுப்பாக இருக்க திட்டமிட்டு ஒராண்டு உழைப்புக்கு பின்னர்  அறிமுகபடுத்தியிருக்கிறார்,ஆடியோ, வீடியோ, போட்டோக்கள் கட்டுரைகள் மூலம் ஏழை கிராம மக்களின் அன்றாட வாழக்கை முறைகளை பதிவு செய்து ஆவணப்படுத்த லாபநோக்கற்ற நோக்கத்துடன்  துவக்க பட்டிருக்கும்  இந்த  ”கிராம வீக்கிபீடியாவிற்கு”   படைப்புகளை யார் வேண்டுமானாலும் அனுப்பிவைக்கலாம். தகுந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்படும்.  பலர் செல்போனில் எடுத்த படத்தை கூட அனுப்பியிருக்கிறார்கள். . இந்தியாவின் பெரும்பகுதி கிராமப்புறமாக இருந்தபோதும் நாம் வாசிக்கும் செய்தித்தாள்களும் பத்திரிகைகளும்  அவைகளின் செய்திகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்பதால் இந்த முயற்சி என்கிறார் சாய்நாத்.
 முகங்கள், நாங்கள் செய்வது, நாங்கள் தயாரிப்பது  பிரச்ச்னைகள் என பல பகுதிகளை தளத்தின் முகப்பிலேயே படமாக அறிமுகபடுத்தியிருக்கிறார்கள். அதை கிளிக்கினால் அந்த பகுதிக்கு நம்மை அழைத்துசெல்லும்படி தளம் நேர்த்தியாக அமைக்க பட்டிருக்கிறது. சூனாமியின் சீரழிவால் பெற்றோரை இழந்த மீனவகிராமச் சிறுவன் ஒருவன்  கலா ஷேத்திராவில் நடனம் பயின்று கலைஞரனது போன்ற  பல தகவல்களின்  சுரங்கங்களாக இருக்கின்றன.
 ஒரு வீடியோப்படத்தில்  ஒரு மலைக் கிராமப் பள்ளியில் குழந்தைகள் ”ஐ லவ் பொட்டட்டோ- யூ லவ் பொட்டட்டோ” என்ற ஆங்கில பாடலை சேர்திசையாக பாடுகிறார்கள் 1 முதல் 4 வகுப்புக்கள் இருக்கும் அந்த பள்ளிக்கு ஒரே ஒரு டிச்சர்தான்.  சுற்றுவட்டாரத்தில் எங்கும்  விளம்பர போர்ட்கள் அறிவிப்புகள் எதிலும் ஆங்கிலம் இல்லை. குழந்தைகளைக்  கேட்டால் அவர்கள் விருப்ப பாடம் ஆங்கிலம் என்கிறார்கள். அந்த நல்ல டீச்சர் சொல்லிகொடுத்த ஆங்கில பாட்டு. இந்த பொட்டட்டோ பாட்டு. அந்த பகுதியில் உருளை கிழங்கு விளைவது இல்லை  என்கிறதகவலைச்சொல்லுகிறது இந்த வீடியோவில் வரும் வார்த்தைகள். இப்படி ஓவ்வொரு பகுதியிலும் சுவையான தகவல்கள்  

 ஒரே வலைத்தளத்தில்  இந்திய கிராமங்களின்  அனைத்து முகங்களையும்  ஒன்றுதிரட்டி ஆவணப்படுத்த  பாரியின் மூலம் முயற்சிக்கிறார் சாய் நாத்.   நீங்கள் உங்கள் கிராமப்புற செய்திகளையும் படங்களையும் அனுப்பலாமே.
கல்கி 3/1/15


31/10/14

சீரியலுக்கு பின்னாலிருக்கும் சீரியஸான விஷயங்கள்


2


இன்றுடன் விஜய் டிவியின் மஹாபாரதம் முடிகிறது. சில மாதங்களுக்கு முன் கல்கியில் எழுதியதின் மீள் பதிவு 










விஜய் டிவி ஒளிபரப்பும் தமிழ் மஹாபாரதம் சிறுவர்கள், இளைஞர்கள்,குடும்பத்தலைவிகள், முதியோர்  என  அனைவரையும் கவர்ந்திழுத்து  இரவு 7மணி முதல் அரை மணி நேரம் கட்டிப்போடுகிறது. தமிழை பள்ளியில் படிக்காத, ஆங்கிலமே அதிகம் பேசும்  இளந்தலைமுறையினரையும் வசிகரிக்கிறது இந்த தொலைகாட்சி தொடர்.
பிரமிக்கவைக்கும் பிரமாண்டமான செட்கள், பளபளக்கும் காஸ்ட்யூம்கள்,  ஹோலி வண்ணங்கள் சற்று ஓவரான மேக்கப், ஒரே மாதிரியான சாயலில் வட இந்திய  முகங்கள், பயில்வான்கள் ஸ்டையில் பாண்டவர்கள் என்று  காட்டபடும் மாறுபட்ட ஒரு தொடராக இருந்தாலும் அதை எல்லோரையும் பார்க்க வைப்பது,  அழகான தமிழ் வசனங்களும், இனிய பாடல்களும் தான். ஸ்டார் விஜய்க்காக  இதை தமிழில் டப்பிங் செய்பவர்கள் 7த்  சானல் நிறுவனத்தினர். அதன் தலைவர் மாணிக்கம் நாராயணனை தொடர்பு கொண்ட  போது.  ”நானும் உங்களைப்போல ரசிக்கிறேன். எங்களது திறமையான டப்பிங் டீமின் கடைன் உழைப்பின் வெற்றி இது.  அவர்கள் பணிகளில் நான் தலயிடுவதில்லை. டீமின் தலவர் மகேஷிடம் பேசுங்களேன்”. என்றார்.

 டப்பிங் துறையை நேசிக்கும் மகேஷ்  ஒரு பிரபலமான ஆடியோ என்ஞ்னியர். மொழிபெயர்ப்பு வசனங்கள் மேற்பார்வை.  டப்பிங் கலைஞர்கள் தேர்வு, அவர்களுக்ககு பயிற்சி, ஒலிப்பதிவு போன்ற எல்லாவற்றையும் நேரடியாக செய்கிறார்.  இந்தியில் வசனங்கள் அருமையாக இருந்தாலும் அதை அப்படியே மொழிபெயர்த்தால்  தமிழில் அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் தகுந்த தமிழ் வார்த்தைகளுடன் மாற்றி கொள்கிறோம்.  மொழிபெயர்ப்பு என்பதை விட தமிழாக்கம் என்பது சரியாக இருக்கும்.  பாத்திரங்களுக்கு ஏற்ற குரல் தரும் கலைஞர்களை கவனமாக தேர்வு செய்து பயிற்சி அளித்திருக்கிறோம். அவர்களும் மிகுந்த கவனத்துடன் செய்திருக்கிறார்கள் என்கிறார்.

ஹிந்தியில் காட்சிகளை பார்க்கும் போது எழும் கேள்விகளுக்கு உடனே பதில் வரும்படி  வசன்ங்கள் அமைந்த  இந்த படத்திற்கு டப்பிங்க் வசனம் எழுதுவது கடினமான வேலை. எழுதும் வசனம் சரியாக பேசும் இடங்களில் பொருந்த வேண்டும். எல்லா மொழிகளிலும் வார்த்தைகளின் நீளம் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் இதற்கு வசனம் எழுதும் பாலகிருஷ்ணன் ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார். அவரே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ் என்பதால் வசனங்கள் எழுதபட்டபின்  ஒவ்வொரு எபிசோடிலும்  முதலில் பாத்திரங்களுக்காக அவரே  அதைப் பேசி   தேவையான நீளம் சரியான நேரம் போன்றவைகளை உறுதி செய்துகொண்டு  வாயசைப்புக்கு ஏற்ப வார்த்தைகளை தேர்ந்தெடுத்து  வசனங்களை மாற்றி அமைக்கிறார். அதன்பின்னர் அது அச்சிடப்பட்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களுக்கு அளிக்க படுகிறது. பயிற்சிகளுக்கு பின் அவர்கள் பேசுகிறார்கள். இந்த முறையில் ரீ டேக், எடிட்டிங் போன்ற வேலைகளை குறைவதால் நேரம் வீணாவதில்லை என்கிறார். இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் படங்கள், தொடர்களுக்கு  வசனம் எழுதிக்கொண்டிருப்பவர்.  இந்த தொடரில் இவர் தத்துவங்களை எளிமையாக்கி கவிதை நடையில் வசனங்களாக மெருகேற்றி தருவதால், தொடரைப்பார்க்கும் போது இது டப்பிங் செய்யபட்ட தொடர், நடிப்பவர்களின் நடிப்புதிறன் அவர்களின் பாத்திர பொருத்தம் போன்ற எண்ணங்களை எழாமல் செய்கிறது.

ஹிந்தி தொடரில் வரும் அதே இசையை பயன்படுத்தி கொண்டு  மெட்டுக்கு களுக்கு ஏற்ப தமிழ் பாடல்களை அமைக்கிறார்கள்.  பாடல்களையும் பாலகிருஷ்ணனே எழுதுகிறார்.  வரிகளிலும், வார்த்தைகளிலும் அவருள்  ஒளிந்திருக்கும் கவிஞர் தெரிகிறார்.,  எங்களது டீமில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட குரல்கலைஞர்களின்  ஆர்வமான, அர்ப்பணிப்பான உழைப்பின் வெற்றி இது . சகுனி, கிருஷ்ணன் போன்ற பாத்திரங்களின் நடிப்புக்கு உயிர் கொடுத்திருப்பது இவர்களின் குரல் என்கிறார். மகேஷ்..பல ஆண்டுகளுக்கு முன் என் டி டிவிக்காக ராமாயணத்தை தமிழாக்கியதும் இவர்தலமையிலான டீம்தான்
இதிகாசங்களின் மீதுள்ள பாசத்தினால் மூத்த தலைமுறையினர் மட்டும் ரசித்து  கொண்டிருந்த இம்மாதிரி தொடர்களை அடுத்த தலமுறையினரையும் ரசிக்கவைக்கும் விஜய் டிவிக்கும் 7த் சானலுக்கும் ஹாட்ஸ் ஆஃப்.

9/10/14

விடுமுறைபயணமாக விண்வெளிக்கு போனவர் !

 சுழலும் நமது பூமிக்கு மேலே பறக்கும் பயணிகள் விமானம் அதிக பட்டசம் 30,000 அடி உயரத்தில் பறக்கமுடியும் அந்த வாயு வெளிமண்டலத்தாண்டி  இருப்பது விண்வெளி வட்டத்தின் விளிம்பு. இதை ஸ்ட்ராட்டோஸ்பியர் (stratosphere) அழைக்கிறார்கள்.   இதில் மிக சக்தி வாய்ந்த போர் விமானங்களும், ராக்கெட்களுமே பறக்க முடியம், ரஷ்யாவில் இந்த விண்வெளி விளிம்பிற்கு  சுற்றுலா பயணம் செய்ய ஒரு டிராவல் நிறுவனம் ஏற்பாடு செய்துகொடுக்கிறது.  கண்ட்டிரி டூரிஸம் என்ற இந்த நிறுவனம் அரசின் ஆதரவோடு சாகஸ விமான பயணங்களை நிகழ்த்துகிறது.  இதற்காகவே MIG 29, MIG 31  போன்ற பல வகை போர் விமானங்களை சொந்தமாக வைத்திருக்கிறார்கள். விரும்புவர்கள் பணம் செலுத்தி இந்த பயணங்களைச் செய்ய முடியும்.
இந்த ஆண்டு சுதந்திரதினத்தன்று இதில் பறந்த முதல் இந்தியர்  டி, என் சுரேஷ் குமார். இவர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( ISRO)  ஹாசனிலுள்ள தலைமை கட்டுபாட்டு கேந்திரத்தில் பணிபுரியும்  மூத்த விஞ்ஞானி.  மணிக்கு 1850 கீமீ  வேகத்தில் ஜிவ்வென்று பறந்து 48 நிமிடத்தில்  விண்வெளியின் விளிம்பிற்கு  பறந்து அங்கிருந்து உலகை பார்க்க கூடிய இந்த பயணத்திற்கு செலவு 15 லட்சம் ரூபாய்கள். “இந்த பயணம்  எனது 20 ஆண்டு கனவு எனச்சொல்லும்  சுரேஷ் குமாரும் அவரது மனைவியும் இதற்காகவே வருமானத்தில் பெரும்பகுதியை சேமித்திருக்கிறார்கள்
பணம் கொடுத்து டிக்கெட் வாங்கினால் மட்டும் இந்த பயணத்தில் போய்விடமுடியாது.  உடல்நிலை தகுதி, தகவல் தொடர்பு சாதனைங்களை கையளும் திறன், ஒரளாவது விண்வெளிவிஞ்ஞானம் திடமான மனநிலை எல்லாம் இருக்க வேண்டும், மனுச்செய்தவர்களை பரிசோதித்து தேர்ந்டுத்து பயிற்சி கொடுத்த பின்னரே பயணம்.  இவற்றையெல்லாம் 6 மாதம்  முன்னரே செய்து முடித்திருக்க வேண்டும், சுரேஷ் குமார் இந்திய அரசின் விஞ்ஞானியாதலால் பல கட்டங்களில் நிறுவனத்தின்  அனுமதிகளைப் பெற வேண்டியிருந்தது.
 இந்த விண்வெளி விளிம்பு பயண கனவு சுரேஷ் குமாருக்கு எழுந்ததின் காரணம் ஒரு ஏமாற்றம்.  1985 ஆம் ஆண்டு நாசாவின் மூலமாக இஸ்ரோ விண்வெளிக்கு  அனுப்ப 4 பேர்களை தேர்ந்தெடுத்திருந்தது. அதில் சுரேஷ்குமாரும் ஒருவர்.  ஆனால் 1986ல்  நாசாவின் சேலன்ஜர் விண்கலம் கிளம்பிய சில வினாடிகளிலேயே வெடித்து விபத்தாகி விட்டதால்  தொடர்ந்து திட்டமிடப்பட்ட  அனைத்து விண்வெளிப் பயணங்கள் நிறுத்த பட்டுவிட்டன.
அதில் மிகுந்த ஏமாற்றமடைந்த சுரேஷ் இதை சாதிப்பதை தன் கனவாக கொண்டு தன் சொந்த சேமிப்பில் நிறைவேற்றியிருக்கிறார். விண்வெளி விளிம்பிற்கு மட்டுமில்லை  எல்லா பயணங்களையும் நேசிப்பவர் இவரும் இவரைப்போலவே மூத்த விஞ்ஞானியாக பணியாற்றும் இவரது மனைவி கீதாவும். கடந்த 15 ஆண்டுகளில் 110 நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார்கள் இந்த தம்பதியினர்.  எல்லாமே பட்ஜெட் பயணங்கள் எனச்சொல்லும் இவர்கள் இதற்காக செலவழித்த பணம் 50 லட்சம்.





4/9/14

”அப்பா மிகவும் பொறுமை சாலி “



 முன்னாள் அமைச்சர் நட்வார்சிங்கும், முன்னாள் செயலாளர் சஞ்யைபாருவாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கும் புத்தகங்கள் வெளியாயிருக்கும் இந்த நேரத்தில், மன்மோகன் சிங்கின்  வாழ்க்கையின் ஒரு பகுதியை சொல்லும் புத்தகம்  மன்மோகன் குருஷரன்  பற்றிய மிக தனிப்பட்ட விஷய்ங்கள்” (Strictly Personal: Manmohan and Gursharan). வெளியாகியிருக்கிறது. எழுதியிருப்பவர்  முன்னாள் பிரதமரின்  இரண்டாவது மகள் தாமன் சிங். மன்மோகன் தம்பதியினருக்கு 3 மகள்கள். மூவரும் தங்கள் படிப்பால் திறனால் தத்தம் துறைகளில் உயரங்களை தொட்டவர்கள்மீடியாக்களின் வெளிச்சங்கங்களை தவிர்த்தவர்கள். முதல் மகள் உப்பிந்தர் சிங் பல்கலைகழக பேராசிரியை. மூன்றாவது மகள் அமிர்த் சிங் சர்வ தேச மனித உரிமை சட்டங்களில் பட்டம் பெற்று அமெரிக்காவில் பணி செய்துகொண்டிருப்பவர்.
இரண்டாவது மகள் தாமன் டெல்லிகல்லூரியில் கணிதமும், குஜராத் ஆனந்த் மேலாண்மைகல்லூரியில் நிர்வாகமும் படித்தவர்ஆசிரியையாக இருந்தவர். இதுவரை  6 புத்தகங்கள் எழுதியிருக்கும் நூலாசிரியர். கணவர் போலீஸ் அதிகாரிஇரண்டு குழந்தைகள். தன் குடும்பத்துடன் தனியாக டெல்லியில் வசிக்கும் இவர் தன் சகோதரிகளைப் போல மிக எளிமையானவர். செல்போன் வைத்துகொள்லவில்லை. கார் ஓட்ட டிரைவர் கிடையாது.

தனது தந்தை மற்றும் தாயாருடன் பேசியபோது கிடைத்த தகவல்களை, தான் நேரடியாக பார்த்த தகவல்களை தொகுத்து இந்த நூலை எழுதியுள்ளார் தாமன் சிங். நூலில் மன்மோகன் சிங்கின் இளமை காலம் முதல் கூறப்பட்டுள்ள சுவாரசியமான பல தகவல்கள்: 1948ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமிர்தசரசில் உள்ள கால்சா கல்லூரியில் எப்.எஸ்.சி. படிப்பில் மன்மோகன் சிங்கை சேர்த்தார் அவருடைய தந்தை.
தனது தந்தையின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். ஆனால், அது பிடிக்காமல் பாதியிலேயே நிறுத்தினார். ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற தீவிர தாகத்தால், பொருளாதாரம் குறித்த படிப்பை மேற்கொண்டார். பிறகு தந்தையின் வியாபாரத்தில் சேர நினைத்தார். ஆனால் அங்கு டீ வாங்கி தருவது, குடிக்க தண்ணீர் தருவது போன்ற வேலையே அவருக்கு தரப்பட்டது. அது பிடிக்காததால், படிப்புதான் முக்கியம் என்று உணர்ந்தார். அதைத் தொடர்ந்து 1948 செப்டம்பர் மாதம் இந்துக் கல்லூரியில் சேர்ந்தார். வறுமை குறித்து தனக்கிருந்த கவலை, சில நாடுகள் பணக்கார நாடாகவும், பல நாடுகள் ஏழை நாடாகவும் இருப்பது ஏன் என்ற கேள்வி, அவரை பொருளாதார படிப்பை தேர்ந்தெடுக்க வைத்தது.பொருளாதாரத்தை சிற்ப்பாக படித்து ஒரு சிறந்த அரசு அதிகாரியாகவேண்டும் என்பது  அவரின் கனவாகயிருந்தது.

 பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தபோது, செலவுக்கு போதிய பணம் இல்லாமல் தவித்தார். ஆண்டுக்கு ஆன படிப்பு செலவு 600 பவுன் பஞ்சாப் பல்கலைகழகம் 160 பவுன் ஸ்காலர்ஷிப் கொடுத்திருந்தது. மீதி பணம் அவர் தந்தை அனுப்பவது. அது உரிய நேரத்தில் வராது. அதனால்  வெளியில் சாப்பிடவே மாட்டார்.
 அந்த பல்கலை கழகத்திதல் படிக்கும்போது பல்கலை வளாகத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் உணவையே சாப்பிடுவார். அதற்கும் பணம் இல்லாத நேரத்தில்  ஒரு நாளைக்கு ஒரே ஒரு சாக்லெட் மட்டும் சாப்பிடுவார். மாதம் 25 பவுண்ட் கடன் தருவதாக சொன்ன நண்பர் தந்த பணம் 3 பவுன் மட்டுமே. வறுமையை தனது வாழ்க்கையில் உணர்ந்தவர் மன்மோகன் சிங். மிக நெருங்கிய நண்பர்களுடன் பேசும்போது, மிகவும் ஜாலியான நபர் அவர். ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயர் வைத்தே அழைப்பார். நகைச்சுவை உணர்வு அவருக்கு அதிகம்என்று எழுதியிருக்கும் தாமல்சிங் இந்த விபரங்களை சேகரிக்கபட்ட கஷ்ட்டத்தையும் சொல்லுகிறார்நணபர்களிடம் ஜோக் அடித்துகொண்டிருக்கும் அப்பாவார்த்தைகளை மிக சிக்கனமாகத்தான்  குடுமப்த்தினரிடம்  உபயோகிப்பவர்ஒரு மகளாக அறிந்ததைவிட இந்த நூலாசிரியராக  அவரைப்பற்றி அறிந்ததுதான் அதிகம்

 நாட்டுக்காக சேவையாற்றிய அவர், அரசியல், அரசு வாழ்க்கைக்கே தன்னை பெரிதும் அர்ப்பணித்து கொண்டார். குடும்ப வேலைகளில் அவர் ஈடுபட்டதில்லை. முட்டை வேகவைப்பது, டி.வி.யை ஆன் செய்வது போன்ற சின்ன சின்ன வேலைகள் கூட அவர் செய்தது இல்லை. வீட்டுக்கு வரும்போதே ஒரு பெரிய பையில் கோப்புகள் வரும். தனது படுக்கையில் உட்கார்ந்து அந்த கோப்புகளை பார்ப்பார். அவ்வாறு கோப்புகள் இல்லாவிட்டால், புத்தகத்தை எடுத்துக் கொள்வார்  அதுவும் ஒரு பொருளாதார புத்தகமாகத்தான் இருக்கும். என்று நூலில் தாமன் சிங்  எழுதுகிறார்.

மன்மோகனும் அவரது மனைவியும்  எப்படி வாழக்கையின் எல்லா கால கட்டங்களிலும் சந்தோஷமாக இருந்தார்கள் என்பதை எளிய ஆங்கிலத்தில் மெல்லிய நகைச்சுவையுடன் விவரிக்கும் தாமல் இந்த புத்தகத்தில்  அவர் பிரதமாராக இருந்த 10 ஆண்டு காலத்தைப்பற்றி எதுவும் நேரிடையாக எழுதவில்லை. ஆனால் சில இடங்களில் கோடுகாட்டபடுகிறதுஇந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்த போது அடைந்த அதிர்ச்சி, ஒரே நாள் இரவில் நிதிமந்திரியானதுராகுலின் ஆவேச பேச்சு (காபினட் முடிவை கிழித்தது) வெளியானபோது அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பிகொண்டிருந்தார்ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்புங்கள் என  ஒரு நண்பர் சொன்னபோது எனக்கு நிறைய பொறுப்பும் கடமையும் இருக்கிறது என்று சொன்னது. தன் அமைச்சர்களுக்காக பொறுப்பேற்றது பற்றியெல்லாம் மிகவும் மெல்லிய இழையாகச் சொல்லபட்டிருக்கிறது.


 புத்தக அறிமுக விழாவில் மன்மோகன்  பிரதமராக இருந்த காலத்தை பற்றி எழுதவீர்களா? எனக்கேட்டதற்கு தாமல்  சொன்ன பதில் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான அந்த கட்டங்கள் பற்றி அப்பா எழுதினால்தான் சரியாக இருக்கும். ஒரு நாள் அவரே எழுதுவார்  என நம்புகிறேன் என்றார்

(கல்கி 7/9/14 இதழில்)

25/8/14

கண்ணனின் கனவு



 முன்னாள் நடிகை வைஜைந்திமாலா. 54 வருடங்களுக்கு முன் தான் கதாநாயகியாக நடித்த  கல்கியின் அமரகாவியாமான பார்த்திபன் கனவு  ஒரு ஒலிபுத்தகமாக வரும் என்றோ அதை தானே வெளியிடுவோம்  என்றோகனவிலும் நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார். சமீபத்தில்  பொன்னியன் செல்வன் நண்பர்குழுவினர் மூலம் திரு பாம்பே கண்ணன்  இந்த காவியத்தை  ஒலி புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறார்.  இவர்  சிவகாமியின் சபதம், பொன்னியன் செல்வன் காவியங்களையும் ஒலி புத்தகமாக்கியிருப்பவர். தமிழ் படிப்பதை மெல்ல மறந்துவரும்  இன்றைய இனிய இளையதலைமுறையினர் படிப்பதைவிட கேட்பதையே அதிகம் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்து இவர் இதுபோன்ற  ஒலிபுத்தகங்களை தயாரிக்கிறார். மேடை நாடகங்களில் நீண்ட அனுபவம்  கொண்ட இவர்  இதைவெறும் வியாபார முயற்சியாக இல்லாமல் ஒரு தவமாகச் செய்து கொண்டிருக்கிறார்.
மிகுந்தசிரமங்களுக்கிடையே தகுந்த குரல்களை தேடிபிடித்து பயிற்சி அளித்து ஒலிப்பதிவை மேற்பார்வையிட்டு தயாரிக்கிறார்.
நல்லி குப்புசாமி,  வைஜந்திமாலா, சிவசங்கரி, ஏ ஆர் எஸ்,இந்திரா செளந்தர்ராஜன்  கலந்துகொண்ட விழாவில் பேசியவர்கள் அனைவரும்  அமரர் ஆசிரியர் கல்கியின் பல்வேறு முகங்களைப் பற்றி பாராட்டி பேசினார்கள்
.தான் பிறப்பதற்கு மூன்பே தங்கள் குடுமபத்துக்கு அறிமுகமானவர் கல்கி  என்று ஆரம்பித்து  ”கல்கி மாமா” என்று உரிமையோடு பேசிய சிவசங்கரி தொழில்நுட்ப வசதிகளற்ற காலத்திலேயே அமரர் கல்கியின் கடின உழைப்பு ஆச்சரியத்தை தருகிறது என்றார்.  பார்த்திபன் கனவு எழுதிய பின் அதன் முந்தியகாலகட்ட கதையாக சிவகாமியின் சபதத்தை தொடர்ந்த (backword integration) டெக்னிக் பிரமிப்பூட்டும் விஷயம் என்றார்.  . முடிவு தெரியாமல் போய்ச் சேர்ந்துவிடுவோமோ என்கிற ஆதங்கத்தில் “நான் சாகறத்துக்குள்ள பொன்னியின் செல்வன் முடிஞ்சுடுமோன்னோ...” என்று அவரின் பாட்டி கேட்டு கொண்டே இருந்ததை சொன்னபோது அரங்கம் சிரிப்பில் அதிர்ந்த்து. 
 விழாவின் ஆரம்பத்தில், பார்த்திபன் கனவிலிருந்து சில காட்சிகளை நாடகமாக நடித்தது நிறைவாக இருந்தது உடை, மேக் அப், நடித்தவர்கள், தமிழ் உச்சரிப்பு, ஒலி/ஒளி அமைப்பு எல்லாமே அருமை,    நாயகன் விக்கரமனாக நடித்த சூரஜ், நாயகி குந்தவியாக நடித்த  அர்ச்னா நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள் எனபதை நிருபித்தார்கள். இந்த டீமையை வைத்து முழு நாடகமாகவே போடலாம்.
வளரும் தொழில் நுட்பத்தில் இப்படி ஒலிபுத்தகங்கள் உருவாவது பரிமாணவளர்ச்சி, வருங்காலங்களில் இதுதான் புத்தகங்களின் வடிவமாக இருக்கபோகிறது.. தனது புத்தகங்களும் இப்படி ஒரு நாள் வெளிவரும் என்றார் இந்திரா செந்திர்ராஜன்.
ஒலிபுப்த்தகம் வெளிவர நண்பர் பாம்பே கண்ணன் அவர்களின் அயராத உழைப்பையும் தயாரிப்பாளர் சிகே வெங்கட்ராமன் அவர்களின் பெருந்தன்மையையும் மகிழ்ச்சியுடன் பாராட்டிய ஏஆர்ஸ்...  நாடக நடிகர்களின் சிறப்பான நடிப்பை பாராட்ட விட்டுபோனதற்காக மன்னிப்பு கேட்டு மீண்டும் மைக்குவந்து அவர்களை பாரட்டி நன்றியும் சொன்னார். 30 ஆண்டுகாலமாக நாடகமேடையை நேசிப்பவர் இலையா?
1960ல் கறுப்பு-வெள்ளை பார்த்திபன் கனவில் நடித்த வைஜயந்திமாலா பாலி  இப்பொழுதும் டிரிம்மாக இருக்கிறார். தன் மெல்லிய குரலில்  மெல்ல நாலுவரிகளில்பேசி  தன் பேச்சைமுடித்துகொண்டார். 
அரங்கம் நிறைந்திருந்தததைவிட ஆச்சரியம் நடுவே குத்துபாட்டு ரிங்டோன்கள் ஒலி  தொல்லையிலாததுதான்.
 ஒலிப்புத்தகத்தில் நடிக்கும் போது நடிகர்கள் வசனங்களைப் வெறுமனே படிக்காமல்.  நடிக்கிறார்கள்  அந்த பாத்திரமாகவேமாகி பேசுகிறார்கள்.  இதை நன்கு தெரிந்தவர் இயக்குனர் பாம்பே கண்ணன். ஆனாலும் ஒலிபுத்தகத்திற்கு குரலால் உயிர் கொடுத்தவர்களை அன்று  ஏன் மேடையில் கெளரவிக்கவில்லை என்று தெரியவில்லை. 
 மூன்று தலைமுறைகளை கடந்த கலாபூர்வமான கல்கியின் காவியங்கள்  அடுத்த தலமுறையையும் அடைந்து அதையும் தாண்டி நிற்க உதவும்  பாம்பே கண்ணனின் இந்த  ஒலிபுத்தக முயற்சி பெரிதும் பாராட்டபட வேண்டிய ஒன்று
(31/8/14 கல்கி)

21/8/14

சீனாவின் குரு காணிக்கை






யோகா குரு அய்யங்கார் தன் பிராணாயமத்தை கடைசி மூச்சை நேற்று நிறுத்திவிட்டார்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் கல்கியில் எழுதிய கட்டுரையின் மீள்பதிவு

சீனாவில் இந்திய அரசின்  உதவியுடன் முதல் முறையாக ஒரு யோகா உச்சி மாநாடு  தென் சீனாவில்  குன்ஸாஹு(GUNGZHOU)  என்ற ஒரு பெரிய தொழில் நகரில்  சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. தலைமை விருந்தினாராக் அழைக்கபட்டிருந்தவர் யோகா குரு பி கே எஸ் அயங்கார். அவர் உலகின் பல நாடுகளுக்கு பயணம் செய்திருந்தாலும் சீனாவிற்கு இதுதான் முதல் முறை.  புனாவில் யோகா பள்ளியை   நடத்திவரும்  இந்த குருவிற்கு  அங்கே எதிர்பாராத ஆச்சரியங்கள் பல  காத்திருந்தன. 200டாலர் கட்டணம் கட்டி மாநாட்டிற்கு வந்திருந்த 1300 பேர் களில்  சில மாணவர்கள் ஒருங்கிணைந்து அவருடைய அய்யங்கார் பாணி யோகசனங்களை  தவறில்லாமல் செய்துகாட்டினார்கள். . அதைவிட ஆச்சரியபடுத்திய விஷயம் அவரது அய்யங்கார் ஆசனங்கள் சீனாவில் மிகவும் பாப்புலர் என்பதும், அந்த நாட்டில்  17 மாநிலங்களில், 57  நகரங்களில்  அவரது பாணி யோகவை கற்பிக்க பல பள்ளிகள் இருப்பதும் 30, 000க்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் எனபதும் தான். பல பள்ளிகளில் ஆசிரியர்கள் ரிஷிகேஸ் வந்து  இவரது சீடர்களிடம் பயிற்சி பெற்றவர்கள்.  சீனர்கள் தங்களது குருவிற்கு மிகுந்த மரியாதை அளிப்பவர்கள். தாங்கள் பயிலும் யோக கலையின் பாணியை உலகிற்கு அறிமுகபடுத்திய குருவை சந்திப்பதை வாழ்வின் பெரிய வாய்ப்பாக கருதிய சீன இளைஞ்ர்கள் அவரை  பல நகரங்களில் வரவேற்றனர்.  “சீனர்களுக்கு யோகா பற்றி ஓரளவு தெரியும் என்பதை மட்டுமே அறிந்திருந்த எனக்கு  யோகா அங்கு இவ்வளவு பிரபலமாக் இருப்பதை பார்க்கும்போது  மிகவு சந்தோஷமாக இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சீனா யோகாவில் இந்தியாவை முந்தி விட்டால் கூட நான் ஆச்சரியபட்மாட்டேன் “  என்று சொல்லும் அய்யங்கார் கர்நாடக மாநிலத்தில்  பெல்லூர் என்ற சிறிய கிராமத்தில் மிக ஏழைக்குடும்த்தில் பிறந்தவர். சிறுவயதிலியே பெற்றோர்களை இழந்து மைசூரிலிருக்கும் புகழ்பெற்ற யோகாசன ஆசிரியாரான தன் மாமா கிருஷ்ணமாச்சாரியாரின்  வீட்டில் தங்கி அவருடைய உதவியாளாரக பணிசெய்து யோக கலையை கற்றவர். 15 ஆண்டு ப்யிற்சிக்குபின்னர்   மராஷ்ட்டிர மாநிலத்தில் புனா நகருக்கு வந்து யோகா பயிற்சி பள்ளியை  துவக்கி  அதை வளர்த்தவர். தானே கற்று உணர்ந்த சில பழைய யோகயாசன முறைகளை செம்மைப்படுத்தி கற்பித்துவந்தார். எளிதான  இந்த யோகா பாணி அய்ங்கார் ஆசனங்கள் என்று பிரபலமாகி இன்று இந்தியாவில் பல இடங்களிலும், உலகின் பல நகரங்களிலும் பரவியிருக்கிறது.  ’ ‘யோகா லைட் ஆப் லைஃப்’ ‘ என்ற இவரது புத்தகம் உலகம் முழுவதும் அதிக அளவில் விற்கும்  யோகா புத்தங்களில் ஒன்று
இந்த பயணத்தில்  பல  சீன நகரங்களில் யோகானசஙகள்  செய்து காட்டியும் அது குறித்து விளக்க உரையையும் நிகழ்த்தியிருக்கும் இந்த குருவின் படத்துடன் சீனா நாட்டின் அஞ்சல்துறை  ஒரு விசேஷ  தபால் தலை வெளியிட்டு கெளரவித்திருக்கிறது. இத்தகைய கெளரவம் பெறும்  முதல் இந்தியர் இவர்தான். சீன அரசுக்கு  தெரிவித்த நன்றி உரையில்” என் வாழ் நாள் முழுவதும் சந்தோஷப்படும்  வகையில் என்னை சீனாவின் ஒரு அடையாளமாக  கருதி  இந்த மகத்தான கெளரவத்தை அளித்தற்கு  மிக்க நன்றி  என குறிப்பிட்டிருக்கிறார். இனி ஆண்டுக்கு ஒருமுறை சிலமாதங்களாவது சீனாவில் யோகா வகுப்புகள் நடத்தபோவதாக அறிவித்திருக்கும் இவருக்கு வயது- ஒன்றும் அதிகமில்லை 93 தான்.



5/8/14

இந்திய ”ஸ்வாமி”யிடம் ஜோசியம் கேட்ட இங்கிலாந்தின் எதிர்கட்சி தலைவர்’


 நேற்று வெளிவந்த நட்டுவார் சிங் எழுதிய  அவரது வாழ்க்கை வரலாறு பற்றி நிறைய பேசப்படுகிறது. நட்டுவார் சிங் நிறைய புத்தகங்கள் எழுதியிருப்பவர். அவரது புலிகளுடன் ஒரு வாக்கிங்- (Walking with lions- tales of a diplomatic past )  என்ற புத்தகத்திலிருந்து  இது. கடந்த ஆண்டு மார்க்ரெட் தாச்சர் மரணமடைந்த போது கல்கியில் எழுதியது,.

1975ஆம் ஆண்டு நான் லண்டனில் துணைஹைகமிஷனராக இருந்த போது ஒரு நாள் அப்போது இங்கிலாந்து வந்திருந்த சந்திராஸ்வாமியிடமிருந்து போன் வந்தது. அவரை வந்து சந்திக்க வேண்டினார். “நீங்கள் என்னை சந்திக்க விரும்பினால் தூதரகத்திற்கு வரலாம் என்று சொல்லிவிட்டேன். காவி உடை, கழுத்தில் பெரிய உத்திராட்ச மாலை நீண்ட தண்டம் சகிதம் மறுநாள் என்னை ஆபிஸில் சந்தித்த அவர்  உரையாடலின்போது பல இந்திய அரசியல் பிரபலங்களின் பெயர்களை உதிர்த்தார். கிளம்பும் முன் அவர் இங்கிலாந்தின் இரண்டு முக்கிய பெயர்களை குறிப்பிட்டு சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டினார். இவரை என்னை சந்திக்க சொன்னவரின் மேல் நான் கொண்டிருந்த நன் மதிப்பால் நேரிடையாக பதில் சொல்லாமல் சமாளித்தேன். (டிப்ளமேட் இல்லையா?) சில நாட்களில் அன்றைய அயலுறவு அமைச்சர் ஒய்,பி, சவாண் அமெரிக்க போகும் வழியில் லண்டன் வந்தார். அவரிடம் சந்திரா ஸ்வாமி பற்றி சொல்லி அவர்  மெளண்ட் பேட்டனையும், எதிர்கட்சி தலைவர் மார்கரெட் தாட்சரையும் சந்திக்க ஏற்பாடு செய்ய சொல்லுகிறாரே, செய்யலாமா என்றேன். செய்யுங்களேன், அவர் சந்திப்பினால் பிரச்னை ஒன்றும் இல்லையே என்ற அவரது பதில் எனக்கு ஆச்சரியத்தையும் சங்கடத்தையும் அளித்தது. நல்ல வேளையாக மெளண்ட்பேட்டன் விடுமுறைக்கு கிளம்பிக்கொண்டிருந்தாதால் சந்திப்பு இயலாது என்று சொல்லிவிட்டார். தாச்சர் எதிர்கட்சி தலைவர் கேபினட் அமைச்சருக்கு நிகரானவர் என்பதால் நேரில் சந்தித்து  பேசினேன்.. மறுவாரம் 10 நிமிடம் சந்திக்க சம்மதித்தார். இந்த ஆள் ஏடாகூடாமாக ஏதாவது பேசிவிட்டால் எனக்குதான் பிரச்சனை என பயந்துகொண்டே இருந்தேன். பாரளமன்ற வளாகத்தில் நுழைந்த்திலிருந்தே மற்றவர்கள் கவனத்தை கவர ஏதாவது செய்துகொண்டு என்னை சங்கடபடுத்திக்கொண்டே வந்தார் ஸ்வாமி ”என்னை எதற்காக பார்க்க வந்திருக்கிறீர்கள் என்ற தாட்சரின் கேள்விக்கு “சீக்கிரமே உங்களுக்கு தெரியும்” என்று ஹிந்தியில் சொன்னதை நான் மொழிபெயர்த்தேன், (ஆசாமிக்கு ஆங்கிலத்தில் ஒரு அட்சரம் தெரியாது) ஒரு பெரிய வெள்ளை பேப்பர் கேட்டார் அதை 5 நீள துண்டுகளாக கிழித்தார். மார்கரெட் தாட்சரிடம் கொடுத்து அதில் 5 கேள்விகள் எழுத சொன்னார். சற்றே சங்கடத்துடனும் தயக்கத்துடனும் அவர்  எழுதினார். அவைகளை கசக்கி சின்ன பந்துகள் போல் செய்து தாச்சரிடம் கொடுத்து ஏதாவது ஒன்றை திறந்து பார்க்க சொன்னார் சந்திராஸ்வாமி. அவர் பார்த்துகொண்டிருக்கும்  கேள்வியை என்னிடம் இந்தியில் சொன்னார், நான் மொழிபெயர்த்தேன். சரி என்பது தாட்சரின் கண்ணிலேயே தெரிந்தது.அடுத்தடுத்த கேள்விகளும் சரியாகவே சொன்னார். தயக்கத்திலிருந்து ஆச்சரியமாக மாறியிருந்த தாட்சர் இவர் தெய்வீகசக்தி வாய்ந்தவர் என எண்ண ஆரம்பித்தது  எனக்கு புரிந்தது, சோபாவின் நுனிக்கே வந்து விட்ட தாட்சர் மேலும் சில கேள்விகளை கேட்க பதில்கள் சொன்ன பின்னர்  சட்டென்று எழுந்து சூரியன் அஸ்தமித்துவிட்டான். நான் இனி இன்று பதில் சொல்ல முடியாது என்றார்.  நான் உங்களை எப்போது மீண்டும் சந்திக்கலாம்? என கேட்ட தாச்சருக்கு ”வரும் செவ்வாய்கிழமை 2.30க்கு நட்வார்சிங் வீட்டில்” என்றார். ஆடிபோனேன். என்வீட்டிலா? நாட்டின் எதிர்கட்சி தலைவர் ஒரு தூதுவர் வீட்டிற்கு வருவதில் பல சம்பிராதயபிரச்னைகள் என்பதால் நான் இதை மொழிபெயர்த்து சொல்ல மாட்டேன் என்று சொன்னேன். ”சொல்லிய பின் பாருங்கள்” என்று அவர் சொல்லிகொண்டிருந்த போதே மார்கரெட் என்னவென்று விசாரித்தார்.. நான் சொன்னவுடன், ”மிஸ்டர் ஹைகமிஷனர் நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?” எனகேட்டாரே பார்க்கலாம். விடைபெற எழுந்தபோது சடென்று ஒரு தயாத்தை வரவழைத்து  வரும்போது இதை கையில் கட்டிகொண்டு சிவப்பு ஆடை அணிந்து வாருங்கள் என்றார். ஒருபெண் அணீய வேண்டிய ஆடையைபற்றி யெல்லாம் சொல்லுவது இங்கிலாந்தில் அநாகரிகம். எனபதால் சொல்ல மறுத்தேன். மீண்டும் தாட்சர் என்ன என்று கேட்டதனால் தலைகுனிந்துகொண்டே சொன்னேன். தாயத்தை வாங்கிகொண்டார்.
சொன்னபடி செவ்வாய் மதியம் மார்ரெட் தாட்சர் சிவப்பு உடையில் கையில் கட்டிய தயாத்துடன் வந்தார். நிறைய கேள்விகள் கேட்டார், அதில் முக்கியமானது, நான்  நாட்டின் பிரதமர் ஆவேனா? எப்போது? ”நிச்சியம் இன்னும் 4 ஆண்டுகளில் என்ற ஸ்வாமி 9. 11.அல்லது 13 வருடங்கள் பிரதமாக இருப்பீர்கள்” என்றார். ஒரு நாள் பிரதமராவோம் என நம்பிய மார்கெட் தாட்சர் நீண்ட வருடங்களை நம்பவில்லை.
சந்திரா ஸ்வாமி சொன்னது பலித்தது. மார்கரெட் தாட்சர் 1979லிருந்து 1990 வரை  11 வருடம் பிரதமாரகயிருந்தார்.



9/7/14

டிஜிட்டல் தமிழர்கள்


மலேசியாவில் பிறந்த. சுபாஷிணி ஜெர்மனியில்வசித்து வரும் ஒரு தமிழ் எழுத்தாளர்-ஆய்வாளர். கணையாழி இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்கிறார். தமிழ் மரபு அறக்கட்டளை என்ற அமைப்பை டாக்டர் கண்ணன் அவர்களோடு இணைந்து நிறுவியவர். அதன் துணைத்தலைவராக இருப்பதோடு அதன் வலைகுரு (webmaster) ஆகவும் செயல்பட்டு வருகிறார்.
அரிய, பழைய ஓலைச்சுவடிகள் தற்போது புழக்கத்தில் இல்லாத நூல்கள் இவற்றை மின்பதிப்பாக்கி வைப்பதை முக்கியக் கடமையாக ஏற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருகிறார். இதையன்றி கல்வெட்டுகள், அகழ்வாராய்ச்சி, மானுடவியல் போன்ற துறைகளில் ஈடுபாடு உண்டு.
இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, தன் சொந்தச் செலவில் தமிழகம் வந்து களப்பணிகளை மேற்கொள்கிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க, ஆனால் அசட்டை செய்யப்பட்ட கலாசாரச் செழுமை நிறைந்த இடங்களுக்குச் சென்று தகவல் சேகரித்தல், அவற்றை வலையகத்தில் வெளியிடுவது, அறிஞர்களைச் சந்திப்பது, தமிழ்க் கணினி பற்றிய பட்டறைகள் நடத்துவது என்று அந்தப் பயணத்தை செயல்நிரம்பியதாகஆக்கிக் கொள்கிறார்.
மலேசியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் படித்த இவர் ஹ்யூலெட் பெக்கார்ட் நிறுவனத்தில் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்கா ஆகிய பகுதிகளுக்கான வர்த்தக சேவையை அளிக்கும் Chief IT Architect, ஆகப் பணி செய்கிறார். ஜெர்மானியரான திரு. ட்ரெம்மலை மணந்து ஜெர்மனியில் வசிக்கிறார்.
படித்தது மலாய் மொழியிலும், ஆங்கிலத்திலும். பேசுவது வீட்டில் ஜெர்மன், அலுவலகத்தில் ஆங்கிலம்... ஆனால் நேசிப்பது  தமிழ் மொழியை. தமிழ் மரபுகளை.  தமிழ் மரபுகளை  பாதுகாக்க  இவர் தேர்ந்தெடுத்திருக்கும் வழி டிஜிட்டலில் சேமிப்பு
.   இலக்கிய படைப்புகள் மட்டுமின்றி மருத்துவம்,கணிதம் வானசாஸ்திரம், கோவில்கட்டும் முறைகள், நாவாய் சாஸ்திரம், வான சாஸ்திரம் என சகலத்தையும்  டிஜிட்டலாக்கி சேமித்து பட்டியிலிட்டிருக்கிறார்.. இம்முறை வந்த பயணத்தில் தினமணியின் இலக்கிய திருவிழாவிலும்  சாகித்திய அகதமியின்  நிகழ்ச்சியிலும் பங்கேற்று  தன் பணிகளைப்பற்றியும் அதில் சந்திக்கும் சவால்களை பற்றி  பேசினார்..
தமிழிலும் அதன் மரபுகளிலும் எப்படி இத்தனை ஆர்வம்? 
தமிழ்வம்சாவளி மலேசிய குடும்பம் எங்களுடையது. என் தாய் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தமிழ்  பேச எழுத ஆர்வத்துடன் சொல்லிகொடுப்பவர். என் பள்ளிக்கூட காலங்களில் அவர்களுடன் நானும் தமிழ் கற்றேன். அம்மா சொல்வதற்காக தமிழில் கட்டுரை பேச்சு எல்லாம்  எழுதியிருக்கிறேன்.  ஆனால் அப்போதெல்லாம் இந்த ஆர்வம் இல்லை. 
ஜெர்மனிக்கு வந்த பின் 90 களின்   துவக்கத்தில் இணைத்தில் தமிழை பயன்படுத்த  யூனிகோர்ட் முறையில் எழுத்துருக்களை  தமிழகம், மலேசியா சிங்கப்பூர்  போன்ற இடங்களிலிருந்து ஒத்த சிந்தனை கொண்டவர்கள் இணைந்து செய்த பணிகளில் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழோடு நெருக்கமானேன்.  இந்த வளமான மொழி நம்முடையதல்லவா? நாமும் ஏதாவதுசெய்ய வேண்டும் என எண்ணினேன்.  தமிழ் வாசிப்பும் தொடர்புகளும் அதிகமாகியிற்று. அப்போது அறிமுகமானவர் முனைவர் நாராயணன் கண்ணன்

நா.கண்ணன் தொழில்முறையில் ஒரு அறிவியல் விஞ்ஞானி. மதுரைப் பல்கலைக் கழகத்திலும், ஜப்பானிலுள்ள எகிமே பல்கலைக் கழகத்திலும் இருமுறை முனைவர் பட்டம் பெற்றவர். உயிர் வேதிமவியல், சூழலியல் போன்ற துறைகளில் தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் வசிக்கும் முக்கிய இந்திய விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். இவர் 10 வருடங்கள் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம்) இணைப்பேராசிரியராக இருந்துவிட்டு  கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர். இப்போது புத்ர மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக உள்ளார். இருபதாண்டுகளுக்கு மேலாக அயலகத்திலிருந்து தமிழ் இலக்கியத்திற்குப் பங்களித்து வருபவர். தமிழ் இலக்கிய, சரித்திர, கலை வடிவங்களை எண்ம (digital) வடிவில் மின்னுலகில் நிரந்தரப் படுத்தும் முயற்சியின் முன்னோடிகளில் ஒருவரான இவருடன்  இணைந்து  உருவாக்க பட்டது தான் தமிழ் மரபு அறகட்டளை இந்த டிஜிட்டல் சேமிப்புகளை    துவக்கியபின்னர் இந்த பணி தந்த ஆச்சரியங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றன.  நம் முன்னோர்கள் செப்பேடுகளிலும், சுவடிகளிலும், பாதுகாத்து கொடுத்ததை  தவிர எண்ணற்ற பல விஷயங்கள் இன்னும் சுவடிகளிலேயே கிராமங்களில் இருக்கிறது. திருவாடுதுறை போன்ற ஆதினங்களில் பல் அரிய சுவடிகள் இருக்கிறது. அதை இப்போது  இருப்பதுபோல் நீண்ட நாள் பாதுகாப்பது கடினம். அவற்றை அடுத்த தலமுறைக்கு கொண்டு செல்வதுதான் தமிழ் மரபு அறக்கட்டளையின் அடிப்படை நோக்கம்.  தமிழ் நாட்டில் மாலன்,  நராசாய்யா  தஞ்சை தமிழ்பல்கலைகழக முனைவர் ராஜேந்திரன்  போன்றவர்கள் உறுப்பினர்களாக இருந்து உதவுகிறார்கள். என்று சொல்லும் சுபாஷினி ஆங்கில கலப்பில்லாத, மலேசிய தமிழ் வாசனைகள் இல்லாமல் நல்ல தமிழில் சரளமாக் பேசுகிறார்.  இவருடைய தளத்தில்  பேட்டிகள், பாடல்களையும் பதிவுகளையும் சேமிக்கிறார், அடுத்து  ஒரு பதிப்பு வர வாய்ப்பு இல்லாத புத்தகங்களை மின் நூலாக மாற்றி சேமித்திருக்கிறார். ஆவணங்களை பாதுகாக்க இணைய ஊடகம் மிக சிறந்த வாய்ப்பு. -வளரும் தொழில்நுட்பத்தை  முழுவீச்சில் பயன்படுத்தினால் பலபணிகளை செய்யலாம் என்கிறார்.  மலேசியாவில் வந்த முதல் தமிழ் பத்திரிகையின் பிரதி  இப்போது அங்கில்லை. ஆனால் மலேசியா  அன்றைய பிரிடிட்டிஷ் காலனியாக இருந்த காரணத்தினால் பதிவு செய்யபட்ட பத்திரிகைகளின் பிரதி ஒன்று பிரிட்டிஷ் அர்சாங்காத்திற்கு லண்டனுக்கு அனுப்ப பட வேண்டும் என்று ஒரு  சட்டம் இருந்திருக்கிறது. அதன்மூலம் ஆராய்ந்ததில் அந்த முதல் பத்திரிகையின் முதல் இதழ் பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கபட்டிருப்பது  தெரிந்தது. இப்படி பல  சுவாரஸ்யமான விஷயங்களை அறிந்து அதை தமிழ் மரபு தளத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த பெண்.

ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோவிலை விட பழையது திருவிடை மருதூர் மஹாலிங்கேஸ்ரவர் கோவில். இந்த கோவிலுக்கு அருகில் ஒரு போர் நடந்து இருப்பது, அதன் பின்னர் கோவில் மூன்று கட்டமாக விரிவாக்க பட்டிருப்பதை எல்லாம் அங்குள்ள கல்வெட்டுகளில் கண்டு  அதை  படமெடுத்து டிஜிட்டலாக ஆவணபடுத்திதை சொல்லும் இவர்   அந்த கோவிலில் சமீபத்தில் நடைபெற்ற புனரமைப்பு பணிகளில் அந்த கல்வெட்டுகள் சிதைக்கபட்டிருப்தையும் சன்னதிகள் இடமாற்றம் செய்யபட்டிருப்பதும் கண்டு வருந்துகிறார். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் 200 ஆண்டு பழமையான  விஷயங்களை கூட பிரமாதமான  விஷயமாக ஆவணப்படுத்தி பாதுகாத்து காட்சியாக்கி விளம்பரபடுத்துகிறார்கள். பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட  நாமும் இது போல் செய்து உலகை கவர வேண்டும் என்கிறார்.

இந்த  பயணத்தில் மதுரை மேலூர் ஆனைமலை அருகிலிருக்கும் குகைகோவில்களை ஆராய்ந்திருக்கிறார். உள்ளுர் பேஸ்புக்  நண்பர்கள் உதவியிருக்கின்றனர். உங்கள் ஊரில் ஏதாவது  தமிழ் மரபு தொடர்பான செய்திகள் இருந்தால் இவரை தொடர்பு கொள்ளுங்கள். அடுத்த  இந்திய பயணத்தில் உங்கள் ஊருக்கே வருவார்.
ரமணன்
kalki 13/07/14 இதழ்


4/6/14

எம்ஜிஆரை நிராகரித்த ஹாலிவுட் டைரக்டர்

இந்திய சினிமாவுக்கு 100 வயதானதை  நம்மவர்கள் ஆராவாரங்களுடன் பிரமாண்ட மேடைகளில் மெகா சைஸ் கலக்குழுக்களுடன் ஆடிப்படி, கொண்டாடி மறந்து போய்விட்ட நிலையில், அமைதியாக தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒரு அமெரிக்க டைரக்டர் பற்றி  ஒரு அருமையான ஆவணபடத்தை  எடுத்திருக்கிறார். திரு.கரண்பாலி இவர் புனா பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்தவர் விளம்பர, ஆவணபடங்கள் எடுப்பவர். என்பதை தாண்டி இந்திய சினிமாவை  காதலிப்பவர். . ராஜீவ் மேன்னின் திரைப்பட கல்லூரியிலும்,எல்.வி பிராசாத்  இன்ஸ்டியூட்டிலும் அழைப்பின் பேரில் வகுப்புகள் நடத்துபவர்.
தமிழ் சினிமாவுடன் நேரடி தொடர்பு இல்லாத இவருக்கு எப்படி தமிழ் படங்கள் இயக்கிய இந்த டைரக்டரை பற்றி ஒரு ஆவணபடம் எடுக்கும் எண்ணம் வந்தது ?.
நான் சென்னையில் படித்தவன் என்பதால் தமிழ் சினிமா பற்றி ஒரளவு தெரியும். தமிழ் சினிமாவின் வளர்ச்சி பற்றி ஒரு கட்டுரையை என் தளத்தில் வெளியிட செய்திகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது பால்வில்லியம் என்பவரின் “என்சைகோளாபிடியா ஆப் இந்திய சினிமாவில் முதலில் டங்கன் பற்றி அறிந்தேன். தொடர்ந்து செய்திகள் சேகரிக்க  துவங்கியபோது பிரமித்துப் போய் தமிழ் சினிமாவிற்கு இத்தனை செய்திருக்கும் இந்த அமெரிக்கரைப்பற்றி ஒரு டாக்குமெண்ட்டிரி எடுத்தால் என்ன என  தோன்றியது.   எம். கே ராதா, பாலையா,என். எஸ் கிருஷ்ணன் எம் ஜி ஆர் ஆகியோர்களை தமிழ்திரைக்கு அறிமுகம் செய்திருக்கும் இந்த டைரக்டர் டெக்னிக்லாகவும் பல விஷயங்களை, இந்திய சினிமாவிற்கு அறிமுகம் செய்திருக்கிறார்.  டிராமா வடிவில் இருந்த தமிழ் சினிமாவை “சினிமாவாக” ஆக்கியிருக்கிறார்.  கேமிராக்கள் ஸ்டூடியோவை விட்டு வெளியே மட்டுமில்லை. ஸ்டூடியாக்களிலேயே அசையாமல் இரே இடத்தில் இருந்த  தமிழ் சினிமாவில். புதிய ஓளி, ஒலி முறைகள் உடைகள் நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவற்றை அறிமுகப்படுதியவர். இன்று படமெடுக்க பயன்படுத்தும் டிராலி ஷாட்களுக்கான டிராலியை இவர்தான் வடிவமைத்திருகிறார். அதனால் தான் அது டங்கன் டிராலி என இன்றும் அழைக்கபடுகிறது. குளோசப்காக தனி லென்ஸ், அந்த காட்சிகளுக்கு விசேஷ மேக்கப் பயன்படுத்தியவரும் இவர்தான். என்பதையெல்லாம் அறிந்த போது ஆர்வம் அதிகமாயிற்று.   
  ஐரிஷ் வம்சாவளி அமெரிக்கரான டங்கன், சினிமாகலையை  பிரான்ஸில் படித்தவர். அப்போது இந்தியாவிலிருந்து வந்து அங்கு அவருடன்  படித்து கொண்டிருந்த ஒரு மாணவர் எம். ஆர் டாண்டன்.  தன் தந்தை பம்பாயில் ஒரு புதிய ஸ்டூயோ   துவங்கப்போவதால் உடன் வந்து 6 மாதம் உதவி செய்யும்படி அவர் கேட்டதின் பேரில் 1935ல் இந்தியா வந்தார்..  ஆனால் அந்த ஸ்டுடியோ துவங்க படாதால், கல்கத்தாவில் ஷூட்டிங் நடந்து  கொண்டிருந்த ஒரு தமிழ் படத்தில் டாண்டனின் உதவியுடன் உதவி இயக்குனரானார்.. அந்த படம் நந்தனார். அதன் மூலம் தமிழ் சினிமாவால்  ஈர்க்கபட்டு அடுத்த 15 ஆண்டுகள் 1950 வரை தமிழ் நாட்டில் தங்கி  சினிமாவில் பெரும் புரட்சிகளை செய்திருக்கிறார்.  15 ஆண்டுகளில் இவர் இயக்கியது 17 தமிழ் படங்கள் அனைத்தும் ஹிட் படங்கள்.  எம். கே ராதா, பாலையா,என். எஸ் கிருஷ்ணன் எம் ஜி ஆர் ஆகியோர்களை தமிழ்திரைக்கு அறிமுகம் செய்தவரும் இவர்தான்.
இந்த ஆவணபடத்தின் மூலம் அறிந்து கொள்ளும் சில விஷயங்கள் ஆச்சரியமாகயிருக்கிறது. எம்ஜி ஆர் ரின்  முகத்தில்,கீழ் தாடைப்பகுதியில் ஒரு சின்ன குழி இருந்ததால் அவர் முகம் சினிமாவிற்கு ஏற்ற முகவெட்டுடன் இல்லை என டங்கனால் நிராகரிக்கபட்டிருக்கிறார்.  ஆனால் படத்தயாரிப்பாளார் மருதாசலம் செட்டியார். ”படத்தின் வசனகர்த்தாவின் வசனங்களை நம்பிதான்  இந்த படமெடுக்கிறேன்.  இந்த நடிகர் அவரால் சிபார்சு செயபட்டவர்.. அவர் சிபார்சை தட்ட முடியாது.” என்றவுடன். ஒரு சின்ன ஒட்டு தாடியின் மூலம் அந்த குழியை மறைத்து எம்ஜியாரை அறிமுகபடுத்தியிருக்கிறார் டங்கன். அந்த வன கர்த்தா - கலைஞர் !. படம் சதி லீலாவதி. அந்த படம் ஹிட்டானதில் எம்ஜிஆருக்கு பல வாய்ப்புகள்  கிடைத்தன.
ஆங்கில மட்டுமே அறிந்த இவர் எப்படி தமிழ்படங்களை டைரக்ட் செய்தார்?  தமிழில் தெரிந்த மிக சில வார்த்தைகள்  கொண்டு பணியாளர்களை சமாளித்தாலும்,படங்களின் கதையை ஆங்கிலத்தில் தயாரித்து கொண்டு, பேசும் வசனங்கள் புரியாவிட்டாலும் கதையை நன்கு புரிந்துகொண்டு வசனங்களை சரிபார்க்க அந்த கதாசிரியர்களை எப்போதும் உடன் இருக்கும்படிசெய்திருக்கிறார். கல்கி, சதாசிவம், இளங்கோ போன்றவர்கள் பெரிதும் உதவியிருக்கின்றனர்.  டெக்கினிக்லாக பல விஷங்களை செய்து டிராமா வடிவில் இருந்த தமிழ் சினிமாவை “சினிமாவாக” ஆக்கியிருக்கிறார்.  கேமிராக்கள் ஸ்டூடியோவை விட்டு வெளியே மட்டுமில்லை. ஸ்டூடியாக்களிலேயே அசையாமல் இரே இடத்தில் இருந்த  தமிழ் சினிமாவில். புதிய கோணங்கள். ஓளி, ஒலி முறைகள் உடைகள் நெருக்கமான காதல் காட்சிகள் ஆகியவற்றை அறிமுகப்படுதியவர். இன்று படமெடுக்க பயன்படுத்தும் டிராலி ஷாட்களுக்கான டிராலியை இவர்தான் வடிவமைத்திருகிறார். அதனால் தான் அது டங்கன் டிராலி என இன்றும் அழைக்கபடுகிறது. குளோசப்காக தனி லென்ஸ், அந்த காட்சிகளுக்கு விசேஷ மேக்கப் பயன்படுத்தியவரும் இவர்தான்.  , இவர் படங்களில் காதல் காட்சிகள் நெருக்கமாக இருந்தற்காக கடுமையாக விமர்சிக்கபட்டிருக்கிறார்.


எம் எஸ் சுப்புலட்சுமி நடித்து டங்கள் இயக்கிய மீரா சூப்பர் டூப்பர் ஹிட் ஆனவுடன் அதை இந்தியிலும் டைரக்ட் செய்தவர் இவர். மீரா படத்தில் எந்த கோணத்தில் நாயகியின் முகத்தை அழகாக காட்டமுடியும் என்பதை  முகத்தை மட்டும் பிளாஸ்டாபாரிஸில் சிலையாக செய்து பல கோணங்களில் காமிராவழியாக பார்த்து தீர்மானித்திருக்கிறார். இன்று செய்யபட்டு கொண்டிருக்கும் பல டெக்னிக்கல் விஷயங்களை இந்த மனிதர்  அன்றே முயற்சித்து வெற்றியும் பெற்றிருக்கிறார். இன்றும் அவ்வப்போது டிவி சானல்களில் வரும் மந்திரிகுமாரி படத்தில் பவுர்ணமி நிலவொளியில் ”வாராய் நீ வாராய் பாடலுடன்” வரும்  படகு காட்சி பகல் இரண்டு மணிக்கு படமாக்கபட்டிருக்கிறது. எடிட்டிங்கில் அது இரவாக்கபட்டிருக்கிறது. இவர் படங்களின் போஸ்டர்களில் கதாநாயகர்களின் பெயரைக்கூட போடமல் டைரக்க்ஷன் எல்லிஸ். ஆர் டங்கன் ஹாலிவுட்  என விளம்பர படுத்தியிருக்கிறார்கள்.  அந்த அளவுக்கு பிரபலமான இயக்குனாராக இருந்திருக்கிறார்.
 இன்று ஒரு படம் ”உருவான கதை”  ஒரு தனிப்படமாக்க பட்டு விளம்பரங்களில் பயன் படுத்தபடுகிறது. 1940களிலேயே டங்கன் தான் படமெடுப்பதையே படமாக்கியிருக்கிறார். குடும்ப சுழ்நிலை காரணமாக,1950ல் அமெரிக்கா திரும்பிய டங்கள் அங்கு ஹாலிவுட் படங்களுக்கு இந்தியா பற்றிய ஆலோசனைகள் வழங்கும் வல்லுனாராக  தன் இறுதிக்காலம் வரை பணியாற்றியிருக்கிறார்
இந்த டாகுமெண்ட்ரிக்காக , தகவல்களை சேகரிப்பது எளிதாக இல்லை. என்கிறார் கிரண்பாலி. தமிழ் சினிமாக்களை பொருத்துவரையில் ஒரு நல்ல ஆவணகாப்பகம், இல்லை. தகவல்கள் தருபவர்களை பற்றிய பட்டியலும் இல்லை. தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதியிருக்கும் திரு தியோடர் பாஸ்கரன் அவர்களை எனக்கு தெரியும். அவர் 2001ல்  டங்கன் இறந்த ஆண்டு அவர் சுய சரிதை வெளியாகியிருப்பதாக சொன்னார். ஆனால் அவரிடம் அந்த புத்தகம் இல்லை. ஒரு பிரதி சிவேந்திரா சிங் என்பவரிடம் இருப்பது தெரிந்தது. இவர்  புனே இன்ஸ்டியூட்  ஆவணகாப்பக பாதுகாவலர் நாயர் பற்றி ஒரு ஆவணப் படம் எடுத்தவர். அவரைத்தொடர்பு கொண்டு அந்த புத்தகத்தை வாங்கி படித்தேன். அந்த நூலின் இணை ஆசிரியர் பார்பாரா ஸ்மிக் என்ற பெண்மணி. கூகுளில் அலசி அவரது இ மெயிலை கண்டுபிடித்து தொடர்பு கொண்டேன்.  டங்கன் அவரது குறிப்புகளையும், படங்களையும் வெஸ்ட் வெர்ஜியா பல்கலைகழகத்திற்கு கொடுத்துவிட்ட விபரங்களை அவர் சொன்னார்.  என்நோக்கம் தமிழ் சினிமாவிற்கு டங்கனின் பங்களிப்பு பற்றி  அதிகம் சொல்லவேண்டும் என்பதால் அவரது சுயசரிதையை விட அவருடைய படைப்புகளை பற்றி அதிகம் ஆராய்ந்து  கொண்டிருந்தேன். பல்கலைகழகத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள் நிறைய உதவினார்கள். படத்தின் அவுட் லைன் ரெடியாகி தயாரிப்பை துவங்கும் நேரத்தில் தியோடர்பாஸ்கர் பங்களுரில் வசிக்கும் எம். எஸ் சுப்புலக்‌ஷ்மியின் மகள் ராதாவிஸ்வநாதனை அறிமுகபடுத்தினார். இவர் சகுந்தலை, மீரா படங்களில் சிறு குழந்தையாக நடித்தவர். டங்கனின் இயக்கத்தை பார்த்தவர். அவர் சொன்ன தகவல்கள் படத்தை சிறப்பாக்கியது. மந்திரி குமாரி படம் தயாரிக்கபட்டபோது டங்கனுடன் பணிசெய்த ஒருவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.இன்றும் அவ்வப்போது டிவி சானல்களில் வரும் மந்திரிகுமாரி படத்தில் பவுர்ணமி நிலவொளியில் ”வாராய் நீ வாராய் பாடலுடன்” வரும்  படகு காட்சி பகல் இரண்டு மணிக்கு படமாக்கபட்டது. என்ற தகவலையும், எடிட்டிங்கில் அது இரவு காட்சியாக மாற்றபட்டது என்பதையும் சொன்னார்.
படம்  தயாராவது தெரிந்ததும் பலர் தகவல் அனுப்பினார்கள். ஆனால்  நான் சரியான, ஆதாரபூர்வமான விஷயங்களை மட்டுமே பதிவு செய்வதில் கவனமாக இருந்தேன். சென்னையிலிருந்து வெளிவரும் பத்திரிகை அலுவலகங்களை/ நிருபர்களை/சினிமாபற்றி எழுதுபவர்களையெல்லாம்  நானே நேரடியாக தொடர்பு கொண்டேன். சிலர் உதவினார்கள். ஒரு  மூத்த சினிமா பத்திரிகையாளார் தன்னிடம் தகவல்கள் இருப்பதாகாவும் ஆனால் உதவ முடியாது என்றும் சொன்னது ஒரு ஆச்சரியம்.
டங்கன் படங்கள் இயக்கிய காலத்தில் ஸ்டூடியோக்கள் இருந்த இடங்களை காட்டி,, அவர் அறிமுகபடுத்திய டிராலிகள் போன்ற பல தகவல்கள் கொடுத்தவர் நண்பர் நடிகர் மோகன் ராம். இவர் தமிழ்சினிமாவின் தகவல் சுரங்கம்.  தமிழ் சினிமாவை ஆராய்ந்து டாகடர் பட்டம் வாங்கியிருக்கும் திருமதி உமா வாங்கலும் நிறைய தகவல்கள் தந்து உதவினார். இந்த நண்பர்களின் உதவியினால்தான்  பேட்டிகள், காட்சிகள் இணைப்பு உரைகள்  என அழகான தொகுப்பாக  படம் உருவாகியிருக்கிறது.” என்கிறார் கிரண்பாலி. தமிழ் சினிமாவை  நேசிப்பவர்கள் அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய படம்.இது.
அமெரிக்காவில் டங்கனின் ஊரில் முதலில் திரையிடபட்டு இப்போது பல  இந்திய, அமெரிக்க நகரங்களின் பிலிம்சொஸைட்டிகளில் திரையிடபட்டிருக்கிறது.  .
தமிழ் சினிமாவின்  வளர்ச்சிக்கு  முக்கிய பங்களித்த அமெரிக்கர் டங்கன் பற்றிய ஆவணப்படம் தயாரிக்க பட்டிருப்பது  சந்தோஷமாக இருந்தாலும் அந்த படத்தையும் அதைத் தயாரித்தவரை தமிழ் திரையுலகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.
கல்கி 1/06/14)


31/5/14

மயக்கும் மஹாபாரதம்

மாலை 7 மணி ஆனாலே, வீடுகள் தோறும் விஜய் டிவி மஹாபாரதம் தான். இத்தனைக்கும் இது மொழி மாற்ற சீரியல். ஆனால் ஈர்ப்போ அபாரம். காட்சிகள், ஆடை ஆபரணங்களின் பிரமாண்டம் கட்டிபோட, திரைக்கதையோ படு சுவாரசியம். சகுனியும், திரெளபதியும் ரசிகர்களை கட்டிப் போடுகிறார்கள் முன்பு வந்த ராமனந்த சாகரின் ராமாயணத்துக்கு பின்னர் தமிழ் ஆடியன்ஸ்களிடம் சூப்பர் ஹிட் இந்த மஹாபாரதம்தான்.   

பிரமிக்கவைக்கும் பிரமாண்டமான செட்கள், பளபளக்கும் காஸ்ட்யூம்கள், 
ஹோலி வண்ணங்கள் சற்று ஓவரான மேக்கப், ஒரே மாதிரியான வட இந்திய சாயலில்  எல்லா  முகங்கள், பயில்வான்கள் ஸ்டையில் பாண்டவர்கள் என்று  காட்டபடும் மாறுபட்ட ஒரு தொடராக இருந்தாலும் அதை எல்லோரையும் பார்க்க வைப்பது,  அதன் அழகான தமிழ் வசனங்களும், இனிய பாடல்களும் தான். ஸ்டார் விஜய்க்காக  இதை தமிழில் டப்பிங் செய்பவர்கள் 7த்  சானல் நிறுவனத்தினர். அதன் தலைவர் மாணிக்கம் நாராயணனை தொடர்பு கொண்ட  போது
. ”நானும் உங்களைப்போல ரசிக்கிறேன். எங்களது திறமையான டப்பிங் டீமின் கடின உழைப்பின் வெற்றி இது.  அவர்கள் பணிகளில் நான் தலையிடுவதில்லை. டீமின் தலவர் மகேஷிடம் பேசுங்களேன்”. என்றார். 
டப்பிங் துறையை நேசிக்கும் மகேஷ்  ஒரு பிரபலமான ஆடியோ என்ஞ்னியர். மொழிபெயர்ப்பு வசனங்கள் மேற்பார்வை.  டப்பிங் கலைஞர்கள் தேர்வு, அவர்களுக்ககு பயிற்சி, ஒலிப்பதிவு போன்ற எல்லாவற்றையும் நேரடியாக செய்கிறார்.  இந்தியில் வசனங்கள் அருமையாக இருந்தாலும் அதை அப்படியே மொழிபெயர்த்தால்  தமிழில் அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் தகுந்த தமிழ் வார்த்தைகளுடன் மாற்றி கொள்கிறோம்.  மொழிபெயர்ப்பு என்பதை விட தமிழாக்கம் என்று சொல்லுவது சரியாக இருக்கும்.  பாத்திரங்களுக்கு ஏற்ற குரல் தரும் கலைஞர்களை கவனமாக தேர்வு செய்து பயிற்சி அளித்திருக்கிறோம் டீமில் 60 பேராம்!. அவர்களும் மிகுந்த கவனத்துடன் செய்திருக்கிறார்கள் என்கிறார்.
தலைப்பைச் சேருங்கள்
ஹிந்தியில் காட்சிகளை பார்க்கும் போது எழும் கேள்விகளுக்கு உடனே பதில் வரும்படி  வசனங்கள் அமைந்த  இந்த படத்திற்கு டப்பிங்க் வசனம் எழுதுவது கடினமான வேலை. எழுதும் வசனம் சரியாக பேசும் இடங்களில் பொருந்த வேண்டும். எல்லா மொழிகளிலும் வார்த்தைகளின் நீளம் ஒரே மாதிரியாக இருக்காது. அதனால் இதற்கு வசனம் எழுதும் பாலகிருஷ்ணன் ஒரு டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார். அவரே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ் என்பதால் வசனங்கள் எழுதபட்டபின்  ஒவ்வொரு எபிசோடிலும்  முதலில்  எல்லா பாத்திரங்களுக்காகவும் அவரே  அதைப் பேசி   தேவையான நீளம் சரியான நேரம் போன்றவைகளை உறுதி செய்துகொண்டு  வாயசைப்புக்கு ஏற்ப வார்த்தைகளை தேர்ந்தெடுத்து  வசனங்களை மாற்றி அமைக்கிறார். அதன்பின்னர் அது அச்சிடப்பட்டு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்களுக்கு அளிக்க படுகிறது. பயிற்சிகளுக்கு பின் அவர்கள் பேசுகிறார்கள். இந்த முறையில் ரீ டேக், எடிட்டிங் போன்ற வேலைகளை குறைவதால் நேரம் வீணாவதில்லை என்கிறார்
இவர் 25 ஆண்டுகளுக்கு மேலாக டப்பிங் படங்கள், தொடர்களுக்கு  வசனம் எழுதிக்கொண்டிருப்பவர்.  இந்த தொடரில் இவர் தத்துவங்களை எளிமையாக்கி கவிதை நடையில் வசனங்களாக மெருகேற்றி தருவதால், தொடரைப்பார்க்கும் போது இது டப்பிங் செய்யபட்ட தொடர், நடிப்பவர்களின் நடிப்புதிறன் அவர்களின் பாத்திர பொருத்தம் போன்ற எண்ணங்களை எழாமல் செய்கிறது.ஒரு டப்பிங் படத்தின் வெற்றிக்கு வசனம்,இசைக்கு அடுத்தபடியான முக்கியமான விஷயம். மிக்ஸிங் என்கிற டெக்னிகல் சமாசாரம். ஒரிஜினலில் இருப்பதை போலவே இருக்க வேண்டும், அதை இந்த தொடருக்கு பிரமாதமாக செய்து கொண்டிருப்பவர் மணிகண்டன்.  மொதத்தில்  ஒரு கவுரவர்கள் படையே இதன் உருவாக்கத்திற்கு உழைக்கிறது. 
ஹிந்தி தொடரில் வரும் அதே இசையை பயன்படுத்தி கொண்டு  மெட்டுக்கு களுக்கு ஏற்ப தமிழ் பாடல்களை அமைக்கிறார்கள்.  பாடல்களையும் பாலகிருஷ்ணனே எழுதுகிறார்.  வரிகளிலும், வார்த்தைகளிலும் அவருள்  ஒளிந்திருக்கும் கவிஞர் தெரிகிறார்.,  எங்களது டீமில் இருக்கும் 50க்கும் மேற்பட்ட குரல்கலைஞர்களின்  ஆர்வமான, அர்ப்பணிப்பான உழைப்பின் வெற்றி இது . சகுனி, கிருஷ்ணன் போன்ற பாத்திரங்களின் நடிப்புக்கு உயிர் கொடுத்திருப்பது இவர்களின் குரல் என்கிறார். மகேஷ்..பல ஆண்டுகளுக்கு முன் என் டி டிவிக்காக ராமாயணத்தை தமிழாக்கியதும் இவர்தலமையிலான டீம்தான்
இதிகாசங்களின் மீதுள்ள பாசத்தினால் மூத்த தலைமுறையினர் மட்டும் ரசித்து  கொண்டிருந்த இம்மாதிரி தொடர்களை அடுத்த தலமுறையினரையும் ரசிக்கவைக்கும் விஜய் டிவிக்கும் 7த் சானலுக்கும் ஹாட்ஸ் ஆஃப்.





10/2/14

உரையாடல்





ஈஷா வின்  இணைய தளத்திலிருந்து

சத்குரு அவர்களுடனான “புதிய தலைமுறை” இதழின் ஆசிரியர் திரு. மாலன் அவர்களின் சந்திப்பு “ஞானியின் பார்வையில்” என்ற தலைப்பில் நேற்று (பிப் 8) நடைபெற்றது. சென்னை கீழ்பாக்கம் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி – பவன் ஆடிடோரியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 1200 பேர் கலந்து கொண்டனர். அரசியலிலிருந்து, ஆன்மீகம், எதிர்கால இந்தியா போன்ற பல தலைப்புகளிலும் திரு. மாலன் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சத்குரு அளித்த பதில்கள் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது.



(இந்த உரையாடலின்  பதிவுகளை …ஈஷா வின்/மாலனின்  face book லும் காணலாம்.ஓளிப்பதிவு செய்யபட்டிருக்கும் இது விரைவில் சின்னத்திரையில் வரும் )

“இன்றைய நிகழ்ச்சியில் உள்நிலையிலிருந்து உலகம் வரையில், காடுகள் தொடங்கி கடவுள் வரையில், தேகம் தொடங்கி தேசத்தின் விஸ்தாரம் வரையில், பல கேள்விகள் கேட்டார் திரு. மாலன். அத்தனை கேள்விகளுக்கும் தனது தீர்க்கமான பதில்களால் பார்வையாளர்களை நாற்காலியோடு கட்டிப்போட்டார் சத்குரு. நெஞ்சை அள்ளும் மற்றொரு அருமையான உரையாடல் நிகழ்ச்சியில் இணைவோம்.
நிகழ்ச்சியில் மிகுந்த சிறப்புடன் பங்குபெற்ற திரு. மாலன் அவர்களுக்கு உள்ளம் கனிந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்”.
 -மரபின் முத்தையா




8/2/14

தாயகம் கடந்த தமிழ்க் காதல்”




தமிழ்  இன்று உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ள மொழி. தமிழர்கள் தாங்கள் சென்ற இடங்களுக்கெல்லாம் கங்காரு தன் குட்டியை தூக்கிசெல்வது போல தங்கள் மொழியை கொண்டுசென்றார்கள். அதற்கு காரணம் அவர்கள்  மொழியை கலாச்சாரத்தின் அடையாளமாக, பண்பாட்டின் சின்னமாகப் போற்றியதுதான். . அதனால் தான் எங்கு சென்றாலும் அங்கு  . தன் மொழிக்கான இலக்கியங்களை படைக்கிறார்கள்.  இன்று கடல் கடந்து நிற்கும் தமிழ் மொழியை அதிவேகமாக மாறிவரும் இன்றைய உலகின் தேவைக்கேற்ப படைப்பிலக்கியங்களையும் தாண்டி ஊடகம், தொழில்நுட்பம்,  கல்வி போன்றவைகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் அரும் பணியை  உலகெங்கும் பலர் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜப்பான் முதல் கலிபோர்னியா வரை விரவி, பரவி நிற்கிற அவர்களில் முன்னணியில் இருப்பவர்களை அழைத்து “ தாயகம் கடந்த தமிழ்” என்ற உலக தமிழ் எழுத்தாளார்கள் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது கோவையிலுள்ள தமிழ் பண்பாட்டு மையம்.
 தமிழ்மொழி, தமிழர்பண்பாடு,கலைகள்வளர்ச்சி மேம்பாட்டுக்கென்று இந்த மையத்தைஉருவாக்கியிருப்பவர். டாக்டர் நல்ல பழனிசாமி. கோவை மெடிகல் சென்டர் என்ற பல்துறை மருத்துவ மனையின் தலைவர். இவர் என்.ஜி பி என்ற கல்விகுழுமத்தின் தலைவரும் கூட.(படம்-அவசியம்)  தமிழின் மீது அளவற்ற பற்று கொண்டவர்.  கருத்தரங்கில் பங்கேற்றவர்களை வரவேற்பதிலிருந்து வழியனுப்புவது வரை  கொங்குநாட்டுக்கே உரிய  பாங்குடன் ஒரு பெரும் தொண்டர் படையுடன் முன்நின்று செய்தவர்
. கருத்தரங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மாலன். இம்மாதிரி மாநாடுகளில் வாசிக்கப்படும் கட்டுரைகள் புத்தக்கமாக வெளிவர சிலகாலம் ஆகும். ஆனால் இங்கு பதிவு செய்து பங்கேற்க வந்தவர்களுக்கு கருத்தரங்கு துவங்கும் முன்னரே  அந்த புத்தகம்  இலவசமாக வழங்கபட்டது. அந்த அளவிற்கு எல்லா ஏற்பாடுகளும் கச்சிதம். 

 சிறப்பாக நடைபெற்ற துவக்க விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பரமணியம்  துவக்கி வைத்த இந்த கருத்தரங்கம் இரண்டு நாள்  7 அமர்வுகளாக  7 வெவ்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. 12 நாடுகளிலிருந்து 35 எழுத்தாளார்கள் பங்கேற்ற இந்த கருத்தரங்கில்  கலந்துகொண்ட பார்வையாளார்கள் 500க்கும் மேல். கே எம் சி யின் ஹைடெக் அரங்கம் நிறைந்து வழிந்ததால் மற்றொரு அரங்கத்தில் வீடியோகாட்சியாக ஒளிபரப்பினார்கள்.   பேசபட்ட விஷயங்களும், பேச்சாளர்களின் ஆற்றலும்  நேரகட்டுபாட்டை  நிர்வகித்த அமர்வுகளின் தலைவர்களின் கண்டிப்பும் பார்வையாளர்களை கட்டிபோட்ட விஷயங்கள்.  கருத்தரங்குக்கு வந்திருந்தவர்களில் சிலரின் அறிமுகமும், அவர்களின் பேச்சுகளிலிருந்து சில துளிகளும். 
சீனா ரேடியோ இண்டெர்நேஷனல் (CRI) என்பது சீன அரசு வெளிநாட்டினருக்காக பல நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் வானொலிநிலையம். 70 ஆண்டுகளாக இயங்கி கொண்டிருக்கும் இந்த நிலையம் இப்போது 60  நாடுகளுக்கு அந்தந்த நாட்டு மொழிகளில் நிகழச்சிகளை வழங்குகிறது. இந்திய மொழிகளில் கடந்த 50 ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை வழங்கும். இதன் தமிழ் ஒலிபரப்பு மிகவும் பிரபலம். 25000 க்கும்மேல் பதிவு செய்து கொண்ட நேயர்கள் இருக்கிறார்கள். 150 நேயர் மன்றங்களும் செயல்பட்டுவருகின்றன. ஆண்டுக்கு 5 லட்சம்  தமிழ் நேயர் கடிதங்கள் வருகின்றன. இது சீன வானொலிக்கு வரும் கடித எண்ணிக்கையில் முதலிடம். இந்த நிலையத்தின் தலைவர்  செல்வி சாவ்சியாங்.(ZHAO JIANG) சீனத் தகவல் தொடர்பு பல்கலைகழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்றவர். இரண்டு தமிழ் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
கலைமகள் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டிருக்கும் இவர் “தமிழ் கூறும் ஊடக உலகம்” அமர்வில் கட்டுரை வாசித்தார்.  உச்சரிப்பு பிழையின்றி அழகான தமிழில் பேசும் இவரைப்போலவே இவருடன் வந்திருந்த உதவியாளர்கள் செல்வி ஈஸ்வரி. செல்வி இலக்கியா வும் பேசுகின்றனர்.  தனது உரையில் ”எங்களது பல தமிழ் நிகழ்ச்சிகளுடன் சீனாவில் வாழும் தமிழர்கள் என்ற பகுதியில் சீனாவின் பல பகுதிகளில் வாழும் தமிழர்கள்,  எங்கள் நாட்டிற்கு வருகைதரும் தமிழ் பிரமுகர்களையும் அறிமுகப்படுத்துகிறோம்   இந்த சிறப்பு நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.  இதன் மூலம் தமிழர் பார்வையில் பிற தமிழர்களுக்கு சீனாவை அறிமுகபடுத்துகிறோம்.
நிலையத்தின் தமிழ் பகுதியில் பணிசெய்யும் 18 பேரும் தமிழ் அறிந்த சீனர்கள். இப்போது மொபைல் போனில் தமிழில் எங்கள் நிகழ்ச்சி குறித்து குறுஞ்செய்தி அனுப்பும் வசதி இருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது  தேன் மதுர தமிழோசை உலகெங்கும் பரவ எங்கள் வானொலியும் உதவுகிறது என்றார்.. உண்மைதான். கருத்தரங்கு நிகழ்ச்சிகளை அவ்வப்போது  பார்வையாளர்களின் பேட்டிகளுடன் இவரது உதவியாளர்கள்  சீன நிலையத்துக்கு அனுப்பிகொண்டிருந்தார்கள்.   அவர்கள் நல்ல தமிழில்  கேள்விகள் கேட்க நம்மவர்கள் ஆங்கில வார்த்தைகள் கலந்த தமிழில் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இன்று உலகெங்கும்  உள்ள தமிழர்கள் கணனியில்  தமிழ் எழுத பயன் படுத்தும் முரசு அஞ்சல் செயலியை உருவாக்கியவர் திரு முத்து நெடுமாறன்.(படம்)  கணனி தொழில் நுட்பத்தில் 25 ஆண்டு அனுபவம் உள்ள இவர் மலேசியாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலமை நிர்வாக அதிகாரி.  இவருடைய படைப்புகள் சீங்கப்பூர் மற்றும் மலேசியக் கல்வி அமைச்சுகளினால் ஆதிகாரபூர்வமாக பயன்படுத்தப்படுகின்றன.  அண்மையில் ஆப்பிளின் மெக்கிண்டாஷ் கணனியிலும் ஐபோனிலும் பயன்படுத்தபடும் இந்திய, இந்தோ சீன மொழிகளுக்கான எழுத்துகளையும் உருவாக்கியவர் இவர்.  தொழில் நுட்பம் தரும் வாய்ப்புகள் என்ற அமர்வில் ”கைபேசியில் தமிழ்”  பற்றி உரையாற்றினார்.




இந்தியாவில் ஆங்கிலப் புழக்கம் அதிகமாக இருந்தாலும், கணனி வாங்கக்கூடிய வசதி உள்ளவர்கள் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததாலும் இந்திய மொழிகளை கணனியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் எந்த கணனி நிறுவனத்திற்கும் ஏற்பட்டதில்லை. மேலும் சீனா, ஜப்பான் போல இந்திய மொழிகளின் தேவையை கட்டாயப்படுத்தும் சட்டங்களும் இல்லை. இதனால் ஜெர்மன். பிரஞ்சு, இத்தாலி,கொரியா, அரபு மொழிகள் போல இந்திய மொழிகள் கணனியில் முதலில் சேர்க்க படவில்லை. மிகத் தமாதமாக 2000 ஆண்டிலேயே இது முடிந்தது.  இந்த நிலை இப்போது வெகுவேகமாக பரவும் கையடக்க கருவிகளான செல்போன், ஐபேட், டேப் போன்றவைகளிலும் நேர்ந்துவிடக்கூடாது என பாடுபடுகிறோம் நாங்கள்.   இந்த முயற்சிகளினால் தான் இன்று ஆப்பிள் நிருவன தயாரிப்புகளிலும், பல ஸ்மார்ட் போன்களிலும் தமிழை உள்ளிடமுடிகிறது. செல்லினம் என்ற செயலி ஐபோனில் தமிழ் எழுதுவதை எளிமைப்படுத்தியது.  இது தமிழ் உலகிற்கு மலேசியா தந்த கொடை. பயணிகள் இருந்தால் தான் பயணம் தொடரும். அதுபோல தொழில்நுட்ப உலகில் பயனர் இருந்தால் தான் புதியன பிறக்கும்.  தமிழ் மொழியை தொழில்நுட்ப உலகில்மேலோங்கி நிற்க செய்வதில் நம் அனைவருக்கும் பங்குண்டு. தமிழை ஆங்கிலத்தை போல இயல்பாக இந்த கருவிகளில்  அதிகமாக பயன்படுத்த பழக வேண்டும்.
      

 அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு முறையாக தமிழ் கற்பிக்க கலிபோனியா தமிழ்க்கழகம் என்ற அமைப்பை நிறுவி 1998ல் துவங்கியவர் திருமதி வெற்றிச் செல்வி.(படம்) 13 குழந்தைகளுடன்  துவங்கிய இது இன்று   லண்டன், துபாய் போன்ற உலகின் பிற பகுதிகளுக்கும் பரவி இன்று 4000 மாணவர்களுடனும் 840 ஆசிரியர்களுடனும்   ”அனைத்துலக தமிழ் கழகமாக” மாறி  வேருன்யிருக்கிறது.   நேரிடையாகவும்,  அங்கீகரிக்க பட்ட பள்ளிகளின் மூலம்  தமிழ் மொழி பேச, எழுத கற்பிக்கிறது. புலம்பெயர்ந்து வாழம் குழந்தைகளுக்கு ஏற்ப பாடதிட்டத்தை  வகுத்து இந்த  அமைப்பு தமிழ் கற்பிக்கிறது. அமெரிக்க நகரங்களிலுள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் வார இறுதியில் வகுப்புகளை நடத்தும் இவர்கள் ஆசிரியர்களாக பணீயாற்றுவர்களையும் தன்னார்வ தொண்டர்களையும்  தேர்ந்தெடுத்து பயிற்சியும் கொடுக்கிறார்கள்  சீங்கப்பூர் பள்ளிகளின் பாடபுத்தகங்களை, தமிழ் இணையபல்கலைகழக ஆலோசனைகலையின் படி பயன் படுத்துகிறார்கள்.  இப்போது வெளிநாட்டு சூழ்நிலைகளுக்கு ஏற்ப புத்தகங்களை தயாரிக்க துவங்கியிருக்கிறார்கள்.  ”தமிழகத்திற்கு அப்பால் தமிழ் கல்வி” என்ற அமர்வில் இவர்   ஒரு பேச்சாளர்.
”பாலர் வகுப்புகளில் ஆர்வமாக வரும் குழந்தைகள் பெரிய வகுப்புகளுக்கு வருவதில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை கவர்வதற்காக இங்குள்ள கல்வி முறைப்படி  5 ஆண்டுகள் மற்ற மொழி கற்றால்  ஆண்டுக்கு 10 பாயிண்ட் கிரீடிட் கிடைக்கும் வகையில் கலிபோர்னியா பல்கலைகழகத்தில்  எங்கள் பாட திட்டத்திற்கு  அனுமதிபெற்றோம். இது மிகப்பெரிய விஷயம். பல்கலைகழக தர கட்டுப்பாடும் வகுப்பு நடத்தும் விதிகளும் கடினமானவை.  ஆனாலும் எங்கள் முன் இருக்கும் சவால் ”இங்கு வாழப்போகும் நான் தமிழ் படித்து என்ன செய்யபோகிறேன்? என்று  மாணவர்கள் எழுப்பும் கேள்விதான்,  இந்த கருத்தரங்கு சரியான பதிலை நாங்கள் அவர்களுக்கு சொல்ல உதவ வேண்டும்.   கற்பிக்கும் பணியில் தமிழகத்திலிருந்து கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கி உதவுகிறார்கள். ஆனாலும் கடினமான இலக்கணம், சூழ்நலைக்கு ஏற்ப இல்லாத தன்மையில் பாடங்கள்  மாணவர்களை சோர்வடையச் செய்கிறது.  தமிழை  ஒரு பாடமாககூட படிக்காத தலைமுறை இப்போது  தமிழ் நாட்டிலிருந்து அமெரிக்காகவிற்கு வந்துகொண்டிருக்கிறது. பெற்றோர்களுக்கு மொழியின் அருமையும் அவசியமும் தெரிந்தால் தானே அவர்களின் குழந்தைகள் தமிழ் படிப்பதை பற்றி யோசிப்பார்கள்?  என்று தான் சந்திக்கும் சவால்களை சொல்லும் இவர் மிகுந்த நம்பிக்கையுடன் தன் முயற்சியை தொடர்கிறார். வெளிநாட்டின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப குழந்தைகளை கவரும் வகையில் பாடபுத்தகங்களை, கற்பிக்கும் கருவிகளை. யுக்திகளை தமிழ் நாட்டு கல்வியாளார்களிடம் இருந்து வரவேற்கிறார். 

கடல் கடந்து வாழந்தாலும் தமிழின் மீது இவர்கள் வைத்திருக்கும் அபரிமதமான அன்பைப்பார்க்கும் போது மாநாட்டின் தலைப்பை இப்படி மாற்ரிவைதிருக்கலாம் என்று தோன்றியது
 “ தாயகம் கடந்த தமிழ்க் காதல்”

 - ஆதித்தியா

கல்கி 16/02/14